இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0773பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு

(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:773)

பொழிப்பு (மு வரதராசன்): பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: ஒன்று உற்றக்கால் அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்: உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக்கலமென்று சொல்லுவர்.
உலகியலறிவது- தான் உலகியலை வெளியார் சொல்லாமையறிதல்.

பரிமேலழகர் உரை: தறுகண் பேராண்மை என்ப - பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு - அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீர்த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.
('என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3)

சி இலக்குவனார் உரை: பகைவரிடம் இரக்கம் காட்டாது பொரும் வீரத்தைப் பெரிய ஆண்மை என்று சொல்வார்கள். ஆனால் பகைவர்க்குக் குறைபாடு நேருமானால் இரங்கி அவர்க்கு உதவி செய்வது ஆண்மையின் மிகுதியாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தறுகண் பேராண்மை என்ப; ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு.

பதவுரை: பேராண்மை-மிக்க ஆளுந்தன்மை, திட்பம்; என்ப-என்று சொல்லுவர்; தறுகண்-வீரம், மறம்; ஒன்று-ஒரு தாழ்வு; உற்றக்கால்-வந்தால்; ஊராண்மை-உதவுந்தன்மை; மற்று- (அசைநிலை) அதன்-அதனுடைய; எஃகு-படைக்கலம்.


பேராண்மை என்ப தறுகண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஞ்சாமையை ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்:
பரிப்பெருமாள்: அஞ்சானாதலை ஒருவனுக்குப் பெரிய ஆண்மையென்று சொல்லுவர்:
பரிதி: செருவிடை வேண்டியகாலையில் சுத்த வீரன் விசேஷம்; அது பேராண்மை; [செருவிடை வேண்டிய காலையில் - போரில் விரும்பியபோது; சுத்த வீரன் -உண்மையான வீரன்]
காலிங்கர்: படை மக்கள் தமக்கு எப்பொழுதும் இயல்பு ஆகிய மிகவும் பெரிய ஆண்மை என்று சொல்லுவர் உலகோர்;
பரிமேலழகர்: பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்; [கண்ணோடாது- இரக்கம் கொள்ளாமல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'என்ப' என்பது பின்னும் இயைந்தது.

'பகைவர்மேற் கண்ணோடாது செய்யும் மறத்தை நூலோர் மிக்க ஆண்தன்மையென்று சொல்லுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரைக் கொல்லுதல் வீரம்', 'பகைவர்மேல் இரக்கங்காட்டாது போரிடும் வீரத்தை நூலோர் பேராண்மை (மிக்க ஆண்தன்மை) என்று கூறுவர்', 'ஆண்மைக்குச் சிறப்பு அச்சமற்ற தன்மையே எனப்படும்', 'உறுதியாய்ப் போர்புரிதலைப் பெரிய வீரம் என்று அறிஞர் சொல்லுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவர்மேல் கண்ணோடாது போர்புரிதலைப் பெரிய வீரம் என்று சொல்லுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒன்று உற்றக்கால் உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக்கலமென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள்: ஒன்று உற்றக்கால் உலகியலறிந்து செய்தலை அவ்வாண்மைக்குப் படைக்கலமென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: உலகியல் அறிதல்- தனக்கு எளியார்மேல் செல்லாமை. இது வீரம் செய்யுங்கால் எளியாரை அடராமை வேண்டும் என்றது.
பரிதி: அது பேராண்மை; சுத்தவீரரில் வீராதி வீரன் விசேஷம்; அவன் வீரன் என்றவாறு. [வீராதி வீரன் - மிக்க வீரமுடைய வீரன்]
காலிங்கர்: யாதினை எனின், பகை வந்து உற்ற இடத்துப் பண்டை ஆண்மையை மிகவும் கூர்க்கப்பிடித்து அடர்த்து எதிர் நடத்தல் கூர்மையாவது என்றவாறு. [மிகவும் கூர்க்கப் பிடித்து- மிக மிகுதியாகப் பிடித்து]
பரிமேலழகர்: அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீர்த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை என்று சொல்லுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'என்ப' என்பது பின்னும் இயைந்தது. ஊராண்மை - உபகாரியாம்தன்மை, அஃதாவது, இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும்படத் தமினாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி அயோத்தியர் இறை மேற்செல்லாது, 'இன்று போய் நாளை நின்தானையோடு வா,' என விட்டாற்போல்வது. இவை இரண்டு பாட்டும் தழிஞ்சி (பு.வெ.மா.வஞ்சி 3) [இலங்கையர் வேந்தன் - இராவணன்; அயோத்தியர் இறை - இராமன்; தழிஞ்சி -தோற்றவர் மேல் போருக்குச் செல்லாமறத்தன்மை]

'ஒரு தாழ்வு வந்ததாயின், கண்ணோடி அது தீர்த்துக்கோடற் பொருட்டு ஊராண்மை செய்தலை நூலோர் அதற்குக் கூர்மை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர்க்குத் துன்பம்வரின் உதவுதல் வீரத்தின் சிகரம்', 'வீரர்க்குத் தாழ்வு நேர்ந்தால் அதனை விலக்க இரங்கிச் செய்யும் உதவியைப் பேராண்மையின் கூர்மை என்று கூறுவர்', 'ஒரு அவசியம் நேரிடும்போது போர் புரிந்து கொண்டு செலுத்தி வெல்லுவது அந்தப் பேராண்மைக்கு ஒரு கருவியேயாகும்', 'பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின் அதனைத் தீர்த்தற்கு உதவுந்தன்மை அவ்வீரத்தின் கூர்மையாகும் ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவர்க்குத் துன்பம்வரின் உதவுதல் அவ்வீரத்தின் கூர்மையான தன்மையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பகைவர்மேல் கண்ணோடாது போர்புரிதலைப் பெரிய வீரம் என்று சொல்லுவர்; அவர்க்குத் துன்பம்வரின் ஊராண்மை அவ்வீரத்தின் கூர்மையான தன்மையாகும் என்பது பாடலின் பொருள்.
'ஊராண்மை' என்றால் என்ன?

பகைவருடன் கடுமையாகப் போரிடுவது வீரம்; அவர் இடருறும் நிலையில் பகையென்றும் பாராமல் உதவுதல் வீரத்தில் நாகரிகம்.

பகைவரை எதிர்த்து அஞ்சாமல் போர் புரியும் வீரச்செயல் பேராண்மையாம்; தன்னிடம் சண்டையிட்ட அப்பகைவனுக்கு ஊறு உண்டானபோது அவனை வெல்ல எண்ணாமல் அவனுக்கு உதவிநிற்கும் ஆண்மையோ வீரத்தின் வீரமாம்.
போரில் பகைவர்மேல் கண்ணோடாது தாக்கி அடக்கும் வீரத்தைப் பேராண்மை என்று சொல்வர், அதே பகைவர் போர்க்களத்தில் படைக்கலத்தையிழந்தோ காயமுற்றோ இக்கட்டில் தத்தளிக்கும் நிலையில், அக்குறைவை நீக்கிக் கொள்ளும் பொருட்டு உதவி செய்தல் அந்த ஆண்மைக்குச் சிறப்புச் செய்வதாகும். மனிதநேயத்துடன் கூடிய அப்பண்பாடு வீரத்தைவிட கூரானது. அது ஊராண்மையாம்.

பகைவர் மேற்செலுத்தப்பெறும் மறம் பேராண்மை. போரில் பகைவனுக்கு ஏதாவது ஒன்று நேரும்பொழுது- செயலற்றுப் போன நிலையில்- அவனுக்கு நன்னெஞ்சு கொண்டு உதவுது நாகரிகமான செயல் என்கிறது பாடல்.
மிகப் பெரிய ஆளுமை என்று சொல்லப்படுவது வீரம்தான். பேராண்மையிடையே காட்டப்படும் ஈரம் வீரத்தின் வீரம்; அது போர்க் களத்திலும் அருள் நெஞ்சினாராய் இருப்பது. படைக்கலம் இழந்த பகைவரொடு போர் புரிவது வீரமாகாது. தம்மொடு ஒத்த நிலையில் இல்லாதபோது, கண்ணோடி அல்லது தாக்காதொழிந்து அவரை விடுதல்தான் உண்மையான வீரமாகும். ஒத்த நிலையில் இல்லாரோடு பொருதல் என்பது ஒத்த கருவி இல்லாதாரோடு போர்புரிதல் அதாவது வாளையிழந்த பகைவனிடம் வாளால் போர் செய்தல், புண்பட்ட வீரனை நலிதல், ஊனமுற்ற பகைவனை ஊறு செய்தல், எதிர்க்க முடியாத பலவீனமான சூழ்நிலையில் எதிரி நிற்றல் போன்றன. வலிமையிழந்த பகைவர்க்கு எதிராகப் போர் செய்ய மறுப்பதோடல்லாமல் அவர்களுக்கு உதவுதல் போன்ற நல்ல போர்நெறிகளை வீராதிவீரனான ஊராண்மையாளன் போற்றிக்காப்பான்.

'ஊராண்மை' என்றால் என்ன?

'ஊராண்மை' என்றதற்கு உலகியலறிந்து செய்தல், உலகியல் அறிதல் அதாவது தனக்கு எளியார்மேல் செல்லாமை, வீராதி வீரம், உபகாரியாம்தன்மை, உதவி செய்தல், குடியாட்சி, இடையூறு தவிர்க்க உதவுதல், இடர்ப்பாடு வந்தக்கால் உதவி செய்தல், உதவுதல், தாழ்வுவிலக்க இரங்கிச் செய்யும் உதவி, குறைபாடுற்றவர்க்கு உடனே செய்யும் உதவி, தாழ்வு தீர்த்தற்கு உதவுந்தன்மை, இரங்கி உதவி செய்வது, உதவி புரியும் பெருந்தன்மை, ஓடி உதவுவது, துன்பநிலையில் அடைக்கலம் புகுந்தக்கால் இரக்கம் காட்டுதல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வலிமையோடு போர் செய்தல் வீரம்; பகைவனுக்குத் தாழ்வு வந்தவிடத்து அவன்மேல் கண்ணோடி உதவுதல் பேராண்மையினும் மேலான ஆண்மையாகும். கண்ணோட்டம் என்பது ஒத்தார் துன்புறு நிலை எய்தியபொழுது அவர்க்குச் செய்யத்தகும் பெருமிதமான உதவியாகும். அப்படிச் செய்பவன் போர் வீரனுக்குண்டான செருக்கு என்னும் பேராண்மை கொண்டிருப்பதோடு, அச்செருக்கைக் கூர்மைப்படுத்தும் விதமாகப் போரில் பகை நாட்டு வீரர்க்கு, ஒரு ஊறு நேர்ந்து விட்டால், அதையே நல்ல வாய்ப்பாகக் கொண்டு அவனை வெல்ல எண்ணாமல், அவனுக்கு உதவி புரியும் பெருந்தன்மை கொண்டவனாயிருக்கிறவன். இப்பெருந்தன்மையே ஊராண்மை எனப்படுவது.
ஊராண்மை என்பதற்குக் காட்டாக இலங்கையர் அரசனான இராவணன் துணை, படை எல்லாவற்றையும் இழந்து போர்க்களத்தில் தன்னந்தனிஆளாக தம்முன் நின்றபோது அயோத்தி இராமன் ‘இன்று போய் நாளை நின் தானையோடு வா’ என்று அவனை விட்டதைச் சொல்வர். இன்றுபோய்ப் போர்க்கு நாளை வாவென நல்கினன் (கம்ப இராமாயணம், யுத்தகாண்டம் முதற்போர்புரி படலம், பொருள்: (உனக்குத் துணையாக அமைந்திருந்த படைகள் அனைத்தும் பெருங்காற்றினால் தாக்கப்பட்ட பூளைப் பூக்களைப் போல சிதைந்து போயினமையைக் கண்டாய்); இன்று உன் இடத்துக்குச் சென்று, போர்க்கு நாளைக்கு வருவாயாக என்றான்).

ஊராண்மை என்றதற்கு உலகியலறிந்து செய்தல் என மணக்குடவர் பொருள் கூறினார். இப்பொருளுக்கு விளக்கமாகப் பரிப்பெருமாள் உரை 'உலகியல் அறிதல்- தனக்கு எளியார்மேல் செல்லாமை. இது வீரம் செய்யுங்கால் எளியாரை அடராமை வேண்டும்' என அமைந்தது. எனவே, உலகியல் என்பதற்குக் கண்ணோட்டம் என்பது இவ்விருவரது கருத்தாகிறது. கண்ணோட்டத் துள்ளது உலகியல்..(கண்ணோட்டம் 572 பொருள்: உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது.. ) என்று முன்பு சொன்னது குறள்.
'உபகாரத்திலே ஊர்முழுதும் வயப்பட்டு ஏவல் கேட்குமாதலின் உபகாரியாந்தன்மையை [உதவுந்தன்மை] ஊராண்மை என்றார்' என்பது தண்டபாணி தேசிகர் ஊராண்மைக்குத் தரும் விளக்கம். மேலும் இவர் 'எய்தற்கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கரிய செய்ய வேண்டியிருக்க, அங்ஙனம் செய்யாது கண்ணோடிச் சோர விடுதல் தோல்வியாமே என்ற ஐயம் அகற்ற, மாற்றான் சோர்ந்தவிடத்துக் கண்ணோட்டம் காட்டல் செருக்கு என்றதாம்' எனவும் கூறினார்.
'இலட்சிய சமுதாயத்திற்காக அன்புத் தியாகம் செய்வதுவே 'ஊராண்மை' எனப்படும்' என்றார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.

சோமசுந்தர பாரதியார் ஊராண்மை பற்றி விளக்குவதாவது:
'பெரும்பதிகளை அதாவது நகரங்களைத் தமிழில் ஊரென்றே கூறுவது அடிப்பட்ட தமிழ் வழக்காகும். ஊராண்மை என்னும் சொல் நாகரிகம் என்பது போலவே கண்ணோடல், ஒப்புரவறிதல் போன்றதோர் சால்பினைச் சுட்டி ஊர்த் தொடர்பால் உளதாம் ஒரு பண்பினையே குறிப்பது. ...... பலவாறு நிலை வேறுபட்டாரின் கூட்டுறவால் மாறுபாடுகளை மறந்து, ஒற்றுமை நலம் வளர்வதற்கு உதவும் பண்பே நாளடைவில் ஊராண்மையெனப் பெயர் பெறுவதாயிற்று. இயற்கையில் வேறுபாடுடையார் நாளுங்கூடி வாழும் நிலையில் மாறுபாடழிய மனமொத்து உடனுறையும் சமுதாயச் சால்புகளுக்கு, ஊராண்மை பொதுப்பெயராகும். .....உண்மையில் நாகரிகம் அல்லது ஊராண்மையென்பது வேறுபாடுகளால் மாறுபாடு விளையாவாறு காத்துப், பலர் கூடி யினிது வாழும் பொதுப் பண்பிற்கே உரிய பெயராய் நிற்கும். அத்தகைய சமுதாயங்களிற்றான் அப்பொதுப்பண்பு வளர்தற்கு அவசியமும் இடனும் உண்டு. ஆகவே எக்காலும் ஒத்து வாழும் சமுதாயப் பண்பும், நகரம் அல்லது பேரூர்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு ஆண்டுத் தழைவதால், அப்பண்புக்கு 'நாகரிகம்' அல்லது 'ஊராண்மை' என்னும் பெயர் மிகவும் இயைபுடையதாகும் அன்றே? அன்றியும் குடி, கொள்கை, தொழில், துறை, மொழி, பதி முதலியவற்றால் உறவுத் தொடர்புமற்ற பலர் கூட்டுறவில், ஒருவர்-மேல், மற்றொருவர்-கீழ், என்னும் உணர்ச்சி பிறவாமல் தம்முள் சகோதரத்துவ ஒருப்பாட்டுணர்ச்சிகள் தழைத்து ஒற்றுமையுடைய ஒரே சமுதாயமாய் வாழப் பயிலுவதே ஊராண்மை அல்லது நாகரிகத்தின் நல்லியல்பாகும்... '

ஊராண்மை என்ற சொல்லுக்குப் பகைவன்மேல் கண்ணோடுதல் என்ற பொருள் சிறந்தது.

பகைவர்மேல் கண்ணோடாது போர்புரிதலைப் பெரிய வீரம் என்று சொல்லுவர்; அவர்க்குத் துன்பம்வரின் உதவுதல் அவ்வீரத்தின் கூர்மையான தன்மையாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தாழ்ந்த பகைவனுக்கு உதவுதலும் படைச்செருக்கே.

பொழிப்பு

பகைவர்மேல் கண்ணோடாது போரிடுவதைப் மிக்கவீரம் என்று கூறுவர்; அவர்க்குத் தாழ்வு நேரும்போது உதவுதல் வீரத்தின் கூர்மையாம்.