இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0751



பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்

(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:751)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

மணக்குடவர் உரை: ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை.
இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது.

பரிமேலழகர் உரை: பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை.
(மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார், இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் - அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற்சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒரு பொருளாக மதிக்கப்படாத வரையும் மதிப்புடையராகச் செய்யவல்ல செல்வத்தைப் போன்ற வேறு பொருள் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது பொருள் இல்லை.

பதவுரை: பொருள்அல்லவரை--மதிக்கப்படாதவரை, ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி இல்லாதாரை, குணத்தால் இழிந்தவர் போன்றோரை; பொருள்-மதிப்பு; ஆக-ஆகும்படி; செய்யும்-செய்யும்; பொருள்-செல்வம்; அல்லது-அல்லாமல்; இல்லை-இல்லை; பொருள்-பொருள்.


பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது;
பரிப்பெருமாள்: ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுகின்ற பொருளையல்லது;
பரிதி: ஒரு பொருளும் அற்றாரை அநேகம் பொருளாகச் செய்யவல்லது பொருளல்லது;
காலிங்கர்: சத்துருக்களையும் மித்திருக்களையும் தமக்கு உறுதிபண்ணிக் கொடுக்கும் பொருளானது இது அன்றி;
பரிமேலழகர்: ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய;
பரிமேலழகர் குறிப்புரை: மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார், இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் - அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற்சென்று நிற்கப் பண்ணுதல்.

'ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மதிப்பு இல்லாதவரையும் மதிப்பு உடையராகச் செய்யும் செல்வமே', 'மதிக்கப்படாதவரை மதிக்கச் செய்யவல்ல பொருளைத் தவிர', 'மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கச் செய்கிற செல்வத்தைவிட', 'ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிக்கச் செய்ய வல்ல பொருளையொழிய' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிப்பு உடையராகச் செய்யவல்ல செல்வத்தைத் தவிர என்பது இப்பகுதியின் பொருள்.

இல்லை பொருள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது.
பரிப்பெருமாள்: வேறு பொருள் என்று சொல்லலாவது இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் இன்பம் எளிதாக வரும் என்றார்; அஃது எளிதாக வரும் ஆறு என்னை; வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; ஆதலின், நன்னெறி உற்றார்க்குப் பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பர் என்று கூறப்பட்டது.
பரிதி: வேறு பொருள் இல்லை என்றவாறு.
காலிங்கர்: பொருளாக மதிக்கலாவது ஒன்றும் இல்லை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இனி அவ்வாறு அன்றிக் குலத்தில் இழிவாகியாரையும் உறுதி இல்லாதாரையும் யாவரும் மதிக்கப் பண்ணும் என்று உரைப்பினும் ஆம்.
பரிமேலழகர்: ஒருவனுக்குப் பொருளாவதில்லை.
பரிமேலழகர் குறிப்புரை: அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.

'வேறு பொருள் என்று சொல்லலாவது இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்த செல்வம்', 'ஒருவனுக்குப் பொருளாவது வேறில்லை', 'மக்கள் தேட உடைமை வேறொன்றும் இல்லை', 'வேறு பொருளில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வேறு பொருள் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருளல்லவரையும் மதிப்பு உடையராகச் செய்யவல்ல செல்வத்தைத் தவிர வேறு பொருள் இல்லை என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்படும் 'பொருளல்லவர்' யார்?

மதிக்கப்பட வேண்டுமா? பொருள் செய்!

ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகாதவரையும், மதிக்கும்படியாகச் செய்யக் கூடிய பொருள் செல்வம் அல்லாமல் வேறு இல்லை.
மனித உறவுகளில் மதிப்பு என ஒன்று உள்ளது. அந்த மதிப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக மாறுபாட்டு விளங்கும். ஒருவர் சேர்த்து வைத்துள்ள செல்வமே இம்மதிப்பீட்டுக்குப் பெரிதும் அளவுகோலாக அமைகிறது. அந்த மதிப்பீட்டின் அளவிலே ஒருவருக்கொருவர் ஊடாடுவது போன்றவை நடக்கிறது. ஒருவரது பொருள் எவ்வளவு இருக்கின்றதோ அந்த அளவு மதிப்பு இருக்கும். கூடிய செல்வம் உள்ளவர் மிகையாக மதிக்கப்படுவர்; பொருள் குறைந்தவர் குறைவாக மதிக்கப்படுவர்.
பொருள் செல்வம் தவிர்த்து வேறு எச்செல்வத்தைப் பெற்றிருந்தாலும் இவ்வுலகம் அவரை ஒரு பொருட்டாக மதிக்காது; குணம், கல்வி போன்றவற்றின் வழியில் உண்டாகும் மதிப்புப் பின்னுக்குத் தள்ளப்படும். மதிப்பீட்டை நிரப்புதற்கு பொருள் போன்ற வன்மையானது வேறொன்றும் இல்லை என்று சொல்லும் இக்குறளின் நோக்கம் பொருளின் இன்றியமையாமையையும் பயனையும் காட்டி யாவரையும் இடையறாது ஈட்டத் தூண்டுவதே.
ஒரு நாடும் பொருளாக்கத்தில் சிறந்திருந்தால்தான் உலக அரங்கில் நன்மதிப்புப் பெற இயலும்; அந்நாட்டுமக்களும் மதிப்புடன் உலாவருவர்.

'இவனெல்லாம் ஒரு ஆள் என்று பேசிக்கொண்டிருக்கிறாயே' என்று வழக்கில் உள்ள வகையிலேயே 'பொருளல்லவர்' என்ற தொடர் ஆளப்பட்டுள்ளது. இதற்கு மதிக்கத் தகுதியில்லாதவர் என்று பொருள். ஆனால் இத்தகையவரிடம் பொருள் குவிந்துவிட்டால் அவரது மதிப்பு கூடி விடுகிறது. அவர் 'பொருளாகி' விடுகிறார். நற்குணம் கொண்டோரும் அவர்பாற் சென்று நிற்பர். இது உலகியல்.

ஒரே சொல் திரும்பத் திரும்ப பாடலில் வரும்படியாக அமைந்த இக்குறளில் ஒருவகை ஒலிநயம் தோன்றுகிறது. இத்தகைய ஒலிநயத்தைப் பல குறட்பாக்களில் வள்ளுவர் கையாண்டுள்ளார்.
பொருட்செல்வத்தின் இன்றியமையாமையை மறுபடி மறுபடி வலியுறுத்துவது போன்ற மொழிநடையில் அமைந்தது இப்பாடல்.
பல பொருள் ஒரு சொல்லை ஒரு கவிதையில் கையாள்வது 'சொல் விளையாட்டு' என்ற மற்றொரு இலக்கிய உத்தியாகும். பொருள் என்ற சொல் செல்வம், மதிப்பு, புகழ், அறம், அர்த்தம், வஸ்து, மெய்ப்பொருள் என்ற பல பொருளை உடையது. இக்குறள் ஒன்றிலேயே மதிப்பு, செல்வம், உறுதிப் பொருள் என்ற மூன்று பொருள்களும் வந்துள்ளன. இப்பாடலிலுள்ள முதல் இரண்டு 'பொருள்' மதிப்பு, மூன்றாவது 'செல்வம்' நாலாவது 'உறுதிப் பொருள்' (செ வை சண்முகம்).

இங்கு சொல்லப்படும் 'பொருளல்லவர்' யார்?

'பொருளல்லவர்' என்றதற்கு ஒரு பொருளாக மதிக்கப்படாதார், ஒரு பொருளும் அற்றார், குலத்தில் இழிவாகியார், உறுதி இல்லாதார், அறிவிலாதார், இழி குலத்தார், ஒரு பொருளாக மதிக்கத் தகாதவர், ஒரு பிரயோசனமாக எண்ணப்படாதவர், பொருள் போலக் கருதிப் பேணத்தக்க தகுதி பல இல்லாதார், மதிப்பு இல்லாதவர், மதிக்கப்படாதவர், மதிக்கத் தகாதவர், ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவர், மதிக்கப்படாதார்; அறிவில்லார் குணத்தால் இழிந்தவர் நோயாளர் தொண்டுகிழவர் பகைவர் இன்னோரன்னர், மதிக்கப்படாதார்; கல்லாதார், இழிதொழிலார், உறுப்பறையர், ஒழுக்கம் இலாதார், நோயர் இளஞ்சிறார் போல்வார், பொருட்படுத்தும் அளவுக்கு (வேறு) ஒன்றும் இல்லாதவர், ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி இல்லாதார், அறிவானும் குணத்தானும், தகுதியானும் மதிக்கப்படாதார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பொருளல்லவர் என்ற சொல் ஒரு பொருளாக மதிக்கப்படாமல் இகழப்படுவர் என்ற பொருள் தருவது.
பொதுவாக, உலகில் செல்வம் இல்லா வறியவர், ஒழுக்கம் நேர்மை இல்லா குணக்கேடானவர்கள், வேலை/தொழில் செய்யாமல் சோம்பலுற்றுப் பொறுப்பற்றுத் திரிபவர்கள் போன்றோர் மதிக்கத்தாகாதவர்களாகக் கருதப்படுவர்.

ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் மதிப்பு உடையராகச் செய்யவல்ல செல்வத்தைத் தவிர வேறு பொருள் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மதிப்பு இல்லாரையும், மதிப்பு உள்ளவராகச் செய்வது பொருள்செயல்வகையே.

பொழிப்பு

மதிப்பு இல்லாதவரையும் மதிப்பு உடையராகச் செய்யும் செல்வத்தைத் தவிர ஒருவனுக்கு உடைமையாவது வேறில்லை.