இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
(அதிகாரம்:பொருள்செயல்வகை
குறள் எண்:752)
பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வர்; செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர்.
|
மணக்குடவர் உரை:
பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்; பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர்.
இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.
பரிமேலழகர் உரை:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்; செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர்.
(உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.)
தமிழண்ணல் உரை:
பொருட்செல்வம் இல்லாதவரை, அவர் பிற எல்லா நலங்களும் உடையவராயினும், எல்லாரும் இகழ்ந்து தாழ்வுபடுத்துவர். செல்வமுடையவரை, அவர் பிற தகுதி எதுவும் இல்லாதவராயினும் எல்லாரும் உயர்வுபடுத்திச் சிறப்புச் செய்வர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர்.
பதவுரை: இல்லாரை-(செல்வம்) இல்லாதவரை; எல்லாரும்-யாவரும்; எள்ளுவர்-இகழ்வர்; செல்வரை-பொருள் மிக்காரை; எல்லாரும்-அனைவரும்; செய்வர்-செய்வர்; சிறப்பு-பெருமை.
|
இல்லாரை எல்லாரும் எள்ளுவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்;
பரிப்பெருமாள்: பொருளில்லாதாரை எல்லாரும் இகழ்வர்;
பரிதி: பொருளற்றாரை எல்லாரும் இகழ்வர்;
காலிங்கர்: கைப்பொருள் இல்லாதாரை யாவரும் இகழ்வர்;
பரிமேலழகர்: எல்லா நன்மையும் உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்;
'பொருளில்லாதாரை எல்லாரும் இகழுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'செல்வம் இல்லாதவரை எல்லோரும் இகழ்வர்', 'எல்லா நலமும் உடையவராயினும் வறியவரை எல்லாரும் இகழ்வர்', 'பணமில்லாதவர்களை எல்லாரும் அலட்சியம் செய்வார்கள்', 'பொருட்செல்வம் இல்லாதாரை எல்லாரும் இகழ்வர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செல்வம் இல்லாதவரை யாவரும் இகழ்வர் என்பது இப்பகுதியின் பொருள்.
செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர்.
மணக்குடவர் குறிப்புரை: இது சிறப்பெய்தலும் பொருளுடைமையாலே வருமென்றது.
பரிப்பெருமாள்: பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: சிறப்பெய்தலும் இதனானே வரும் என்றது.
பரிதி: செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.
காலிங்கர்: கைப்பொருள் உடையோரை யாவரும் இன்பம் உற்றுச் சிறப்புச் செய்வார்கள் என்றவாறு.
பரிமேலழகர்: எல்லாத்தீமையும் உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர்.
பரிமேலழகர் குறிப்புரை: உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும் தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும் மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும் கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு.
'பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்புச் செய்வர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உடையவரை எல்லோரும் சிறப்புச் செய்வர்', 'எல்லாத் தீமையும் உடையவராயினும் செல்வரை எல்லாரும் புகழ்வர்', 'பணம் உள்ளவர்களை எல்லாரும் பெருமைப்படுத்துவார்கள்', 'பொருளுடையாரை எல்லாருஞ் சிறப்பாக நடத்துவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செல்வம் உடையவரை எல்லாரும் மதித்து நடப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
செல்வம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர்; செல்வம் உடையவரை எல்லாரும் மதித்து நடப்பர் என்பது பாடலின் பொருள்.
'எல்லாரும்' என்றால் யார் யார் எல்லாம்?
|
செல்வம் இல்லாதார் ஊரார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவர்.
பொருள் இல்லாதவரை எல்லாரும் இகழ்ச்சியாகப் பேசுவார்கள்; செல்வம் படைத்தவரை எல்லாரும் பெருமைப்படுத்திப் போற்றுவர்.
வறியோரை இகழ்வதும் செல்வர்க்கு மதிப்பளிப்பதும் உலகோரின் பொதுஇயல்பு.
ஒருவர் கல்வி கற்றவராயிருந்து ஒழுக்கம் முதலிய நற்குணங்களைப் பெற்றிருந்தாலும் அவரிடம் செல்வம் இல்லையானால் அவர் எள்ளப்படுவார். ஆனால் பழிபாவங்களுக்கு அஞ்சாமலும், வஞ்சகத்தாலும், கயமையாலும், பொதுநன்மைகளுக்கு எதிராகவும் செல்வம் ஈட்டப்பட்டிருந்தாலும் அதைப் பெற்றவன் போற்றிப் புகழப்படுவான்.
‘இல்லார்’ என்ற சொல்லுக்கு ‘இல்லாதவர்’ என்பதுதான் பொருள். ஆனால் அது 'பொருள் இல்லாதவரை'யே சுட்டுகிறது. இது பொருள் முதன்மை இடம் பெறுவதைக் குறிப்பதாகிறது. நல்லோராயினும் எள்ளுவர்; தீயோராயினும் சிறப்புச் செய்வர் என்ற குறிப்புப் பொருளில் அமைந்தது இப்பாடல்.
இப்படிச் சொல்வதால் நெறியல்லா நெறிச் செல்லும் உலகியலை குறள் ஏற்றுக் கொள்கிறது என்பதல்ல. உலக நடப்பு இதுதான்; எனவே ஒருவன் வேறுவகையில் சிறந்து விளங்கினாலும் செல்வத்தையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் உலகம் அவனை மதிக்கும்; பொருளில்லாமல், வேறு பல திறன் கொண்டிருந்தாலும் அவனை அது பொருட்படுத்தாது என்பது சொல்லப்பட்டது.
நடைமுறை வாழ்வுக்குப் பொருட்செழிப்பு இன்றியமையாதது என்பது மட்டுமல்லாமல் நன்கு மதிக்கப்பட வேண்டுமானால் செல்வத்தைப் பெருக்கித்தான் ஆகவேண்டும். வறுமையை வெறுப்பவர் ஆதலால் வள்ளுவர் உலக இயல்பு கூறி பொருள் தேட மனிதனை ஊக்குகிறார்.
|
'எல்லாரும்' என்றால் யார் யார் எல்லாம்?
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் என இரண்டிடங்களிலும் 'எல்லாரும்' எனச் சொல்லப்படுகிறது.
செல்வம் இல்லை என்னும்போது எல்லாரும் என்பது தொடர்புடையாரும் அதாவது தாய், மனைவி, மக்கள், சுற்றம், நட்பினர் முதலியோரும் பிற எல்லோரும் என்பதாகிறது.
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும் (நல்குரவு 1047 பொருள்: அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலனைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்) என்று வள்ளுவரே பெற்ற தாயும் பிறன் போல் நோக்குவாள் என்று பிறிதோரிடத்தில் கூறியுள்ளார்.
..இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்... (நல்வழி 34 பொருள்: ....இல்லாதவனை அவன் மனைவியும் விரும்பாள்; (அவனைப்) பெற்று வளர்த்த அன்னையும் விரும்பாள்....) என்பது ஔவையார் பாடல்.
பொருளற்றவனைச் செல்வர் அகந்தை கொண்டு சிறுமைப்படுத்துவர். தன்னைப் போல் இவனும் ஒரு வறியவன்தானே எனப் பிறவறியோரும் அவனை இகழ்ந்துரைப்பர். இவர்கள் அனைவரும் 'எல்லாரும் எள்ளுவர்' என்பதில் அடக்கம்.
'செல்வரை எல்லாரும்' என்பதிலுள்ள 'எல்லாரும்' என்பதில் பகைவர், அயலார் முதலிய அனைவரும் அடங்குவர்.
முற்குறளிலும் 'பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்' என்று கூறினார். மறுபடியும் இங்கு 'செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு' என்று கூறியது செல்வத்தின் தன்மையை உறுதிப்படுத்திக் காட்டுவதற்காம்.
எல்லாருமா இல்லாரை இகழ்வர்? ஒருவர் ஏழ்மை நிலையில் வாழலாம். ஆனால் அவர் தன்னுடைய நற்பண்புகளில் மேலோங்கி இருந்தாரே யானால் அவரைப் போற்றுவரும் உண்டு.
வள்ளுவர் மற்றொரு பாடலில் நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு (குடிமை 953 பொருள்: உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.). எனவே நற்குடியில் தோன்றியவர்கள் யாரையும் இகழமாட்டர்கள் என்பதால் வறியவர்களையும் இகழார். எல்லாரும் இல்லாரை இகழ்வர் என்பது பொதுவியல்பு; இகழாமை நற்குடிப்பிறந்தோரின் சிறப்பியல்பு ஆகும்.
அதுபோல எல்லாருமா உடையவரைப் போற்றுவர்? தீய செல்வரும் பெருமைப்படுத்துவது உண்மைதான். ஆனாலும் பொருள் உடையவர் என்ற ஒன்றுக்காகவே அவரைப் போற்றிக் கொண்டாட எல்லாரும் தேடித் தேடி ஓடுவதில்லை. நல்லவர் அல்லாத செல்வரைப் பெருமைப்படுத்துவது அவரைச் சுற்றியுள்ள ஒரு சிலரே - அவரால் பயனடைந்தவர்களும் பயன் கருதி புகழ் பாடுபவர்களும் - ஆகும். செல்வர் உண்மையிலேயே ஒரு தீயர் என்று தெரியவந்தால் அவர் பொருள் படைத்தவராக இருந்தாலும் அவரை உலகம் இகழத்தான் செய்யும்.
எல்லாரும், எல்லாரும் என்று சொன்னது செல்வச் சிறப்பை மிகுத்துக் காட்டுவதற்கு என்பது அறியப்பட வேண்டும்.
|
செல்வம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர்; செல்வம் உடையவரை எல்லாரும் மதித்து நடப்பர் என்பது இக்குறட்கருத்து.
பொருள்செயல்வகை தெரியாதார் இளக்காரமாகப் பார்க்கப்படுவர்.
செல்வம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர்; செல்வரை எல்லோரும் சிறப்பாக நடத்துவர்.
|