இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0805



பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

(அதிகாரம்:பழைமை குறள் எண்:805)

பொழிப்பு (மு வரதராசன்): வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம், அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.



மணக்குடவர் உரை: தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின் அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க.

பரிமேலழகர் உரை: நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க.
('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது. அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம்.
கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது.

தமிழண்ணல் உரை: ஒருவர் தமக்கு நண்பராயினார் தாம் நொந்து வருந்தத்தக்கனவற்றைச் செய்தாரென்றால், அதனை வெறுக்காமல் ஒன்று அறியாமையால் மட்டுமன்றி அதை விட அளவு கடந்த நட்புரிமையால் செய்துவிட்டதாக எண்ணி அமைதி கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோதக்க நட்டார் செயின், பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க.

பதவுரை: பேதைமை-அறியாமை; ஒன்றோ-அதுமட்டுமா? பெரும்-மிக்க; கிழமை-உரிமை; என்று-என்பதாக; உணர்க-அறிக; நோதக்க-வருந்தத் தக்கனவற்றை; நட்டார்-நண்பர்கள்; செயின்-செய்தால்.


பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க;
பரிப்பெருமாள்: அதற்கு முனியாது ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க;
பரிதி: அவர் குற்றத்தைப் பாராட்டார்; [பாராட்டார் - எண்ணமாட்டார்]
காலிங்கர்: ஒன்றே அவர் அறியாமை என்று உணர்க; இனி ஒன்றோ அவர்க்குத் தம்மோடு வேற்றுமை அறநின்ற பெரியதோர் உரிமை என்று அறிக; [வேற்றுமை அற - வேறுபாடு நீங்க]
பரிமேலழகர்: அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க; [ஒன்றில் - ஒன்று என்ற அளவில்; ஒன்றின் - மற்றொரு வகையில்]
பரிமேலழகர் குறிப்புரை :'ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல்.

'ஒன்றில் அறியாமையாலே செய்தாரென்று கொள்க: ஒன்றில் பெரிய உரிமையாலே செய்தாரென்று கொள்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறியாமையோடு உரிமையும் என உணர்க', 'அதற்குக் காரணம் பேதைமை மட்டுமன்று. மிக்க உரிமையுமாம் என்று உணர வேண்டும்', 'அதை அறியாத்தனத்தால் செய்துவிட்டதாக எண்ணுவது ஒன்றோடல்லாமல் அவர்கள் மிக்க உரிமையுடையவர்கள் என்பதையும் கருதி பொருத்துக் கொள்ள வேண்டும்', 'அதற்குக் காரணம் அறியாமை ஒன்றோ? மிக்க உரிமை என்றும் கருதுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒன்று அறியாமையால் மட்டுமன்றி மிகுந்த நட்புரிமையோடும் என்று அறிந்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நோதக்க நட்டார் செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின். [நோவத்தக்கனவற்றை- வருந்தத் தக்கனவற்றை]
பரிப்பெருமாள்: தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்தாராயின்.
பரிதி: பழையார் அறிவிலாமையினால் ஒரு குற்றம் செய்தாலும்.
காலிங்கர்: தம்மோடு நட்டார் இவ்வாறு அன்றித் தாம் பெரிதும் நோவத் தக்கனவற்றைச் செய்வாராயின்.
பரிமேலழகர்: தாம் வெறுக்கத் தக்கவனவற்றை நட்டார் செய்தாராயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'செயின்' எனவே, தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது. அன்பின்மையென்று கொள்ளப்படாது என்பதாம். [ஏதங்கொண்டார் - தீங்கு செய்தார்]
கெடும் வகை செய்யின் அதற்குக் காரணம் இதனான் கூறப்பட்டது.

'தாம் நோவத்தக்கனவற்றை நட்டோர் செய்வாராயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'நோதக்க' என்ற சொல்லுக்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் 'நோவத் தக்கனவற்றை' என்றும் பரிதி 'குற்றம்' என்றும் பரிமேலழகர் 'வெறுக்கத் தக்கவனவற்றை' என்றும் பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வருந்தும் செயல்களை நண்பர் செய்தால்', 'நாம் வருந்தத்தக்க செயல்களைப் பழகிய நண்பர் செய்தால்', 'பழைமை பற்றிய நண்பர்கள் (உரிமை கொண்டு கேளாமல்) துன்பம் தரத்தக்க காரியங்களைச் செய்துவிட்டால்', 'தாம் துன்பப்படத் தக்கனவற்றை நண்பர் செய்தாரானால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வருந்தத்தக்க செயல்களைப் பழகிய நண்பர் செய்தால் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
வருந்தத்தக்க செயல்களைப் பழகிய நண்பர் செய்தால் ஒன்றோ அறியாமையால் மட்டுமன்றி மிகுந்த நட்புரிமையோடும் என்று அறிந்து கொள்க என்பது பாடலின் பொருள்.
'ஒன்றோ' என்ற சொல்லின் பொருள் என்ன?

நட்புரிமையோடு செய்யப்பட்டது வருந்தத்தக்கதாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்.

எண்ணிக் கவலைகொள்ளத்தக்க செயலைப் பழம்நண்பர் செய்தாராயின் அது அறியாமையால் மட்டுமன்றி மிக்க உரிமையுடனும் செய்யப்பட்டது என்று உணர்தல் வேண்டும்.
நாம் உலகத்தில் மாறுபட்ட மனப்பான்மை கொண்ட பலரோடு பழகுகிறோம். ஒவ்வொரிடமும் அவர்கள் செயலுக்கேற்றவாறு, நமக்குள் வகுத்துக்கொண்ட கொள்கைப்படி, எதிர்வினை ஆற்றுகிறோம். நம்மோடு நெடுங்காலமாக நட்பாகப் பழகியவர்களைத் தனித்த முறையில் கையாளச் சொல்கிறார் வள்ளுவர். பழையர் சில வேளைகளில் நம் உள்ளம் நோகும்படியான செயல்களைச் செய்துவிட்டாலும் 'வேண்டுமென்று அவர் இவ்விதம் செய்பவர் அல்லர். அறியாமையால் செய்துவிட்டார் அல்லது நம்மிடம் வேற்றுமை பாராட்டாத மிகுந்த நட்புரிமையின் காரணமாகவே அவர்கள் அவ்வாறு செய்தனர்' என்று உணர்ந்து கொள்க என அறிவுறுத்துகிறார்.
நண்பர் செய்த நல்லதல்லாத செயலை அறியாமை என்று எண்ணுவது குற்றத்தை மன்னித்து மறக்கும் தன்மை; கூடுதல் நட்புரிமை என்று நினைப்பது குற்றம் என்று எண்ணாதது மட்டுமன்றி போற்றுதலும் ஆகும்.
பெருங்கிழமை என்றது மிகுந்த உரிமை எனப் பொருள்படும். இது நீண்டகாலத் தொடர்பையும் குறிக்கிறது.

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல் (நட்புஆராய்தல் 797 பொருள்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்) என்று முன் அதிகாரத்தில் பேதையார் நட்பு கைவிடுக என்று சொல்லப்பட்டது. அது சிறிதே பழகிய தொடக்க காலக் கேண்மை. இங்குப் பெருங்கிழமையுடையோர் அதாவது நெடுங்கால நண்பர் செய்யும் செயல் பேசப்படுகிறது ஆதலால் அவர் வருந்தும் செயலைச் செய்தாலும் பொறுத்துக் கொள்க எனக் கூறப்படுகிறது. இரண்டு பாடல்களுக்கும் முரண் இல்லை.

இப்பாடல் வரிகள் சங்கப் பாடல் ஒன்றை நினைவுபடுத்தும்: பேதமையாற் பெருந்தகை கெழுமி நோதகச் செய்ததொன்று உடையேன் கொல்லோ (குறுந்தொகை 230 பொருள்: என் அறிவின்மையால், பெரிய உரிமையைப் பொருந்தி, அவன் வருந்தி இங்கே வாராத வண்ணம் செய்த செயல் ஒன்றை உடையேனோ?). 'நின்னைக் காணப் பலகால் வந்த தலைவன் யான்சேட்படுத்தியமையின் வாராதொழிந்தான்கொல்?' எனத் தோழி கேட்பதாக அமைந்த பாடல் இது.

'ஒன்றோ' என்ற சொல்லின் பொருள் என்ன?

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க என்ற முதலடிக்குப் 'பேதைமை, உரிமை இவற்றுள் ஒன்றுபற்றிச் செய்தார் என்றுணர்க' என்பது மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய தொல்லாசிரியர்கள் தரும் கருத்து. ஒன்றோ என்பது ஒன்றில் அல்லது ஒன்றின் எனப்பொருள்படி இவர்கள் உரை செய்தனர். இதை விகற்பப் பொருள் (வேறுபாடு அல்லது வகை) எனச் சொல்வர். பழைய இலக்கியங்களில் 'ஒன்றோ' என்பது இது அல்லது அது என்ற விகற்பப் பொருட்கண்ணேயே ஆட்சியில் உள்ளது. பெரும்பான்மையோர் 'அறியாமை என்றோ, பெருமைமிக்க நட்பின் தொடர்பு என்றோ தான் உணர வேண்டும்' என உரை தந்தனர்.
'ஒன்றோ' என்பது ஒன்றுதானோ என்னும் பொருளதாம் என்பார் தேவநேயப்பாவாணர். இவர் 'அறியாமை ஒன்றுமட்டுமல்ல பெருங்கிழமையும் கூட' என்று பொருள் கூறுகிறார். இது 'அதற்குக் கரணியம் அவரது அறியாமை மட்டுமன்றி அவர் கொண்ட பேருரிமையுமாகும் என்று அறிந்து பொறுத்துக்கொள்க' என்ற பொருள் தருவது.

வேறு சிலர் 'அதனை அறியாமை என்று நினைக்கக் கூடாது; நட்புரிமை என்றே நினைக்க வேண்டும்' என்றும் 'அது பெருமளவில் எடுத்துக்கொண்ட உரிமையின் காரணம் பற்றியென்று அறிக, அறியாமையின் காரணமாக அல்ல என்றுமறிக' என்றும் 'மடமையில் ஒன்றாகாது நீண்டநாள் உறவு என்று உணர வேண்டும்' என்றும் பொருள் கூறினர்.

'இச்சொல் குறளில் எண்ணிடைச் சொல்லாயும் விகற்பப் பொருளதாயும் ஐயப்பொருளதாயும் வந்துள்ளன. இக்குறட்பாவில் 'பேதைமை தானோ உரிமையுமாம்' என விகற்பங் கூறுதற்கண்ணேயே வந்தது' என்று சொல்வார் தண்டபாணி தேசிகர்.
இரா சாரங்கபாணி 'பேதைமை ஒன்றோ என்பதற்குப் பேதைமை யன்று எனக் கொண்டு செய்யும் உரைகள் இலக்கண முரணாகும். பேதைமை யென்றாதல் பெருங்கிழமை யென்றாதல் கொள்க எனப் பரிமேலழகரும் மணக்குடவரும் உரை செய்fதுள்ளனர். ஒன்றோ என்பது எண்ணிடைச் சொல் ஆனாலும் பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (பிறனில் விழையாமை 148 பொருள்: வேறொருவனுடைய மனைவியைக் காமக் குறியோடு பார்க்காத ஆண்மைத்திண்மை சால்புடையவர்க்கு அறம் மட்டுமா? நிறைந்த ஒழுக்கமும் ஆகும்), பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின் (பேதைமை 836 பொருள்: ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற் கொண்டால் (அந்தச் செயல் முடிவுபெறாமல்) பொய்படும்; அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்) என இந்நடை குறளிற் பிற இடங்களிற் பயிலப்படுதலானும் பேதைமை மட்டுமன்று; பெருங்கிழமையுமாம் என இரண்டினையுங் காரணமாகக் கூறுதலே ஆசிரியர் கருத்தாகும்' என விளக்கினார்.
'அறியாமை என்றாவது மிக்க உரிமை என்றாவது அறிக' என்பதைவிட 'அறியாமை மட்டுந்தானா, மிக்க உரிமையும் காரணம் என்று அறிக' என்பது பொருத்தம்

'ஒன்றோ' என்றது இங்கு 'அது ஒன்றுமட்டுமல்ல இதுவும் கூட' என்ற பொருள் தருகிறது.

வருந்தத்தக்க செயல்களைப் பழகிய நண்பர் செய்தால் ஒன்று அறியாமையால் மட்டுமன்றி மிகுந்த நட்புரிமையோடும் என்று அறிந்து கொள்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பழைமையால் செய்த அழிசெயல்கூட அறியாமை என மறக்கப்படும்.

பொழிப்பு

நாம் நொந்து போகும் வண்ணம் நண்பர் செயல்களைச் செய்தால் அது அறியாமையால் மட்டுமன்றி மிகுந்த நட்புரிமை மேலீட்டாலும் என்று உணர்க.