இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0776விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து

(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:776)

பொழிப்பு (மு வரதராசன்): வீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

மணக்குடவர் உரை: தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன்.
இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகுபுறங்கொடாமையும் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: தன் நாளை எடுத்து - தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன்.
(விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தன் கழிந்த நாள்களை எடுத்து எண்ணி, அவற்றுள் விழுப் புண்களைப் பெறாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாள்களுள்ளே தள்ளும். (விழுப்புண்-போரில் முகத்திலும் மார்பிலும் பட்டபுண்.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
தன் நாளை எடுத்து விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்.

பதவுரை: விழுப்புண்-(போரில் உண்டான) சிறப்பான வடு; படாத-உண்டாகாத; நாள்-நாள்; எல்லாம்-அனைத்தும்; வழுக்கினுள்-கழிந்த நாள்களுள்; வைக்கும்-இருத்தும்; தன்-தனது; நாளை-நாள்களை; எடுத்து-பிரித்தெண்ணி.


விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன்;
பரிப்பெருமாள்: விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளாக யெண்ணி வைக்கும் வீரன்;
பரிதி: வீரன் நாள்தோறும் தன் சரீரத்திலே புதுமைப் புண்படாத நாள்களை;
காலிங்கர்: போர்க்களத்துச் சென்று புக்கார் புறத்துப்படுதல் இன்றி முகத்தினும் தோளினும் மார்பினும் விழுமிய புண்ணாகிய வீரத்தழும்பு படப் பெறாத நாட்களும் உள அன்றே; [புறத்துப்படுதல் - முதுகிற்படாமல்]
பரிமேலழகர்: விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும் வீரன்;
பரிமேலழகர் குறிப்புரை: விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண்.

'விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே/பயன்படாத நாளுள்ளே வைக்கும் வீரன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீரப்புண் படாத நாட்களை யெல்லாம் குற்றநாட்களாக', 'போரில் விழுப்புண் படாத நாள்களை குற்றஞ்செய்த நாளாக, சிறந்த மறவன் எண்ணுவான்', 'படைச் செருக்குடைய வீரன், குற்றமற்ற புண்களாகிய முகப்புண், மார்புப் புண் இவைகளல்லாது வேறு இடங்களிற் புண்பட்ட (நாட்கள் இருக்குமானால்) அவற்றுள் தனக்கு மாசுண்டாக்கிய நாட்களாக மதிப்பிடுவான்', 'முகத்தினும் மார்பினும் புண்படாத நாட்களை எல்லாம் பயன்படத் தவறிய நாட்களுள் வைத்து, எண்ணுவான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

போர்க்காயம் படாத நாளெல்லாவற்றையும் பயன்படாத நாளுள்ளே எண்ணி வைக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

தன் நாளை எடுத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள்.
மணக்குடவர் குறிப்புரை: இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகுபுறங்கொடாமையும் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள், .
பரிப்பெருமாள் குறிப்புரை: இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகுபுறங்கொடாமையும் வேண்டுமென்றது.
பரிதி: உயிருடன் வாழாத நாளாக எண்ணுவான் என்றவாறு.
காலிங்கர்: அவை எல்லாம் தனக்கு உளவாகக் கருதாது தன்னை வழுக்கிக் கழிந்தனவற்றுள் சிலவையாக அந்நாட்களை வேறே நீக்கி வைக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணிஅவற்றுள்.
பரிமேலழகர் குறிப்புரை: போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.

'தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொள்வான் வீரன்', 'தான் எல்லாம் எடுத்து வாழ்ந்த நாள்களுள்', 'தான் போர் புரிந்த நாட்களை எண்ணிப் பார்த்து அந்த நாட்களை', 'வீரன் சென்ற வாழ்நாட்களைக் கணக்கிட்டு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தான் வாழ்ந்த நாள்களுள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தான் வாழ்ந்த நாள்களுள் போர்க்காயம்படாத நாளெல்லாவற்றையும் வழுக்கினுள் எண்ணி வைக்கும் என்பது பாடலின் பொருள்.
'வழுக்கினுள்' என்றதன் பொருள் என்ன?

நாளும் போர்புரியத் தினவெடுக்கும் தோள் கொண்டவனாயிருப்பான் பெருவீரன்.

வீரனானவன் தன் வாழ்நாட்களை எண்ணிப்பார்த்து, விழுப்புண் படாத நாட்களைத் தான் தவறவிட்ட நாட்களாகக் கருதுவான்.
விழுப்புண் என்பது போர்க்காயங்களைக் குறிக்கும். பகைவரை எதிர்த்துப் போர்புரியும்போது மார்பிலும், முகத்திலும், தோளிலும் உண்டாகும் புண்களைக் குறிப்பது. வீரத்தில் உண்டான காயம் என்பதால் விழுமியம் பெற்றது. போர்க்குச் சென்று வீரத்தழும்புகளைப் பெறாத நாட்கள் வீணான நாட்கள் என்பான் வீரன்.
ஒரு போர்வீரனுடைய உள்ளம் எப்போதும் எப்படிப்பட்ட சிந்தனையில் இருக்கும் என்பது சொல்லப்படுகிறது. அவனுக்கு நாள்தோறும் போர் செய்ய வேண்டும் என்ற துடிப்பு மிகுந்திருக்கும். தான் பிறந்த நாட்டிற்காக வாழ்கின்றோம் என்று எண்ணுகின்ற அவன், போரில் சென்று உடம்பில் புண்படாத நாட்களைப் பயனில்லாத நாட்கள் என்றே நினைப்பான். போர் செய்யாமலும், காயம் ஏற்படாமலும் செல்லும் வாழ்நாட்கள் தேவையில்லை என்று எண்ணத்துடன் வாழ்வான். 'போர் செய்து காயம் படாத நாளெல்லாம் என்ன நாள்' என்று சலித்துக் கொள்ளுவான் இவன்.

பரிதி 'வீரன் நாள்தோறும் தன் சரீரத்திலே புதுமைப் புண்படாத நாள்களை உயிருடன் வாழாத நாளாக எண்ணுவான்' என்று இக்குறளுக்கு விளக்கம் தந்தார். பயன்படாத நாள் பிறந்தும் பிறவாமை போன்றதுதான்; போர் புரிந்துகொண்டிருக்கும் நாளே பிறந்தநாள் என்றும், போர்புரியாது கழிந்த நாள் பிறவா நாள் என்றும் கருதுகின்றவனே சிறந்த வீரன் எனவும் இப்பாடலை விளக்குவர்.
ஒரு போர்வீரனுக்கு ஊறுஅஞ்சாமல் அதாவது போர்ப்படையால் உண்டாகும் காயத்திற்குப் பயப்படாமல் பகையுடன் போர்புரியும் நாட்களே வாழ்நாள்கள். மற்ற நாட்களை அதாவது விழுப்புண் படாத நாட்களை அவன் வாழாத நாட்கள் எனக் கழித்துவிடுவான் என்கிறது பாடல். நாம் அவ்வப்பொழுது கடந்து சென்ற நாட்களை எண்ணிப்பார்த்து அவை பயனுள்ளவைகளாகக் கழிந்தனவா என்று மனத்துள் கணக்கிடுவது நன்மை பயக்கும்; அதனால் சிறந்த செயல்களைச் செய்ய ஊக்கம் பிறக்கும்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் (அறன் வலியுறுத்தல் 38 பொருள்: வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல் நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவன் வாழ்நாளில் வீணாகும் நாள் ஏற்படாமல் தடுக்கும் கல்லாகும்) என்று வாழ்நாள்-வீழ்நாள் பற்றிப் பிறிதோரிடத்தில் குறள் குறித்துள்ளது.

'வழுக்கினுள்' என்றதன் பொருள் என்ன?

'வழுக்கு' என்ற சொல்லுக்குத் தப்பின நாள், உயிருடன் வாழாத நாள், தன்னை வழுக்கிக்கழிந்த நாள், பயன்படாது கழிந்த நாள், வீணாகக் கழிந்த நாள், குற்றநாள், குற்றஞ்செய்த நாள், மாசுண்டாக்கிய நாள், தன் வாழ்நாள்களுள் பயனிலா நாள், பயன்படத் தவறிய நாள், பயனற்ற நாள், வீணாய்ப் போக்கிய நாள், தன் வாழ்நாளிலே வீணான நாள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

படைச்செருக்கு கொண்டவன் வீரச்செயலுக்காகத் தான் துன்புறுவதை விரும்பி ஏற்றுக் கொள்பவனாக இருப்பான். உயிர்வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல், போரில் தன் மறத்திறம் காட்டவேண்டும் என்ற எழுச்சியுடனேயே இருப்பான் இவன். போர் இல்லாத நாளை எல்லாம் எண்ணிப்பயன்படாமல் இழுக்கிய நாளாகக் கருதுவான். போர் செய்யாத நாட்களைப் பயன்படாமல் வாழ்ந்தோமே என்று அவன் நினைக்கின்றான் என்பதனை 'வழுக்கினுள் வைப்பான்' என்ற தொடர் குறிக்கிறது. அதாவது விழுப்புண் பெறாநாளை வெற்றுநாளாகக் கருதுவான்.

'வழுக்கினுள்' என்றதற்குப் பயனின்றி கழிந்தநாளுள் என்ற பொருள் பொருத்தம்.

தான் வாழ்ந்த நாள்களுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் பயன்படாத நாளுள்ளே எண்ணி வைக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

படைச்செருக்கு உள்ளவனால் மட்டுமே போர்ப்புண்களை வரவேற்று ஏற்கமுடியும்.

பொழிப்பு

தான் வாழ்ந்த நாள்களுள் போரில் விழுப்புண் படாத நாள்களை எல்லாம் பயன்படாத நாளாகக் கொள்வான் வீரன்.