இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0778உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்

(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:778)

பொழிப்பு (மு வரதராசன்): போர் வந்தாலும் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.

மணக்குடவர் உரை: ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர் தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது தன்மை குன்றுதல் இலர்.
இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார்.
(போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.)

தமிழண்ணல் உரை: போரில் விழுப்புண்பட்டு ஊறு (துன்பம்) நேர்ந்த நிலையிலும் உயிர்விடுதற்கு அஞ்சாது போர் செய்யும் மறவர்கள், அரசன் அந்நிலையில் போரிட வேண்டாமென்று தடுத்துக் கோபித்தாலும் தமது வீரச்சிறப்பில் சிறிதும் குறையமாட்டார்கள். அரசனே தடுக்கும்நிலை வந்தாலும், இவர்கள் தயங்கி நிற்கமாட்டார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.

பதவுரை: உறின்-(காயம்)உற்றால்; உயிர்-உயிர்; அஞ்சா-அஞ்சாத; மறவர்-வீரர்; இறைவன்-ஆட்சித்தலைவன்; செறினும்-வெகுண்டாலும்; சீர்- மனவூக்கம், வீர மிகுதி; குன்றல்-குறைதல்; இலர்-இல்லாதவர்.


உறின்உயிர் அஞ்சா மறவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர்;
பரிப்பெருமாள்: ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர்;
பரிதி: அரசர்க்கு ஒரு தறுவாயான இடத்திலே தன்னை உதாரம் பண்ணும் சுத்தவீரனை; [தறுவாயான - சமயமான; உதாரம்பண்ணும் - மேம்பாடு செய்யும்]
காலிங்கர்: எதிர்ப்படை தம்மேல் வந்து தாக்கும் அளவின் கண் தமது உயிர் பேணக்கருதி அஞ்சாது அவ்விடத்து உயிர் வழங்கக் கருதும் வீரர்;
பரிமேலழகர்: போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்;

'ஒன்று உற்ற காலத்து உயிர்ப்பொருட்டு அஞ்சாத மறவர்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'தறுவாயான இடத்திலே தன்னை உதாரம் பண்ணும் சுத்தவீரன்' எனப் பொருள் கூறினார். 'தமது உயிர் பேணக்கருதி அஞ்சாது அவ்விடத்து உயிர் வழங்கக் கருதும் வீரர்' என்பது காலிங்கரது உரை. 'தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்' என்பது இப்பகுதிக்குப் பரிமேலழகர் கூறும் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'போர்வரின் உயிருக்கு அஞ்சாத வீரர்', 'போர் வந்தால் உயிருக்கு அஞ்சாமல் சண்டையிடும் வீரர்', 'சமயத்தில் உயிர் கொடுக்கவும் அஞ்சாத வீரர்கள்', 'போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாத வீரர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காயப்பட்டவிடத்து தம் உயிர்க்கு அஞ்சாது போரிடும் வீரர் என்பது இப்பகுதியின் பொருள்.

இறைவன் செறினும்சீர் குன்றல் இலர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது தன்மை குன்றுதல் இலர். [செறுக்கப்பட்டாராயினும் - வெறுக்கப்பட்டாராயினும்]
மணக்குடவர் குறிப்புரை: இஃது அஞ்சாமையுடையார் வீரியஞ் செய்யுமிடத்துக் குறைய நில்லாமை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது தன்மை குன்றுதல் இலர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் அதிகாரத்துச் சிறுமை முதலாயின செய்யின் படை வெல்லாது என்றார் ஆயினும், இயல்பாக அஞ்சாமையுடையார் வீரியம் செய்யும் இடத்துக் குறைய நில்லாமை வேண்டும் என்றது. [குறைய நில்லாமை - அஞ்சாமையில் குறைவில்லாமல்]
பரிதி: அரசன் வெறுத்தாலும் தன் சேவகம் குன்றான் என்றவாறு. [சேவகம் குன்றான் - வீரம் குறையான்]
காலிங்கர்: தம்மை ஆண்ட அரசரானோர் ஒருகாலம் உற்றுச் செறினும், தமது சேவகத்தறுகண்மையில் சிறிதும் குறைபடுதல் இலர் என்றவாறு. [உற்றுச் செறினும் - பகைவன் நாடுபுக்குக் கொள்ளினும்]
பரிமேலழகர்: தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார்.
பரிமேலழகர் குறிப்புரை: போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும், 'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.

'தம்மரசனால் செறுக்கப்பட்டாராயினும் தமது தன்மை குன்றுதல் இலர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் அடக்கினும் வீரவுணர்ச்சி குறையார்', 'தம் அரசன் போர் வேண்டா எனக்கூறி வெகுண்டாலும் தம் ஆண்மைச்சிறப்பினின்றும் குறையமாட்டார்', 'அரசன் தமக்கு வருத்தமுண்டாக்கிவிட்டாலும் தம் கடமையில் குறைந்துவிட மாட்டார்கள்', 'தலைவன் போர் வேண்டாமென்று சினந்தாலும் தம் வீர மிகுதியில் குறையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தலைவன் (போருக்குச் செல்ல வேண்டாமென்று) சினந்து கூறினாலும் தம் மனவூக்கத்தில் குறையார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காயப்பட்டவிடத்து, தலைவன் போருக்குச் செல்ல வேண்டாமென்று சினந்து கூறினாலும், தம் உயிர்க்கு அஞ்சாத வீரர் தம் மனவூக்கத்தில் குறையார் என்பது பாடலின் பொருள்.
'இறைவன் செறினும்' குறிப்பது என்ன?

போர்ச்செய்திக்காகக் காத்துக்கிடக்கும் வீரன், களத்திற்குள் புகுவதற்கு யார் தடைபோட்டாலும் கேட்கமாட்டான்.

தனக்கு ஒன்று நேர்ந்தகாலத்து. தன் தலைவன் சினந்து களத்துக்கு செல்லவேண்டாமென்று கூறியவிடத்தும், தம் உயிர்க்கு அஞ்சாது போர்செய்யத் துணியும் மறவர், தம் மனவூக்கத்தில் குறைய மாட்டார்கள்.
வீரர்கள் எப்பொழுதும் போரை நாடி நிற்பார்கள். அத்தகையோர் போர் வந்துவிட்டது என்றால் உடனே போர்க்களம் புகமுனைவர். படைத்தலைவன் சிலபல காரணங்களுக்காக அவரைக் களம் செல்லத்தடுத்தாலும் அவர் வீரமிகுதி குன்றாது ஆவலோடு காத்திருப்பர்.

இப்பாடலிலுள்ள உறின் என்ற சொல்லுக்குப் போர்வரின் என்று பெரும்பான்மையினர் பொருள் கூறியுள்ளனர். பரிமேலழகர் 'உறின்' என்பதற்குப் போர்பெறின் என்று பொழிப்புரையில் கூறி, சிறப்புரையில் 'போர் பெற்றறியாமையின் அது பெற்றால் அரசனே தடுப்பினும் நில்லார்' என்பார். இது முதல்முறை போருக்குச் செல்பவனது படைசெருக்கு கூறுவதாக உள்ளது. இவ்வுரை இவ்வதிகார இயைபுடையதாயினும் 'போர் பெற்றறியாமையின்' என்ற பொருளுக்குக் குறளில் சொல்லமைப்பு இல்லை.
தமிழண்ணல் 'விழுப்புண்பட்டு ஊறு (துன்பம்) நேர்ந்த நிலையில்' என உறின் என்பதற்குப் பொருள் கூறி 'அரசன் அந்நிலையில் போரிட வேண்டாமென்று தடுத்துக் கோபித்தாலும் தமது வீரச்சிறப்பில் சிறிதும் குறையமாட்டார்கள்' எனப் பாடலுக்கு உரை தந்தார்.
இப்பொழுது இருவகையான உரைகளை ஒப்பீடு செய்யலாம். முதல் வகை: அவன் உயிர் அஞ்சா மறவன்; போர்வந்தால் தலைவன் சினந்தாலும் போருக்குச் செல்வதிலிருந்து பின்வாங்கமாட்டான் என்பது. அடுத்தது: அவன் போர்க்களம் பல கண்ட வீரன்; அவன் ஊறு உற்றிருக்கிறான். அதுகாலை வீரனது உடல்நலம் கருதியும் தம்படை சிறப்புறச் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் தலைவன் காயம்பட்டவனைப் போருக்குச் செல்லவேண்டாம் எனக் கூறுகிறான். அவ்வறிவுரையையும்மீறி உயிர் அஞ்சா வீரன் போருக்குச் செல்லத்துடிக்கிறான்; எனவே தலைவன் உரிமையுடன் சினம் கொண்டு தடுக்கிறான். இது அவன் ஊறு உற்ற அந்நிலையிலும் வீரமிகுதி குன்றாமல் போர்செய்யத்தக்க தறுகண்மையாளன் என்னும் பொருள் தருவது. பொதுவான வீரம் கருதும் முன்னதைவிட புண்பட்ட நிலையிலும் வீறுகொண்டிருக்கிறான் என்னும் பின்னது பொருள் நிறைவு பெற்று உறின் என்பதோடும் அதிகாரத்தோடும் இயைவதால் மேலானது எனலாம்.

'இறைவன் செறினும்' குறிப்பது என்ன?

இறைவன் செறினும் என்பதிலுள்ள இறைவன் என்ற சொல்லுக்குத் தலைவன் என்றே அனைவரும் பொருள் காண்பர். ஆட்சித்தலைவன் என்பதினும் படைத்தலைவன் எனக் கொள்வது பொருந்தும். செறினும் என்றதற்கு சினந்தாலும், முனியினும், வெகுண்டாலும் என்றும் வெறுத்தாலும் என்றும் பொருள் கூறினர். சினந்தாலும் என்பது இயைபான பொருள். இறைவன் செறினும் என்பது தலைவன் சினந்தாலும் என்ற பொருள் தரும்.
‘இறைவன் செறினும்’ என்பதற்கு அரசன் போர் வேண்டா என முனிந்து தடுப்பினும் எனப் பரிமேலழகர் உரை நல்குவார். மற்றவர்கள் வெறுத்தாலும் அல்லது சினந்து வருத்தமுண்டாகும்படி நடந்துவிட்டாலும் எனக் கூறினர். தலைவன் செறினும் என்று மட்டுமே குறள் கூறுகிறது. அவன் ஏன் சினந்தான் என்பது இதில் சொல்லப்படவில்லை.

போர் வந்தால் உயிரையும் தர அஞ்சாத வீரரின் படைச்செருக்கைச் சொல்ல வரும்போது தலைவன் அவர் மீது சினம் கொள்வதாக ஏன் சொல்லப்படுகிறது? தலைவனே தடுத்தாலும், உயிர்க்கு அஞ்சாத வீரர் பகைமேல் செல்லுவர் என்றபடி பலர் இக்குறளை விளக்கினர். இவர்கள் 'சீர் குன்றல் இலர்' என்ற பகுதிக்குப் பொருந்த பொருள் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இக்குறளுக்குப் பரிதியார் கூறும் பொருள்: 'அரசர்க்கு ஒரு தறுவாயான இடத்திலே தன்னை உதாரம் பண்ணும் சுத்தவீரனை அரசன் வெறுத்தாலும் தன் சேவகம் குன்றான்' 'உன் படைவீரகட்கு உன்மேல் வெறுப்பு ஏற்படத்தக்கதாக நீ நடந்து கொள்ளாதே. வெறுப்பு இல்லாத படையே வெல்லும்' எனத் தலைவனை நோக்கி முன் அதிகாரமான படைமாட்சியில் கூறிய வள்ளுவர் இங்கு 'போர் வந்தால் உயிருக்கு அஞ்சாத வீரமறவர். தனது தலைவன் கடுமையாயிருந்தாலும், சீர் குலையாது, மனங் குன்றாது, ஒழுங்குப்படி நின்று கட்டளையைச் செய்வர்' என வீரனுக்கு அறம் எடுத்துரைப்பதாகப் பரிதியின் உரையை விளக்குவர். நாமக்கல் இராமலிங்கமும், 'சமயத்தில் உயிர் கொடுக்கவுந்துணிந்த வீரர்கள் அரசன் வருத்தமுண்டாக்கிவிட்டாலும் ஒழுங்குதவற மாட்டார்கள்' என விளக்கம் தந்தார். தண்டபாணி தேசிகர் 'உயிர் அஞ்சா மறவர்' என்றது கருத்துடை அடைபுணர்ந்த தொடர். அரசன் செறினும் அழிவது உயிர். போரினும் அழிவது உயிர். அரசன் செற அழிவதைக் காட்டிலும் பொருதழிதல் மேல் என எண்ணிச் சீர்குன்றல் இலர் என்றமை காண்க' என்பார்.

காயப்பட்டவிடத்து, தலைவன் போருக்குச் செல்ல வேண்டாமென்று சினந்து கூறினாலும், தம் உயிர்க்கு அஞ்சாத வீரர் தம் மனவூக்கத்தில் குறையார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

படைச்செருக்கு கொண்ட வீரன் போர்செய்யத் துடித்துக்கொண்டே இருப்பான்.

பொழிப்பு

காயப்பட்டாலும் உயிருக்கு அஞ்சாத மறவர், ஆட்சித்தலைவன் போர் வேண்டா எனக்கூறி அடக்கினாலும் தம் வீரவுணர்ச்சியில் குறையமாட்டார்.