இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0803



பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை

(அதிகாரம்:பழைமை குறள் எண்:803)

பொழிப்பு (மு வரதராசன்): பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?

மணக்குடவர் உரை: ஒருவன் தனது உரிமையாலே இசைவில்லாதவற்றைச் செய்தவிடத்துத் தான் அமையானாயின், பின் அவனோடு பழகிய நட்பு யாதினைச் செய்யும் என்றவாறு.
இது, மறுமையிற் பயன்படான் என்றது.

பரிமேலழகர் உரை: கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன் செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்?
(செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உரிமையோடு செய்ததை உடன்படா விட்டால் பழகிய பழக்கத்தின் பயன் என்னவோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை பழகிய நட்புஎவன் செய்யும்?

பதவுரை: பழகிய-பழையதாய் வந்த; நட்பு-தோழமை; எவன்-என்ன பயன்; செய்யும்-செய்யும்; கெழுதகைமை-உரிமை; செய்தாங்கு-செய்தாற்போல; அமையாக்கடை-உடன்படாதபோது.


பழகிய நட்புஎவன் செய்யும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின் அவனோடு பழகிய நட்பு யாதினைச் செய்யும் என்றவாறு;
பரிப்பெருமாள்: பழகிய நட்பால் பெறும் பயன் என்னை?;
பரிதி: பழைமையான நட்பு என்ன செய்யும்;
காலிங்கர்: அவரோடும் நெடுங்காலம் பழகிய நட்பெல்லாம் என் செய்யும்; யாதும் இல்லை;
பரிமேலழகர்: அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்?;

'பழகிய நட்பு யாதினைச் செய்யும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தொன்றுதொட்டுப் பழகிவந்த நட்பு என்ன பயனைச் செய்யும்?', 'ஒத்துக் கொள்ளாவிட்டால் பழகிய நட்பு என்பது என்ன பயனுடையதாகும்?', 'பழக்கமான நேயம் என்ன நன்மையை செய்யவல்லது?', 'பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச் செய்யும்? ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெடுங்காலம் பழகிவந்த நட்புக்கு என்ன பொருள் என்பது இப்பகுதியின் பொருள்.

கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் தனது உரிமையாலே இசைவில்லாதவற்றைச் செய்தவிடத்துத் தான் அமையானாயின். [இசைவில்லாதவற்றை- ஒப்புக் கொள்ளாதவற்றை]
மணக்குடவர் குறிப்புரை: இது, மறுமையிற் பயன்படான் என்றது.
பரிப்பெருமாள்: உன் உரிமையால் ஒருவன் பிழை செய்த காலத்து அரசன் தான் அமையாத இடத்து என்றவாறு.
பரிதி: பழைமைக்குத் தக்க நல்லநெறியில் நடவானாகில் என்றவாறு.
காலிங்கர்: எவ்விடத்து எனின் கீழ்ச்சொன்னபடியே அவர் தமக்கு வேண்டும் கெழுதகைமை செய்து அமையா இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: தாம் உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின்.
பரிமேலழகர் குறிப்புரை: செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும் பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது.

'நட்டார் உரிமையாற் செய்தனவற்றிற்குத் தாம் உடம்படாராயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்புக்கொண்டவர் உரிமையால் தமக்கு விரும்பாதவற்றைச் செய்தாலும் தாம் செய்தாற்போல அவற்றை உடன்படாவிடத்து', 'பழைமை நட்பின் உரிமையினால் ஒருவர் இன்னொருவருக்காக ஒரு காரியத்தைச் (செய்துவிட்டால் அதை) செய்தபடி (ஒத்துக் கொள்வதுதான் பழைமையின் கடமை)', 'உரிமையாகச் செய்வனவற்றைச் செய்த வண்ணமே ஏற்று அமைந்திராவிட்டால்', 'நண்பர் உரிமையால் செய்தனவற்றிற்குத் தாம் செய்தன போல் கருதி உடன்பட்டு இராவிடின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நண்பர் உரிமையால் செய்தனவற்றிற்கு செய்தபடியே உடன்படாவிடத்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நண்பர் உரிமையால் செய்தாங்கு அமையா இடத்து நெடுங்காலம் பழகிவந்த நட்புக்கு என்ன பொருள்? என்பது பாடலின் பொருள்.
'செய்தாங்கு அமையா' என்ற தொடர் குறிப்பதென்ன?

தாம் கொண்ட உறவுநெருக்கத்தை நண்பரும் காட்டுவர்.

நட்பின் உரிமை பற்றி நண்பர் செய்த செயலைச் செய்தபடியே ஒப்பாவிட்டால் நெடுங்காலம் பழகிய நட்புக்கு என்ன பொருள்?
அவர்கள் இருவரும் நெடுநாள் பழகியவர்கள். பழைய நண்பர்கள் என்பதால் ஒருவர்க்கொருவர் எப்பொழுதும் உதவிக் கொள்வர். சில வேளைகளில், உரிமையுடன், நண்பனைக் கேளாமலேயே அவன் தொடர்பான செயல்களுக்கு முடிவு எடுக்கும் வழக்கம் உண்டு. அம்முடிவுகளை நண்பர் அப்படியே ஏற்றுக்கொள்வர். இதுதான் பழைமையின் சிறப்பு. அவ்விதம் தன் நண்பர் ஏற்றுக்கொள்ளாமல் நண்பரைக் கைவிட்டால், அவரோடு நெடுங்காலம் பழகிய நட்பு எல்லாம் என் செய்யும்; யாதும் இல்லை என்கிறார் வள்ளுவர். பழகிய நட்பு என்ற தொடர் நட்பாளரின்‌ பழமைத்‌ தொடர்பைச் சுட்டுகிறது.

பழைமையான நட்பு தரும் உரிமையால், சில சமயம் நட்டவர்கள், நட்புக்கொண்டவருக்காகச் சிலவற்றைப் பிழையாகச் செய்திடுவார். அவற்றைத் தவறென்று கருதாது, உரிமையால் செய்த செயலென்று ஏற்கவேண்டும்; நட்புரிமையால் செய்யப்படும் எவற்றையும் பொறுத்தல்தான் கெழுதகைமை என்கின்றார் வள்ளுவர். ஒருவருக்கொருவர் பிழைகளையும் அவற்றால் விளையும் தீமைகளையும் பொறுத்துக் கொள்ளாவிட்டால் நெடுநாள் உரிமையுடன் நெருங்கிப் பழகிய நட்பு பொருளற்றதாகிவிடும்.

'செய்தாங்கு அமையா' என்ற தொடர் குறிப்பதென்ன?

'செய்தாங்கு அமையா' என்றதற்குச் செய்தவிடத்துத் தான் அமையானாயின், ஒருவன் பிழை செய்த காலத்து அரசன் தான் அமையாத இடத்து, பழைமைக்குத் தக்க நல்லநெறியில் நடவானாகில், (கெழுதகைமை) செய்து அமையா இடத்து, செய்வனவற்றிற்குத் தாமும் உடன்படாவிடத்து, செய்தனவற்றிற்குத் தாம் செய்தாற் போல உடம்படாராயின், செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால், தாமே செய்ததுபோலக்கொண்டு அமைதியுறாவிட்டால், செய்த காரியங்களுக்கு உடன்பட்டு நிற்காத பொழுது, செய்ததை உடன்படா விட்டால், தமக்கு விரும்பாதவற்றைச் செய்தாலும் தாம் செய்தாற்போல அவற்றை உடன்படாவிடத்து, செய்வனவற்றைச் செய்த வண்ணமே ஏற்று அமைந்திராவிட்டால், தான் செய்தனபோல் ஒப்பி அமையாத இடத்தில், செய்தனவற்றிற்குத் தாம் செய்தன போல் கருதி உடன்பட்டு இராவிடின், செயல்படுதற்கு ஒப்பாவிட்டால், செய்தனவற்றைத் தான் செய்தது போல அமைத்துக்கொள்ளாராயின் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவற்றுள் 'தாம் செய்தது போன்றே எண்ணி ஏற்றுக்கொள்ளுதல்' என்பதினும், 'செய்வனவற்றைச் செய்த வண்ணமே ஏற்று அமைந்திராவிட்டால்' என்ற உரை பொருத்தமாக உள்ளது. கெழுதகைமையால் செய்யப்பட்ட செயல்களை ஆராய்ந்து அப்படிச் செய்திருக்கலாமே, இப்படிப் பண்ணியிருக்கலாமே என்று கூறாமல் நண்பன் தன் மனப்பான்மைக்கு ஏற்பவே செய்திருப்பான் என்று நம்பி அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் கெழுதகைமையின் சிறப்பு. 'விருப்பமில்லை', 'உடன்பாடு இல்லை' என்ற பேச்சுக்களுக்கு இடமில்லை.

'ஆங்கு' என்றது குறளில் பல இடங்களில் உவமையுருபிடைச் சொல்லாகப் பயின்று வந்துள்ளது. அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (அருளுடைமை 247 பொருள்: பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்வு இல்லையாயினாற் போல அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை), அச்சம் உடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு (பொச்சாவாமை 534 பொருள்: உள்ளத்தில் அச்சமுடையார்க்கு எத்தனை பாதுகாப்பு கொண்டாலும் அவை அரண் ஆகா; அதுபோல பெருமகிழ்ச்சியிலும் செருக்கிலும் கடமை மறந்தவர்க்கு நல்ல நிலைமைகள் வாய்த்திருந்தாலும் அவற்றால் நன்மை இல்லை) போன்றனவற்றில் ஆங்கு என்ற சொல் 'போல' என்ற பொருள் தரும்படி ஆளப்பட்டன. பிற இடங்களில் அவ்வாறு, எண்ணிய(வாறே), ஆகிய, அதற்கேற்ப என்னும் பொருளில் ‘ஆங்கு’ என்னும் இடைச்சொல் அமைந்துள்ளன.

'செய்தாங்கு அமையா' என்ற தொடர் 'செய்தபடி உடம்படா' என்ற பொருள் தருவது.

நண்பர் உரிமையால் செய்தனவற்றிற்கு செய்தபடியே உடன்படாவிடத்து நெடுங்காலம் பழகிவந்த நட்புக்கு என்ன பொருள்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பழைமை என்பது கேள்விக்கு இடமின்றி உறவாடுவது.

பொழிப்பு

நெடுங்காலம் பழகியவர் உரிமையோடு செய்தனவற்றிற்கு செய்தபடியே உடன்படாவிடத்து பழகிவந்த நட்புக்குப் பொருள் என்னவோ?