இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0759



செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்

(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:759)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்கவல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

மணக்குடவர் உரை: பொருளையுண்டாக்குக; பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை.
இது பொருளீட்டல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற் கூரியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை.
('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.)

சி இலக்குவனார் உரை: பொருளை உண்டாக்குக; அது பகைவருடைய தருக்கினைப் போக்கும் கூரிய கருவியாகும்; அது போலக் கூர்மையுடையது வேறொன்றும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செய்க பொருளை; செறுநர் செருக்குஅறுக்கும் எஃகுஅதனின் கூரியது இல்.

பதவுரை: செய்க-உண்டாக்குக; பொருளை-செல்வத்தை; செறுநர்-பகைவர்; செருக்கு-தருக்கு, அகந்தை, பெருமிதம்; அறுக்கும்-ஒழிக்கும்; எஃகு-கருவி வகை; அதனின்-அது போல; கூரியது-கூர்மையானது; இல்-இல்லை.


செய்க பொருளை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளையுண்டாக்குக;
பரிப்பெருமாள்: பொருளையுண்டாக்குக;
பரிதி: அரசன் பொருளையே தேடுவான்;
காலிங்கர்: நெறியினால் இயற்றி ஈட்டுக பொருளை;
பரிமேலழகர்: தமக்கொன்றுண்டாகக் கருதுவார் பொருளை உண்டாக்குக;

'பொருளையுண்டாக்குக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஈட்டுக பொருளை', 'ஒருவன் பொருள் ஈட்டுக', 'செல்வத்தைச் சம்பாதிக்க வேண்டும்', 'பொருளை நன்கு தேடிச் சேர்க்கவேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருளை உண்டாக்குக என்பது இப்பகுதியின் பொருள்.

செறுநர் செருக்குஅறுக்கும் எஃகு அதனின் கூரியது இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவரது பெருமிதத்தை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை. [பெருமிதம்-செருக்கு]
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளீட்டல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: பகைவரது ஈட்டுக பொருளை யறுக்கலாங் கருவி அப்பொருள்போலக் கூரியது பிறிது இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருளீட்ட வேண்டுமென்றது.
பரிதி: சத்துருக்கள் என்னும் காட்டை வெட்டுதற்கு அதுபோலும் ஆயுதம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: என்னை எனின் வேந்தராயினும் பகைவரை வெல்லும் கருவியானது இதனின் கூரியது பிறிது இல்லை.
காலிங்கர் குறிப்புரை: அதனால் பொருள் வழங்கச் செறுநர் சினம் தணிந்து பெரிதும் இனியர் ஆவர் என்றது.
பரிமேலழகர்: தம் பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது இல்லை. [தருக்கினை-செருக்கினை]
பரிமேலழகர் குறிப்புரை: 'அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன. பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர். ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார், 'செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு' என்றும், ஏனை எஃகுகள் அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற் கூரியது இல்' என்றும் கூறினார்.

'பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுபோலக் கூரியது பிறிது இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எதிரியின் இறுமாப்பை அறுக்கும் கருவி அதுபோல் வேறில்லை', 'பகைவரின் செருக்கை அறுக்கும் அப்படைக்கலத்தைவிடக் கூர்மையான கருவி வேறில்லை', 'ஏனென்றால் பகைவர்களுடைய கர்வத்தை அடக்குவதற்கு அதைக்காட்டிலும் தகுந்த ஆயுதம் வேறு ஒன்றுமில்லை', 'ஏனெனில் பகைவர்களது தருக்கை யழிக்கவல்ல கூர்மையான ஆயுதம் அதனைப்போல வேறு யாதுமில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பகைவருடைய இறுமாப்பைப் போக்கும் அது போலக் கூர்மையுடைய கருவி வேறொன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருளை உண்டாக்குக; பகைவருடைய இறுமாப்பைப் போக்கும் அது போலக் கூர்மையுடைய கருவி வேறொன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'எஃகு' என்ற சொல்லின் பொருள் என்ன?

உன் செல்வச் செழிப்பைப் பார்த்தபின் பகைவரிடம் அதுவரை இருந்த பெருமிதம் எல்லாம் மறைந்தொழியும்.

பொருளை ஈட்டுக; பகைவரின் செருக்கினைக் கெடுக்கவல்ல கூர்மையான ஆயுதம் அதனைப் போல் வேறொன்றும் இல்லை.
அறனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என இவ்வதிகாரத்து முந்தைய குறள் ஒன்றில் சொல்லப்பட்டது. இங்கு அப்படிப் பொருள் திரட்டுவதால் உண்டாகும் பெரிய நன்மை என்ன என்பது விளக்கப்படுகிறது. அப்பொருளே பகைவரின் தருக்கினை அறுத்தெறியும் போக்கும் கருவி எனச் சொல்லப்படுகிறது. அதைவிடக் கூர்மையான கருவி வேறொன்றும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
நல்ல வழியில் பொருளைத் தேடித் தொகுத்து வைத்துக் கொள்; அப்பொழுதுதான் பகைவரும் செறுக்கடங்கி நடப்பர். பகைவர் செருக்கை அறுக்கும் கூரியவாள் பொருட் பெருக்கத்தினும் வேறில்லை என்பதால் 'செய்க பொருளை' என்று ஆணையும் இடுகிறார் வள்ளுவர்.
இப்பாடல் படை வலிமையோடு பொருள் வலிமையை ஒப்பிட்டு ஆராய்ந்து படை வலிமை கூடப் பொருள் வலிமையிடம் தோற்றுப் போகும் என்பதை உணர்த்துகிறது. பொருள் என்றது விளைபொருளும்-பணம் காசாகிய பொன்முதற்பொருளும் ஆகிய எல்லாச் செல்வத்தையும் குறிக்கும் பொதுச் சொல்லாம். இக்கட்டளைக்குப் பின்னும் அதுவரை சோம்பிக் கிடந்தவனும் மனம் கிளர்ச்சி பெற்று, பொறுப்புணர்ந்து, மெய்சிலிர்த்து உழைக்கப் புறப்படாமலா இருப்பான்? பொருளில்லாத வரையிலும் எள்ளி நகையாடிய பகைவர்கள், பொருள்வலி சேர்ந்து விட்டதை அறிந்து, தம் செருக்கை ஒழித்து, மதிப்புக் காட்டத் தொடங்குவர். இது உலக இயல்பு. பகைவரது செருக்கை அறுத்து எறிவதால் மிகக் கூர்மையான கருவிகளை விட வலிமை மிக்கது ஒருவன் ஈட்டிய செல்வம் எனப்பட்டது.

செல்வப் பெருக்கைக் கண்டு மதித்தல் ஒரு நாட்டுக்கும் மிகவும் ​பொருந்தும் தன்​மை ​கொண்ட இயல்பாகும். ஒரு நாடு இன்னொரு நாட்டை அதன் செல்வ அளவை வைத்தே மதிக்கிறது. பிற நாட்டு அரசியல் தொடர்பில் நட்பும் உண்டும் பகையும் உண்டு. அமைதி வேண்டும் என்று நாம் நினைத்தாலும் செறுக்குக் கொண்ட பகைவர் நம்மை எந்த நேரமாமும் தாக்க அணியமாகத்தான் இருப்பர். பகைவர் அவரது வலிமையைப்பற்றிய ஆணவம் கொண்டிருப்பர். எனவே நம் படை வெற்றி பெறும் மாண்புடையதாக எப்பொழுதும் இருக்கவேண்டும். இனி, நம்மிடம் நட்புக் கொண்டிராதவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று நாம் எண்ணும்போதும், பகைவரும் நம்முடைய உதவியை நாட வேண்டும் என்று நினைக்கும்போதும் பொருள் நம் கையில் நிறைய இருக்க வேண்டும். நம் பொருளாதார நிலையை மிக உயர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். நம்முடைய பொருளின் ஆற்றல் கண்டு பகை பணியும்; நட்புக்கரம் நீட்டும்; போர் ஒடுங்கும். பகைவரின் தருக்குத் தானே அடங்கும். அவர்கள் எதிர்க்கவும் முன்வர மாட்டார்கள். இதனால்தான், பகைவருடைய செருக்கை அறுக்கும் கூர்மையான கருவி செல்வம் என்று சொல்லி. விரைந்து பொருள் தேட நம்மைத் தூண்டுகிறார் வள்ளுவர். 'செருக்கறுக்கும்' என்றது பொருள் நம்மிடத்தில் கூடக்கூட, எதிரியின் இறுமாப்பு அதற்குத்தக குறைந்துகொண்டே வரும் என்பதை உணர்த்துதற்கு.

'பொருள் நிலையில்லாதது, அதைத் தீண்டவேண்டாம்' என வறட்டுத்தனமான அறிவுரை பகர்ந்து மயக்கம் கொள்ளச் செய்யாமல், பொருளின் வலியறிந்து 'செய்க பொருளை' எனத் திண்ணமாகக் கூறியதால் இத்தொடர் சிறப்புப் பெற்றது.

'எஃகு' என்ற சொல்லின் பொருள் என்ன?

'எஃகு' என்றதற்குக் கருவி, ஆயுதம், படைக்கலம், வாள், அரமாகிய கருவி, கொஞ்சமாகிப் போடும் ஆயுதம், தகுந்த ஆயுதம், படைக்கருவி, ஆயுதவகை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எஃகு என்பது ஆயுதப் பொதுப் பெயர். எஃகு என்பது இரும்பை உருக்கிச் உருவாக்கப்படுவது. இதன் கூர் கொடுமையானது; வெகுகாலம் நிலைத்திருப்பது. இதன் உதவியால் அறுக்கப்படுவது பகைவரது செருக்கு. அதாவது எஃகினைக் காட்டிலும் கூரியது செல்வம் எனச் சொல்கிறது குறள். ஈட்டி எட்டியமட்டும் பாயும்; பணம் பாதாளமட்டும் பாயும் என்பது பழமொழி. எஃகுக்கும் பொருளுக்கும் வேற்றுமை தோன்ற செல்வத்தைச் செருக்கறுக்கும் கருவியாக உருவகிக்கப்பட்டது. பகைவரது தருக்காகிய அருவப் பொருளை அதாவது உருவமில்லாததை அறுக்க வல்லது செல்வம் என்ற ஆயுதம் எனச் சொல்லப்பட்டது.

'எஃகு' என்ற சொல் இங்கு கருவி என்ற பொருள் தரும்.

பொருளை உண்டாக்குக; பகைவருடைய இறுமாப்பைப் போக்கும் அது போலக் கூர்மையுடைய கருவி வேறொன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நம் கையில் பொருள் இருந்தால் அது பகைவருக்கெதிரான கூரிய வாள் போல என்பதால் பொருள்செயல்வகை அறிந்து பெரும்பொருள் ஈட்டுக.

பொழிப்பு

பொருள் ஈட்டுக; பகைவரின் செருக்கை அறுக்கும் கருவி அதுபோல் கூர்மையானது வேறில்லை.