இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0756உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:756)

பொழிப்பு (மு வரதராசன்): இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

மணக்குடவர் உரை: தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும் அரசனுக்குப் பொருளாம்.
உறுபொருள்- காவற் பொருள்.

பரிமேலழகர் உரை: உறுபொருளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன் ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய பொருள்கள்
. (உறுபொருள்: வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம் - கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: வரியும் சுங்கமும் பகைவரின் திறையும் அரசனுக்கு வருவாய்ப் பொருளாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.

பதவுரை: உறு-தானே வந்துற்ற; பொருளும்-உடைமையும்; உல்கு-சுங்கம், இறைப்பொருள்; பொருளும்-உடைமையும்; தன்-தனது; ஒன்னார்-பகைவர்; தெறு-திறை; பொருளும்-உடைமையும்; வேந்தன்-மன்னன், ஆட்சித்தலைவன்; பொருள்-செல்வம்.


உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தானே வந்துற்ற பொருளும், ஆயத்தால் வரும் பொருளும், தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும்; [ஆயத்தால்-சுங்கத்தால்]
மணக்குடவர் குறிப்புரை: உறுபொருள்- காவற் பொருள்.
பரிப்பெருமாள்: தானே வந்துற்ற பொருளும், ஆயவர்க்கத்தால் வரும் பொருளும், தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: உறுபொருள்- கால் அற்ற பொருள்.
பரிதி: குடிக்கடமையும் சுங்கமும் சத்துருக்கள் திறையிடும் பொருளும்; [திறை-கப்பம்]
காலிங்கர்: நாடு இறுக்கும் முறைமையின் பெறும் பொருளும், நீரினும் நிலத்தினும் வருவனவற்றுள் தனக்கு உளவாம் சுங்கப்பொருளும், தன் பகைவரைத் திறை வாங்கிக் கொள்ளும் பொருளும் எல்லாம்;
பரிமேலழகர்: உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும் சுங்கமாகிய பொருளும் தன் பகைவரை வென்று திறையாகக் கொள்ளும் பொருளும்;
பரிமேலழகர் குறிப்புரை: உறுபொருள்: வைத்தார் இறந்துபோக நெடுங்காலம் நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்ததூஉம், தாயத்தார் பெறாததூஉமாம். சுங்கம் - கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும் பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன கூறியவாறு.

உறுபொருளும் என்றதற்கு 'தானே வந்துற்ற பொருளும்/குடிக்கடமையும்/நாடு இறுக்கும் முறைமையின் பெறும் பொருளும்/உடையாரின்மையின் தானே வந்துற்ற பொருளும்' என்றும் உல்கு பொருள் என்றதற்கு 'ஆயத்தால் வரும் பொருளும்/சுங்கமும்/நீரினும் நிலத்தினும் வருவனவற்றுள் தனக்கு உளவாம் சுங்கப்பொருளும்/சுங்கமாகிய பொருளும்' என்றும் தெறுபொருளும் என்றதற்கு 'தன் பகைவரை யடர்த்துக்கொண்ட பொருளும்' என்றவாறு பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடிமக்களிடமிருந்து பெறும் வரிப்பொருளும் வணிகர் தரும் சுங்கப் பொருளும் பகைவர்களை வென்று பெறும் திறைப் பொருளும்', '(அரசுரிமையினால் அரண்மனையையும் பொக்கிஷத்தையும் சேர்ந்ததாக) கிடைக்கின்ற செல்வமும், வரிகள் மூலமாக வருகின்ற பணமும், தன் நாட்டில் குற்றம் செய்கிறவர்களுக்கு அபராதம் விதித்து அதன் வழி வருகின்ற பணமும்', 'உடையார் இல்லாது தானே வந்த பொருளும், சுங்கப் பொருளும், பகைவர் திறையாகத் தரும் பொருளும்', 'தனக்குத் தன் உரிமையால் அடையும் பொருளும், சுங்கமாகிய பொருளும், தன் பகைவரை வென்று கொண்ட பொருளும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வரிப்பொருளும் சுங்கப்பொருளும் திறைப்பொருளும் என்பது இப்பகுதியின் பொருள்.

வேந்தன் பொருள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசனுக்குப் பொருளாம்.
பரிப்பெருமாள்: அரசனுக்குப் பொருளாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் நியாயமாகத் தேட வேண்டும் என்றார்; இவை நியாயமோ என்று ஐயுற்றாற்கு அரசற்கு நியாயம் என்று கூறப்பட்டது.
பரிதி: அரசன் பொருள் என்றவாறு.
காலிங்கர்: வேந்தனுக்கு நெறியின் வரும் பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அரசனுக்கு உரிய பொருள்கள்
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி கூறப்பட்டது.

'அரசனுக்கு உரிய பொருள்கள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசனுக்கு வருவாய்க்குரிய பொருளாகும்', 'அரசனுக்கு (பொருள் செயல் வகைகளான) வருவாய்கள்', 'அரசனுக்கு உரிய பொருள்களாகும்', 'அரசனுக்கு உரிய பொருள்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரசுக்கு வருவாய்ப் பொருள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறுபொருளும் சுங்கப்பொருளும் பகைவரின் திறைப்பொருளும் அரசுக்கு வருவாய்ப் பொருள் என்பது பாடலின் பொருள்.
'உறுபொருள்' என்பது என்ன?

அரசு இயங்குதற்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது?

குடிமக்கள் வரியாகச் செலுத்தும் இறைப் பொருளும், சுங்கப் பொருளும், தன் பகைவரிடமிருந்து திறையாகக் கொள்ளும் பொருளும் ஆகிய இவை ஒர் அரசுக்குரிய வருவாய்ப் பொருள்களாம்.
தனி மனிதனைப் போன்று அரசிற்கும் பொருள் வாழ்வு உண்டு. அரசு பொருளீட்டும் வழி வேறு, குடிகள் பொருளீட்டுமாறு வேறே. ஈட்டிய பொருளை அரசு தன் குடிகளுடைய நன்மைக்கே செலவிடும். ஒரு அரசுக்கு கிடைக்கும் வருவாயை மூன்று பெரும்பகுதிகளாகக் காட்டுகிறார் வள்ளுவர். ஒன்று உறுபொருள்- குடிமக்களிடத்திலிருந்து பெறப்படும் வரி, அடுத்து உல்கு பொருள் - வணிகப் பொருள்களுக்குரிய சுங்கம், மூன்றாவது தெறு பொருள் - சிற்றரசர்களிடமிருந்து கிடைக்கும் திறை.

உல்கு பொருள்:
இது சுங்கப் பொருள் என்றும் அறியப்படும், சுங்கப் பொருளாவது ‘கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு இறையாயது’ அதாவது கடல் வழியும், தரைவழியும் ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்குச் செல்லும் பொருளுக்கு ஆயச் சாவடி அமைத்து அரசு தீர்வையாகப் பெறும் பொருள். ஆயச் சாவடியில் வெளியிலிருந்து வரும் பொருள்களுக்கு வரி வாயிலாக வரும் பொருள் உல்குபொருள். மக்களிடம் நேரே வாங்காமல் வாணிகஞ் செய்வாரிடம் வருவாயில் பங்கு கொள்வது போன்று பெறப்படுவது இது. பொருள்களை விற்க வரும்போது அது வரும் எல்லைகளில் எல்லாமோ, விற்கும் இடத்திலோ பொருளின் அளவுக்கேற்பச் சுங்கம் விதிப்பர். இதனை விலையோடு சேர்த்து விடுவதால் வணிகர்கள் விலையை ஏற்றியே விற்பார்கள். கடைசியில் விலை கொடுத்து வாங்குகிறவர்கள் நுகர்வோர்களே ஆதலின், அவர்கள் தலைமேல்தான் முடிவில் இந்த வரிச்சுமை விழும். இதனை 'உல்கு பொருள்' என்கிறார் வள்ளுவர். பொருளியல் உலகில் இதை மறைமுக வரி எனச் சொல்வர்.
கலத்தில் வருவன வெளிநாட்டுப் பொருள்கள். காலில் வரும் பண்டங்கள் உள்நாட்டு வாணிகத்திற்கானது. உள்நாட்டு வணிகர்கள் பலர் ஒன்றாகச் சேர்ந்து கூட்டமாகச் செல்லும் வழக்கம் பழங்காலத்தில் இருந்துள்ளது. அப்படிக் கூட்டமாகச் சேர்ந்து செல்வோரை ‘வாணிகச் சாத்து’ என்று குறித்துள்ளது சங்கப்பாடல் ஒன்று. இந்தச் சாத்துக்கள் செல்லும் வழிகளிலும் சுங்கச் சாலைகள் அமைத்துச் சுங்கம் பெறப்பட்டுள்ளது. வாணிபச் சாத்துக்கள் கூட்டம் கூட்டமாக வரும்பொழுது அவரவர் கொண்டுவரும் வணிகப் பொருள்களுக்கு ஏற்றபடிச் சுங்கம் திரட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. சுங்கம் வாங்கும் இடம் ‘சுங்கச் சாலை’ என்று சுட்டும் வழக்கமிருந்ததாகவும் அறிகிறோம். இன்று வணிகர்கள் எடுத்துச் செல்லும் பொருட்சான்றை 'கைச்சாத்து'(கச்சாத்து) என்றே குறிப்பிடுகின்றனர்.

ஒன்னார்த் தெறுபொருள்:
ஒன்னார் என்ற சொல் பகைவர் எனப்பொருள்படும்; தெறுபொருள் என்பது தெறுதலால் அதாவது போர் செய்து வெல்லுதலால் வரும்பொருளைக் குறிக்கும். திறைப் பொருள் எனவும் அறியப்படுவது. திறை என்பது கப்பங்கட்டுதல் எனவும் சொல்லப்படும். குடிமக்கள் தரும் இறைப் பொருளினும் பகைவர் இடும் திறைப் பொருளே பெருமைசால் வருவாயாகக் கருதப்பட்டது. திறை என்பது பகைவரிடம் போரிடும்போது வெற்றி பெற்ற நாடு பெறுவது. நாட்டிற்கு இதுவும் ஒரு வருவாய் ஆகிறது. இதனை 'ஒன்னார்த் தெறு பொருள்' என்று கூறுகிறார் வள்ளுவர். இன்று திறை என்பது நேரடியாக வாங்கப்படாமல், போரில் உண்டான இழப்புக்கு ஈடு பெறுவதாக அமைகிறது. வேறு வழிகளிலும் ஒரு நாடு திறை பெறுகிறது. வல்லரசு நாடு எளிய நாடுகளில் பல்வேறு வழிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனது. ஆதிக்க நாட்டுப் பொருள்களை தோற்ற நாடுகளில் திணிப்பதும் கடன் என்ற பெயரால் பணம் கொடுத்து அதற்கு வட்டி வங்குவதும் கொடை என்று கொடுத்து உளவு போன்ற செயல்களில் ஈடுபடுவதும் நடைபெறுகின்றன. இதைச் சுரண்டல் கொள்கை என மறுப்பாளர்கள் அழைப்பர். இந்தக் கொள்கையால் வலிய நாடுகள் பொருளாதார உயர்ச்சி பெறலாம். திறை என்பது இந்நாட்களில் இவ்விதம் மறைமுகமாக வாங்கப்படுகிறது எனலாம்.

'உறுபொருள்' என்பது என்ன?

'உறுபொருள்' என்றதற்குத் தானே வந்துற்ற பொருள், கால் அற்ற பொருள், குடிக்கடமை, நாம் இறுக்குமுறைமையின் பெறும்பொருள், உடையான் இன்மையின் தானே வந்துற்ற பொருள், வைத்தார் இறக்க நெடுங்காலம் நிலத்திற் கிடந்து பின் கண்டெடுக்கப்பட்டதும் தாயத்தார் பெறாததும் ஆம், ஒருவர் கொடாமல் தானே வரும் பொருள், ஒருவற்கும் சுதந்திரமில்லாமல் தானே வந்துற்ற பொருள், இறையாக வந்து சேரும் பொருள், குடிமக்களிடமிருந்து பெறும் வரிப்பொருள், அரசனாகிய உரிமையினால் கிடைத்த பொக்கிஷச் செல்வம், பண்டையோர் நெறியிற்படர்ந்து, உடையோரின்மையானும் எதிர்பாராமலும் வந்த பொருள், தானாகவே சேர்ந்த பொருள் புதையல், தனக்குத் தன் உரிமையால் அடையும் பொருள், நிலமுழுதும் அரசிற்குச் சொந்தமாதலின் அதிலிருந்து வரும் பொருள், நாதியற்றுத் தானே வரும் பொருள் என்றவாறு பொருள் கூறினர்.

'உறுபொருள்' என்பதை விளக்குவதில் உரையாசிரியர்கள் வெகுவாக மாறுபாடுகின்றனர். வரிப்பணம், உடையோரின்மையால் வரும் பொருள் என்று இரு வேறுவகையாகக் கூறுவோராக உள்ளனர். மணக்குடவர் 'தானே வந்துற்ற பொருள்' என்றும் பரிதி குடிக்கடமை என்றும் பொருள் கூறுகின்றனர். இவை விளைபொருள்களுக்குக் குடிகள் தாமே உவந்து செலுத்தும் வரி அதாவது ஆறிலொரு பங்கு எனக் கொள்ளலாம். பரிமேலழகர் கேட்பாரற்ற-உரிமை கோருவோர் இல்லாத பொருள் எனக் கொள்கிறார். ஒருவர் இறக்குங்கால் அவர் பொருளை அடைவதற்குரிய உறவின் முறையோர் இல்லையானால், அப்பொருள் அரசையே சாரும்; நிலத்தில் கிடந்து கண்டெடுக்கும் பொருளும் அரசுக்கே உரியது என்ற பொருளில் இவர் கூறுகிறார்.
நிலத்தின் விளைவுகளின் மூலம் கிடைக்கும் வரிப்பணமே அரசுக்கு ஒரு பெரிய வருவாயாக இருந்திருக்கமுடியும். எனவே விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக வழங்க வேண்டும் என்ற மரபு உண்டானது. அண்மைக் காலம் வரை அரசுப் பணியாளர்கள் அறுவடைக் களத்துமேட்டிற்கு நேரில் சென்று ஆறில் ஒரு பங்கை நேர்முகமாக வரியாகப் பெறும் வழக்கம் இருந்தது. இதனையே 'உறுபொருள்' என்கிறது பாடல். குடிமக்கள் நிலவரி செலுத்துவதைத் தனது 'கடமை'யாகவே கருதியிருந்தினர்; அவர்கள் தாமாகவே முன்வந்து இறைப்பொருள் செலுத்தினர்.

'உறுபொருள்' என்பது குடிமக்களிடமிருந்து பெறும் வரிப்பொருளாம்.

வரிப்பொருளும் சுங்கப்பொருளும் பகைவரின் திறைப்பொருளும் அரசுக்கு வருவாய்ப் பொருள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அரசின் பொருள்செயல்வகை வகுத்துக் கூறப்பட்டது.

பொழிப்பு

வரிப்பொருளும் சுங்கப் பொருளும் பகைவரின் திறைப் பொருளும் அரசுக்கு வருவாய்ப் பொருளாம்.