இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0760ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு

(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:760)

பொழிப்பு (மு வரதராசன்): சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒருசேரக் கை கூடும் எளிய பொருளாகும்.

மணக்குடவர் உரை: ஒள்ளிய பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு ஒழிந்த அறமும் காமமுமாகிய பொருளிரண்டும் ஒருங்கே எளியபொருளாக வெய்தலாம்.

பரிமேலழகர் உரை: ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப் படைத்தாரக்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள் - மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம்.
(காழ்த்தல்: முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின், 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார் 'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: நன்னெறியான் வரும் பொருளை மிகுதியாக உண்டுபண்ணினவர்க்கு, மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு, ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள்.

பதவுரை: ஒண்பொருள்--நெறியால் வருகின்ற பொருள், நல்வழியில் தொகுத்த சிறந்த பொருள், ஒள்ளிய பொருள்; காழ்ப்ப-மிகுதியாக, முதிர, மிகுந்த அளவிலே; இயற்றியார்க்கு-படைத்தார்க்கு; எண்-எளிய; பொருள்-பொருள்; ஏனை-மற்ற; இரண்டும்-இரண்டும்; ஒருங்கு-ஒருசேர.


ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒள்ளிய பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு; [முற்ற-முழுவதும்]
பரிப்பெருமாள்: ஒள்ளிய பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு;
பரிதி: நீதியினால் தேடும் பொருளினால்;
காலிங்கர்: முறையின் வருவதாகிய பொருளினை முதிர ஈட்டினவர்க்கு; [முதிர-முற்ற]
பரிமேலழகர்: நெறியான் வரும் பொருளை இறப்ப மிகப் படைத்தாரக்கு; [இறப்ப மிக - நிரம்ப மிகுதியாக (ஒருபொருட் பன்மொழி)]
பரிமேலழகர் குறிப்புரை: காழ்த்தல்: முதிர்தல்.

'ஒள்ளிய பொருளை/ நீதியினால் தேடும் பொருளை/ முறையின் வருவதாகிய பொருளினை/ நெறியான் வரும் பொருளை முற்ற உண்டாக்கினார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்த பொருளைத் திரளாக ஈட்டியவர்க்கு', 'நல்ல செல்வத்தை மிகுதியாக உண்டாக்கியவர்க்கு', '(அருளொடும் அன்பொடும் வருவதாகிய) நல்ல வழியில் சம்பாதிக்கப்பட்ட செல்வம் நிரம்ப உள்ளவர்களுக்கு', 'நன்னெறியால் வந்த பொருளை மிகவும் அதிகமாக ஈட்டியவர்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முறையாகப் பொருளினை முற்ற ஈட்டியவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழிந்த அறமும் காமமுமாகிய பொருளிரண்டும் ஒருங்கே எளியபொருளாக வெய்தலாம். [ஒழிந்த-ஏனைய]
பரிப்பெருமாள்: ஒழிந்த அவ்வறமும் காமமுமாகிய பொருளிரண்டும் எளியபொருளாக வெய்தலாகும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் சில பொருள் உடையார்க்குப் பொருள் எய்துதல் வருந்தாமை வரும் என்றார்; அஃது அறமும் இன்பமும் வந்தால் எய்தலாமென்று கூறிற்று.
பரிதி: அறமும் இன்பமும் உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: முன்பு கூறிய அறமும் இன்பமும் என்று சொல்லப்பட்ட ஏனைய இரண்டும் ஒரு தன்மைப்பட எய்தும் என்றவாறு.
பரிமேலழகர்: மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே எளிய பொருள்களாம்.
பரிமேலழகர் குறிப்புரை: பயன் கொடுத்தல்லது போகாமையின், 'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன் விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார் 'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் அதனான் வரும் பயன் கூறப்பட்டது.

'ஒழிந்த அறமும் காமமுமாகிய பொருளிரண்டும் ஒருங்கே எளியபொருளாக வெய்தலாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறமும் இன்பமும் எளிதிற் கிடைக்கும்', 'அறம், இன்பம் என்னும் மற்றைய இரண்டும் ஒருங்கே எளிய பொருள்களாம்', '(அறம், பொருள், இன்பம் என்று சொல்லப்பட்ட வாழ்க்கை லட்சியங்களுக்குள் பொருள் கிடைத்துவிட்டதால்) மற்ற இரண்டு லட்சியங்களாகிய அறமும் இன்பமும் ஏக காலத்தில் எளிதில் கைகூடும்', 'மற்ற அறனும் இன்பமும், ஒருங்கே எளிதிற் கிட்டும் பொருள்களாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மற்றைய அறம், இன்பம் என்னும் இரண்டும் ஒருங்கே எளிய பொருள்களாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முறையாகப் பொருளினை காழ்ப்ப ஈட்டியவர்க்கு மற்றைய அறம், இன்பம் என்னும் இரண்டும் ஒருங்கே எளிய பொருள்களாம் என்பது பாடலின் பொருள்.
'காழ்ப்ப' என்பதன் பொருள் என்ன?

பணம் இருந்தால் எதுவும் எளிதில் கிட்டும்.

நல்ல வழியில் வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு மற்றை அறன், இன்பம் ஆகிய இரண்டும் எளிதில் பெறக்கூடியன ஆகும்.
நன்னெறியில் அதாவது முறையில் வருவதாகிய பொருள் ஒளியுடைமை பெறுகிறது; பொய்யா விளக்கமாகிறது. அன்போடும் அறிவோடும் சிறந்த வழியில் தீதின்றி இயற்றப் பெற்ற பொருள் அது. சிறப்பைத் தரும் பொருள் ஆதலால் அது ஒண்பொருள் என்றாகிறது. மிகுந்த பொருளை நல்ல முறையில் ஈட்டுக; பொருள் மிகுதியாக இருந்தால் அறன் விரும்பியவாறு நன்றாகச் செய்யலாம்; இன்பமும் எளிதாகத் துய்க்கலாம்.
எண்பொருள் என்றதற்கு எளிய பொருள், எண்ணப்பட்ட பொருள், எண்ணப்படும் பொருள், எண்ணத்தக்க பொருள் என்றவாறு பொருள் கூறினர். எளிய பொருள் எனப் பொருள் கொண்டவர்கள் மற்றை அறமும் இன்பமும் 'எளிய பொருள்களாம்' என்றனர். எண்ணப்பட்ட பொருள்கள் எனப் பொருள் கண்டவர்கள் 'முன் அறம் பொருள் இன்பம் என உடன் 'எண்ணப்பட்ட' மூன்றனுள் அறனும் இன்பமும் ஒருங்கே பெறப்படும் என்று விளக்கினர். 'பெருத்த செல்வம் படைத்தவரே அறத்தையும் இன்பத்தையும் பற்றி எண்ணுவதில் பயனுண்டு. அவர்கள் எண்ணுவாராயின் எளிதில் முடிவன என்ற கருத்தெல்லாம் அமைய அத்தொடரை அமைத்தார்' எனவும் உரை கூறினர். இவற்றுள் எண்பொருள் என்பதற்கு 'எளிய பொருள்' அதாவது எளிதில் அடையக்கூடிய பொருள் என்பதே சிறந்து காணப்படுகிறது.

இவ்வதிகாரத்து முந்தைய குறளான அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதின்றி வந்த பொருள் (754 பொருள்: செய்திறன் அறிந்து, குற்றமின்றி, வந்த பொருளானது அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்) என்றதன் கருத்தும் இக்குறட்கருத்தும் வேற்றுமையின்றிக் காணப்படுகிறதே எனச் சிலர் கருதலாம்.
'பரிமேலழகர் இதனால் பொருளின் பயனும் அதனால் பொருள் ஈட்டும் நெறியும் கூறியவாறு என உரைத்தமையால் பொருள் செய்தற்கண் மேற்கொள்ளவேண்டியதை அந்தக்குறளும் எஞ்ஞான்றும் அழியாது நிலைத்திருக்கு மளவு இயற்றினார் எய்தும் பயனை இந்தக்குறளும் கூறின என்னலாம்' என்று இவ்விரண்டு பாக்களும் வெவ்வேறு நோக்கங்கள் கொண்டன என்பதாக ஒரு விளக்கம் கூறுகிறது.
அக்குறளில் சொல்லப்பட்ட இன்பம் எல்லாவகையான இன்பத்தையும் குறித்தது. 'ஏனை இரண்டும்' என விதந்து கூறப்படுவதால் இக்குறளில் சொல்லப்படுவது காதலின்பம் அதாவது இல்லறவாழ்வின் இன்பம் எனக் கொள்ளலாம். குறளில் மூன்றாவது பால் காதலின்பம் மட்டுமே கூறுவது. பொருள் பெற்றவர்களுக்கே அறவாழ்க்கையும் எளிது, காதலாகிய இன்ப வாழ்க்கையும் எளிது என்பது இங்கு சொல்லப்படுவது என விளக்கலாம்.

'காழ்ப்ப' என்பதன் பொருள் என்ன?

'காழ்ப்ப' என்றதற்கு முற்ற, முதிர, இறப்பமிக, மிகுதியாக, மிக அதிகமாக, மிகவுந் தேடி, மிகக் கூடுதலாக, மிகுதியும் தேடி, திரளாக, நிரம்ப, மிகவும் அதிகமாக, செறிவாக என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காழ்ப்ப என்றதற்கு மிகுதியாக என்ற பொருள் பொருத்தம். நேர்மையான வழியில் மிகுதியான செல்வம் சேர்த்தவர்களில் பெரும்பான்மையர் அச்செல்வத்தை அறச் செயல்களுக்கே பயன்படுத்துகின்றனர். உலகப் பணக்காரர்களாகிய பில் கேட்ஸ் (Bill Gates), வாரென் பப்பே (Warren Buffett) போன்றோர் மிகுதியாகப் பொருள் குவித்துவிட்ட பின் அறக்கட்டளைகள் நிறுவி உலகமெங்கும் நற்செயல்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.
தண்டபாணி தேசிகர் ''அழக்கொண்ட எல்லாம் அழப்போம்' என்றவாறன்றி அறவழியில் அள்ளி வீசினும் குலமுறைதோறும் அழியாது நின்று பயன்படுதலைக் கருதி ஆசிரியர் 'காழ்ப்ப' என்றனர். காழ்-வயிரம், உறுதி; காழ்ப்ப உறுதிகொள்ள, என்ற உரைகளே 'நிரம்ப' 'மிக' என்பனவற்றைவிடச் சிறந்தது என்க என காழ்ப்பு என்ற சொல்லுக்கு வேறுபட்ட பொருள் ஒன்று தருகிறார்.

'காழ்ப்ப' என்ற சொல் மிகுதியாக என்ற பொருள் தரும்.

முறையாகப் பொருளினை முற்ற ஈட்டியவர்க்கு மற்றைய அறம், இன்பம் என்னும் இரண்டும் ஒருங்கே எளிய பொருள்களாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொருள்செயல்வகை அறிந்து செல்வத்தை முற்றச் சேர்த்தவர் வாழ்வின் உறுதிப் பொருள்களை எளிதில் எய்தியவராவர்.

பொழிப்பு

நல்ல செல்வத்தை மிகுதியாகச் சேர்த்தவர்க்கு அறம், இன்பம் என்னும் மற்றைய இரண்டும் ஒருங்கே எளிதிற் கிடைக்கும் பொருள்களாம்.