இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0757அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால், உண்டு

(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:757)

பொழிப்பு (மு வரதராசன்): அன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள் என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

மணக்குடவர் உரை: அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி, பொருளென்று சொல்லப்படும் செல்வத்தை யுடைய செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம்.
இது பொருளுடையார்க்கே அறஞ்செய்தலாவதென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: அன்பு ஈன் அருள் என்னும் குழவி - அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும்.
(தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்மேற் செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் செல்வச் செவிலி என்றும் கூறினார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அன்பாகிய தாய் பெற்ற அருள் என்னும் குழந்தை, பொருட் செல்வமாகிய செவிலித் தாயால் வளரும். (அருட்செய்கைகள் செய்வதற்கும் பணம் வேண்டும் என்பது உணர்த்தியவாறு.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பீன் அருளென்னும் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு.

பதவுரை: அருள்-அருள்; என்னும்-என்கின்ற; அன்பு-அன்பு; ஈன்-உண்டாக்கப்பட்ட; குழவி-குழந்தை; பொருள்-(உயர்த்திச் சொல்லப்படும்) பொருள்; என்னும்-என்கின்ற; செல்வ-செல்வமாகிய; செவிலியால்-வளர்ப்புத் தாயால்; உண்டு-உளது.


அருளென்னும் அன்பீன் குழவி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி; .
பரிப்பெருமாள்: அறம் செய்தற்குக் காரணமாகிய அன்பினின்றும் தோற்றின அருளாகிய குழவி; .
பரிதி: அன்பு என்னும் கற்பினாள் பெற்ற அருள் என்னும் குழவியை;
காலிங்கர்: இவ்வருள் என்று சான்றோரால் சொல்லப்படுகின்ற அனைத்து உயிர்க்கும் ஒத்தது ஓர் அன்பு ஈன்குழவியானது; [ஈன் குழவி - பெற்ற குழவி]
பரிமேலழகர்: அன்பினால் ஈனப்பட்ட அருள் என்னும் குழவி;

'அன்பினின்றும் தோன்றிய அருளாகிய குழவி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்புத் தாய் பெற்ற அருட்குழந்தை', 'அன்பு என்னும் தாய் ஈன்றெடுத்த அருள் என்னும் குழந்தை', 'அன்பிலிருந்து பிறக்கின்ற 'அருள்' என்னும் சிசு', ''அருள்' என்று சொல்லப்படும் 'அன்பு' பெற்றெடுத்த குழந்தை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அன்பு பெற்றெடுக்கும் அருள் என்னும் குழந்தை என்பது இப்பகுதியின் பொருள்.

பொருளென்னும்செல்வச் செவிலியால், உண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளென்று சொல்லப்படும் செல்வத்தை யுடைய செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளுடையார்க்கே அறஞ்செய்தலாவதென்பது கூறிற்று.
பரிப்பெருமாள்: பொருளென்று சொல்லப்படும் பொருளாகிய நல்ல செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் பொருள் உடையாற்கு அறம் எளிது என்றார்; இது பெறுமாறு என்னை என்றார்க்கு அன்பும் அருளும் இயல்பாக உடையர் ஆயினும் பொருளிலர் ஆயின் அவற்றால் பயன் இல்லையாம்; ஆதலால் பொருளுடையார்க்கே அறஞ்செய்யலாவது என்று கூறப்பட்டது.
பரிதி: பொருள் என்னும் செவிலித்தாய் வளர்க்க வேண்டும் என்றவாறு.
காலிங்கர்: பின்பு பொருளென்று சொல்லப்படுகின்ற செல்வம் யாது; மற்று அந்தச் செவிலித் தாயால் உளதாம் என்றவாறு.
பரிமேலழகர்: பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும் செல்வத்தையுடைய செவிலியான் வளரும்.
பரிமேலழகர் குறிப்புரை: தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின், அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்மேற் செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின் பொருளை அதற்குச் 'செவிலி' என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி வளர்த்தலிற் செல்வச் செவிலி என்றும் கூறினார். [செவிலி- வளர்க்குந்தாய்]

'பொருளென்று சொல்லப்படும் செல்வத்தை யுடைய செவிலித்தாய் வளர்த்தலாலே உண்டாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செல்வத் தாதியால் வளரும்', 'பொருள் என்னும் செல்வத்தை உடைய செவிலித்தாயால் வளரும்', 'செல்வம் என்ற சக்தியுள்ள செவிலித் தாயால் வளர்ந்து வாழும்', 'பொருள் என்று சொல்லப்படும் செல்வமாக வளர்க்கும் வளர்ப்புத் தாயால் வளரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொருள் என்னும் செல்வமாகிய செவிலித் தாயால் வளரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பு பெற்றெடுக்கும் அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செல்வச் செவிலியால் வளரும் என்பது பாடலின் பொருள்.
'செல்வச் செவிலியால், உண்டு' குறிப்பது என்ன?

அருள் நிலைத்து இருத்தற்கும் பொருள் வேண்டும்.

அன்பால் பெற்றெடுக்கப்பட்ட அருள் என்னும் குழந்தை செல்வமாகிய செவிலித்தாயால் வளரும்.
நாட்டிலோ வீட்டிலோ அருள் வளரச் செல்வத்தின் துணை எப்பொழுதும் வேண்டும். இவ்வதிகாரத்து முற்குறள் ஒன்றில் அருளொடும் அன்பொடும் பொருள் ஈட்டப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. இங்கு அருளை வளர்ப்பதற்கு அப்பொருளைச் சேர்த்தல் வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்றும் பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை எனவும் முன்பு சொல்லப்பட்டது. இவ்வுலகத்தை ஆள்வது செல்வப் பொருள். பொருள் இல்லாதார் இவ்வுலக வாழ்க்கையை இழந்தார் ஆவர் என்பது யாவரும் உணர்ந்த உண்மை.
அவ்வுலகம் என்பது எங்கோ இருப்பதல்ல. அருள் நெஞ்சம் கொண்டவர்கள் உலகமே அது. அது இங்கேயே இருக்கிறது. உலக முழுவதையும் தன் குடும்பமாக அணைக்கும் உலகம் அது. ஓர் அரசு அதன் குடிகளை அறவழியால் அருள் செலுத்தி ஆளுதல் வேண்டும். அப்பொழுதுதான் அந்நாட்டில் அருளாளர்கள் பெருகி அவ்வுலகைப் பேணுவர். அங்கு அவர்கள் பசியையும் அறியாமையயும் நீக்கப் பாடுபடுவார்கள். அந்த அருள் உலகத்தைப் நிலைத்திருக்கச் செய்ய அரசும் அருளாளர்களும் என்ன செய்யவேண்டும்? அரசோ அருள் நெஞ்சம் கொண்டவர்களோ வெறுங்கையோடு இருந்தால் பயன் ஒன்றும் இல்லை. அவ்வுலகக் குழந்தையை உருவாக்க செவிலித்தாய் தேவை. அந்தச் செவிலித்தாய் செல்வ வடிவில் இருப்பாள். அவள் இருந்தால்தான் அருளுலகம் என்னும் குழந்தை பிழைத்திருக்கும். எனவே, அருளைப் பயனுறுவகையில் தோற்றச் செய்ய வேண்டுமென்றால் செல்வத்தை மிகச் சேர்க்கவேண்டும்.

அருள் என்பது எல்லா உயிர்களிடத்துத் தோன்றக்கூடிய இரக்க குணம்; தொடர்புடையார் கண் தோன்றிய அன்பு முதிர்ந்து தொடர்பிலாரிடத்து அருளாக மலரும். ஆதலால், அன்பிலிருந்து பிறந்த குழந்தை என்றும், இந்த அருட்குணம் தொடர்ந்து நிலைநிற்கப் பொருள் இன்றியமையாததாக இருப்பதால் பொருளைச் 'செல்வச் செவிலி' என்றும் கூறினார்.
பசியால் வருந்துபவனைக் காணும்போது உள்ளன்பினால் அருள் உண்டாகிறது. அருள் நெஞ்சம் பதறும்போது அவனுக்கு உதவ வேண்டும் என்ற கிளர்ச்சி உண்டாகும். வெறுமனே பசித்தவனிடத்துச் செல்வதாகிய உளநெகிழ்ச்சி அவனது பசிநோயைத் தீர்க்காது. பசித்தவனுக்கு உணவு அளிக்க வேண்டும். அங்ஙனம் உதவுவதற்குப் பொருள் தேவை. ஆகவே, அருட்பண்பை வளர்ப்பது பொருள்தான் என்பதாவதால் அதனைச் ‘செவிலி’ என்றார் வள்ளுவர். செல்வம் இன்றேல் எங்கும் அருள் வளராது. அரசானாலும், அருளுள்ளம் கொண்டோரானாலும், பொருள் ஈட்டுவதால் மட்டுமே, அவர்களின் அன்பில் பிறக்கும் அருளால் பிறர்க்கு நன்மை செய்து உதவ இயலும்.

'செல்வச் செவிலியால், உண்டு' குறிப்பது என்ன?

'செல்வச் செவிலி' என்றதற்குச் செல்வத்தை யுடைய செவிலித்தாய், பொருளாகிய நல்ல செவிலித்தாய், செவிலித்தாய், செல்வம் யாது மற்று அந்தச் செவிலித் தாய், செல்வத்தையுடைய செவிலி, செல்வமுள்ள செவிலித் தாய், செல்வமாம் செவிலி, செல்வத் தாதி, செல்வத்தை உடைய செவிலித்தாய், செல்வம் என்ற சக்தியுள்ள செவிலித் தாய், வளமான செவிலித் தாய், செல்வமாகிய செவிலித் தாய், செல்வமாக வளர்க்கும் வளர்ப்புத் தாய் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

செல்வச் செவிலி என்பது செல்வமாகிய செவிலித்தாய் எனப் பொருள்படும். செவிலி என்ற சொல் வளர்க்குந்தாய் குறித்தது. செல்வர் இல்லங்களில் குழந்தைகளைப் பேணி வளர்க்கச் செவிலியர் அமர்த்தப்படுவர். செவிலியர் ஊதியம் எதிர்பார்த்து முழுநேரமும் வளர்ப்புத்தொழில் புரிவர். அவர்கள் ஆழ்ந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டு குழந்தை நலனைக் காப்பவர்கள்.
அருளைக் குழந்தையாகவும், அன்பு அதைப்பெற்ற நற்றாயாகவும், பொருள் அதனது வளர்ப்புத்தாயாகவும், இங்கே அடையாளப்படுத்தப் படுகின்றன. அருள் ஊட்டம் பெருவதற்குச் செல்வம் இன்றியமையாதது. செல்வம் இன்றிப் பிறர் நலம் பேணல் என்னும் அருளறம் வளர்ச்சியடைய முடியாது; எனவே செல்வமாகிய செவிலி எனச் சொல்லப்பட்டது. அன்பால் பெறப்பட்ட அருளாகிய குழந்தை செல்வச் செழிப்பு இருந்தால் நன்கு வளரும் அதாவது பொருள்வழி வெளிப்படும் அருளே நன்மை பயப்பதாக இருக்கும். எனவே 'செய்க பொருளை' எனச் சொல்லப்படுகிறது.

தேவநேயப்பாவாணர் 'பாலூட்டப் பெறாத குழந்தை பிழைக்காதது போல, பொருளால் வெளிப்படாத அருளும் வலியுடைத்தாகாது ஆதலின் செல்வச் செவிலியால் வளரும் என்னாது 'ஏதோ இருக்கும்' என்ற பொருளில் 'உண்டு' என்றும் கூறினார்' என இக்குறளில் உள்ள 'உண்டு' என்ற சொல்லாட்சியை விளக்குவார்.
செல்வமாகிய செவிலி இருந்தால்தான் அருள் 'உண்டு' என்கிறது பாடல். செல்வம் இல்லையென்றால் அருள் என்பது அங்கு 'இல்லை' அதாவது மறைந்து விடும் என்பது குறிப்பு.

அன்பு பெற்றெடுக்கும் அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செல்வமாகிய செவிலித் தாயால் வளரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அருளாட்சி ஓங்க வேண்டுமானால் பொருள்செயல்வகை பெரிதாக வேண்டப்படும்.

பொழிப்பு

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் செல்வமாகிய செவிலித்தாயால் வளரும்