இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0808கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்

(அதிகாரம்:பழைமை குறள் எண்:808)

பொழிப்பு (மு வரதராசன்): பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

மணக்குடவர் உரை: நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம்.
இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு - நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; நட்டார் இழுக்கம் செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்.
(பிழையாவன: சொல்லாது நற்பொருள் வெளவல், பணியாமை,அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: தமது நண்பர்களது பிழையைப் பிறர் வந்து சொன்னாலும் அதைக்கேட்டுக்கொள்ளாத அத்துணையளவு நட்புரிமையைப் போற்றுபவர்களுக்கு, அந் நண்பர்கள் பிழையானவற்றைச் செய்வார்களாயின், அந்த நாள் அவர்க்கு உண்மையன்பைக் காட்டக் கிடைத்த நல்ல நாளாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நட்டார் இழுக்கம் செயின் நாள்.

பதவுரை: கேள்-நெருங்கிய நண்பன்; இழுக்கம்-பிழை, குற்றம்; கேளா-கேட்காத; கெழுதகைமை-உரிமையாற் செய்வன; வல்லார்க்கு-திறமையுடையவர்க்கு; நாள்-நாள், நல்ல நாள்; இழுக்கம்-தவறு; நட்டார்-நண்பர்; செயின்-செய்தால்.


கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு;
பரிப்பெருமாள்: நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமை யறியவல்லார்க்கு;
பரிதி: நட்பினால் குற்றத்தைக் கேளாத உறவை வல்லவர்க்கு;
காலிங்கர்: இவ்வாறு நல்லவும் தீயவும் அவரைக் கேளாது செய்தற்குரிய கெழுதகைமை வல்லராகிய கிளைமையோர்க்கு; [கிளைமையோர்க்கு- சுற்றமாவார்க்கு]
பரிமேலழகர்: நட்டார் செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு; [கொள்ளாத - மனத்தில் ஏற்றுக்கொள்ளாத]
பரிமேலழகர் குறிப்புரை: பிழையாவன: சொல்லாது நற்பொருள் வெளவல், பணியாமை, அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல். 'கெழுதகைமைவல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. [நற்பொருள் வௌவல்- சிறந்த பொருளைத் தமக்குரியதாகக் கைப்பற்றுதல்]

'நட்டோரது தப்பைப் பிறர் சொல்லுங்கால் கேளாத உரிமையை யறியவல்லார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'கேளாது செய்தற்குரிய கெழுதகைமை வல்லராகிய கிளைமையோர்க்கு' என வேறான உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நண்பரின் பிழைக்குக் காது கொடாதவர்க்கு', 'நண்பர் செய்த பிழைகளைக் கேட்க விரும்பாத உரிமை அறிய வல்லவர்க்கு', 'பழகிய நண்பர்களைப் பற்றிப் பிறர் குற்றம் கூறுவதைக் கேட்கவும் விரும்பாத நட்புக் குணத்தில் சிறந்தவர்கள்', 'நண்பர் செய்த பிழையைத் தாமாகவேயன்றிப் பிறர் சொன்னாலும் கொள்ளாத உரிமை அறிய வல்லார்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நண்பர் செய்த குற்றங்களைக் கேட்க விரும்பாத, நட்புரிமை அறிய வல்லவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நாள்இழுக்கம் நட்டார் செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கேளாது செய்தலே அன்றித் தப்புச் செய்யினும் அமைய வேண்டுமென்றது.
பரிதி: நாள்போல நன்மை நட்டாராலே உண்டாம்.
காலிங்கர்: அவருடன் நட்டார் பின்னும் நட்பிடைக் குற்றம் செயின், அற்றை நாள் தமது வாணாள் வரையுள் இழந்த நாள் ஆகும். [வாணாள் - வாழ்நாள்]
பரிமேலழகர்: அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்.
பரிமேலழகர் குறிப்புரை: செய்து போந்துழியல்லது அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின. இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

'நட்டோர் தப்புச்செய்யின், அந்தநாள் நல்ல நாளாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'பின்னும் நட்பிடைக் குற்றம் செயின், அற்றை நாள் தமது வாணாள் வரையுள் இழந்த நாள் ஆகும்' என மாறுபட்ட உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நண்பர் பிழைசெய்யும் நாள் நன்னாளாகும்', 'அந்நண்பர்கள் பிழை செய்வாராயின், அது பயன்பட்ட நாளாம்', 'தமது நண்பர்கள் குற்றம் செய்துவிட்டால் அதைத் தம்முடைய பொல்லாத காலம் என்று பொறுத்துக் கொள்வார்கள்', 'அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட நாளாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நண்பர் பிழை செய்வாராயின் அது நன்னாளாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நண்பர் செய்த குற்றங்களைக் கேட்க விரும்பாத, நட்புரிமை அறிய வல்லவர்க்கு நண்பர் பிழை செய்வாராயின் அது நாள் ஆகும் என்பது பாடலின் பொருள்.
'நாள்' என்ற சொல் குறிப்பது என்ன?

பழையர்மேல் மிகையான நம்பிக்கை கொண்டவர், அவர் பிழை செய்தாலும் 'அதனால் என்ன?' என்றே எண்ணுவார்.

பழைய நண்பர் செய்த தவறுபற்றிப் பிறர் சொன்னாலும் அதற்குச் செவி கொடாது நட்புரிமை பாராட்டத் தெரிந்தவர்க்கு அந்த நண்பர் பிழை செய்தாலும், அந்த நாள் நல்ல நாளாகவே படும்.
ஒருவர் நண்பரின் செயல்பாடுகளில் இழுக்கிருப்பதாக யார் வந்து சொன்னாலும் அதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட விரும்பமாட்டார். நண்பர்மேல் என்ன குற்றம் யார் படித்தாலும் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தமாட்டார். அந்தளவு அந்நண்பர்மேல் நம்பிக்கை வைத்துப் பழைய நட்பினைப் போற்றுபவர் அவர். உண்மையிலேயே நண்பர் பிழை செய்துவிட்டாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். தவறு செய்த அந்த நாள் நல்ல நாள் என்று கொண்டாடுவார். ஏன்? தவறு செய்யும்நாள் நட்புரிமை வெளிப்படுத்துதலின், அந்நாள் நன்னாளாம்.

'நாள்' என்ற சொல் குறிப்பது என்ன?

பரிதி 'நாள்செய்வன நல்லோர் செய்யார்' என்ற பழமொழிக் கருத்தையொட்டி 'நாள்போல நன்மை நட்டாராலே உண்டாம்' எனப் பொருள் உரைத்தார்.
இப்பாடலிலுள்ள நாள் என்பதற்கு நாமக்கல் இராமலிங்கம் 'தமது நண்பர்கள் குற்றம் செய்துவிட்டால் அதைத் தம்முடைய பொல்லாத காலம் என்று பொறுத்துக் கொள்வார்கள்' என்று பொழிப்பு தந்தார். இவர் நாள் என்பதற்குக் கெட்டகாலம் எனப் பொருள் கூறியுள்ளார். வேறு சிலர் 'நண்பரின் குற்றங் குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு நண்பர் குற்றம் செய்தால் அது அந்நாளின் குறையாகவே தோன்றும்' என்றும் 'பழைய நண்பர்கள் செய்யும் தவறுகளைக்கூட கெழுதகைமையின் பாற்பட்டு கேளாமல் விட்டுவிடும் திறன் கொண்டவர்களிடம் கெழுதகைமையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு தவறு இழைப்பவரின் அந்த நாள் அவர் தன்னுடைய ஆன்மத் தேற்றத்தில் வீழ்ச்சி அடைந்த நாளாகும்' என்றும் 'நம்பியவருக்கே இந்த நண்பர் தீமை செய்தால், இந்நாள் வரை நட்புக் கொண்ட காலமே வீணாகிவிடும்' என்றும் உரை கூறினர்.

மணக்குடவர், பரிமேலழகர் உரைகளே இக்குறளுக்குப் பொருந்துவது என்பார் இரா சாரங்கபாணி. அவர் 'நட்டார் இழுக்கம் செயின் நாள் எனக் கொண்டு அவர் பிழை செய்யின் பயன் பட்டநாள் எனக் கூறும் பரிமேலழகர் உரையே தக்கது. அவர் உரைக்கு விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து (படைச்செருக்கு 776 பொருள்: தான் வாழ்ந்த நாள்களுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் பயன்படாத நாளுள்ளே எண்ணி வைக்கும்) என்னும் குறளை ஒப்பு நோக்குக' எனக் கருத்துரைக்கிறார். குறள் 776 போர்ப்புண் படாத நாள் பயன்படாத நாள் எனச் சொல்ல இப்பாடல் நண்பர் பிழை செய்தால் அது நல்ல நாள் எனச் சொல்கிறது. (இவர் கூறும் பரிமேலழகர் உரை அவர்க்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த மணக்குடவர் உரையை முற்றிலும் ஒத்தது.)
'கெழுதகைமை வல்லார்க்கு இழுக்கம் நட்டார் செயின் நாளாம்' எனக் குறளை வாசித்தால் பொருள் எளிதில் புலப்படும். பழையோர் தப்புச் செய்யினும் கெழுதகைமையால் பொறுத்தமைய வேண்டும் என்பதைச் சொல்லவந்ததே இவ்வதிகாரம். பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, தம்முடைய நட்புரிமையை விளக்குவதற்கு நட்டார் இழுக்கம் பயன் பட்டமையின் அவர் இழுக்கம் செய்தநாள் நன்னாளாயிற்று என்பது இக்குறளின் பொருள்.
காலிங்கரது உரை 'நட்டார் பின்னும் நட்பிடைக் குற்றம் செயின், அற்றை நாள் தமது வாணாள் வரையுள் இழந்த நாள் ஆகும்' என்கிறது. இதன் பொருள் 'நண்பர் குற்றம் செய்த நாள் வாழ்க்கையில் வழுவிய நாளாகும்' என்பது. இவ்வுரையும் ஏற்கத்தக்கதே.

நண்பர் செய்த குற்றங்களைக் கேட்க விரும்பாத உரிமை அறிய வல்லவர்க்கு நண்பர் பிழை செய்வாராயின் அது நல்ல நாள் ஆகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நண்பர் பிழை செய்தாலும் அதை நன்மையாய் ஆக்கிக்கொள்வர் பழைமை பாராட்டுபவர்.

பொழிப்பு

நண்பரின் குற்றத்தைப் பிறர் சொல்லக் காது கொடாத அளவு உரிமை பாராட்டுபவர்க்கு அவர் பிழைசெய்யும் நாள் நல்ல நாளாம்.