அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்
(அதிகாரம்:பொருள் செயல் வகை
குறள் எண்:754)
பொழிப்பு (மு வரதராசன்): சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.
|
மணக்குடவர் உரை:
அறத்தையும் தரும்: இன்பத்தையும் தரும்: பொருள் வருந்திறமறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள்.
இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே: அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடிய பொருளாமாதலின் என்றது.
பரிமேலழகர் உரை:
திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்; அறன் ஈனும்
இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.
(செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல' என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.)
தமிழண்ணல் உரை:
தீய வழியில் தேடாது ஈட்டிய பொருட்செல்வம் அதை ஈட்டியவனுக்கு அறம் செய்வதற்குப் பயன்படுவதுடன் நன்கு துய்க்கப்படுமாதலின் இன்பத்தையும் கொடுக்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் அறன் ஈனும் இன்பமும் ஈனும்.
பதவுரை: அறன்ஈனும்-அறத்தையும் தரும்; இன்பமும்ஈனும்-மகிழ்ச்சியும் கொடுக்கும்; திறன்-செய்திறன்; அறிந்து-தெரிந்து; தீதுஇன்றி-தீமை இல்லாமல்; வந்த-நேர்ந்த; பொருள்-செல்வம்.
|
அறனீனும் இன்பமும் ஈனும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தையும் தரும்: இன்பத்தையும் தரும்:
பரிப்பெருமாள்: அறத்தையும் பயக்கும்: இன்பத்தையும் பயக்கும்:
பரிதியார்: தன்மமும் இன்பமும் கொடுக்கும்;
காலிங்கர்: அறத்தையும் தரும்; அறத்தினால் வழுவாத இன்பத்தையும் தரும்;
பரிமேலழகர்: அவனுக்கு அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.
'அறத்தையும் தரும்: இன்பத்தையும் தரும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறமும் தரும்; இன்பமும் தரும்', 'அறத்தையும் கொடுக்கும். இன்பத்தையும் கொடுக்கும்', 'தர்ம பலன்களை உண்டாக்கும்; இன்பங்களை அனுபவிக்கவும் உதவும்', 'அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அறத்தையும் கொடுக்கும். இன்பத்தையும் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
திறன்அறிந்து தீதின்றி வந்த பொருள் :
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள் வருந்திறமறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளால் கொள்ளும் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலும் அன்றே: அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடிய பொருளாமாதலின் என்றது.
பரிப்பெருமாள்: திறனறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: பொருளால் பயன் அறஞ்செய்தலும் இன்பம் நுகர்தலுமன்றே; அவ்விரண்டினையும் பயப்பது நியாயமாகத் தேடின பொருளாதலின் பொருள் தேடுங்கால் நியாயத்தோடு தேடவேண்டும் என்றது.
பரிதியார்: தன்மமும் இன்பமும் கொடுக்கும்;
காலிங்கர்: யாது எனின், நெறியினால் ஈட்டி வேறு ஒரு குற்றம் இன்றி வரலுற்ற பொருளானது என்றவாறு.
பரிமேலழகர்: செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்;
பரிமேலழகர் குறிப்புரை: செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி. 'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது. 'செங்கோல' என்று புகழப்படுதலானும், கடவுட்பூசை தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும், நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும' என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.
'பொருள் வருந்திறமறிந்து/திறனறிந்து பிறர்க்குத் தீமை பயத்தலின்றி வந்த பொருள்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
காலிங்கர் 'நெறியினால் ஈட்டி வேறு ஒரு குற்றம் இன்றி வரலுற்ற பொருளானது' என்றார். பரிமேலழகர் கூறுவது: 'செய்யும் திறத்தினை அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்'
இன்றைய ஆசிரியர்கள் 'நெறியோடு குற்றமின்றி ஈட்டிய பொருள்', 'ஈட்டும் வழி அறிந்து தீமையில்லாத வழியில் சேர்த்த பொருள்', 'குற்றமற்ற வழியில் சம்பாதிக்கப்பட்ட செல்வம் (அந்த குற்றமற்ற தன்மைக்குத் தக்கபடி)', 'ஈட்டும் திறத்தினை அறிந்து பிறர்க்குத் தீங்கு இல்லாமல் உண்டான பொருள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செய்திறன் அறிந்து, குற்றமின்றி, வந்த பொருளானது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
திறன்அறிந்து குற்றமின்றி வந்த பொருளானது அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'திறன்அறிந்து' என்ற தொடர் குறிப்பதென்ன?
|
நெறியுடன் பொருள் செய்க.
பொருள் தேடும் திறனை அறிந்து, தீய வழிகளால் அல்லாமல், வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் தரும்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; பொருள் நல்வாழ்வும் தரவல்லது. ஆனால் 'பொருளே உயிர்நிலை' என எண்ணி பொருள் சேர்த்தல் என்ற ஒரே நோக்குக் கொண்டு சிலர் பொருள் ஈட்ட முயல்கின்றனர். இத்தகையோர் பொருள் சேர்க்கும் வழிகள் அறத்திற்குத் தகுமா தகாதா என எண்ணுவதில்லை.
பொருள்செய்திறன் மூலமும் குற்றமற்ற, நேர்மையான வழியிலும் பிறர்க்கு தீமை ஏதும் நேராத வண்ணம் உண்டாக்கப்பட்ட செல்வமே ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் நல்கும் என்கிறார் வள்ளுவர்.
அறத்தைச் செய்யவும் இன்பத்தை நுகரவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. நெறியின் ஈட்டிய பொருளே அறத்தையும் இன்பத்தையும் கொடுக்குமாதலால் பொருளை அவ்வாற்றின் ஈட்டுக என்கிறது பாடல்.
ஒருவன் பெற்ற பொருளெல்லாம் அறமும் இன்பமும் தரா, அது செய்யும் திறம் அறிந்து தீமை இல்லாத வழிகளிலே தேடிச் சேர்த்த பொருளாக இருக்க வேண்டும்;
குறுக்கு வழிகளில் பொருள் தேட முயலக்கூடாது. பிறர்க்குத் தீங்கிழைத்தலாகிய திருட்டு, ஏமாற்று போன்ற செயல்களில் ஈடுபடாமல் முறையாகச் சேர்க்கப்பட்ட செல்வமே தீதின்று வந்த பொருள். தீதின்றிவந்த பொருளாயினும் திறனறிந்து தொகுக்கப் பெற்றிருக்கவேண்டும். ஈட்டவும் வேண்டும்; நெறி நேர்மையும் வேண்டும் என இணத்துக் கூறப்படுகிறது. அப்போதுதான் அறமும் இன்பமும் பெறுவான். எவ்வாற்றானும் வெற்றி கொள்க என்று குறள் சொல்வதில்லை; வழிமுறைகளும் தூயதாய் இருக்க வேண்டும் என்பதுவே வள்ளுவம். தீதுடன் வந்த பொருளை அறத்திற்கு பயன்படுத்தினால் தீமையானது செல்வம் உண்டாக்கியவன் மேலும் அறப்பயன் பொருளுடையார்மேலும் சாரும் என்பர். அதுபோல் கொலை போன்ற தீச்செயலால் சேர்த்த பொருளின் இன்பம் துய்க்கும் காலத்தும் பொருள்வந்த வழியையும் அதனால் உண்டான பழியையும் எண்ணி அவன் துயரே அடைவான்.
இதனால்தான் 'அறன் ஈனும்', 'இன்பமும் ஈனும்' என்றார்.
தீதின்றி வாராத பொருளைத் தொடவும் கூடாது; அதை வீசி எறிய வேண்டும் என்று பின்வரும் குறள் ஒன்று கூறும்.
மனிதன் அடைய வேண்டிய உறுதிப் பொருள்களாகக் கருதப்படுவன அறம், பொருள், இன்பம் ஆகியன. இம்மூன்று சொற்களும் இடம் பெற்றுள்ள இப்பாடல் பொருள் செய்யும்வகையும் பொருளின் பயனும் கூறுகிறது. இவற்றுள் பொருள் அதை உடையவர் மென்மேலும் செல்வராதற்கு உதவுவதுடன் அவர் அறம் செய்தற்கும் இன்பம் நுகர்தற்கும் கருவியுமாகிறது;
பொதுவாக இன்பம் என்பது துன்பத்துக்கு மறுதலையாயது என்ற பொருளையே தரும். மூன்றாவது உறுதிப்பொருளான இன்பம் என்ற சொல் குறளில் காமத்தைக் குறிப்பதாகவே உள்ளது. ஆனால் பெரும்பாலும் துன்பத்திற்கு மறுதலையான பொருளிலேயே பல இடங்களில் அச்சொல் குறளில் ஆட்சி பெற்றுள்ளது.
எனவே இப்பாடலில் கூறப்பட்டுள்ள இன்பம் காம இன்பத்தை மட்டும் சுட்டுவதில்லை; நுகர்ச்சிக்குரிய எல்லா வகை இன்பங்களையும் குறிக்கிறது.
|
'திறன்அறிந்து' என்ற தொடர் குறிப்பதென்ன?
திறன் அறிந்து என்பது பொருள் செய்திறனைக் குறிக்கும். செய்திறன் அறிந்து என்றதால் அது ஒருவன் தானே உண்மையாக உழைத்துச் சேர்த்தது என்றும் வஞ்சகத்தாலோ வன்முறையாலோ பெற்றதல்ல என்றும் பொருள்படும். வழிவழியாக வந்த பரம்பரைச் செல்வம், குருட்டடியில் கிடைத்த பொருள் ஆகியன தீதின்றி வந்ததாயினும் அவை திறனறிந்து வந்தனவாகக் கருதப்படமாட்டா.
பொருள் செயல்வகை அதாவது செல்வம் சேர்க்கும் திறன் தனித்தன்மை வாய்ந்தது எளிய முயற்சியால் சிலர் அரிய பொருளைச் குவித்துவிடுவர். சிலர் இடையறா முயற்சியால் பொருளைச் சிறுகச் சிறுகச் சேர்ப்பர். திறமையைப் பயிற்சியாலும் வளர்த்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பு,
'திறன்அறிந்து' என்பதைத் தொடர்ந்து 'தீதின்றி வந்த பொருள்' என்றும் இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. கையூட்டு, சூழ்ச்சி, பறிப்பு (நில அபகரிப்பு போன்றன), கையாடல், களவு, கொள்ளை, கொலை போன்ற தீச்செயல்கள் செய்தும் பொருள் சேர்க்கின்றனர். அவையெல்லாம் தீதான வழிகள். திறமை இல்லாதவன்தான் தீயவழிகளைத் தேடுவான். திறமையுடையவன் தீயநெறியில் பொருள் சேர்க்க எண்ணமாட்டான். நேர்மையான வழியிலேயே அவனால் பொருளைக் குவிக்க இயலும். இதனைத்தான் வள்ளுவர் 'திறனறிந்து தீதின்றி வந்த பொருள்' என்கிறார்.
|
செய்திறன் அறிந்து, குற்றமின்றி, வந்த பொருளானது அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.
பொருள் செயல்வகை அறிந்து தொகுத்த செல்வம் அறமும் இன்பமும் தரும்.
தீய வழிகளில் அல்லாமல், செய்திறன் அறிந்து தேடிய பொருளானது, அறவாழ்க்கையையும் இன்பத்தையும் கொடுப்பதாகும்.
|