புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
(அதிகாரம்:படைச்செருக்கு
குறள் எண்:780)
பொழிப்பு (மு வரதராசன்): தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.
|
மணக்குடவர் உரை:
தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாக வல்லாராயின் அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதி யுடைத்து.
இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
புரந்தார்கண் நீர் மல்கச் சாகிற்பின் - தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்; சாக்காடு இரந்துகோள்தக்கது உடைத்து - அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து.
(மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. கிளை அழ இல்லிடை நோயால் விளியார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால் துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது.)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
நாட்டைக் காக்கும் அரசர்கள் அழுது கண்ணீர் விடும்படியாக உயிர் விடப் பெற்றால் அப்படிப்பட்ட மரணம் பிறரைக் கெஞ்சிக்கேட்டாயினும் அடையத் தகுந்தது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து.
பதவுரை: புரந்தார்- காத்தவர் - இங்கே ஆட்சித்தலைவர்; கண்-விழி; நீர்-நீர்; மல்க-நிரம்ப, பெருக; சாகிற்பின்-சாகப்பெற்றால்; சாக்காடு-இறப்பு; இரந்துகோள்-வேண்டிப்பெறும், பிச்சையெடுத்து, ஏற்று; தக்கது-தகுதி வாய்ந்தது; உடைத்து-உடையது.
|
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாக வல்லாராயின்;
பரிப்பெருமாள்: தம்மை ஆண்டவரது கண் நீர்மல்குமாறு சாவக்கடவராயின்;
பரிதி: அரசன் கண்ணீர் மல்கச் சாகிற;
காலிங்கர்: தம்மைப் பெரிதும் தலையளித்து ஓம்பு (தல் பொருந்தின அரசன் முதலா)னோர், 'இவரை யாம் இழந்தோம்! என்ன பாவம்!' என்று இரங்கிக் கண்ணீர் சொரியுமாறு அமரில் புக்குச் சாக வல்லவராயின்;
பரிமேலழகர்: தமக்குச் செய்த நன்றிகளை நினைந்து ஆண்ட அரசர் கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்;
பரிமேலழகர் குறிப்புரை: மல்குதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது.
'அரசரது கண்கள் நீர்மல்கும் வகை போரிடைச் சாவப் பெறின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காத்தவர் கண்கலங்கும்படி சாகப் பெற்றால்', 'ஒருவன் செய்த நன்மைகளை நினைத்து அவனைக் காத்து வளர்த்தவர் கண்ணீர் விடும்படி அவன் சாகவல்லவனாயின்', 'தமக்குச் செய்த நன்றியை நினைந்து அரசர் கண்ணீர் பெருக்கும்படி சாவக் கூடுமானால்', 'தம்மைப் பணியில் அமர்த்திக்காத்த அரசர் கண்களில் நீ நிறையும் வகை (வருந்துமாறு) போரிடைச் சாதல் கூடுமாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
காத்தவர் கண்ணீர் பெருக்கும்படி சாகப் பெற்றால் என்பது இப்பகுதியின் பொருள்.
சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதி யுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அச்சாக்காடு எல்லாரானும் வேண்டிக் கொள்ளும் தகுதி யுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆண்டவனுக்குக் கேடுவரின், படவேண்டுமென்றது.
பரிதி: சாக்காடு தரவேணும் என்று தெய்வ சந்நிதியிலே வேண்டிக்கொள்வான் என்றவாறு.
காலிங்கர்: அதுவே சாக்காடு என்பது; மற்று அது இரந்துகொள்ளும் தகுதியினை உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அச்சாக்காடு இரந்தாயினும் கொள்ளுந் தகுதியை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: கிளை அழ இல்லிடை நோயால் விளியார் பழவினைப் பயனே யெய்தலின், அடுத்த வினையால் துறக்கமெய்தும் சாதலை 'இரந்துகோள் தக்கது உடைத்து' என்றார். இவை நான்கு பாட்டானும் உயிர் ஓம்பாமை கூறப்பட்டது. [கிளை யழ - சுற்றம் அழ; உயிரோம்பாமை -வீரர்கள் தம்முடைய உயிரைப் பெரிதாக நினைத்து அதனைக் காக்க எண்ணாமை]
'அச்சாக்காடு வேண்டிக் கொள்ளும்/இரந்துகொள்ளும் தகுதி யுடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'சாக்காடு தரவேணும் என்று தெய்வ சந்நிதியிலே வேண்டிக்கொள்வான்' எனப் பொருள் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அச்சாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது', 'அச்சாவு இரந்தாயினும் கொள்ளும் சிறப்புடையது', 'அத்தகைய சாவு பிச்சை யெடுத்தாவது பெற்றுக்கொள்ளத்தக்கது', 'அந்தச் சாவு இரந்தாயினும் கொள்ளும் தகுதியை உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அச் சாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
புரந்தார் கண்ணீர் பெருக்கும்படி சாகப் பெற்றால் அச் சாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது என்பது பாடலின் பொருள்.
'புரந்தார்' என்பவர் யார்?
|
நாட்டுமக்களின் கண்களில் நீர் வரவழைக்கும்படி போராடி வீரச்சாவு எய்துதலை வேண்டிப் பெறலாம்.
தம்மைப் பேணியவரின் கண்களில் நீர் நிரம்பும்படியாகப் போர்க்களத்தில் இறப்பைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் வேண்டிப் பெற்றுக்கொள்ளத் தக்கதே.
போர்வீரன் ஒருவன் போர்க்களத்தில் அரும்பெருஞ் செயல்களைச் செய்து உயிர்நீத்தான். அதைக்கேள்விப்பட்டு நாட்டுமக்கள் கண்ணீர் சிந்துகின்றனர். தலைவன் நேரில்வந்து கண்களில் நீர்மல்க இறந்தவனுக்கு வணக்கம் செய்கின்றான். இப்படிப்பட்ட சாவு எல்லாருக்கும் கிடைப்பது அல்ல. அச்சாவு வேண்டுதல் செய்து பெறும் பெருமையுடையது. தனிப்பட்ட ஒவ்வொரு சாதனைப் போர்வீரனின் உயிரும் அரசின் பார்வையில் அருமையாக இருக்க வேண்டியது ஆதலால் நாடு அவனுக்காகக் கண்ணீர் சிந்தும்.
ஒரு வீரன் உயர்ந்த காரணத்திற்காக - தன் நாட்டைக் காப்பதற்காக- போர்க்களத்தில் உயிரை விடுகிறான். அது வீரச் சாவு எனப்படுகிறது. தீரச் செயல்களை அவன் புரிந்தானாயின் அவன் தலைவனே நேரில் வந்து கண்ணில் நீர்பெருக 'அருமையான வீரனை யிழந்தேனே' என்று இரங்கல் தெரிவிப்பான். இரந்துகூட அப்பேற்றைப் பெறலாம் என்கிறது பாடல்.
இப்பாடலிலுள்ள ‘இரந்து’ என்பதற்குத் தெய்வசந்நிதியிலே வேண்டல் எனப் பரிதி பொருள் கூறுகிறார். கொற்றவைக்கு முன்னர் மறவர் கேட்கும் வேண்டுதல்களைச் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி ஆகிய இலக்கியங்கள் கூறுகின்றன.
மானம், நாண் இவை பொருட்டு, பிறரைக் கொலைசெய்யாமலிருக்க, சூளுரையை நிறைவேற்ற எனப் பலவகையில் உயிரை ஈவார் பற்றிப் பிற இடங்களில் சொல்லியுள்ள வள்ளுவர் இங்கு 'நமக்காக வீரச்செயல்களைப் புரிந்த வீரர் இறந்துபட்டாரே' என்று தன் தலைவன் வருந்திக் கண்களில் நீர் பெருகக்கூறும்படி போர்ச்செயல்கள் புரிந்து களச்சாவு பெறுபவன் பற்றிக் கூறுகிறார். தன் வீரச்செயலை நாடு எண்ணிப்பார்க்கும் வகையில் அந்த போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவன் இவன்.
கர்ணனைப் புரந்தவன் துரியோதனன். செய்ந்நன்றியைமறவாது தன் தம்பியர் என்றும் பொருட்படுத்தாது பாண்டவரோடு அவனுக்காக நின்று, பொருது அவனுக்காக போர்க்களத்தில் உயிரை வழங்கினான் கர்ணன். அப்பொழுது எதற்கும் கலங்காத துரியோதனன் கர்ணனது வீரச் செயல்களை எண்ணிக் கலங்கினான்; கர்ணன் தனக்காக இறந்து கிடப்பதைக் கண்டு மனம் துடித்தது; அவன் கண்களில் நீர் பெருகிற்று.
'தம்மைப் பெரிதும் தலையளித்து ஓம்பு(தல் பொருந்தின தலைவன், 'இவரை யாம் இழந்தோம்! என்ன பாவம்!' என்று இரங்கிக் கண்ணீர் சொரியுமாறு அமரில் புக்குச் சாக வல்லவராயின், அதுவல்லவா சாக்காடு' என்கிறார் காலிங்கர்.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து (ஒப்புரவறிதல் 220 பொருள்: பொது நன்மைக்கு உதவுதலினால் கேடு வருமானால் அதை ஒருவன் விலை கொடுத்தும் ஏற்றுக் கொள்க) என்னும் பாடல் இக்குறள் போன்ற நடையினது. 'விற்றுக் கோள் தக்க துடைத்து' என்பது ஒப்புரவின் சிறப்பைக் காட்டுவது போல ‘இரந்து கோட்டக்கதுடைத்து’ என்பது வீரச் சாக்காட்டின் மேன்மையைக் காட்டுகிறது.
|
'புரந்தார்' என்பவர் யார்?
'புரந்தார்' என்றதற்குத் தம்மை ஆண்டவர், அரசன், தம்மைப் பெரிதும் தலையளித்து ஓம்புதல் பொருந்தின அரசன் முதலானோர், தமக்குச் செய்த நன்றிகளை நினைந்த ஆண்ட அரசர், தம்மைக் காத்த தலைவர், தம்மை வளர்த்து ஆளாக்கிப் புரந்தவர்கள், தம்மை வளர்த்து ஆளாக்கியவர், காத்தவர், அவனைக் காத்து வளர்த்தவர், நாட்டைக் காக்கும் அரசர், தம்மைக் காக்கும் தலைமையாளர், தம்மைப் பணியில் அமர்த்திக்காத்த அரசர், தலைவன், நீண்ட காலமாகத் தமக்கும் தம் குடும்பத்திற்கும் வாழ்வளித்துக் காத்த அரசர், தன்னைப் பாதுகாத்த அரசர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
புரந்த என்ற சொல் பாதுகாத்த என்ற பொருள் தருவது. புரந்தார் என்பதற்குக் காத்தவர் என்பது நேர்பொருள். போர்வீரனைப் பேணுவது நாடும் நாட்டுமக்களும். அவற்றின் குறியீடாக இருப்பவன் நாட்டுத்தலைவன். எனவே இங்கு புரந்தார் என்ற சொல் நாட்டுத்தலைவனைச் சுட்டும்.
போர்வீரன் தன் உயிர் கொடுத்துக் காப்பாற்றுவது நாட்டு அரசையும் நாட்டுமக்களையும். போர்வீரர்கள் தம் தாய்நாடு காப்பதற்காகவே போர்க்களம் செல்கின்றனர். இவர்கள் போற்றத்தக்க செயல்களைச் செய்து பகைவரைத் தோற்கடிக்கின்றனர். சிலசமயம், அரிய செயல்கள் செய்த வீரன் ஒருவன் மிகத் தீரத்துடன் போராடி நாட்டுக்கு வெற்றி தேடித் தந்தாலும் போர்க்களத்தில் இறந்துபடுகிறான். இவனது வீரச்செயல்கள் நாடு முழுக்கப் பேசப்படும். அவனது வீரம் அவனால் உயிர் கொடுத்துக் காப்பாற்றப்பட்டவர்களின் கண்களில் கண்ணீர் மல்கச் செய்யும்.
புரந்தார் என்றது காத்த தலைவர் என்ற பொருள் தரும்.
|
காத்தவர் கண்ணீர் பெருக்கும்படி சாகப் பெற்றால் அச் சாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது என்பது இக்குறட்கருத்து.
படைச்செருக்குடையவன் சாவிற்குத் தலைவனே நேரில் வந்து கண்ணீருடன் சிறப்பு வணக்கம் செய்வான்.
காத்தவர் கண்ணீர் மல்கும்படி சாகப் பெற்றால் அத்தகைய சாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது.
|