படைச்செருக்காவது படையினது வன்மை கூறுதல். படை பொரு செருக்கு அதாவது படையானது சண்டையிடுகின்ற பெருமிதத்தைச் சொல்வது.
இது படையின் தன்மை, வீரனின் திறம், வீரனின் சிறப்பு என்றாகும். தன் நாட்டையும் அதன் மக்களையும் காப்பது வீரர்களின் கடமை.
போர் என்று வரும்போது வாழ்வா சாவா என்ற நிலை, வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற தேவை - இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு படைக்கும் அதன் உறுப்பினருக்கும் இருக்க வேண்டிய பண்பு 'செருக்கு'. தம்மைப்பற்றியும், தம் படை / தலைமை இவற்றைப்பற்றியும் செருக்கு இல்லாவிடில் வெற்றி கிட்டுவது கடினம்.
வீரர் அல்லாதாரை வெல்வதைவிட படைத்தலைவன் போன்ற பலம் பொருந்திய வீரனை எதிர்த்து வெல்வதுவே பெருமை என அறிவுறுத்தப்படுகிறது.
உண்மையான வீரன் தன் கையிலுள்ள வேலை ஒரு யானையின் மீது எறிந்து இழந்தபின் தன் மீது பாய்ந்த பகைவரின் வேலைப் பறித்து குருதி கொட்டும் நிலையிலும் தனக்கு ஒரு கருவி கிடைத்துவிட்டதே என மகிழ்வான்; தான் விழித்துச் சினத்துடன் நோக்கிய கண்ணை, பாய்ந்து வரும் வேலைப் பார்த்து இமைத்தால், அது புறங்காட்டி ஓடுவதற்குச் சமம் என்பதால் கண்ணைச் சிமிட்டாமல் இருப்பான்; போரில் காயம் படாத நாட்கள் எல்லாம் தன் வாழ்நாட்களில் வீணான நாட்கள் என்று அவன் நினைப்பான்; தன் உயிரைத் துச்சமாக மதிப்பான்.
ஒரு சிறந்த படைக்கு வீரத்துடன் ஈரமும் இருக்கவேண்டும் என்கிறது இவ்வதிகாரப் பாடல் ஒன்று.
பகைவரை அஞ்சாமல் தாக்கி அடக்கும் ஆற்றலைப் பேராண்மை என்று சொன்னால், அதே பகைவர்க்கு ஒரு இடர் நேர்ந்தபோது கண்ணோடி, உதவி செய்வதே அந்த ஆண்மைக்குச் சிறப்புச் செய்வதாகும் எனச் சொல்லப்படுகிறது. அந்த உதவும் தன்மையை ஊராண்மை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
ஊராண்மை என்பது பலம் குறைந்தவர்களுக்கு எதிராக கருவிகள் செல்லாதபடி மறுப்பது அல்லது அவர்களைத் தாக்கி நசுக்காமல் இருப்பது; புண்பட்ட வீரனை நலிதல் பண்பாடன்று என்பதால். பகைவரைக் கொன்று அழிப்பது போரின் நோக்கமன்று; அவர்களுடைய தீமையை அடக்கி ஒழிக்கும் நோக்கம் இருந்தால் போதும்.
முதல் நாட் போரில் தோற்றுத் தனி நின்ற இராவணனை 'இன்று போய் நாளை வா' என விட்ட இராமனின் பெருந்தகைமையை இதற்கெடுத்துக்காட்டாகக் கூறுவர்.
ஊராண்மை என்னும் சொல் நாகரிகம் என்பது போலவே கண்ணோடல், ஒப்புரவறிதல் போன்றதோர் சால்பினைச் சுட்டி ஊர்த் தொடர்பால் உளதாம் ஒரு பண்பினையே குறிப்பதென்பது எளிதில் விளங்கும் (சோமசுந்தர பாரதியார்).
நாடுகாக்கும் போரில் இறப்பினை அஞ்சாது எதிரேற்றல்தான் வீரம். போரில் இறத்தல் புகழ் தரும். சூளுரைத்துக் களம் புகும் படைவீரன் தன் நாட்டுக்காக உயிர் விடுவதில் பெருமை கொள்வதிலும் வீரத் தன்மை தெரியும்; தன்னுயிரை ஈந்து தன் சூளை நிறைவேற்றுவான் போர்வீரன். அது அவனால் உயிர் கொடுத்துக் காப்பாற்றப்பட்டவர்களின் கண்களில் நீர் மல்கச் செய்யும். அத்தகைய இறப்பு வேண்டியும் பெறும் தகுதியுடையது எனச் சொல்லப்படுகிறது.