இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0804விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்

(அதிகாரம்:பழைமை குறள் எண்:804)

பொழிப்பு (மு வரதராசன்): உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

மணக்குடவர் உரை: நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின் அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பி இருப்பர் மிக்கார் என்றவாறு.
இஃது, உடன்படுதலின்றி விரும்பவும் வேண்டும் என்றது.

பரிமேலழகர் உரை: நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்.
(ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின் அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: உரிமை நண்பு உடைமையால் தம்மைக் கேளாமல் ஒன்றை நண்பர் செய்தால், அந்த உரிமையை விரும்பும் தன்மையால் அச் செயலையும் விரும்பியிருப்பர் பழைமையர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நட்டார் கெழுதகையால் கேளாது செயின், விழைதகையான் வேண்டி இருப்பர்.

பதவுரை: விழைவிரும்பப்படும்; தகையான்-தன்மை பற்றி; வேண்டி இருப்பர்-எதிர்பார்ப்பர், விரும்புவர்; கெழுதகையால்- பழைமை தன்மையால், நெடுங்கால நட்பின் உரிமையால்; கேளாது-கேட்காமல்; நட்டார் செயின்-செய்தால்.


விழைதகையான் வேண்டி இருப்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பி இருப்பர் மிக்கார்; [முனியாது- சினக்காது]
மணக்குடவர் குறிப்புரை: இஃது, உடன்படுதலின்றி விரும்பவும் வேண்டும் என்றது.
பரிப்பெருமாள்: அதற்கு முனியாது அதனையும் தாமே விரும்பும் தன்மையோடு கூட விரும்பி இருப்பர் மிக்கார்;
பரிதி: விரும்புவரல்லது வேறு குணம் காட்டார்; [வேறு குணம்-வெறுப்பு]
காலிங்கர் ('விழைதகையார்' பாடம்): அவருடன் நட்பின்கண் விழைதகையரானோர், அவர் அங்ஙனம் கேளாது செய்கின்ற உரிமையை மேன்மேலும் வேண்டியிருப்பர்; என் எனின், தாம் அவர் என்னும் வேற்றுமை இலர் ஆகலான்;
பரிமேலழகர்: அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்.

'தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பி இருப்பர் மிக்கார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களுள் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'விரும்புவரல்லது வெறுப்பு காட்டார்' என்றுரைத்தார் பரிதி. 'அங்ஙனம் கேளாது செய்கின்ற உரிமையை மேன்மேலும் வேண்டியிருப்பர்' என்று உரை செய்தார் காலிங்கர். பரிமேலழகர் 'அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் செய்வதை ஆவலோடு எதிர்பார்ப்பர்', 'வெறுக்காமல் விரும்பும் தன்மையோடு அச்செயலை விழைந்து இசைந்திருப்பர்', 'அக்காரியம் நன்றாக முடிந்துவிட்டால் (அப்படிக் கேளாது செய்ததையும்) விரும்பி மகிழ்வார்கள்', 'அது விரும்பப்படத்தக்கதாகலின், அதனை அறிஞர் உவந்தேற்பர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவருக்கு விரும்பத்தக்கதாதலால் எதிர்பார்ப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

கெழுதகையால் கேளாது நட்டார் செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின்.
இஃது, உடன்படுதலின்றி விரும்பவும் வேண்டும் என்றது.
பரிப்பெருமாள்: நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின் அதற்கு முனியாது அதனையும் தாமே விரும்பும் தன்மையோடு கூட விரும்பி இருப்பர் மிக்கார் என்றவாறு.
பரிதி: பழையவர் தம்மைக் கேளாமல் செய்த காரியத்தை.
காலிங்கர்: நட்டாரானோர் யாம் இப்பொருள் கைக்கொள்வோம் என்று கொண்டவரைக் கேட்டுக் கொள்ளாது அவருடன் தமக்கு உள்ள பழமை மிகுதியாலே யாதானும் ஒன்று செய்யின். [கைக்கொள்வோம் - எடுத்துக்கொள்வோம்]
பரிமேலழகர்: தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்;
பரிமேலழகர் குறிப்புரை: ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின் அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.

'நட்டோர் தமது உரிமையாலே கேளாது செய்வாராயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின்' என உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உரிமையோடு நண்பர் கேளாது செய்தால்', 'நண்பர்கள் உரிமையால் தம்மைக் கேளாமலே விரும்பாததைச் செய்வாராயின்', 'பழைமையின் உரிமையினால் நண்பர்கள் (தம்முடைய காரியத்தை) தம்மைக் கேளாமல் செய்தால்', 'நண்பர் உரிமைபற்றித் தம்மிடம் கேளாது யாதாவது செய்தாராயின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பழைமையின் உரிமையோடு நண்பர் தம்மைக் கேளாமலே செய்வாராயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பழைமையின் உரிமையோடு நண்பர் தம்மைக் கேளாமலே செய்வாராயினும் அங்ஙனம் செய்தது அவருக்கு விரும்பத்தக்கதாதலால் அதை எதிர்பார்ப்பர் என்பது பாடலின் பொருள்.
'விழைதகையான்' என்ற சொல்லின் பொருள் என்ன?

அவன் ஏன் என்னிடம் கேட்கவேண்டும்? பழமையான் உரிமையோடு செய்யவேண்டுமென்றுதானே காத்திருக்கிறேன்.

நெருக்கமான நட்புரிமையால், தம்மைக் கேளாமலே, ஒன்றைச் செய்தால் அது விரும்பத்தக்கதாதலால், அவன் இன்னும் அவ்விதம் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பர் நல்ல நட்பாளர்.
நெடுங்காலம் நட்புகொண்ட இருவர் ஒருவரது மனப்பான்மையை மற்றவர் அறிவர். நண்பர்க்கு வேண்டுவன எவை? வேண்டாதன எவை? என்பன பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளவர்கள். பழமையர்களில் ஒருவர் இன்னொருவர்க்காக அவரைக் கேளாமலேயே செயல் ஆற்றுவார். ஏன் அது செய்யப்பட்டது? அச்செயலின் விளைவுகள் எவை? அது நன்மையில் முடிந்ததா? இவை பற்றியெல்லாம் இரண்டாமவர் எண்ணவேயில்லை. நம்மிடம் மிகை உரிமை கொண்டு நமக்காகச் செய்தான் பழையன் என்று மகிழ்ச்சி மட்டும் காட்டுகிறார்.

தன் இசைவு இல்லாதும் தன் நலன் கருதி, தானே எடுத்துச்செய்யும் பழைய நட்பினரின் உரிமைச் செயலைப் போற்றவந்த பாடல் இது. தன் நண்பருக்கு விரைந்து செயல்களை முடித்துதர வேண்டும் என்பது கருதியே அவருக்கு நன்மை சேர வேண்டும் என்ற நோக்கில் சிலர் கேளாமலேயே செயல் புரிவர்; செய்தது ஒப்புதல் இல்லாத செயலாயினும் நட்புரிமைப் பற்றி அதை விழைக எனச் சொல்கிறது.

'விழைதகையான்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'விழைதகையான்' என்றதற்கு தாம் விரும்பும் தன்மையோடு, தாமே விரும்பும் தன்மையோடு, விரும்புவர், விழைதகையரானோர், விழையப்படுந்தன்மை பற்றி, சந்தோஷப்பட்டு, தாம் அவரோடு பொருந்திய தன்மை பற்றி, அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு, அந்நட்பை விரும்பும் தன்மை காரணமாக, நட்பினால் பொருந்திய நலன் கருதி, ஆவலோடு, வெறுக்காமல் விரும்பும் தன்மையோடு, அக்காரியம் நன்றாக முடிந்துவிட்டால், அந்த உரிமையை விரும்பும் தன்மையால், விரும்பப்படத்தக்கதாகலின், விரும்பப்படும் தன்மைபற்றி, தாம் விரும்பும் தன்மையோடு, விரும்பப்படுந் தன்மை பற்றி, அன்பின் தகுதி நிறைவால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நண்பர் தனக்கான செயலைத் தன்னைக் கேளாது செய்தலை 'விரும்பும் தன்மை' என்ற பொருள்பட 'விழைதகையான்' என்ற சொல் ஆளப்பட்டது. 'தாம் அறியாமலே தமது செயல் முடிதலைக்காட்டிலும் இனிமை வேறு இன்மையின் விழைதகையால் வேண்டியிருப்பர்' என இக்குறளுக்கு உரை தருவர்.

'விழைதகையான்' என்ற சொல்லுக்கு விரும்பும் தன்மையால் என்பது பொருள்.

பழைமையின் உரிமையோடு நண்பர் தம்மைக் கேளாமலே செய்வாராயினும் அங்ஙனம் செய்தது அவருக்கு விரும்பத்தக்கதாதலால் அதை எதிர்பார்த்திருப்பர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பழைமை பற்றிய உரிமைச் செயல் எதிர்நோக்கத்தக்கது.

பொழிப்பு

பழைமையின் உரிமையோடு நண்பர் கேளாது செய்வாராயினும் அங்ஙனம் செய்வதை ஆவலோடு எதிர்பார்ப்பர்.