இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0809



கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு

(அதிகாரம்:பழைமை குறள் எண்:809)

பொழிப்பு (மு வரதராசன்): உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

மணக்குடவர் உரை: குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர்.
இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆகுதற்கு விரும்புவர் என்றது.

பரிமேலழகர் உரை: கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை; விடார் உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக்குறித்து விரும்பும்.
('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: கெடாமல் வந்த நட்பின் தொடர்பை விடாமல் போற்றுவாரை உலகம் விரும்பும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.

பதவுரை: கெடாஅ - (உரிமை) அறாமல், தொடர்பு அறாத; வழி-, தொடர்ந்த, பழையது; வந்த-நேர்ந்த; கேண்மையார்-நண்பர்; கேண்மை-நட்பு; விடாஅர்-விடுதல் செய்யாதவர்; விழையும்-விரும்பும்; உலகு-உலகத்தார்.


கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('கெடாஅர்' பாடம்): குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை;
பரிப்பெருமாள் ('கெடாஅர்' பாடம்): குற்றம் உண்டான் இடத்தும் நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை;
பரிதி: பழமையான் உறவை;
காலிங்கர்: ஒருபொழுதும் இடைவிடாது ஒருவழிப்பட வந்த கேளின் தன்மையோர் நட்பினை;
பரிமேலழகர்: உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை;
பரிமேலழகர் குறிப்புரை: 'கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது.

'இடைவிடாது ஒருவழிப்பட வந்த கேளின் தன்மையோர் நட்பினை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உரிமை நீங்காமல் தொன்று தொட்டு வந்த நட்பினை உடையவர் தம்மொடு கொண்ட கேண்மையை', 'உறவு கெடாமல் பல காலமாகப் பழகிவரும் நண்பர்களுடைய தொடர்பை', 'பிரிவில்லாமல் பழைமையாய் வந்த நண்பரது நட்பினை', 'உரிமை அற்றுப் போகாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அழியாமல் பழைமையாய்த் தொடர்ந்து வந்த நண்பரது நட்பினை என்பது இப்பகுதியின் பொருள்.

விடாஅர் விழையும் உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விடுதலின்றி உலகத்தார் விரும்புவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆகுதற்கு விரும்புவர் என்றது.
பரிப்பெருமாள்: விடுதலின்றி உலகத்தார் விரும்புவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பழமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆடுதற்கு விரும்புவர் என்றது.
பரிதி: விடாதாரை உலகம் விரும்பும் என்றவாறு.
காலிங்கர்: ஒருகால் ஒழியாதே விரும்பி நிற்பர் உயர்ந்தோர் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக்குறித்து விரும்பும்.
பரிமேலழகர் குறிப்புரை: விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்.

'விடுதலின்றி உலகத்தார் விரும்புவர்/ பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக்குறித்து விரும்பும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விடமாட்டார். ஆதலால் அவரை உலகம் விரும்பும்', 'அவர்கள் குற்றம் செய்துவிட்டாலும் விட்டுவிடாமல் நட்பு பாராட்டுகிறவர்களை உலகத்தார் பாராட்டுவார்கள்', 'விடாதவரை உயர்ந்தோர் விரும்புவர். (உலகம் நேசிக்க விரும்புமென்றலு மொன்று.)', 'அவர் பிழை நோக்கிவிட்டு விடாதாரை உலகம் நட்பு கருதி விரும்பும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விடாதவரை உலகம் நட்பு கருதி விரும்பும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அழியாமல் பழைமையாய்த் தொடர்ந்து வந்த நண்பரது நட்பினை விடாதவரை விழையும் உலகு என்பது பாடலின் பொருள்.
'விழையும் உலகு' என்ற தொடர் குறிப்பதென்ன?

பழைய நட்பைத் தொடர்பவர் பாராட்டுக்குரியவர்.

தொடர்பு அறாத பழைமை வாய்ந்த நட்பினரது நட்பை விலக்கிக் கொள்ள மாட்டாதாரை உலகோர் விரும்பிப் போற்றுவர்.
மாறாத அன்புடன் பழமை பாராட்டுவாரை உலகோர் மிகவும் விரும்புவர். நட்புரிமை கெடாமல் தொன்று தொட்டுப் பழகியவரது நட்பை எக்காரணம்பற்றியும் கைவிடாத பண்பினரை, எல்லாருமே நண்பராகக் கொள்ள விரும்புவார்கள்.
கெடாஅ என்பதற்கு 'கெடாஅர்' எனப் பாடம் கொண்டு நட்புத் தன்மையிற் கெடாதவராகி என்று பொருளுரைப்பார் மணக்குடவர்.

'விழையும் உலகு' என்ற தொடர் குறிப்பதென்ன?

'விழையும் உலகு' என்றதற்கு உலகத்தார் விரும்புவர், உலகம் விரும்பும், விரும்பி நிற்பர் உயர்ந்தோர், அவரோடு தாமும் நட்புக் கொள்ள வேண்டுமென்று உலகம் விரும்பும், உயர்ந்தோரும் விரும்பிப் போற்றுவர், உயர்ந்தோர் விரும்புவர், உலகம் நேசிக்க விரும்பும், உலகம் நட்பு கருதி விரும்பும், உலகத்தவர் விரும்பிப் போற்றுவர், உலகமே அவரது நட்பைப் பாராட்டிப் பேசும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பழைய நண்பர்களை விட்டுவிடாமல் தொடர்ந்து கெழுதகைமையுடன் பழகுவர்களை யார்தான் விரும்பாமல் இருப்பார்கள்? விரும்புவது மட்டுமல்லாமல் அவருடன் நட்புத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அனைவரும் விழைவர். தன் நிலை மாறும்போது அல்லது நண்பர் தீயவழியில் செல்கிறார் என்று கேள்விப்படுபோது அல்லது தன்னைக் கேளாது தனக்கான செயல்களை ஆற்றும்போதும்/ மனம் வருந்ததக்க செயல்களைச் செய்தாலும், அழிவு வந்தாலும், இழப்பு ஏற்படுத்தினாலும் பழையரைக் கைவிடாத குணம் கொண்டவருடன் உறவு வைத்துக் கொள்ளப் பலரும் விரும்புவது இயல்பே,

'விழையும் உலகு' என்ற தொடர்க்கு நட்பு கருதி உலகோர் விரும்புவர் என்பது பொருத்தமான பொருள்.

அழியாமல் பழைமையாய்த் தொடர்ந்து வந்த நண்பரது நட்பினை விடாதவரை உலகம் நட்பு கருதி விரும்பும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பழைமையருடன் நிலையான நட்புள்ளத்துடன் பழகுபவருடன் உறவுகொள்ளப் பலரும் விழைவர்.

பொழிப்பு

அழியாமல் தொடர்ந்து வந்த நட்பை விடாமல் போற்றுவாரை உலகம் விரும்பும்.