இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0807



அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்

(அதிகாரம்:பழைமை குறள் எண்:807)

பொழிப்பு (மு வரதராசன்): அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும் செயல்களைப் பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பார்.

மணக்குடவர் உரை: தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர்.
இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார்.
('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அன்பு நெறியிலே பழகியவர் நண்பன் தீமை செய்தாலும் அன்பை விடார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மைவர்.

பதவுரை: அழி-கேடுகள்; வந்த-வந்தவற்றை; செய்யினும் அன்பு-அன்பு, தொடர்புடையார் மாட்டு உளதாகும் உள்ள நெகிழ்ச்சி; அறார்-ஒழியார்; அன்பின்-அன்புடன்; வழி-தொன்று தொட்டது, பழையது; வந்த-நேர்ந்த; கேண்மையவர்-நட்புடையவர்.


அழிவந்த செய்யினும் அன்பறார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்:
பரிப்பெருமாள்: தமக்கு அழிவுவரும் காரியத்தைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்:
பரிதி: தம்முடைய செல்வம் அழியும்படியாகக் குற்றம் செய்தாலும் அதற்குப் பரிகாரம் பண்ணுவாரல்லது பழையார்மேல் அன்புவிடார். [பரிகாரம் - நீக்குகை]
காலிங்கர்: தாம் அழிய வந்தனவற்றைச் செய்தாராயினும் அன்புவிடார்; [அழிய - கெட]
பரிமேலழகர்: நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; [அழிவு வந்தவற்றை - அழிவு தரத்தக்க செயல்களை]
பரிமேலழகர் குறிப்புரை: 'அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். [மேற்சொல்லிய கேடுகள்- பொருட்கேடும் போர்க்கேடும்]

'நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தமக்கு அழிவு வரும் செயல்களைச் செய்தாலும் தாம் அவரிடம் அன்பு நீங்கார்', 'பழைமை பற்றிய நண்பர்கள், வேண்டுமென்றே அழிவு தரக்கூடிய காரியத்தைச் செய்துவிட்டாலும் அன்பற்று நடந்து கொள்ள மாட்டார்கள்', 'நண்பர் தமக்குக் கெடுதியானவற்றைச் செய்தாலும் அவர்பாலுள்ள அன்பு நீங்கப்பெறார்', 'தமக்கு அழிவு தரக்கூடியவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு நீங்கார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தமக்குக் கேடுவருவனவற்றைச் செய்தாலும் தாம் அவரிடம் அன்பு நீங்கார் என்பது இப்பகுதியின் பொருள்.

அன்பின் வழிவந்த கேண்மை யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது.
காலிங்கர்: அன்பினாலே வழிவந்த கேண்மையை உடையோர் என்றவாறு.
பரிமேலழகர்: அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது.

'அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பின் வழியே தொடர்ந்து வந்த பழைய நண்பினை உடையவர்', 'வாழையடி வாழையாக அன்பினால் தொடர்ந்து வரும் நட்புடையவர்கள்', 'அன்புடன் பலநாட் பழகிய நட்பினையுடையவர்', 'அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார் நண்பர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அன்புடனே பழையதாய் வந்த நட்புடையவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தமக்குக் கேடுவருவனவற்றைச் செய்தாலும் தாம் அவரிடம் அன்பு நீங்கார், அன்புடனே பழையதாய் வந்த நட்புடையவர்கள் என்பது பாடலின் பொருள்.
'அழிவந்த செய்யினும்' என்ற தொடர் குறிப்பதென்ன?

உணர்வுகளோடு கூடிய நட்பினர் தமக்கு அழிவுவரக் காரணமாகிவிட்டாலும் அவருடனான அன்பு மாறாது.

அன்புடன் தொன்றுதொட்டுப் பழகிய நட்பினையுடையவர் தமக்கு அழிவு வரக்கூடிய செயலைச் செய்தாலும் அவர் மீது கொண்டிருந்த அன்பு நீங்காது.
இருவர் நட்பாகப் பழகுபவர்கள். அவர்களது தொடர்பு நட்புறவில் மேலானது; அது அன்பு வழி வந்து தொடர்வது. நண்பரது செயல் ஒன்று தமது அழிவுக்கே காரணமாக அமைகிறது. அதுபொழுதும் அவரிடத்தில் கொண்ட பழைய அன்பு நீங்காமல் இருப்பார். ஏனெனில் அச்செயல் பழமைகாரணமாக நண்பருக்காகச் செய்யப்பட்டது. அன்பாலே பொருந்திய உரிமைநட்பை உடையவர், அழிவு வரக்கூடிய செயலைச் செய்தாலும், அவர் மீது கொண்டிருந்த அன்பு அறுந்து போகாது.

'அன்பின் வழிவந்த கேண்மையவர்’ என்றது அன்புடனே நெடுங்காலம் தொடர்ந்து வந்த பழைய நட்பினை உடையவர் என்பதைச் சொல்வது. அன்புடையவர்கள் என்னும்போது அது தொடர்புடையார் அதாவது பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர் இவர்களை அடுத்து நட்பினரைக் குறிக்கும். அன்பில்லாவிட்டால் நட்பு உண்டாகாது. இங்கு அன்பின்வழிவந்த கேண்மை என்று சொல்லப்பட்டது அன்பு அறுதற்குக் காரணமாகும் அழிவந்த செய்தாலும் பழைமை பற்றி அன்பு அறுதலாகாது என்பதை வலியுறுத்துவதற்காகவே.

'அழிவந்த' என்ற தொடர் குறிப்பதென்ன?

'அழிவந்த'' என்றதற்குத் தமக்கு அழிவுவரும் கருமங்கள், தமக்கு அழிவுவரும் காரியம், தம்முடைய செல்வம், தாம் அழிய வந்தன, தமக்கு அழிவு வந்தவை, தனக்கு அழிவு வரத்தக்க காரியங்கள், அழிவு தரும் செயல், தமக்கு அழிவு தரக்கூடிய காரியங்கள், அழிந்து போகக் கூடிய அளவு துன்பம், தீமை, தமக்கு அழிவு வரும் செயல்கள், வேண்டுமென்றே செய்த அழிவு தரக்கூடிய காரியம், தமக்கு அழிவு தரும் செயல்கள், தமக்குக் கெடுதியானவை, தமக்கு அழிவு தரக்கூடியவை, தமக்குக் கேடு விளையத்தக்க செயல்கள், தமக்கு அழிவு தருவன, அன்புக்கு விலக்கான அழிவு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘அழிவந்த செய்யினும்’ என்பதற்குப் பொருட்கேடு உண்டாக்கும் செயல்கள் எனவும் தமது அழிவுக்குக் காரணமாகும் செயல்கள் எனவும் பொருள் கூறினர். பொருட்கேடு என்பதினும் அழிவுக்குக் காரணமாகும் செயல்கள் என்பது பொருத்தம். இவை அறிந்தோ அறியாமலோ பழைமை காரணமாக நண்பன் செய்த கேடுதரும் செயல்கள் ஆம்.
அன்பின் அடிப்படையில் கொண்ட நட்பு எனக் குறள் சொல்வதால் அறியாமல் செய்த அழிசெயல்கள் எனக் கொள்வது சிறக்கும்.

'அழிவந்த' என்றது அழிவு தரத்தக்க செயல்கள் எனப்பொருள்படும்.

தமக்குக் கேடுவருவனவற்றைச் செய்தாலும் தாம் அவரிடம் அன்பு நீங்கார், அன்புடனே பழையதாய் வந்த நட்புடையவர்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பழைமையான் அன்பு அறுபடுமாறு செய்யப்பட்டதையும் பொறுக்கும் நட்பாளரின் சிறப்பு.

பொழிப்பு

நண்பன் தீமை செய்தாலும் அன்பை விடார், அன்பின் வழியே வந்த பழைய நட்புடையவர்.