இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0806



எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு

(அதிகாரம்:பழைமை குறள் எண்:806)

பொழிப்பு (மு வரதராசன்): உரிமைவாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவு நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிடமாட்டார்.

மணக்குடவர் உரை: ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார்.
எல்லை- வரம்பு.

பரிமேலழகர் உரை: எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார்.
(பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.)

இரா சாரங்கபாணி உரை: நட்பின் எல்லையில் நின்றவர் தம்மொடு பழைமையில் நின்றவரது நட்பினை அவரால் அழிவு வந்தவிடத்தும் கைவிடமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லைக்கண் நின்றார் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார்.

பதவுரை: எல்லைக்கண்-வரம்பின் கண்ணே; நின்றார்-நின்றவர்; துறவார்-நீங்கார், விட மாட்டார்; தொலைவு இடத்தும்-துன்பம் நேர்ந்தபோதும். இழப்பு உண்டானபோதும், அழியும் இடத்திலும்; தொல்லைக்கண் நின்றார்-பழைமையில் நின்றவர், நெடுங்காலம் நண்பராக இருப்பவர்; தொடர்பு-நட்பு.


எல்லைக்கண் நின்றார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கத்தின்கண்ணே நின்றார்;
மணக்குடவர் குறிப்புரை: எல்லை- வரம்பு.
பரிப்பெருமாள்: ஒழுக்கத்தின்கண்ணே நின்றார்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லையாவது, வரம்பு. அஃது ஒழுக்கம் ஆயிற்று.
பரிதி: இன்னார் என்னும் தகுதி மிகுதி பெற்றார்;
காலிங்கர்: அப்படிப் பழமை வரம்பின்கண் நின்றார் யாவர்;
பரிமேலழகர்: நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; [வரம்பு இகவாது - எல்லை கடக்காமல்]

ஒழுக்கத்தின்கண்ணே நின்றார்/தகுதி மிகுதி பெற்றார்/பழமை வரம்பின்கண் நின்றார்/நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பண்பில் உயர்ந்தவர்', 'பழைமையான நட்பு என்பதன் பெருமையை மதித்துக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுகிறவர்கள்', 'நட்பினைப் போற்றி அதன் வரம்பினுள் நிற்பவர்', 'நட்பின் எல்லைக்கண் நின்றார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நட்புரிமையின் எல்லையில் நின்றார் என்பது இப்பகுதியின் பொருள்.

துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார்.
பரிப்பெருமாள்: பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவரானே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார்கள் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் கூறியவாற்றான் அமைந்துவிடுதல் அன்றி, நட்பு விடுதல் உயர்ந்தோர் செய்யார் என்றது. [மேல்கூறியஆற்றான் - 'பழைமை எனப்படுவது...' என்ற குறள்]
பரிதி: பழையோரைக் கைவிடார் என்றவாறு.
காலிங்கர்: தம்மொடு நட்பினால் பழமைக்கண் நிலை நின்றார் தொலையும் இடத்தும்; மற்று இவர் இவரோடு உண்டாகிய தொடர்பினை என்றும் கைவிடார் என்றவாறு. [தொலையும் இடத்தும் - நீங்குமிடத்தும்]
பரிமேலழகர்: தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார்.
பரிமேலழகர் குறிப்புரை: பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும். [பொருட் கேடு - உள்ள பொருள் தொலைதல்; போர்க் கேடு - போரில் தோல்வியடைதல்]

'பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பத்தும் நெடுநாள் நண்பர் தொடர்பினை விட்டுவிடார்', 'பழைமையான நண்பர்களை, அவர்களால் ஒரு நஷ்டம் வந்துவிட்டாலும் கைவிட்டு விடமாட்டார்கள்', 'பழைமை பாராட்டும் நண்பரது தொடர்பை அவரால் கேடுவந்த காலத்தும் விடமாட்டார்', 'தம்மோடு பழைமைப் பண்பு திரியாது நின்றாருடைய நட்பினை அவரால் கேடு வந்தவிடத்தும் விடார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பழைமை பாராட்டும் நண்பரது தொடர்பை அவரால் இழப்புக்கள் நேர்ந்தவிடத்தும் விடமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நட்புரிமையின் எல்லையில் நின்றார், பழைமை பாராட்டும் நண்பரது தொடர்பை, தொலைவிடத்தும் விடமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'தொலைவிடத்து' என்பதன் பொருள் என்ன?

என்ன இழப்பு நேர்ந்தாலும் பழையரைக் கைவிடார் நட்புவாழ்வின் எல்லை அறிந்தவர்.

நட்பின் எல்லைவரை சென்றவர், தம்மோடு பழைமையில் மாறாமல் நின்றவர் தொடர்பை, அவரால் இழப்பு வந்தபோதிலும், கைவிடமாட்டார்.
ஒருவர் நட்புக்கான எல்லைகளைத் தொடுபவராக இருப்பவர். அவரது நெடுங்கால நண்பர் ஒருவர் நட்புரிமை மிகக் கொண்டவர். நண்பரால் நட்புக்கொண்டவருக்கு இழப்பு நேர்ந்துவிடுகிறது. ஆனாலும் அதற்காக அந்த நண்பர் தொடர்பைத் துண்டிக்காமல் தொடர்ந்து நட்பு பாராட்டுவார். பழைமை மாறாதவர்கள் என்னகேடு நேர்ந்தாலும் நட்பை விடமாட்டார்கள். தமக்கு இழப்புகள் உண்டாக்கிவிட்டார் என்ற காரணத்துக்காக பழைமையரின் தொடர்பை அறுப்பது நட்புரிமைக்குக் கட்டுப்பட்டு வாழ்வது ஆகாது.
எல்லைக்கண் நின்றார்: 'எல்லைக்கண்' என்ற தொடர்க்கு ஒழுக்கத்தின்கண் நின்றார், நட்பின் வரம்பின்கண், இன்னார் என்னும் தகுதி மிகுதி பெற்றார், பழைமை வரம்பின்கண் நின்றார், நட்பு வரம்பு இகவாது நின்றவர், பழைய நட்பின்வரை, நட்பின் அளவு மிகுதி, உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், நட்பின் எல்லையில் நின்றவர், பண்பில் உயர்ந்தவர், நட்பின் உயர் எல்லையில் நின்றவர் எனப் பொருள் கூறினர்.
மணக்குடவர் எல்லை என்பதற்கு வரம்பு எனப் பொருள் கொண்டு, எல்லைக்கண் என்பதற்கு ஒழுக்கத்தின்கண் என உரை வரைந்தார்.
நட்பின் உச்சத்துக்குச் சென்றவர் அதாவது நட்புறவின் விளிம்பை அடைந்தவர் 'எல்லைக்கண் நின்றார்' எனச் சொல்லப்பட்டார்.
தொல்லைக்கண் நின்றார்: 'தொல்லைக்கண் நின்றார்' என்ற தொடர்க்குப் பழைமையின்கண் நின்றார், பழமைக்கண் நிலை நின்றார், பழைமையின் திரியாது நின்றார், பழைமையாய் உறவுகொண்டு நின்றவர், பழையவர்களாய் இருக்கிற சிநேகிதர், முன்பு தொட்டு வேறுபடாது பழகிவருபவர், நெடுநாள் நண்பர், பழைமையில் நின்றவர், பழைமையான நண்பர், தாம் தொல்லைப்படுங்கால் நிலைபெற நின்றவர், பழைமை பாராட்டும் நண்பர், பழைமைப் பண்பு திரியாது நின்றார் என்றவாறு பொருள் கூறினர்.
இவற்றுள் பழைமையின் திரியாது நின்றார் என்னும் பொருள் பொருத்தமாகும்.

'தொலைவிடத்து' என்பதன் பொருள் என்ன?

'தொலைவிடத்து' என்றதற்கு அழிவு வந்தவிடத்து, தொலையும் இடத்து (நீங்குமிடத்து), தொலைவு (பொருட்கேடும் போர்க்கேடும்) வந்தவிடத்து, இழப்பு வந்தவிடத்து, துன்பத்து, நஷ்டம் வந்துவிட்டால், தொலைவான இடத்தில், துன்பம் வந்தபோது என்றவாறு பொருள் கூறினர்.

(நட்பிலிருந்து) நீங்குமிடத்து' அதாவது 'சிநேகம்விட்டுப் போகுமிடத்து', 'தொலைவான இடங்களுக்குப் போகுமிடத்து' என்றபடியும் இச்சொல்லுக்கு உரை தந்தனர்.

'தொலைவிடத்து' என்ற தொடர்க்கு இழப்பு வந்த இடத்து என்பது பொருள்.

நட்புரிமையின் உயர் எல்லையில் நின்றார் பழைமை பாராட்டும் நண்பரது தொடர்பை அவரால் இழப்புக்கள் நேர்ந்தவிடத்தும் விடமாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பழைமையை நன்கு மதிப்பவர்க்கு நண்பரால் உண்டான இழப்புக்கள் பொருட்டல்ல.

பொழிப்பு

நெடுங்கால நண்பரது தொடர்பினை, அவரால் இழப்பு வந்தவிடத்தும், நட்புரிமையின் எல்லையில் நின்றவர், விட்டுவிடார்.