கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
(அதிகாரம்:படைச்செருக்கு
குறள் எண்:774)
பொழிப்பு (மு வரதராசன்): கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
|
மணக்குடவர் உரை:
தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன் தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும்.
இது வீரர் செயல் இத்தன்மையாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும்என்றது.
பரிமேலழகர் உரை:
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் - கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி; வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும் - தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும்.
(களிற்றோடு போக்கல் - களிற்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. (பு.வெ.மா.தும்பை16)
இரா சாரங்கபாணி உரை:
தன் கையிலுள்ள வேலை யானை மீது எறிந்துவிட்டு அடுத்து வரும் யானை மீது எறிய வேல் தேடும் மறவன், தன் மார்பில் பகைவர் எறிந்த வேல் பதிந்திருப்பது கண்டு அதனைப் பறித்து மகிழ்வான்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.
பதவுரை: கைவேல்-கையிலுள்ள (கைக்கருவியாகிய) வேல்; களிற்றொடு-ஆண்யானையோடு; போக்கி-செலுத்தி; வருபவன்-(தேடி) வருகின்றவன்; மெய்-உடம்பு; வேல்-எறியீட்டி; பறியா-(பறித்து) பிடுங்கி; நகும்-மகிழும்.
|
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன்;
பரிப்பெருமாள்: தன்கையில் வேலை ஒரு களிற்றோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்லுமவன்;
பரிதி: மதயானை கூடப் போர்செய்து கைவேல் பறி கொடுத்த வீரன்;
காலிங்கர்: தனது கைவேலினை எதிர் வந்த களிற்றொடும் போக்கி மீண்டு வருகின்ற வீரனானவன்;
பரிமேலழகர்: கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி; வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித்திரிவான்;
பரிமேலழகர் குறிப்புரை: களிற்றோடு போக்கல் - களிற்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல்.
'தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கைவேலை யானைமேல் வீசிவரும் வீரன்', 'தன் கையிற் பிடித்திருந்த வேலாயுதத்தை ஒரு யானையின் மீது பாய்ச்சி, (உடலிற் பதிந்த வேலோடு அந்த யானை ஓடிவிட) யானையோடு விட்டுவிட்டுத் திரும்பி வந்த வீரன்', 'தன் கையிலிருந்த வேலினை வந்த யானையின் மேல் எறிந்து மீள்கின்ற வீரன்', 'கைக்கருவியாகிய வேலை, தன்னைத் தாக்கிய யானையின் மீது செலுத்தி மீண்டும் பொர வருகின்றவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தன் கையிலிருந்த வேலினைத் தான்பொருதிய யானையின் மேல் எறிந்து மீள்கின்ற வீரன் என்பது இப்பகுதியின் பொருள்.
மெய்வேல் பறியா நகும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும்.
மணக்குடவர் குறிப்புரை: இது வீரர் செயல் இத்தன்மையாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும்என்றது.
பரிப்பெருமாள்: தன் மெய்யின் மேல்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றேம் என்று மகிழும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: வீரர் செயல் இத்தன்மையாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் போரின்கண் காதல் செல்ல வேண்டும் என்றது.
பரிதி: மெய்யிலே தைத்த வேலைப் பறித்து இந்தத் தறுவாயில் வேல் நேர்பட்டது என்று சிரித்துச் சலிப்பிலன்.
காலிங்கர்: தன் மெய்க்கண் வேறு ஒருவன் எறிந்த வேலினைப் பறித்துக் கைக் கொண்டு நின்று சிரிக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும்.
பரிமேலழகர் குறிப்புரை: மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. (பு.வெ.மா.தும்பை16)
'தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சில் தைத்தவேலைப் பறித்துச் சிரிப்பான்', 'தன் முதுகிற் கட்டியிருக்கும் (ஆயுதப் பொதியிலிருந்து) வேறொரு வேலை இழுத்தெடுத்துக் கொண்டு வேறு யானையைத் தாக்க விரும்பி மகிழ்ச்சி காட்டுவான்', 'வருகின்ற யானையை எறியத் தன் உடம்பில் தைத்திருந்த வேலினைப் பிடுங்க நேர்ந்த விடத்து, அப்பொழுது அது கிடைத்ததற்காக மகிழ்வன்', 'தன் உடலின்கண் தைத்து நின்ற வேலைப் பிடுங்கி (கருவி கிடைத்து விட்டதே) என்று மகிழ்வான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தன் உடம்பில் தைத்து நின்ற வேலைப் பிடுங்கி அது கிடைத்ததற்காக மகிழ்வான் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தன் கையிலிருந்த வேலினைத் தான்பொருதிய யானையின் மேல் எறிந்து மீள்கின்ற வீரன் தன் உடம்பில் தைத்து நின்ற வேலைப் பிடுங்கி அது கிடைத்ததற்காக நகும் என்பது பாடலின் பொருள்.
'நகும்' என்ற சொல் குறிப்பது என்ன?
|
குருதி பொங்க மார்பிலிருந்து வேலைப் பிடுங்கி அடுத்தகுறியை நோக்கிச் செருக்குடன் சிரிப்பான் களிறெறிந்த காளை.
தான் எறிந்த கைவேலை உடலில் தாங்கித் தன்னுடன் சண்டையிட்ட யானை ஓடியபின் தன்னுடல்மீது பாய்ந்துநின்ற வேலைப் பிடுங்கிச் சிரிக்கின்றான் வீரன்.
நெஞ்சில் அஞ்சாமையையும், கையில் வேலுமாகப் போர்க்களம் புகுந்தான் யானைப்போர் வீரன் ஒருவன். களிற்றுடன் போர் செய்யும்போது அதன்மீது தன் கைப்படையாக வைத்திருந்த வேலை எறிகிறான். தன் மீது ஆழப்பதிந்த அவ்வேலோடு அந்த யானை எங்கோ ஓடிவிடுகிறது. அடுத்து வரும் யானையை எதிர்கொள்ளத் தனக்கு ஒரு கருவி தேடி வருகிறான் அவன். அந்நேரம் பகைவரிடமிருந்து வந்த வேல் ஒன்று தன் உடல்மீது பாய்ந்து குத்திட்டு நிற்கிறது. தனக்கு வேண்டியது தானே வந்து சேர்ந்துவிட்டது என மகிழ்ந்து, அவ்வேலைக் குருதி பீறிடப் பிடுங்கி, அடுத்த யானைப்போரைத் தொடங்க ஆயத்தமாகிறான். தன்மீது பாய்ந்துள்ள வேலினால் உண்டான காயத்தாலும் அதைப்பறிக்கும்போதும் பறித்த பின்னரும் உண்டான வேதனையையும் தாங்கி வேற்படை தனக்குக் கிடைத்ததற்காக மகிழ்கின்றான் அவ்வீரன்.
பல்வகைப் படையும் போர் புரியும் களத்தில் ஆண்யானையை அடித்து வீழ்த்துதல் வீரத்துள் வீரமாக மதிக்கப்பட்டது. இங்கு ஒரு யானையுடன் வேல்கொண்டு பொருதுகிறான் வீரன் ஒருவன். அக்களிறு தன் உடலில் இவனது வேலைத் தாங்கிக்கொண்டு ஓடிவிடுகிறது. அவன் வெறுங்கையனானான். அடுத்துவரும் யானையுடன் போர்செய்ய ஒரு படைக்கலம் வேண்டுமே! அப்பொழுதுதான் உணர்கிறான். தன்மீது பகைவர் எறிந்த வேல் ஒன்று தைத்திருப்பதை. தன் உடம்பில் வேல் புகுந்ததும் அறியாதே. ஊறு உணர்விழந்து, வீரவுணர்ச்சி மிகுந்து, அவ்வீரன் யானயுடன் போர்செய்திருக்கிறான் என்பதில் செருக்கு மிகுதி தோன்றுகிறது என்றபடியும் இக்குறளுக்கு உரை கூறுவர்.
'களிற்றொடு போக்கி' என்ற தொடர் யானையினது உயிரைக் கொண்டு போகும் படி வேலினை வீசினான் என்பதையும் படைக் கருவியாகிய வேலை இழந்தான் என்றதையும் குறிக்கின்றது. தன் கையிலிருந்த படையை(கருவியை)யிழந்தபொழுதும் கலங்கா உள்ளத்தோடு வருவதைச் சொல்வதன் மூலம் அவனுடைய வீரவுணர்ச்சி புலப்படுத்தப்பட்டது. 'மெய்வேல்' என்றது தனக்கு உண்டான துன்பத்தையும் அறியாது போர் செய்தவன் என்பதைச் சொல்வதற்காக. தன்மீது தைத்த வேலைப் பிடுங்கும்போது ('பறியா' என்ற சொல்லாட்சி) குருதி இழப்போடு உயிருக்கு இறுதியும் நேரலாம் என்பது அறிந்தும் அதையும் தாங்கி நின்றது அவனுடைய உள்ளவுரத்தை உணர்த்துகிறது. 'நகும்' என்ற சொல் அந்நிலையிலும் போர்மேல் ஊக்கம் உடையவனாக அவன் நின்றான் என்பதைத் தெரிவிக்கிறது. வீரன் மார்பில் வேல் பாய்ந்ததையும் அடுத்த யானைப்போருக்கு அந்தவேல் கிடைத்ததாக எண்ணி அவன் மகிழ்வதையும் வீரத்தின் செருக்காய் காட்டப்படுகின்றன. தொடர்ந்து போர் செய்யவே முனைந்தான் என்பது குறிப்பாகச் சொல்லப்பட்டது. போர்க்களத்துக் காட்சிகளை வீரச்சுவையுடன் நன்கு விளக்குவதாக உள்ளது இப்பாடல்.
வேற்படையை இழந்து வெறுங்கையுடன் வந்த வீரன்மேல் வேலைவிட்டது பகைவரது இழிவைக் காட்டுகின்றது என்பர் உரைகாரர்கள்.
|
'நகும்' என்ற சொல் குறிப்பது என்ன?
தன்னுடன் பொருதவந்த யானையின்மீது கைவேலை வீசிப்போக்கி விட்டுப் பகைவன் தன்மெய்மீது எறிந்த வேலைப் பறித்து மகிழ்ந்தான்' என்பது குறளின் பொருள். போர்க்களத்தில் மகிழ்ச்சியா? ஏன் மகிழ்கின்றான்? அது என்னவகையான மகிழ்வு?
கருவி தேடிச் செல்பவன் தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும் என்பது மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோர் தரும் விளக்கம்.
மதயானை கூடப் போர்செய்து கைவேல் பறி கொடுத்த வீரன் மெய்யிலே தைத்த வேலைப் பறித்து இந்தத் தறுவாயில் வேல் நேர்பட்டது என்று சிரித்துச் சலிப்பிலன் என்று ஏன் நகும் என்பதற்கு விளக்கம் தந்தார் பரிதி.
காலிங்கர் உரையில் 'நகும்' என்றது 'வெறுங்கையாளனை எறிந்தவன் என்ன வீரனோ என்ற ஒரு நகையும், வெறுங்கைக்கு அம்மா ஒரு வேல் வந்தது என்ற ஒரு நகையும்' என அறிக' என்ற விளக்கம் சில பதிப்புகளில் உள்ளது. (இவ்வுரைக்குத் தண்டபாணி தேசிகர் 'படைச்செருக்குப் பிறர் தவறு கண்டுழி நிகழும் இகழ்ச்சிச் சிரிப்பாகாது. தமக்கே யுரியதாகிய மகிழ்ச்சியேயாம். ஆதலால் வீரன் சிரிப்பு கருவி கிடைத்ததே என்ற சிரிப்புத்தான்' எனக் கருத்துரைப்பார்.)
பரிமேலழகர் 'தன் கைவேலைக் களிற்றொடு போக்கிய பிறகு வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித்திரிபவன் தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும்' என்றார். அதாவது தேடியதை அடைந்ததால் உண்டான மகிழ்ச்சி என்கிறார்.
பின்வந்த உரைகளிலிருந்து சில:
- கைவேலைக்களிற்றின் மேற்போக்கினான் கையிற் கருவியில்லை. களிறொன்று வருகிறது. கருவியில்லாமையாற் கவலுகின்ற வீரன் எப்போதோ விடுத்த தன்மெய்வேல் கையிற்பட, அதனைப் பறித்து மகிழ்ந்தான்.
- பகைவர் தம்மீது விட்ட வேலையும் மற மிகுதியான் உணராதிருந்தான். உணர்ந்து பிடுங்கி கையில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தான்.
- அந்த வேலைப் பிடுங்கி மற்றொரு யானை மேல் எறிந்து 'இவ்வளவாயினும் எனது கடமையை நிறைவேற்றினேனே' யென்று சிரித்து மகிழ்கிறான்!
- வேறு எங்கும் போய் வேலினைத் தேடித் திரியாமல் தன்னுடைய மார்பிலேயே கிடைத்ததே என்று எண்ணி அதனைப் பிடுங்கி மகிழ்ந்தான் வீரன்.
- வீழும் போதும் வீரம் விளைத்து வீழ உதவிய வேலுக்கு நன்றி சொல்லியா சிரித்தான்!
- போர்க்களத்தில் போர் புரிந்து கொண்டிருக்கும் தருவாயில் நகைப்பான பேச்சு ஒரு போர் வீரனிடம் தோன்றுகின்றதென்றால் அவனுடைய எஃகு நெஞ்சமும் வீரப் பெருமையும் தென்படும்.
- தன் கை வலிமைக்கு முன் மதயானையும் நிற்க ஆற்றாமல் போயிற்று. எதிரிகள் நமக்கு எம்மாத்திரம்? என எண்ணி நகைத்திருப்பானோ?
இங்கு சொல்லப்பட்ட நகும் என்றது படைச்செருக்கால் வந்த பெருமிதச் சிரிப்பு ஆகும்.
|
தன் கையிலிருந்த வேலினை தான்பொருதிய யானையின் மேல் எறிந்து மீள்கின்ற வீரன் தன் உடம்பில் தைத்து நின்ற வேலைப் பிடுங்கி அது கிடைத்ததற்காக மகிழ்வான் என்பது இக்குறட்கருத்து.
யானையைப் போக்கிக் கைவேல்இழந்தவன் மெய்யில் பாய்ந்த வேல்பறித்துப் படைச்செருக்குடன் சிரித்தான்.
கைவேலை வீசி யானையைப் போக்கிவரும் வீரன் தன் மெய்யில் தைத்தவேலைப் பறித்து மகிழ்வான்.
|