இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0801



பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

(அதிகாரம்:பழைமை குறள் எண்:801)

பொழிப்பு (மு வரதராசன்): பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால் அது பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

மணக்குடவர் உரை: பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின் அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு.
இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது.

பரிமேலழகர் உரை: பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும் கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு.
('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நல்ல நட்பு என்பது யாது? எவ்வகையாலும் உறவை முரித்துக் கொள்ளாத நட்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பதவுரை: பழைமை-நெடுங்காலமாகத் தொடரும் நட்பு; எனப்படுவது-என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது; யாதெனின்-எது என்றால்; யாதும்-ஒரு சிறிதும்; கிழமையை-உரிமையை; கீழ்ந்திடா-சிதையாத, கீழ்ப்படுத்தாத, தாழ்வுபடுத்தாமல் உடன்படுதல்; நட்பு-தோழமை.


பழைமை எனப்படுவது யாதெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின்;
பரிப்பெருமாள்: பழைமை என்று சொல்லப்படுகின்றது யாதெனின்;
பரிதி: பழைமை என்று சொல்லப்படுவது யாதெனில்;
காலிங்கர்: ஒருவரோடு ஒருவர்க்கு உள்ள காலப் பழமை என்று எடுத்து உரைக்கப்படுவது யாதோ எனின்;
பரிமேலழகர்: பழைமை என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்;

'பழைமையென்று சொல்லப்படுவது யாதெனின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் பழைமை என்பதற்கு 'ஒருவரோடு ஒருவர்க்கு உள்ள காலப் பழமை' என உரை வரைந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பழைமை என்று சொல்லப்படுவது யாதென்றால்', 'பழைமையான உறவு என்று சொல்லப்படுவது எப்படி இருக்க வேண்டும் என்றால்', 'பழைமை என்று சொல்லப்படுவது யாதென்று ஆராயின்', 'பழமை என்று சொல்லப்படுவது யாது என்று கேட்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பழைமை என்று சொல்லப்படுவது யாதென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது யாதொன்றிலும் உரிமையை அறுத்தலில்லாத நட்பு. [அறுத்தலில்லாத-நீக்காத]
மணக்குடவர் குறிப்புரை: இது பழையவன் செய்த உரிமையைச் சிறிதுஞ் சிதையாது உடன்படுதல் நட்பாவதென்றது.
பரிப்பெருமாள்: அது யாதொன்றினையும் உரிமையறுத்தல் இல்லாத நட்பு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பழைமையாவது இது என்று கூறிற்று.
பரிதி: பழைமையானவன் செய்த உரிமையைச் சிறிதும் சிதையாது உடன்பட்ட நட்பு என்றவாறு.
காலிங்கர்: தம் பொருட்கண் அவர் செய்யும் யாதானும் உரிமையை வேறிடாது விரும்பும் நட்பு என்றவாறு.
பரிமேலழகர்: அது பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு. [சிதையாது - விலக்காமல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும் அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின. சிதைத்தல் - விலக்கல். இதனான், 'பழைமையாவது காலம்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு' என்பது கூறப்பட்டது. [தாமே கோடல் - உரிமை பற்றிக் கேளாமல், தாமே எடுத்துக் கொள்ளுதல்]

'பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும் நட்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெடுங்காலம் பழகியோர் உரிமையாற் செய்வனவற்றைச் சிறிதும் சிதைக்காமல் ஏற்றுக்கொள்ளும் நட்பாகும்', '(தமக்களிக்கப்பட்டுள்ள) எந்த உரிமையையும் கெடுத்துக் கொள்ளாமல் நடந்து கொள்ளும் நட்பாம்', 'நண்பர் உரிமையால் செய்வனவற்றைச் சிதையாத நட்பாகும்', 'அது பழைய நண்பர் உரிமையால் செய்தனவற்றைச் சிறிதும் சிதையாது ஏற்றுக் கொண்ட நட்பு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒருவருக்கொருவருடனான உரிமை சிறிதும் சிதைவுபடாத நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பழைமை என்று சொல்லப்படுவது யாதென்றால் சிறிதும் ஒருவருக்கொருவருடனான கிழமையைக் கீழ்ந்திடா நட்பு என்பது பாடலின் பொருள்.
'கிழமையைக் கீழ்ந்திடா' என்றால் என்ன?

பழம் நண்பர்கள் தங்களிடையேயுள்ள உரிமைக்குத் தாழ்வு நேராமல் நடந்துகொள்வர்.

பழைமை என்று சொல்லப்படுவது எது என்றால், அது நெடுங்காலம் பழகியவர்களது உரிமை சிதைவுபடாத நல்ல நட்பாகும்.
மாந்தர் ஒருவருடன் ஒருவர் நீண்டகாலம் உரிமையுடன் பழகுவதை பழைமை என அழைக்கிறார் வள்ளுவர். பழைய நண்பர்கள் பழக்கம் காரணமாக ஒருவர் மீது ஒருவர் உரிமை பாராட்டுவார்கள். சிலபோது உரிமையை மிகையாகப் பயன்படுத்தினாலும் அது நட்பு முறிவுக்குக் காரணமாகாமல் தடுத்துக் கொள்வர். நெருக்கமான, உரிமையுடன் கூடிய உறவு கொண்டவர்களே நல்ல நட்புக்கு அடையாளம். அவ்வகையான நட்பே பழைமை எனக் குறிக்கப்பெறுகிறது. பழைமை என்னும் நெருக்கமான நட்பின் ஆழம் உரிமையால் செய்தனவற்றைச் சிறிதும் நீக்காமல் ஏற்றுக் கொண்ட பண்புறவில் தெரியவரும். தொடர்ந்துவரும் பழைய நட்புறவு சிதைவுறாமல் காக்கப்படவேண்டும் என்பது வள்ளுவர் விழைவு.

பழைமை என்றால் என்ன என்பதை வள்ளுவர் இங்கு, வரையறை செய்கிறார். பழைமை நட்பு என்பது தான் காரணப் பெயராக பழைமை எனச் சொல்லப்படுகிறது. இது நீண்டகாலம் நிலைத்து நிற்பது. இச்சொல் உரிமைகள் கூடுதலாக இருப்பதையும் குறிக்கும். மிகை உரிமை எடுத்துக்கொள்ள பழைமை இடம் கொடுப்பது என்றாலும், நெடுநாள் நெருங்கிப் பழகிய நண்பர்கள் ஒருவருக்கொருவர் எவ்விதமான மனவருத்தமுமின்றிப் பழகுவர்.
வ சுப மாணிக்கம் பழைமை என்பதற்கு நல்ல நட்பு என்று பொருள் கூறி அது எவ்வகையாலும் உறவை முறித்துக் கொள்ளாத நட்பு என இக்குறளுக்கு உரை தந்தார்.

'கிழமையைக் கீழ்ந்திடா' என்றால் என்ன?

'கிழமையைக் கீழ்ந்திடா' என்றதற்கு உரிமையை அறுத்தலில்லாத, உரிமையறுத்தல் இல்லாத, உரிமையைச் சிறிதும் சிதையாது உடன்பட்ட, பழைமையோர் உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படல், செய்ய வேண்டிய காரியத்தைச் சற்றும் குறைபடாமல் செய்ய உடன்படுதல், உரிமையாற் செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடன்படுதல், உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும், உரிமையெடுத்துக்கொண்டு நண்பர்கள் செய்வனவற்றிற்காக, நட்பைச் சிதைக்காமல் உடம்படுவது, உரிமையால் செய்வனவற்றைச் சினவாது உடன்படுவதே, உறவை முரித்துக் கொள்ளா, உரிமையாற் செய்வனவற்றைச் சிறிதும் சிதைக்காமல் ஏற்றுக்கொள்ளும், எந்த உரிமையையும் கெடுத்துக் கொள்ளாமல் நடந்து கொள்ளும், உரிமையால் செய்வனவற்றைச் சிறிதும் அழித்திடாது ஏற்றுக் கொள்ளும், உரிமையால் செய்வனவற்றைச் சிதையாத, உரிமையால் செய்தனவற்றைச் சிறிதும் சிதையாது ஏற்றுக் கொண்ட, உரிமையால் செய்வனவற்றைக் கீழ்ப்படுத்தாமல் அதற்கு உடன்படும், தாம்விரும்பியவாறு செய்தற்குரிய உரிமையைச் சிறிதும் கெடுக்காத பொறை, உரிமை பாராட்டிச் செய்வதை எந்தக் காரணத்தினாலும் தள்ளிவிடாமல் ஏற்றுக் கொள்வது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கிழமை என்ற சொல் உரிமை என்ற பொருள் தருவது. 'கெழுதகைமை' எனச் சொல்லப்படுவதும் அது. இது நண்பனிடம் கேட்டுக்கேட்டு அவனுக்கு இடையூறு தருதல் ஆகாது என்ற எண்ணத்தினால் அவனைக் கேளாமலே அவனுக்காகச் செயல்புரியும் உரிமையாகும். பழைமையன் தன் நட்பினன் உளப்போக்கை அறிந்தவனானதால் தானே செய்பணிகளை வகுத்துக் கொள்வான். உரிமையால் செய்யப்படுவன எவை என்பதற்குப் பரிமேலழகர் 'செய்யுங்கால் கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், உரிமை பற்றிக் கேளாமல் தாமே எடுத்துக் கொள்ளுதல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை முதலாயின' என்பனவற்றைக் காட்டுவார். வீட்டிற்குள் வந்து உரிமையுடன் பழகுதல், முறை பாராட்டி எள்ளலுடன் இழித்து உரையாடுதல் போன்றவையும் உரிமையால் செய்யப்படுவனவே.
கீழ்ந்திடா என்ற சொல் சிதையாது அதாவது விலக்காமல் எனப்பொருள்படும். நட்புரிமை கெடாமல் பழகுவதைக் 'கிழமையைக் கீழ்ந்திடா' என்ற தொடர் குறிக்கிறது. உரிமை எடுத்துச் செய்யப்படுவனவற்றில் பிழை நேர்ந்தால் அதைப் பொறுத்துக்கொண்டு பழைமை பாராட்டுவான் நட்புக்கொண்டவன் என்பது குறிப்பு.

பழைமை என்று சொல்லப்படுவது யாதென்றால் ஒருவருக்கொருவருடனான உரிமை சிறிதும் சிதைவுபடாத நட்பு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பழைமை என்பது தொடர்ந்து வரும் நல்ல நட்பு.

பொழிப்பு

உரிமை நட்பு என்று சொல்லப்படுவது யாதென்றால் நெடுங்கால நண்பர் உரிமையுடன் செய்வனவற்றைச் சிதையாமல் ஏற்றுக்கொண்ட நட்பு.