இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0509தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:509)

பொழிப்பு: யாரையும் ஆராயமல் தேர்ந்தெடுக்க வேண்டாம்; நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

மணக்குடவர் உரை: யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக.
இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.

பரிமேலழகர் உரை: யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக.
('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு, 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' :ஆகுபெயர்.)

சி இலக்குவனார் உரை: யாவரையும் நன்கு ஆராயாது தெளியாது ஒழிக; ஆராய்ந்த பின்னர் தெளியும் பொருள்களைத் தெளிந்து கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.


தேறற்க யாரையும் தேராது:
பதவுரை: தேறற்க-தேர்ந்தெடுக்க வேண்டாம்; யாரையும்-எவரையும்; தேராது-ஆராயாது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாவரையும் ஆராயாது தெளியாதொழிக;
பரிப்பெருமாள்: யாவரையும் ஆராயாது தெளியாதொழிக;
பரிதி: ஒருவர் செய்யுங் குற்றம் நன்மை விசாரியாமல் நம்பக் கடவானல்லன்;
காலிங்கர்: யாதொரு காரியமும் தேர்ந்து செய்யும் இடத்தும் யாரையும் அவரது குணமும் குற்றமும் ஓர்ந்து உணராது தேறுதலைச் செய்யற்க;
பரிமேலழகர்: யாவரையும் ஆராயாது தெளியா தொழிக;
பரிமேலழகர் குறிப்புரை: 'தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம்.

'யாவரையும் ஆராயாது தெளியா தொழிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆராயாது யாரையும் எளிதில் நம்பாதே', 'யாவரையும் ஆராயாமல் எளிதில் நம்பற்க', '(நம்பத் தகுந்தவர்கள் என்று தெரிந்தவர்களிலும் எல்லாரும் எல்லாக் காரியத்துக்கும் தகுதியுள்ளவர்களாக இருக்க முடியாது. அதனால்) ஆராய்ந்தறியாமல் யாரையும் நம்பிவிடக் கூடாது', 'யாவரையும் ஆராயாது நம்புதல் கூடாது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எவரையும் ஆராயாது தேர்வு செய்யற்க என்பது இப்பகுதியின் பொருள்.

தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்:
பதவுரை: தேர்ந்தபின்-ஆராய்ந்த பிறகு; தேறுக-தேர்ந்தெடுக்க; தேறும்-செய்யத்தக்க; பொருள்-செயல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது
பரிப்பெருமாள்: ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் நாலு பொருளையும் ஆராய்வேண்டும் என்றார். அந்நாலினும் ஓரோர் பொருளில் தேற முடியாரை அவரவர் பொருளிலே தெளிக; எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.
பரிதி: நம்பின பின் சந்தேகம் பண்ணக் கடவானல்லன் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவரைத் தேர்ந்து உணர்ந்த பின்னும் தன்னுடன் பிறந்தார் சுற்றத்தாரேனும் அவர் அவரால் கொள்ளலாகும் கருமம் கொள்க; மற்று ஆகாதன கொள்ளற்க.
பரிமேலழகர்: ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு, 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' :ஆகுபெயர்.

'ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களைத் தேறுக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆயந்த பின்னும் நம்பும் பொருளை நம்புக', 'ஆராய்ந்தபின் தெளிந்த பொருள்களை ஐயப்படாமல் நம்புக', 'ஆராய்ந்தறிந்து நம்பத்தகுந்தவன் என்று தெரிந்தபின், அவன் எந்தக் காரியத்துக்கு ஏவத் தகுந்தவன் என்பதையும் ஆராய்ந்து ஒப்படைக்க வேண்டும்', 'ஆராய்ந்தபின், நம்பத்தக்கவைகளை ஐயுறாது நம்புதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஆராய்ந்தபின் உரிய செயல்களைத் தெளிந்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆராயாமல் எவரையும் பணிக்குத் தேர்வு செய்யற்க; தேர்ந்தபின் அவர்க்கேற்ற துறையைத் தேர்ந்து ஒப்படைக்க.

எவரையும் ஆராயாது தேர்வுசெய்யற்க; ஆராய்ந்தபின் தேறும் பொருளைத் தெளிந்து கொள்க என்பது பாடலின் பொருள்.
'தேறும் பொருள்' என்பது என்ன?

தேறற்க என்ற சொல்லுக்கு தேர்வு செய்ய வேண்டா என்பது பொருள்.
யாரையும் என்ற சொல் எவரையும் என்ற பொருள் தரும்.
தேராது என்ற சொல்லுக்கு ஆராயாது என்று பொருள்.
தேர்ந்தபின் என்ற தொடர் ஆராய்ந்தபின் என்று பொருள்படும்.
தேறுக என்றது (உரியன) தேர்வு செய்க (மற்றவற்றை விலக்குக) எனப்படும்.

எவரையும் ஆராயாது தேர்தல் கூடாது. தேர்ந்தபின், அவரது திறமைக்கு ஏற்ற தொழிலை அவரிடம் ஒப்படைக்கவும்.

எளிதாக யாரையும் தேர்வு செய்யக்கூடாது. அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் என்னும் நான்கிலும் ஒருவரது மனநிலையை ஆராய்ந்து அறிந்து தேர்வு செய்யவேண்டும் என்று இவ்வதிகாரத்து முந்தைய பாடல் ஒன்றில் (குறள் 501) கூறப்பட்டது. தகுதி, முன்னனுபவம், நடத்தை போன்ற பலவற்றில் ஆராய்ச்சி செய்து தேறவேண்டும் என்றும் இதை விளக்கலாம். அந்த ஆய்வு முடிந்தபின் பொருளை அதாவது அவர்க்குண்டான தொழில் திறமையை அறிந்துகொண்டு பொறுப்புகள் வரையறுத்துப் பணியை ஒப்படைக்க வேண்டும்.

எல்லாராலும் எல்லாச் செயலையும் செய்து விட முடியாது. அவர் எந்தச் செயலுக்குத் தகுந்தவர் என்பதையும் ஆராய்ந்து ஒப்படைக்க வேண்டும். தேறுக, தேறற்க என்னும் சொற்கள், கொள்ளும் செயலும் கொள்ளலாகாத செயலையும் வகைப்படுத்தி, அவரால் கொள்ளலாகும் பணியை ஒப்படைக்க, என்ற பொருளில் அமைந்தது.
வினைவகையில், 'தேறற்க' என்றது பொதுத்தேர்வும் தேறுக என்றது சிறப்புத்தேர்வும் பற்றியனவாகும். 'பொருள்' ஆகுபொருளது என்று தேவநேயப்பாவாணர் உரை கூறுகிறது.

'தேறும் பொருள்' என்பது என்ன?

ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இயல்பு இருக்கும். இதன்வழி அவர் மேற்கொள்ளும் பணியில் அவர்க்கென ஒரு தனித் திறமை தென்படும். அத்திறனை அடையாளப்படுத்தி அதற்கேற்ற துறைக்கு உரிய தகுதியாளன் இவன் என்பதை அறிந்து பின்னர் தேர்வு செய்க. இதைத் தேறும் பொருள் என்று குறள் சொல்கிறது. பரிமேலழகர் தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினை என விளக்கினார். பொருளுக்குக் காரணமாக வினை பொருள் எனப்பட்டது.

தேறும் பொருள் என்றது அவரவர் ஆற்றுதற் கேற்ற வினைகளைக் குறித்தது.

எவரையும் ஆராயாது தேர்வுசெய்யற்க; ஆராய்ந்தபின் உரிய செயல்களைத் தெளிந்து கொள்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஏற்ற செயல்களை தெரிந்து தெளிதல் செய்து ஒப்படைக்க.

பொழிப்பு

ஆராயாது எவரையும் தேர்வு செய்யாதீர்; ஆயந்த பின் உற்ற செயல்களைத் தேர்வு செய்க.