குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை
(அதிகாரம்:பொருள்செயல்வகை
குறள் எண்:758)
பொழிப்பு (மு வரதராசன்): தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தல், மலையின்மேல் ஏறி, யானைப் போரைக் கண்டாற் போன்றது.
|
மணக்குடவர் உரை:
குன்றின்மேல் ஏறியிருந்து யானையோடு யானை போர் செய்தலைக் கண்டாற் போலும். தன் கையகத்து எய்திய பொருளுண்டாக ஒரு வினையை யெடுத்துக் கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை.
இது பொருளுடையார் தாம் வருந்தாமல் பிறரை வினைசெய்வாராக ஏவி வினைக்கண் விட்டிருக்கலாமென்றது.
பரிமேலழகர் உரை:
தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.
('கைத்து உண்டாக ஒன்று செய்வான்' எனக் கூட்டுக. 'ஒன்று'என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம். குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும் என்பதாம்.)
வ சுப மாணிக்கம் உரை:
கையில் பொருள்வைத்துக் காரியம் செய்தல் மலையேறி யானைப்போரைப் பார்ப்பது போலாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தன்கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை, குன்றேறி யானைப்போர் கண்டற்றால்.
பதவுரை: குன்று-சிறு மலை; ஏறி-ஏறி; யானை-யானை; வேழம்; போர்-சண்டை; கண்டு-பார்த்தல்; அற்றால்-அத்தன்மைத்து; தன்கைத்து ஒன்றுஉண்டாக- தனது (கைத்து-கை+அகத்து) கையகத்துப் பொருள் இருக்க, கையினிடத்தில் செல்வம் இருக்க; செய்வான்-செய்வானது; வினை-செயல்.
|
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குன்றின்மேல் ஏறியிருந்து யானையோடு யானை போர் செய்தலைக் கண்டாற் போலும்;
பரிப்பெருமாள்: குன்றின்மேலே இருந்து யானைப் போர் கண்டால் போலும்;
பரிதி: மலையின் உச்சியிலேறி யானைப்போர் பார்த்ததற்கு ஒக்கும்;
காலிங்கர்: தான் குன்றின்மீது ஏறிப்போய் இனிதிருந்து நிலத்துப் பொருகின்ற யானைப் போரினை அஞ்சாது கண்டு இன்புறூஉம் அத்தன்மைத்து;
பரிமேலழகர்: ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும்.
'குன்றின்மேல் ஏறியிருந்து யானையோடு யானை போர் செய்தலைக் கண்டாற் போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் மலைமேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டது போன்று', 'உயரமான இடத்தில் இருந்து கொண்டு யானையுடன் போர் செய்வதை ஒக்கும்', 'மலையின் மீது ஏறி நின்று பள்ளத்தாக்கில் நடக்கும் யானைப்போரைப் பார்ப்பது போலும்!', 'மலைமேல் நின்று யானைப் போரைக் கண்டதை ஒத்ததாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குன்றின்மேல் ஏறியிருந்து யானைப்போரைக் கண்டது போலும் என்பது இப்பகுதியின் பொருள்.
தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன் கையகத்து எய்திய பொருளுண்டாக ஒரு வினையை யெடுத்துக் கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளுடையார் தாம் வருந்தாமல் பிறரை வினைசெய்வாராக ஏவி வினைக்கண் விட்டிருக்கலாமென்றது.
பரிப்பெருமாள்: தன் கையகத்து ஒரு பொருளுண்டாகக் கொண்டு செய்யத் தொடங்கினவன் செய்யும் வினை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: பொருளுடையார்க்குத் தாம் வருத்தமுறாமல் பிறரை வினைசெய்வாராகவே கண்டு இருக்கலாம் என்றது.
பரிதி: தன் கையில் பொருள் கொண்டு மாற்றாரை வெல்க என்றவாறு.
காலிங்கர்: யாதெனின் தன்மாட்டு ஒரு பொருள் உளதாகச் செய்து கொள்பனது வினையும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே, பாவமும் பகையும் தன்னை நணுகாமல் பரிகரித்து இனிது வாழும் பொருளுடையோன் என்பது பொருளாயிற்ரு என அறிக. [நணுகாமல் -அணுகாமல்; பரிகரித்து -நீக்கி]
பரிமேலழகர்: தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'கைத்து உண்டாக ஒன்று செய்வான்' எனக் கூட்டுக. 'ஒன்று' என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம். குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும் என்பதாம்.
'தன் கையகத்து எய்திய பொருளுண்டாக ஒரு வினையை யெடுத்துக் கொண்டு தொடங்கினவன் செய்யும் வினை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் தன் கையகத்திருக்க ஒருவன் செய்யும் வினை, இடையூறின்றி இனிது முடியும்', 'தன் கையில் பணம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு முயற்சி செய்கிறவனுடைய காரியம்', 'தன் கையில் பொருளை வைத்துக் கொண்டு ஒரு காரியஞ் செய்வானுடைய செயல்', 'தன் கையதாகிய பொருள் உண்டாகச் செய்பவனுடைய செயல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தன் கையில் பொருள்வைத்து ஒருவன் செய்யும் செயல் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தன் கையில் பொருள்வைத்து ஒருவன் செய்யும் செயல், குன்றின்மேல் ஏறியிருந்து யானைப்போரைக் கண்டது போலும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?
|
கையில் பணம் உள்ளது; மகிழ்ச்சியாகத் தொழில் செய்யலாமே!
தன் கையினிடத்தில் ஒரு தொகைப் பொருளை வைத்துக்கொண்டு - யாரிடமும் நிதி உதவி பெறத் தேவையில்லாமல் - தொழில் தொடங்குபவன் குன்றின்மேல் ஏறி நின்று அச்சம் சிறிதும் இன்றி யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும்.
குன்றின் மீதேறி யானைச் சண்டையைப் பொழுதுபோக்கிற்காகக் காணச் செல்கின்றான் ஒருவன். கீழே நிலத்தில் நிகழும் யானைப்போரைப் பார்க்கும் அவனது உயிருக்கு ஒரு ஊறுபாடும் இல்லை. சண்டையையும் தெளிவாகவும் கண்டு இன்புறுகிறான்.
அதுபோல, செல்வச் செழிப்புள்ளவன் ஒரு செயலை மேற்கொண்டால், அவனிடமுள்ள கைப்பொருள் அவனுக்குப் பயன் ஈட்டித்தரும். பொருள் கையில் இருப்பதால் எவ்விதமான மன இறுக்கமும் கொள்ள வேண்டியிராது; இடர் நேருமோ என்ற பயமும் அவனுக்கு இருக்காது. எப்பொழுது இடையூறு வந்தாலும் உள்ள பொருள் கொண்டு எளிதில் தீர்வு கண்டு விடலாம். தொழிலுக்காகக் கடன் வாங்கவில்லையாதலால், அதைத் திருப்பிச் செலுத்தவேண்டுமே என்ற மனநெருடல்களும் இல்லை. அவன் தக்கவரை அச்செயலில் ஈடுபடுத்தித் தான் மேற்பார்வை மட்டுமே செய்து, எடுத்துக்கொண்ட செயல் விரும்பிய வெற்றியைத் தருமாறு பொருள் பெருக்கச் செய்வான்.
செயல்மூலதனக் குறைவால் (inadequate working capital) பல முயற்சிகள் இடையில் நின்றுவிடுகின்றன அல்லது தோல்வி காண்கின்றன. தன்கையகத்தே செல்வம் வைத்துக் கொண்டு தொழில் செய்பவனுக்கு நிதிப்பற்றாக்குறையால் தொழில்பாதிப்பில்லை.
இக்குறளில் சொல்லப்பட்ட உவமையை வேறுவேறு வகையிலும் விளக்கம் செய்தனர். அவற்றுள் சில:
ஒருவன் மலைமீது இருந்து யானையுடன் போர் தொடுத்தலைப் போன்றதாம் என்று சிலர் உவமையை விளக்கினர். 'ஒருவன் மலைமீது ஏறியிருந்து யானையுடன் போர் செய்யின் அச்சமும் வருத்தமு மின்றி வெல்லுதல் போல, பொருள் பெற்றிருந்த ஒருவன் பெருந்தொழில் செய்யின் அச்சமும் வருத்தமுமின்றி இனிது முடிப்பான்' என்றனர்.
நேருக்கு நேர் பொருதலே மரபாயிருக்க இவன் உயர்ந்த இடத்தும், பொரப்படும் பொருள் நிலத்தும் இருந்து பொருதல் வீரத்திற்கு இழுக்கு என்பதால் இவ்விதம் விளக்கப்பட்டது.
மலைமீது உற்றானோடு போர் செய்ய எண்ணுவார் போருக்கு வேண்டிய யாவற்றையும் ஒருங்கு சேர்த்து மலையை நாற்புறமும் வளைத்து நின்று எதிரி விலகாமல் அரண் செய்து குறுகிய காலத்தில் எடுத்த கருமத்தை இனிது முடிக்கின்றார். அதுபோல், பணமுடைய ஒருவன் கருமத்தைத் தொடங்கின் அதற்கு வேண்டிய பொருட்களைச் சேர்த்து வைத்து நாற்புற உதவியும் பெற்று நாள் நீடிக்காமல் குறுகிய கால அளவில் செய்து முடிப்பான் என்பது மற்றொரு விளக்கம்.
அடுத்து 'குன்று ஏறியானை-குன்றின் மீது ஏறிவிட்டவனை எனக் கொண்டு சமதரையில் நின்று போரிட்டவன் திடீரென்று குன்றின் மீதேறி நின்று போரிட்டால் அவனோடு முன்பு போரிட்டவன் போரிட முடியாமல் குன்றேறியவன் தாக்குதலை ஏற்க வேண்டி யிருக்கும்' எனவும் விளக்கினர்.
இவ்வுரைகள் எல்லாம் ஏற்குமாறு இல்லை.
|
இக்குறள் கூறும் செய்தி என்ன?
'தன்கையிற் பொருளை வைத்துக்கொண்டு ஒரு முயற்சி செய்வதற்கும், உயரமான மலையின்மேல் இருந்து கொண்டு கீழே நடக்கும் யானைச் சண்டையைப் பார்ப்பதற்கும் என்ன தொடர்பு?',
'தன் முயற்சியாகத் தன்னுடைய பொருளைக் கொண்டு செய்து முடிக்க வேண்டியவன், தான் சும்மா இனிதிருந்து கொண்டு வல்லாரை ஏவி அதை முடிப்பான் என்பதில் பொருளில்லையே' என்றவாறான ஐயங்கள் இக்குறட்பொருள் குறித்து எழுப்பப்பட்டன.
காலிங்கர் 'தன்மாட்டு ஒரு பொருள் உளதாகச் செய்து கொள்பவன், பாவமும் பகையும் தன்னை நெருங்காமல் நீக்கி இனிது வாழும் பொருளுடையோன் என்பது பொருளாயிற்று' என உவமையை விளக்குவார். கையில் பணம் வைத்துக்கொண்டு தொழில் செய்பவன் தீச்செயலும் பகையும் அணுகவிடாமல் பார்த்துக்கொள்வான். அதுபோல் பொருள் செய்க' எனப் பொருள் தருகிறது இவரது உரை. இதை அறவழி சாராத முறை எனக்கூற முடியாது. கைப்பொருள் நிறைய வைத்துக் கொள்வது நல்ல பாதுகாப்பு என்பதற்காக.
சேவற்சண்டை, ஆட்டுச்சண்டை போன்றவற்றைப் பார்க்கப் பொதுவாக எல்லாருக்கும் ஆசை உண்டாகும்.
இப்பாடற் காட்சியில், நிலத்தின்கண் யானைகள் பொருதும் விளையாட்டு நடக்கின்றது. யானைச் சண்டையை நெருங்கி நின்று பார்த்தால் துன்பம் வரக்கூடும் என்பதால் தமக்குத் தீங்கு சிறிதும் நேராத வண்ணம் அதைச் சுவைப்பதற்கு மலையின்மீது ஏறி நிற்கின்றனர் பார்க்க வந்தவர்கள்.
இதை உவமையாக்கி, பொருளாக்கம் பெறத் தொடங்கிய செயல் பெரிதும் வருத்தமின்றி முடியுமாறு அமைக்க எனப் பொருள் செய்வாரை நோக்கிக் கூறுவதாக உள்ளது பாடல்.
எந்த ஒரு தொழிலானாலும் நிறையப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு தொடங்க வேண்டும் என்று வள்ளுவர் கருதுகிறார்.
வெறுங்கையால் முழம் போட முனையாமல் கையில் பொருள் வைத்துக்கொண்டு செய்க எனச் சொல்லப்பட்டது. தன் கையில் செல்வம் இருந்து செயல் புரிந்தால் அச்சம் இல்லாமல் இருக்கலாம். பொருள் செயல்வகையில் இது ஒன்று.
பொருள் தன் கையகத்திருக்கச் செய்யும் வினை, இடையூறின்றி முடியும் என்பது இக்குறள் தரும் செய்தி.
|
தன் கையில் பொருள்வைத்து ஒருவன் செய்யும் செயல், குன்றின்மேல் ஏறியிருந்து யானைப்போரைக் கண்டது போலும் என்பது இக்குறட்கருத்து.
மிகக் காப்பான (risk-free) பொருள்செயல்வகையை நாடி ஈடுபடலாமே!
கையில் பொருள்வைத்து ஒருவன் செயல் புரிதல், மலையேறி யானைப்போரைப் பார்ப்பது போலும்.
|