இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0772



கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:772)

பொழிப்பு (மு வரதராசன்): காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

மணக்குடவர் உரை: வீரர்க்குக் காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும், யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது.
இதுமேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: கான முயல் எய்த அம்பினில் - கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது - வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று.
('கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்றதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக்குத்தக எறிதலும் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் செல்லலுற்றானது கூற்று)

தமிழண்ணல் உரை: காட்டிலோடும் முயலைக் குறிதவறாது எய்த அம்பினைக் கையிலேந்துவதைவிட, யானையை எய்து குறிதவறிப் போன வேலை ஏந்துவது ஒருவனுக்கு இனிமை தரும் செயலாகும். தம்மைவிட வலிமை குறைந்தவர்களை வெல்வதைவிட, தம்மிலும் பெரிய வீரர்களுடன் பொருதலின் சிறப்பு இவ்வாறு கூறப்படுகிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

பதவுரை: கான-காட்டின்கண்; முயல்-முயல்; எய்த-ஏவிய, குறி தவறாமல் கொன்ற; அம்பினில்-அம்பை ஏந்துவதைவிட; யானை-வேழம்; பிழைத்த-தவறிய; வேல்-எறியீட்டி; ஏந்தல்-தாங்குதல்; இனிது-நன்றானது.


கான முயல்எய்த அம்பினில்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வீரர்க்குக் காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும்;
பரிப்பெருமாள்: காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும்;
பரிதி: முயலை எய்த அம்பிலும்;
காலிங்கர்: ஒருவன் காட்டிடத்து முயலினைப் பட்டுக் கழலுமாறு எய்த அம்பினின்; [கழலுமாறு-ஊடுருவுமாறு]
பரிமேலழகர்: கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்;

'காட்டகத்து முயலைப் பட எய்த அம்பினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காட்டு முயலைக் கொன்ற அம்பைக் காட்டினும்', 'காட்டில் ஓடும் முயலைக் குறி தவறாமல் எய்த அம்பை ஏந்துவதைக் காட்டிலும்', 'கானகத்தில் (அஞ்சி ஓடுகின்ற) முயலைக் குறி தவறாமல் அடித்துவிட்ட அம்பைக் கையில் வைத்திருப்பதைவிட', 'காட்டில் ஓடும் முயல் மீது குறி தவறாமல் எய்த அம்பைத் தாங்கிக்கொண்டிருத்தலைவிட' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காட்டில் முயலைக் குறிதவறாமல் எய்தஅம்பைக் காட்டிலும் என்பது இப்பகுதியின் பொருள்.

யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது.
மணக்குடவர் குறிப்புரை: இதுமேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: யானையைப் பிழைக்க எறிந்த வேலை யேந்துதல் இனிது வீரற்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதுமேலதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.
பரிதி: யானையைப் பிழைக்க எய்த வேல் ஏந்தல் இனிது;
பரிதி குறிப்புரை: யானை பிழைத்த வேல் விசேஷமானாற் போல ஆயிரம் சேவகரில் ஒரு சுத்த வீரன் விசேஷம் என்றவாறு.
காலிங்கர்: போர்க்களத்து ஒருவன் ஒரு களிற்று யானையைக் குறித்து எறிந்து இலக்குப் பிழைத்த வேலினை எடுத்து ஏந்திக் கொள்ளுதல் பெரிதும் இனிது என்றவாறு. [இலக்கு-குறி]
பரிமேலழகர்: வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'கானமுயல்' என்றதனால் வெள்ளிடை நின்ற என்பதும், 'பிழைத்த' என்றதனாற் பிழையாமல் என்பதும், முயற்குத்தக 'எய்த' என்றதனான் யானைக்குத்தக எறிதலும் வருவிக்கப்பட்டன. இது மாற்றரசன் படையொடு பொருதான் ஓர் வீரன், அது புறங்கொடுத்ததாக நாணிப் பின் அவன்றன்மேற் செல்லலுற்றானது கூற்று. [வெள்ளிடை - வெட்ட வெளியில்; அது புறங்கொடுத்ததாக நாணி - அப்பகைவனது சேனை புறங்காட்டி ஓடியது கண்டு நாணமுற்று; பின் அவன் தன் மேல் - பின் அப்பகையரசன் மேல்]

'யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யானைக்குறி தவறிய வேலை ஏந்தல் சிறப்பு', 'வெட்டவெளியில் நின்ற யானையை எறிந்து குறிதவறிய வேலை ஏந்துதல் நல்லது', '(பயமின்றி எதிர்க்கவல்ல) யானையைத் தாக்கிக் குறி தவறிவிட்ட வேலாயுதத்தை உடையவனாக இருப்பது வீரனுக்கு இனிமையாகும்', 'யானையை எறிந்து குறி தப்பிய வேலைத் தாங்கிக் கொண்டிருத்தல் இனிமையாகும். (வீரர் அல்லாதாரை வென்று புகழ் பெறுதலைவிட வீரரை வெல்ல முயன்று தோல்வியுறுதல் பெருமையுடைத்து என்பதாம்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

யானையை எறிந்து தவறிய வேலை ஏந்துதல் பெருமையுடைத்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காட்டில் முயலைக் குறிதவறாமல் எய்தஅம்பைக் காட்டிலும் யானையை எறிந்து தவறிய வேலை ஏந்துதல் பெருமையுடைத்து என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

வலியவற்றுடன் மோத உள்ளுவதே வீரத்துக்கு அழகு.

காட்டில் பதுங்கி ஒடும் ஒரு முயலைக் குறி தவறாமல் கொன்று வீழ்த்திய அம்பினை ஏந்திச் செல்வதைக் காட்டிலும் ஒரு யானையை எறிந்து தவறிய வேலைக் கையில் தாங்கிச் செல்வது இனிதாம்.
கொன்று உண்பதன் பொருட்டு முயல்வேட்டைக்குக் காட்டுக்குள் செல்பவன் அம்பை எடுத்து செல்வான். சிறிய உருவம் கொண்ட முயல் அங்கு பயஉணர்ச்சியுடன் பதுங்கி ஒதுங்கி ஓடிக்கொண்டிருக்கும். முயலானது வெறுங்கையால் கூட- எளிதாய் எட்டிப் பிடித்துவிடக்கூடிய சிறுவிலங்கு. தொலைவில் ஓடிக்கொண்டிருந்தாலும் வேட்டைக்காரன் அதைத் துரத்தி எளிதில் வீழ்த்திவிடுவான். அவ்விதம் முயலைக் கொன்ற அம்புடன் ஊருக்குள் வருகிறான் அவ்வேட்டைக்காரன். இன்னொருவன் யானைத் தோலுக்காகவோ அல்லது அதன் தந்தத்தை அடையும் பொருட்டோ யானைவேட்டைக்குப் போகிறவன். அவன் வேல் எடுத்துக்கொண்டு போவான். பரு உடல் கொண்ட பெருவிலங்கான யானையைத் தள்ளி நின்று தாக்க முடியாது. அருகில் சென்றுதான் அதனுடன் பொர இயலும். யானைவேட்டைக்காரன் தனது வேலை ஆற்றலுடன் எறிந்து எறிந்துதான் அதை வெல்ல முடியும். சிலவேளைகளில் யானையைக் கொல்ல விடுத்த வேல் குறிதவறி யானை தப்பிச் சென்றுவிடும். தன் முயற்சியில் தோல்வியடைந்து தளர்ச்சியுடன் வேலை எடுத்துக்கொண்டு ஊருக்குள் செல்கிறான் இவன். இவ்விரண்டு வேட்டைக்காரர்களில் யார் பெருமைக்குரியவர்? யானை வேட்டைக்காரனே சிறப்புக்குரியவன் என்கிறார் வள்ளுவர். உள்ளுவதெல்லாம் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது அவர் உள்ளம் அல்லவா?
எளிய விலங்கினை வீழ்த்தி வெற்றி பெறுதலினும் ஆற்றல் நிறைந்த விலங்கினைத் தாக்கித் தோல்வி பெறுதல் மேல். அது போல, வீரமில்லாப் பலரான பகைவரை வெல்வதைவிட வீரமுடன் பொருதவரும் படைத்தலைவன் போன்ற ஒருவனை வெல்ல முயன்று தவறினாலும் அதுவும் வீரனுக்குச் செருக்குப் பயக்கும் என்கிறது இக்குறள்.

உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (ஊக்கமுடைமை 596 பொருள்: நினைப்பன எல்லாம் உயர்வையே நினைக்க; அவ்வுயர்வை அடைய முடியாமல் போனாலும், எய்திய தன்மையோடு ஒக்கும்.) என்னும் குறளை நினைக்க. போர்க்களத்தில் வெற்றியா தோல்வியா என்பதைவிட மேலானதை எண்ணி வீர்ம் தோன்றச் செயல்படவேண்டும். வெற்றி காணவில்லையானாலும் அதனால் வீரன் இழிவு எய்தமாட்டான். இவன் இத்தகைய வீரச்செயலை முனைந்தனனே என்று நினக்கப்படுவான்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

முந்தைய குறள் (771) நாடகப் பாங்கில் போர் வீரன் உரைப்பதான கூற்றாக அமைந்தது. இது ஆசிரியர் 'நான்' கூற்று. போர்ச்சூழலில் பெருமை உடைத்து எது என்று ஆசிரியர் கூற்றாக அமைகிறது இக்குறள். செவியறிவுறூஉவாக ஆசிரியர் வள்ளுவர் கூறும் செய்தி என்ன?

வள்ளுவர் பிரிந்து நின்று தன் கூற்றாகச் சொல்லும் இடங்கள் சிலவேயாகும். இங்கு உணர்ச்சியூட்டும் பொருட்டு பொது மக்கள் கூற்றாக மொழிகிறார். எளியோரை எதிர்த்து அழித்தலும், வலியோரை எதிர்நின்று தப்பவிடுதலுமாகிய இரண்டுமே படைச்செருக்காகா; ஆயினும் முன்னதிற் பின்னது ஓரளவு சிறந்ததாயச் செருக்கம் என்பதுதான் அவர் கூறவரும் செய்தி. அதாவது படையில் உள்ள அனைத்து வீரரும் அரும்பெரும் வீரச்செயல் புரிய என்ற எண்ணம் கொள்ள வேண்டும்; சிறுசிறு போர்ச் செயல்களைச் செய்து நிறைவடைவதைவிட, பெரிய தீரச் செயல்களில் முனைவது - வெற்றிகிட்டவில்லையென்றாலும் - பெருமை தேடித்தரும் என்று எண்ண வேண்டும்.

மற்ற உரையாளர்கள் இக்குறட் கருத்துப்பற்றிக் கூறியவற்றிலிருந்து சில:
* இது மாற்றரசன் படையொடு பொருதும் வீரன், அப்பகைவனது சேனை புறங்காட்டி ஓடியது கண்டு நாணமுற்றுப் பின் அப்படைக்குத் தலைவனை எதிர்த்துச் செல்லத் தொடங்கினான்.
* ஆற்றலற்றவரை எதிர்த்துப் போரிடுவதைக் காட்டிலும் ஆற்றலுடையவனை வெல்ல முடியாது என்பது புலப்பட்டாலும், அவனை எதிர்த்துப் போரிடுதலே சிறப்பாம்.
* வலியார் மேல் வைத்த குறி தவறுவதிலும் படைச் செருக்குண்டு.
* தம்மைவிட வலிமை குறைந்தவர்களை வெல்வதைவிட, தம்மிலும் பெரிய வீரர்களுடன் பொருதலின் சிறப்பு இவ்வாறு கூறப்படுகிறது.
* பலவீனமுள்ளவர்களாகவும் பயந்து ஓடுகிறவர்களாகவும் உள்ளவர்கள் மீது படை தொடுப்பதைக் காட்டிலும் பலமுள்ள எதிரிகளைத் தாக்குவதையே வீரன் தனக்குப் பெருமையாகக் கருதுவான்.
* சிறியாரைக் கொன்றான் வெற்றியினும் பெரியாரை இலக்காகித் தவறுதல் மேல்.
* வீர மிகுதி இல்லாரோடு பொருது வெற்றி காண்டலினும் வீரமிகுதி உடையாரோடு பொருது அவர்மீது வைத்த இலக்குத் தவறினும் அது குற்றமின்று.
* வீரம் என்றால் வலியவனுடன் மோதுதல்தான் அது தோல்வியில் முடிந்தாலும் சரி; வீரம் என்பது எளியவனை வெல்லுதல் அல்ல.
* எளியவனை வீழ்த்தி மகிழ்வதைக் காட்டிலும் யானை பலமுள்ளவனை எதிர்த்து தோற்பது மேல்.
* பகைவருள் ஒரு காலாட்படை மறவனைக் கொல்வதினும், ஓர் அரசனை அல்லது படைத்தலைவனை வெல்ல முயலும் முயற்சி சிறந்ததென்று கருதும் மறவன் கூற்று.
* இப்படைக்கு பலமான எதிரி வேண்டுமாம்.
* அஞ்சி ஓடும் படையை வெற்றி கொள்வதைவிடத் தன்னின் மிக்கான் ஒருவனோடு பொருது, அவன் முன்னேற்றத்தைத் தடுப்பதே சிறப்பான செயலாகும்.

வலிமையான எதிரியோடு போர் செய்வதுதான் மறவனின் மாண்பு என்பது இக்குறள் கூறும் செய்தி.

காட்டில் முயலைக் குறிதவறாமல் எய்தஅம்பைக் காட்டிலும் யானையை எறிந்து தவறிய வேலை ஏந்துதல் பெருமையுடைத்து என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வலிய பகைவரைப் பொருதலே படைச்செருக்கு தரும்.

பொழிப்பு

காட்டு முயலைக் குறிதவறாமல் எய்த அம்பைக் காட்டினும் யானைக்குறி தவறிய வேலை ஏந்தல் பெருமையுடைத்தாம்.