படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண்.... (381) என்ற குறளில் சொல்லப்பட்ட நாட்டின் ஆறு அங்கங்களில் ஒன்றான கூழ் என்பது பொருளையே குறிக்கும். 'பொருள் செயல்வகை அதிகாரம், கூழ் என்பதனையே, அரசியலுக்கு ஏற்ப விளக்குகிறது. 'கூழியல்' என்பது 'பொருள் செயல்வகை' என்ற இந்த ஒரு அதிகாரத்தானே அமைந்ததாக சிலர் இயல் பகுப்புக் கொள்வர்.
அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் மனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்கள். இவற்றுள் பொருட்செல்வம் உடையரானால் மென்மேலும் செல்வராதற்கு அது உதவுவதுடன் ஏனைய அறத்தை அடைதற்கும் இன்பத்தை நுகர்தற்கும் அதுவே துணை செய்யும். அப்பொருளும் தீதின்றி வரவேண்டும். அறம் செய்து இன்ப வாழ்வு எய்தற்குப் பொருள் தேடும் திறனறிந்து தொகுக்கவேண்டும். இவை இங்கு உரைக்கப்படும் கருத்துக்கள்.
பொருள் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. இவ்வதிகாரத்தில் அது செல்வம் என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. ஒரு நாட்டினதும் அதன் மக்களதும் அனைத்து செயல்களும் பொருளின்றி இயங்குவதில்லை. நாட்டின் பாதுகாப்பை ஆக்குவதும் காப்பதும் பொருள் தான். பல வேளைகளில் படைவலியைவிட பொருள்வலி நாட்டிற்கு ஆற்றல் தரும். இன்று ஒரு வல்லரசு எனக் கருதப்படுவதற்கு அதன் பொருளாதார மேன்மையே பெரிதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாள மட்டும் பாயும் என்பது பழமொழி. இது படை வலிமையோடு பொருள் வலிமையை ஒப்பிட்டுப் படை வலிமை கூடப் பொருள் வலிமையிடம் தோற்றுப் போகும் என்று குறிப்பாக உணர்த்துவது. பொருள் மிக்க நாட்டில் வாழவே மக்கள் விரும்புவர் என்று பெரும்பொருளால் பெட்டக்க தாகி.... (நாடு 732) அதாவது 'பெரும்பொருளாலே விரும்பத்தக்கதாகிறது நாடு' என முன் அதிகாரத்தில் கூறப்பட்டது பொருளின் சிறப்பை நன்கு எடுத்துக்காட்டிற்று. அப்படிப்பட்ட நாட்டை உருவாக்கும் பொருள்பற்றி இங்கு பேசப்படுகிறது.
பலநிலைகளில் பொருட்செல்வம் பிற செல்வங்களிலிருந்து கீழ்ப்பட்டது என்பதைப் பலவேறு அதிகாரங்களில் பலவேறு பாடல்களில் ஆங்காங்கே சொல்லிச் சென்றுள்ளவர்தாம் வள்ளுவர். ஆனால் எங்கும் பொருளீட்டம் குற்றம் என்று வள்ளுவர் கூறவில்லை. நிலையாமை செல்வத்தியல்பு என்பது அவர் அறிந்ததுதான். அதற்காக அதனைச் சேர்ப்பதை நிறுத்தச் சொல்லவில்லை. உண்மையில், செல்வத்தைக் 'காழ்ப்ப' அதாவது மிகுதியாக இயற்றவே அறிவுரை பகர்ந்துள்ளார், 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்ற தெளிவு உள்ளவர் அவர் ஆதலால். ஆயினும் பொருள் சேர்க்கவேண்டும் என்பதற்காக அதை எவ்வழியினும் தேடலாம் என்று அவர் கூறவில்லை, நேர்மையான வழியிலும், பிறர்க்குத் தீங்கு விளைவிக்காத வகையிலும் சேர்க்க வேண்டும் என்றே சொல்லியுள்ளார்.
பிறர்க்குத் தீங்கிழைத்தலாகிய கொலை, திருட்டு, வஞ்சகம், கையூட்டு போன்ற செயல்களில் ஈடுபடாமல் முறையாகச் சேர்க்கப்பட்ட செல்வமே ஒருவற்கு அறத்தையும் அளித்து, இன்பத்தையும் வழங்கும் என்பதே அவரது கூற்று.
இழிந்த வழிகளில் சேர்ந்த செல்வமாயிருந்தால் என்ன? அச்செல்வமும் பயன்படத்தான் செய்யும்; அதையும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளலாமே என்பது மாந்தரின் இயல்பு. ஆனால் வள்ளுவரோ அறநெறியில் சேர்ந்த செல்வமே பொருட் செல்வம் எனப்படும்; பொருள் ஈட்டவும் வேண்டும்; நெறி நேர்மையும் வேண்டும் என இணைத்துக் கூறுபவர். அருளோடும் அன்போடும் வாராப் பொருளைப் புரளவிடல் அதாவது தள்ளிவிடுக என்று அறிவுறுத்துகிறார்.