இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0771



என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்.

(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:771)

பொழிப்பு (மு வரதராசன்): பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.



மணக்குடவர் உரை: என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்; முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு.
இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.

பரிமேலழகர் உரை: தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - பகைவீர்,இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின் - நீவிர் அதன்கணின்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின்.
('என் ஐ' எனத் தன்னோடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல். 'நம்பன் சிலை வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை', (சீவக.காந்தர்வ.317) என, பதுமுகன் கூறினாற் போல ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி'.(பு.வெ.மா.வஞ்சி.12)

வ சுப மாணிக்கம் உரை: எதிரிகளே! என் தலைவன் முன் நில்லாதீர்! அவன்முன் நின்று கல்லானவர் பலர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெவ்விர் என் ஐ முன் நில்லன்மின்; என்னை முன் நின்று கல் நின்றவர் பலர்.

பதவுரை: என்-எனது; ஐ-தலைவன்; முன்-எதிரில்; நில்லன்மின்-(போரேற்று) நிற்காதீர்கள்; தெவ்விர்-பகைவர்களே; பலர்-பலர்; என்னை-என்னை எனின், எனது தலைவன்; முன்நின்று-எதிர்த்துப் போர் புரிந்து; கல்நின்றவர்-நடுகல் (வடிவாய்) நிற்கின்றார்.


என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீரரே! நில்லாது ஒழிமின்;
பரிப்பெருமாள்: என்னுடைய அரசன் முன்னர்ப் பகைவீர்! நில்லாது ஒழிமின்;
பரிதி: என்முன் நில்லாதீர்கள் வீரர்காள்!
காலிங்கர்: வறிதே என்முன் வந்து நில்லன்மின், தெவ்வீர்காள்!
பரிமேலழகர்: பகைவீர், நீவிர் அதன்கணின்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். [நும் உடற்கண் நிற்றல் - உமது உயிர் உமது உடம்பில் நிற்றல் (உயிர் வாழ்தல்)]

'என்னுடைய ஐயன்/அரசன்/தலைவன்முன் நில்லாது ஒழிமின்' என்றும் 'என்முன் நில்லன்மின்' என்றும் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் 'என்னை' என்றதை என்+ஐ எனப் பிரித்து என்னுடைய ஐயன்/அரசன்/தலைவன் எனப் பொருள் கொண்டனர். பரிதியும் காலிங்கரும் வீரன் தன்னை முன்னிலைப்படுத்திக் கூறுவதாக உரை காண்பர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர்களே! ஆதலால், நீங்களும் நடுகல் ஆகாமல் வாழக்கருதின், அத்தலைவன் முன் எதிர்த்து நில்லாமல் ஓடித் தப்பிப் பிழைத்துக் கொள்ளுங்கள்', 'பகைவர்களே! என் அரசனை எதிர்த்துப் போர் செய்ய வேண்டா. எச்சரிக்கிறேன்', 'பகைவர்களே! எம் தலைவர்முன் நில்லாதீர்கள்', 'பகைவர்களே! என்னுடைய தலைவன் முன்னிலையில் அவனை எதிர்த்து நிற்காதீர்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என்னுடைய ஐயன் முன்னர் எதிர்த்து நிற்காதீர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

பலர் என்னை முன்நின்று கல்நின் றவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்னாள் இவன் முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலராதலால் என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.
பரிப்பெருமாள்: முன்னாள் இவன் முன்னே நின்று, கல் எழுதப்பட்டு நின்றார் பலராதலால் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது.
பரிதி: முன்னே என்முன் நின்று பட்டுச் சிலையிலே பலர் பிழைத்ததைக் காண்டீரில்லையோ என்பன் வீராதி வீரன் என்றவாறு. [பட்டு-இறந்து]
காலிங்கர்: என்னை எனின் முற்படமதியாது எனது முன் வந்து நின்று நின்று பிற்படக் கல்லுருவாகி நின்றோர் அளவிறந்த பலர் ஆகலான் என்றவாறு.
பரிமேலழகர்: இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'என் ஐ' எனத் தன்னோடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல். 'நம்பன் சிலை வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை', (சீவக.காந்தர்வ.317) என, பதுமுகன் கூறினாற் போல ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி'.(பு.வெ.மா.வஞ்சி.12) [நடுகல் - போரில் இறந்த மறவனுக்காக நடப்படும் கல் நடுகல் எனப்படும்]

'முன்னே நின்று, கல்லிலே எழுதப்பட்டு நிற்கின்றார் பலர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இப்பகுதியில் உள்ள என்னை என்றதற்கு காலிங்கர் 'என்னை எனின்' எனப் பொருள் கொள்கிறார். மற்றவர்கள் 'என் ஐ' எனக் கொள்கின்றனர். முற்பகுதியில் என் + ஐ என ஏற்கனவே சொல்லப்பட்டதால் இப்பகுதிக்கு என்னை எனக் காலிங்கர் கொள்வதுபோல் பொருள் காணலாம்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் தலைவன் முன் போர் செய்ய வந்த பின் மாய்ந்து நடுகல் ஆயினார் பலர்', 'ஏனெனில் என் அரசனை எதிர்த்து நின்ற பலரும் மாண்டொழிந்து கல் நாட்டப் பெற்றவர்கள்', 'அவர் முன்னின்று சண்டையிட் டிறந்து தமக்குக் கல் நட்டப்பெற்றவர் பலர்', 'என்னுடைய தலைவன் முன் நின்று போர் செய்து இறந்து போனவர்கள் பலர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என்னை எனின் முன் நின்று போர் செய்து மாய்ந்து நடுகல் ஆயினார் பலர் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
என்னுடைய ஐயன் முன்னர் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னை எனின் முன் நின்று போர் செய்து மாய்ந்து நடுகல் ஆயினார் பலர் என்பது பாடலின் பொருள்.
'கல்நின்றவர்' என்ற தொடர் குறிப்பது என்ன?

படையில்செருக்கு கொண்ட போர்வீரன் ஒருவன் போர்க்களத்தில் பகைவரைப் பார்த்து வீரமொழி கூறுகிறான்.

'பகைவரே! என் தலைவன் முன்பு போரேற்று நில்லாதீர்கள்; ஏன் என்றால் முன் நின்று சண்டையிட்டு உயிர்நீத்து நடுகல் ஆயினார் பலர்' என்று போர் தொடங்கும் வீரன் ஒருவன் பகை நோக்கி உரைக்கிறான்.
‘ஐ' என்றது ஐயன் என்ற சொல்லின் சுருக்கம். ஐயன் என்பது தலைவன் என்ற பொருளது. ஐ-தலைவன் என்னும் பொருளில் என்னை புற்கையண்டும் பெருந்தோ ளன்னே (புறநானூறு 84 பொருள்: என்னுடைய தலைவன், தன் நாடிழந்த வறுமையால் புற்கை நுகர்ந்தானாயினும், பகைவரஞ்சத்தக்க பெரிய தோளையுடையன்) என்னும் சங்கப்பாடலில் ஆளப்பட்டது. இப் பாடல் வீரன் ஒருவன் தன் மறத்தையும், தன் படைஞர் மறத்தையும் தன் தலைவன்மேல் வைத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. அவன் தலைவன் வீரத்தைக் கூறுவது வாயிலாகத் தன் வீரம் கூறியது எனவும் கொள்ளலாம் என்பர்.
'என் தலைவன் படையால் பகைவரான நீவிர் அழிந்துபடுதல் உறுதி' என்று ஓர் மறவன் வீரஉரை பகர்வது அவனது மறமாண்பினை உணர்த்தும். மணக்குடவர் 'இஃது எளியாரைப் போகச் சொல்லி, எதிர்ப்பாரோடு பொரவேண்டும் என்றது' என்று சிறப்புரையில் கூறியதை ஒரு வீரன் போர் தொடுக்கு முன் எதிரிக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுவது முறை என்பர். இவ்விதம் ஒரு பகைவீரன் மொழி கேட்டுப் போர்க்களத்தில் இருந்து நீங்குபவர் படைக்குள்ளேயே வந்திருக்கமாட்டார் என்றாலும் இது மதிக்கத்தக்க போர் மரபுதான்.

'பகைவரே! என் தலைவனுக்குமுன் நின்று போர் செய்தவர் எவரும் உயிரோடு திரும்பியதில்லை. என் தலைவனை எதிர்த்துநின்று இறந்து நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர் பலர். ஆகவே, என் தலைவனை எதிர்த்து நிற்க எண்ணம் கொள்ளாதீர்கள்' என்று வீரங்கூறி வருகிறது படை! படை வீரன் ஒருவன் தன் படையின் ஆண்மையைப் பகைவன் முன் உயர்த்திக் கூறுவது பாத்திரத்தின் பேச்சாக அமைந்து வீரச்சுவை நல்குகிறது. 'என்னை முன்' எனத் தொடங்கும் குறளில் 'என்' என்பதை 'நாடக நான்' எனச் சொல்வர். குறளின் காமத்துப்பாலில் மாந்தர்கள் பேசுவதாக வரும் நாடகப் பாங்கில், சங்க இலக்கிய மரபினப் போன்று, அமைந்த கூற்றுமுறை நிறைய உண்டு. ஆனால் பொருட்பாலில் இதுபோன்ற குறளமைப்பு அரிதானது.

'கல்நின்றவர்' என்ற தொடர் குறிப்பது என்ன?

கல்நின்றவர் என்பது வள்ளுவரின் புதிய சொல்லாக்கம் என்பர் சொல்லாய்வாளர்கள்.
கல் என்றது நடுகல் என்று சொல்லப்படுவதைக் குறிப்பது. போரில் இறந்த மறவனுக்குக் கல்நட்டு அதில் அவன் பெயரும் பெருமையும் பொறிப்பது பழைய மரபு. இது நடுகல் எனப்பட்டது.
வீரன் முன்னால் நின்றவர்கள் கல்லாகி நின்றார்கள் என்று சொன்னதால் தன் தலைவனோடு பலர் போரிட்டு இறந்து போனதால் 'கல்நின்றவர்' என்பது நினைவுச் சின்னமான நடுகற்களாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது பொருள். இப்பாடலில் போரிடுதலும் போரில் பகைவர் இறத்தலும் ஆகியவை புதைபொருளாக உள்ளன.

இன்று படையில் நாட்டுக்காகப் பணியாற்றும் வீரர்கள் போரில் இறக்க நேரிட்டால் அரசால் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதுபோல் அன்றைக்கு மக்கள் நடுகற்களை நிறுத்திச் வீரமரணம் எய்தியவர்களுச் சிறப்புச் செய்தனர். நடுகல்லுக்கு சி இலக்குவனார் 'கல்நிற்றல்: போர்க்களத்தில் போர்புரிந்து மடிந்த வீரனைப்பற்றிக் கல்லில் எழுதி அதனை நட்டு வழிபடல் பண்டைக் காலத்திலிருந்ததொரு பழக்கமாகும். ‘வீரன் கல் நின்றான்’ என்றால் கல்லின்கண் பொறிக்கப்பட்டு வழிபடும் நிலையை அடைந்துவிட்டான் என்பதாகும். இக் கல் பின்னர்க் கடவுள் அடையாள உருவமாக வழிபடும் நிலையை அடைந்தது; கோவில் முதலியன கட்டினார்கள். கல்லில் நிறுத்தி வழிபடும் வழக்கம் இன்னும் தொடர்ந்து வருகின்றது. யாரேனும் இறந்தால் பதினைந்தாம் நாளிரவில் கல்நிறுத்துதல் என்றுகொண்டாடப் படுவதுதான் அது. ‘காடாத்து’ என்று கூறுவது, ‘காடு ஏற்று’ ஆகும். இஃதாவது சுடுகாட்டின் கண்வழிபடுதல் என்று பொருள். வீரன் இறந்தால் பெயரும் பெருமையும் எழுதி கல் நட்டார்கள். பின்னர் யாவர்க்கும் கல் நடத் தொடங்கி விட்டார்கள்' என்று விளக்கம் தருவார்.
சங்கப்பாடல்களில் நடுகல் பற்றிய செய்திகள் பல உள்ளன. போரில் இறந்த வீரனைப் போற்றும் வகையில் இறந்த வீரனின் பெயரையும் செயலையும் கல்லில் பொறித்து 'நடுகல்' நட்டுப் பீலி சூட்டி வீர வணக்கம் செய்தனர் ஊர் மக்கள். நடுகல்லுக்கு நிழலகப் பந்தலிட்டனர். மரல் நாரினால் மலர்களைத் தொடுத்து மாலையாக அணிந்தனர். அக்கல்லில் இறந்த வீரனின் ஆற்றல் நிலைகொண்டுள்ளதாக அவர்கள் நம்பியதால் அக்கலுக்கு நீராட்டி, நெய்பெய்து, வாசனைப் புகை காட்டி விளக்கேற்றுவர். அதற்குப் பூச்சொரிவர், மாலை சூட்டுவர், மயிற்பீலி சாத்தி காப்பு நூல் கட்டுவர். வில், வேல், வாளால் அதனைச் சுற்றி வேலியமைப்பர்.
இறந்த வீரனைப் புதைக்கையில் அவன் பயன்படுத்திய போர்க் கருவிகளையும், புழங்கு பொருட்களையும் புதைகுழியிலிட்டே புதைத்தனர் எனத் தெரிகிறது. நடுகல் வீரனுக்கு விரும்பிய பண்டங்களை படையல் இட்டு வழிபட்டதைப் பழம்பாடல்கள் கூறுகின்றன. படைக்கப்பட்ட பண்டங்களை வீரனின் ஆவி ஏற்றுக்கொள்வதாகவும், அதனால், வெற்றியும் விரும்பியது கிட்டும் என்று மக்கள் நம்பியதையும் உணரமுடிகின்றது. நடுகல் பண்பாடு 'வீரன்கல், வீரக்கல், நடுகல்' எனவும் 'நினைவுத்தூண்' என்றும் அழைக்கப்படுகின்றன.

'என் தலைவனை எதிர்த்துப் போரிட்டவர் இறந்துபட்டனர்' என்ற கருத்தை வெளிப்படையாகக் கூறாமல், 'என் தலைவன் முன்நின்று போரிட்டவர் இன்று கல் நாட்டப்பட்ட பெருமையுடையவர்' என்று கலைநயம் தோன்ற வீரன் கூறுவாதாக இப்பாடல் அமைகிறது. தன்படைக்கு எதிராகப் போரிட்டு இறந்தவருக்குக் கல் நாட்டப்பட்டதை, பகைவீரருக்குச் சொல்வதைப் போன்று அவன் சொற்கள் வெளிப்படுகின்றன. அத்தகைய வீரத்தைப் பெற்ற படையின் முன்னே, நீங்களும் உயிர்விட வேண்டா என்று அவன் எச்சரிக்கை செய்கிறான். மேலும், தம் தலைவனோடு எதிர்த்துப் போர்செய்து வெற்றி கண்டார் இலர் என்பதை உணர்த்துவதற்கு 'முன்னின்று கல் நின்றவர்' என்றும், கல்லாக நிற்கக்கூடிய வீரமுடையவர் பலரை வென்ற வீரன் இவன் என்பது தோன்ற 'கல் நின்றவர் பலர்' என்றும் அவன் கூறுகின்றான். ஆதலால், 'நீங்களும் நடுகல் ஆகாமல் வாழக்கருதின், அத்தலைவன் முன் எதிர்த்து நில்லாமல் ஓடித் தப்பிப் பிழைத்துக் கொள்ளுங்கள்' என அறிவிக்கிறான்.

என்னுடைய ஐயன் முன்னர் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னை எனின் முன் நின்று போர் செய்து மாய்ந்து நடுகல் ஆயினார் பலர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வீரன் ஒருவன் எதிரிப்படையை நோக்கி தம் படைச்செருக்கினை அறிவிக்கிறான்.

பொழிப்பு

பகைவீரர்களே! என் தலைவன் முன் நிற்காதீர்கள்! என்னை எனின் அவன் முன் நின்று அழிந்துபட்டு கல்லாய் நின்றவர்கள் பலராவர்.