இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0775



விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஓட்டுஅன்றோ வன்க ணவர்க்கு

(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:775)

பொழிப்பு (மு வரதராசன்): பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?

மணக்குடவர் உரை: மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின் அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும்.
விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.

பரிமேலழகர் உரை: விழித்த கண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ - அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம்.
(அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: பார்த்தகண் பகைவேலுக்கு மூடி இமைப்பினும் வீரர் புறங்காட்டியதற்குச் சமமாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின் ஓட்டுஅன்றோ வன்கணவர்க்கு.

பதவுரை: விழித்தகண்-இமையாத கண், (சினந்து)நோக்கிய கண்; -விழி; வேல்கொண்டு-எறியீட்டியைக் கைக்கொண்டு; எறிய-செலுத்த; அழித்து-கெடுத்து. (இமையாது விழித்திருக்கும் நிலையை) மாற்றுதல், அஞ்சி; இமைப்பின்-கண்கொட்டினால், மூடித்திறப்பின்; ஓட்டு-ஓட்டம், ஓடுதல், புறங்கொடுத்தல் (முதுகுகாட்டி ஓடுதல்), (பகைவனுக்கு அஞ்சி) ஓடுதல்; அன்றோ-இல்லையோ; வன்கணவர்க்கு-வீரமுடையவர்க்கு.


விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின்;
மணக்குடவர் குறிப்புரை: விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.
பரிப்பெருமாள்: மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.
பரிதி: முகத்திலே வேல் படும்போது கண்ணிமைத்ததன்றோ!
காலிங்கர்: தாம் கூர்த்து நோக்கிய இடத்தே மற்றை எதிர்த்தோர் தம் கைக்கொண்ட வேலினைத் தம்மீது எறியப் பெற்று வைத்து மற்று அதனைத் தலையழித்து அப்பொழுது இமைப்பர் ஆயின்; [அதனைத் தலையழித்து - அதைக் (வேலினைக்) கெடுத்து]
பரிமேலழகர்: பகைவரை வெகுண்டு நோக்கிய கண் அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; [அவர்-பகைவர்]

'பகைவரை வெகுண்டு நோக்கிய கண் அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியும் காலிங்கரும் 'எதிரியின் வேல் தம் முகத்தில்/உடலில் படும்போது இமைப்பின்' என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரைச் சினந்து நோக்கிய கண்ணிலே அவர் வேலைக் கொண்டு வீச, அதற்கு அஞ்சி இமைத்தால்', 'வேலாயுதத்தைக் கொண்டு குத்தினால் திறந்த கண்ணை மூடிச் சிமிட்டிவிட்டாலும்', 'பகைவரைச் சினந்து நோக்கிய கண்ணானது எதிரி வேலால் எறிவது கண்டு இமைத்துப் பார்க்குமாயின்', 'பகைவரை வெகுண்டு (கோபித்து) நோக்கிய கண் பகைவர் வேலைக்கொண்டு தாக்கு. அதனைக் கண்டு அப்பார்வையை மாற்றி இமைப்பதானால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விரிவாகத் திறந்த கண்ணால் வெகுண்டு நோக்கிய வீரன் பகைவர் வேலைக் கொண்டு வீசுவது கண்டு இமைத்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

ஓட்டுஅன்றோ வன்க ணவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும்.
பரிப்பெருமாள்: இது கெட்டதனோடு ஒக்கும் அஞ்சாதார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: புண்பட்டால் ஆற்றார் ஆயின் கெட்டதனோடு ஒக்கும் என்றது.
பரிதி: அதுவும் வீரதத்துவத்துக்கு இழுக்காம் என்றவாறு.
காலிங்கர்: இமைத்தவர்க்கு முன்சொன்ன தறுகண்மையானது யாதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம்.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.

'அது வீரர்க்குக் கெட்டதனோடு ஒக்கும்/வீரதத்துவத்துக்கு இழுக்காம்/தறுகண்மையானது யாதும் இல்லை/புறங்கொடுத்தலாம் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம்', 'அது அச்சமற்றவர்கள் என்று சொல்லப்படும் (படைச்செருக்குடைய) வீரர்களுக்குத் தோல்வியுற்று முதுகிட்டு ஓடுவதற்குச் சமானமானதல்லவா?', 'அச்செயல் புறங்கொடுத்து ஓடுதலாகுமென்று வீரர் கருதுவர். (இமையாத பார்வையே சிறந்ததென்றவாறு.)', 'வீரர்க்குப் புறங்கொடுத்தலாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது வீரர்க்குப் புறங்கொடுத்து ஓடுதலாகுமே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விரிவாகத் திறந்த கண்ணால் வெகுண்டு நோக்கிய வீரன் பகைவர் வேலைக் கொண்டு வீசுவது கண்டு இமைத்தால், அது வீரனுக்குப் புறங்கொடுத்து ஓடுதலாகுமே என்பது பாடலின் பொருள்.
'ஒட்டு' என்ற சொல்லின் பொருள் என்ன?

போரில், நெஞ்சை நிமிர்த்தி முன்னேறிச் செல்லல் போல், கண்ணை இமைக்காது விழித்து நோக்குதலும் வீரம் காட்டும்.

பகைவனைச் சினந்து பார்த்த கண்களுக்குரியவனைக் குறிக்கொண்டு, பகைவன், வேல் எறிந்த காலத்தினும் இமைத்தாலும் அதை வீரர் புறமுதுகு காட்டுதலுக்கு ஒப்பாக எண்ணுவர்.
விழித்த கண் என்றது இமைக்காது குத்திட்டுப் பார்க்கும் கண் ஆகும். அது சினப்பார்வையைக் குறிக்கும். சூளுரைத்துப் போர்க்களம் சென்ற வீரன் சினத்துடனே காணப்படுவான்.
இப்பாடலிலுள்ள அழித்து என்ற சொல்லுக்கு 'இமையாது விழித்திருக்கும் நிலையை மாற்றி' எனப் பொருள் கொள்வர். வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று (புலவி நுணுக்கம் 1317) என்ற பாடலில் உள்ள 'அழித்துஅழுதாள்' என்ற தொடர்க்கு வழுத்தியதை விட்டு அழுதாள் என்பது பொருள். அதுபோல் இங்கு 'அழித்து-மனத்தைமாற்றிக்கொண்டு' என்று வந்தது என விளக்குவார் தேவநேயப் பாவாணர்.
பகையிடமிருந்து தம்மை நோக்கி வேல் வரும்போது, ஒருகணம் தன்னையறியாமல் கண்கொட்டி விட்டாலும், அது வீரனைச் சாய்த்து தோல்வியைத் தந்துவிடுமாதலால், வெற்றி ஒன்றே குறிக்கொண்டு விழிப்புடன் போர் செய்யவேண்டும் என்பதைச் சொல்லும் குறள். தம்மை எதிர்நோக்கி வரும் பகைவனின் வேல் கண்டு கண்ணை மூடித் திறந்தாலும் அது தானாக இமைக்கும் இயல்பானன்றி அச்சத்தால் இமைப்பது என்பதாகிவிடும் எனவும் பொருள் கூறுவர். இங்கே வீரன் அஞ்சுகிறான் அஞ்சாமையையுடைய வீரன் விழித்தகண் கொட்டாது எறியப்பட்ட வேல் நெருங்குவதை நோக்குவான். தேவநேயப் பாவாணர் 'சிறந்த மறவர் தம் கண்ணுரத்தினால் முறுத்த நோக்கும் மறுத்த நோக்கார் என்பதாம்' என்றார்.

சிலர் 'விழித்த கண்ணை எறிய இமைப்பின்' எனக் கொண்டு 'விழித்த கண்ணிலே பகைவன் வேலை எறிந்தவிடத்தும் இமைத்தலாகாது' எனவும் இக்குறளுக்குப் பொருள் கண்டனர். இது கண்ணைக் குறிக்கொண்டு எறிந்த வேல்கண்டு இமைப்பின் என்ற பொருள் தருவதாகிறது. 'வேலெறிவது மார்பு முதலிய உறுப்புகளை நோக்கியன்றிக் கண்ணைக் குறிவைத்து எறியார் ஆகலின் மாற்றான் மேல் கொண்டெறியின் எனப் பொதுவகையாற் கோடலே சிறந்தது' என இப்பொருளை மறுப்பார் தண்டபாணி தேசிகர்.
பரிதி 'முகத்திலே வேல் படும்போது கண்ணிமைத்ததன்றோ!' என முகத்தில் வேல் படுவதைக் குறிக்கிறார். காலிங்கர் 'எதிரியின் வேல் தம் உடம்பில் படும்போது இமைப்பின்' என்ற பொருளில் விளக்கினார்.

'ஒட்டு' என்ற சொல்லின் பொருள் என்ன?

'ஓட்டு' என்ற சொல்லுக்கு கெட்டது, இழுக்கு, அஞ்சாமைக்கு அழிவு, புறங்கொடுத்தல், தோல்வி, தோல்வியுற்று முதுகிட்டு ஓடுவது, பழி, புறங்கொடுத்து ஓடுதல், வீழ்ச்சி என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

'ஓடு' என்பது திரிந்து ஓட்டு என்றாயிற்று, 'ஒட்டு' தோற்றோடல் எனக் கூறி படைவீரன் கண் இமைப்பது அச்சத்தினால் ஆதலால் அது புறங்கொடுத்து ஓடுதலுக்குச் சமம் என விளக்கினர். மனத்தில் சிறிதளவேனும் அச்சம் இருந்தால், அதுவே தோல்வி தான் என்பதைச் சொல்லவந்தது இப்பாடல்.

'ஒட்டு' என்ற சொல்லுக்கு இங்கு தோல்வியுற்று ஓடுதல் என்பது பொருள்.

விரிவாகத் திறந்த கண்ணால் வெகுண்டு நோக்கிய வீரன் பகைவர் வேலைக் கொண்டு வீசுவது கண்டு இமைத்தால் அது வீரனுக்குப் புறங்கொடுத்து ஓடுதலாகுமே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

போர்க்களத்தில் கண் இமைத்தாலும் அது படைச்செருக்கு குன்றியதாக ஆகிவிடும்.

பொழிப்பு

விரிவாகத் திறந்த கண்ணால் நோக்கிய வீரன் பகைவர் வேல் கொண்டு வீசுவது கண்டு இமைத்தால் அது புறங்காட்டியதற்குச் சமமாகுமே