தெரிந்து தெளிதல் என்றதற்கு ஆராய்ந்து தெளிவுறுதல், ஆராய்ந்து நம்புதல், ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல், ஆராய்ந்து தெளிவடைதல் என விளக்கம் தருவர். தெரிந்து என்ற சொல் ஆராய்ந்து எனப் பொருள் தருகிறது என்பதில் அனைவரும் ஒத்தவர். ஆனால் தெளிதல் என்பதற்குத் தேர்ந்தெடுத்தல், நம்புதல், தெளிவுறல் என்று வேறுவேறாகப் பொருள் தருகின்றனர். அதிகாரப் பொருண்மையிலிருந்து இவை வெகுவாக வேறுபடுவதில்லையாதலால் அனைத்தும் பொருந்தி வருகின்றன.
தேர்வுக்கு உள்ளாவர்தம் குடிப்பிறப்பு, நூற்கல்வியறிவு, உலக வியற்கை, அறிவாற்றல், தொழில்திறன், அனுபவம், உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியன பற்றி நன்றாகத் தெரிந்து, நற்குண நற்செய்கையறிந்து, தெளிந்து அனைத்திலும் தகுதியுடையோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆய்ந்து என்றதற்கு மல்லர் என்ற பழம் உரையாசிரியர் தரும் விளக்கம் சுவையாக உள்ளது: 'அவனவனுடைய கண்களை ஆராய்ந்து பாத்து சந்தேகம் எல்லாம் ஒழிந்ததுக்குப் பிறகு மந்திரிகளுக்கு உத்தியோகம் கொடுக்கிறது' என்கிறார் மல்லர். இன்றும் முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்களில் சிலர் இந்த உத்தியை வெற்றிகரமாகக் கையாளுகிறார்கள் என்பது உண்மை.
ஒருவரது செயற்பாடுகளே அவரது சிறப்பைச் சொல்லும். ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தபின் அவர்மீது எவ்வித ஐயப்பாடும் கொள்ளலாகாது என்ற அளவில் ஆய்வு செய்யப்படவேண்டும். தேறும் பொருள் அறிந்தபின் அத்துறைக்கு அமர்த்தப்படுவர். அன்புடைமைக்காகவும் உறவுமுறைக்காகவும் யாரையும் தேர்ந்தெடுக்கக் கூடாது.
இவ்வதிகாரம் ஆள்பவர்களுக்கு மட்டுமன்றி தேறுதல் பொறுப்புள்ள அனைவருக்கும் பொருந்தும்.
'தெரிந்து செயல்வகை' என்னும் முந்தைய அதிகாரம் உரிமையாளரே செயல் மேற்கொள்ளும்போது ஆராய்ந்து செய்க எனச் சொல்வது. இவ்வதிகாரம் அவர்க்காகப் பணிபுரியப்போகும் துணைவர்களைத் தேர்ந்து எடுக்கும் முறைகளையும் அவர்கள் தேர்ந்தாராயின் அவர்களைத் தெளிக என்பதைக் கூறுவது. அடுத்த அதிகாரமான 'தெரிந்து வினையாடல்' தெளியப்பட்டாரை செயலில் ஈடுபடுத்தி, அவர்களை ஆள்வது பற்றியது.