இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0501



அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:501)

பொழிப்பு: அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

மணக்குடவர் உரை: அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான்.
முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார்.

பரிமேலழகர் உரை: அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் - அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும், நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும்.
(அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல், பொருள் உபதையாவது: சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவருக்கும் இயைந்தது, நின் கருத்துஎன்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்பஉபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும்என்று என்னை விடுத்தாள், அவனைக் கூடுவையாயின் நினக்குப்பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும் எனச்சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒருநிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான்எண்ணற்குக் குழீயினார் என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம்முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல்ஈண்டை யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை?எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும்திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக்கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையைஉட்கொண்டு இவர் ஓதியது அறியாது,பிறரெல்லாம் இதனைஉயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத்தோன்றியவாறே உரைத்தார்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: (தன் காரியத்தைச் செய்ய ஒருவனை நியமிக்கிற போது அவனைப் பற்றி நன்றாக அறிந்துகொண்ட பிறகே அவனை நம்ப வேண்டும்.) தர்மங்களை மதித்து நடப்பவனா, நல்வழியில் பொருள் சம்பாதித்து வாழ்க்கை நடத்துகிறவனா, குற்றமான இன்பங்களை விரும்பாதவனா, சமயம் நேர்ந்தால் உயிருக்கு அஞ்சாமல் உதவக் கூடியவனா என்ற நான்கையும் விவரமாக அறிந்து கொண்ட பிறகே ஒருவனை நம்ப வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப்படும்.


அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம்:
பதவுரை: அறம்-நல்வினை; பொருள்-உடைமை; இன்பம்-மகிழ்ச்சி; உயிர்-உயிர்; அச்சம்-நடுக்கம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும்;
பரிப்பெருமாள்: அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும்;
பரிதி: தன்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும்;
காலிங்கர்: மறைமுதலாகிய நூல் யாவற்றினும் சொன்ன அறம், பொருள், இன்பம், வீடு என வகுத்த நால் வகையாகலின், அவற்றுள் அறமானது, பாவம் அனைத்தையும் பற்று அறுப்பது என்றும், இருமை இன்பம் எய்துவிப்பது என்றும், அவற்றுள் பொருளானது, பலவகைத் தொழிலினும் பொருள் வருமேனும் தமக்கு அடுத்த தொழிலினாகிய பொருளே குற்றமற்ற நற்பொருள் என்றும்; மற்று இனி இன்பமாவது, கற்பின் திருந்திய பொற்புடையாட்டி இல்லறத் துணையும் இயல்புடை மக்களும் இருதலையானும் இயைந்த இன்பம் என்றும்; மற்றும் இவற்றுள் உயர்ந்த வீடாவது, பேதைமையுற்ற பிறப்பு, இறப்பு என்னும் வஞ்சப் பெருவலைப் பட்டு மயங்காது நிலைபெற நிற்கும் வீடு இது என்றும்;
பரிமேலழகர்: அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும்;

'அறம், பொருள், இன்பம், உயிரச்சம் என்னும்' என்றும் 'தன்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும்' என்றும் அறம், பொருள், இன்பம், வீடு என வகுத்த' என்றும் 'அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும்; என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். உயிரச்சம் என்பதை விளக்குவதில் தொல்லாசிரியர்கள் வேறுபட்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறம்பொருள் இன்பம் உயிர்க்கு அஞ்சுதல்', 'ஒருவனிடத்து நம்பிக்கை கொள்ளும்முன் அறம், பொருள், இன்பம், உயிருக்கு அஞ்சும் அச்சம் ஆகியவை பற்றிய', 'அறம், பொருள், இன்பம், தன்னுயிரின் பொருட்டு அச்சம் என்னும்', 'அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் என்ற', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் என்பது இப்பகுதியின் பொருள்.

நான்கின் திறம்தெரிந்து தேறப் படும்:
பதவுரை: நான்கின்-நான்கினது; திறம்-கூறுபாடு; தெரிந்து-ஆராய்ந்து(அறிந்து); தேறப்படும்-திண்ணமாகத் தெளியப்படும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான்.
மணக்குடவர் குறிப்புரை: முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார். [மணக்குடவர் இப்பாடலை 8-ஆவதாகக் கொண்டார்]
பரிப்பெருமாள்: நான்கினையும் கூறுபடுத்து ஆராய்ந்து பின்பு தேறப்படும் என்றவாறு.
மேற்கூறிய குற்றமும் குணமும் ஆராய்தலேயன்றி அறத்தை வேண்டியதால், பொருளை வேண்டியதால், இன்பத்தை வேண்டியதால், அச்சம் உளதாம் என்றாதல் அரசன்மாட்டுத் தீமையை நினையாமையை ஆராய்ந்து பின்பு அவரைத் தேறப்படும் என்று கூறப்பட்டது. [பரிப்பெருமாள் இப்பாடலை 8-ஆவதாகக் கொண்டார்]
பரிதி: நாலு காரியமும் விசாரித்து யாதொரு காரியமும் செய்வான் என்றவாறு.
காலிங்கர்: இங்ஙனம் இவை நான்கின் திறம் தெரிந்து, பின் தமக்கு அடுத்தது ஒன்றினைத் தலைத்தேறித் தெளிய அரசர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும்.
பரிமேலழகர் விரிவுரை: அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல், பொருள் உபதையாவது: சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவருக்கும் இயைந்தது, நின் கருத்துஎன்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்பஉபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும்என்று என்னை விடுத்தாள், அவனைக் கூடுவையாயின் நினக்குப்பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும் எனச்சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒருநிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான்எண்ணற்குக் குழீயினார் என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம்முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல்ஈண்டை யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை?எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும்திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக்கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையைஉட்கொண்டு இவர் ஓதியது அறியாது,பிறரெல்லாம் இதனைஉயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத்தோன்றியவாறே உரைத்தார்.

'நான்கினையும் கூறுபடுத்து ஆராய்ந்து பின்பு தேறப்படும்', 'நாலு காரியமும் விசாரித்து யாதொரு காரியமும் செய்வான்;, 'இவை நான்கின் திறம் தெரிந்து, பின் தமக்கு அடுத்தது ஒன்றினைத் தலைத்தேறித் தெளிய' 'உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவ்வகையால் ஒருவனை ஆராய்ந்து தெளிக', 'அவனுடைய மனத்தின் திறமறிந்து அவனைத் தெளிய வேண்டும்', 'நான்கிலும் ஒருவனது மனநிலையைச் சோதித்து அறிந்து, பின் அவனை நம்ப வேண்டும்', 'நான்கின் காரணமாக ஒருவருடைய தன்மையை ஆராய்ந்து அவர் இயல்பு துணியப்படுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

'நான்கிலும் ஒருவனது மனநிலையை ஆராய்ந்து அறிந்து, பின் அவனைத் தெளிய வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் நான்கிலும் உள ஆய்வு வழி, அறிந்த பின்னர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் நான்கிலும் ஒருவரது மனநிலையை ஆராய்ந்து அறிந்து, பின் அவரைத் தெளிய வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'உயிர்அச்சம்' என்பதன் பொருள் என்ன?

அறம் என்ற சொல்லுக்கு அறநம்பிக்கை என்பது இங்கு பொருள்.
பொருள் என்ற சொல் செல்வத்தின் மீதுள்ள நாட்டம் என்று இங்கு பொருள்படும்.
இன்பம் என்ற சொல் இங்கு இன்ப விருப்பங்கள் என்ற பொருள் தரும்.
நான்கின் என்ற சொல்லுக்கு நான்கிலும் என்று பொருள்.
திறம் தெரிந்து என்ற தொடர் இங்கு மனநிலை உணர்ந்து என்ற பொருளது.
தேறப்படும் என்ற சொல் தேர்ந்தெடுக்கப்படுவர் எனப்படும்.

அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் என்னும் நான்கிலும் ஒருவரது மனநிலையை ஆராய்ந்து அறிந்து, பின் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அறம், பொருள், இன்பம் மற்றும் உயிருக்காக அஞ்சுதல் ஆகிய நான்கின் திறம் பற்றிப் பேசப்படுவதால் இப்பாடல் மிக உயர்ந்த பதவிகளுக்கான தேர்வு பற்றியது எனக் கொள்ள இடமுண்டு. அத்தகைய பணிகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கப்படும் முறை பற்றிக் கூறுகிறது இப்பாடல்.
ஒருவரைத் தேர்வு செய்யும்போது, அவருக்குச் செயலறிவும் செயலாற்றலும் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்தால் மட்டும் போதாது; அவரது நம்பகத்தன்மையும் சோதனைக்குள்ளாக்கப்படவேண்டும்.
அறம் பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்தபின்பு ஒருவன் தெளியப்படுவான் என்கிறது குறள். அறவுணர்வு இல்லாதார் காட்டிக் கொடுக்கத் தயங்கார்; பொருள் நிர்வாகத்தில் நேர்மை மிக இன்றியமையாதது; இன்ப வேட்கை மிகுந்தவராயின் கடமைகளில் சோர்வடைர்; உயிர்க்கு அஞ்சுபவர்கள் வேண்டிய காலத்தில் துணையாக மாட்டார். பொதுவாக இவற்றைத் தேர்வுக்கான அடிப்படைக் குணங்களாகக் கொண்டு ஒருவருடைய மனவியல்பை ஆராய்ந்து அவர் திறம் துணியப்படுதல் வேண்டும். இவற்றான் எவர் சற்றும் மனம் திரியாதிருக்கின்றானோ, அவரையே ஆட்சிப்பணிகளில் அமர்த்த வேண்டும். தேர்வாகப் போகிறவர் அறத்தில் உறுதி உடையவனா? பொருளே பெரிது என்று கருதி தீதான வழியில் வரும் பொருள்களை ஏற்க விரும்புவனா? இல்லில் இருந்து வாழும் வாழ்வில் மட்டும் இன்பம் பெறுபவனா? உயிர்க்காக அஞ்சாமல் உதவி செய்யக் கூடியவனா? என்றவற்றில் ஆராய்ந்து தெரிந்து கொண்ட பிறகே அவர்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

பரிமேலழகர் உரை கௌடிலீயம் போன்ற வடநூலில் கூறப்பட்ட உபதை அதாவது 'மறைவிற் செய்யுஞ் சோதனை' பற்றிச் சொல்கிறது; மாறான நிகழ்ச்சிகளைக் கையாளும் வழிமுறைகளை பற்றி விரிவாகப் பேசுகிறது; அது மேற்கோள் காட்டும் நூற்பகுதிகளில் கண்ட உத்திகளும் அதில் கூறப்பட்டுள்ள விளக்கங்களும் சிறப்பாக இல்லை.

'உயிர்அச்சம்' என்பதன் பொருள் என்ன?

தன் உயிர்க்கு அஞ்சாது நாட்டுத் தலைவனையும் நாட்டையும் காப்பாற்றும் குணம் உண்டா என்று சோதித்துப் பார்ப்பது உயிரச்சம் எனப்பட்டது என விளக்குவர். 'உயிரச்சம்-வினைவழிக்குற்ற மற்ற உயிர்கள் துன்பமுறுதல் கூடாது' என உயிர்கள் படுந்துன்பத்திற்காகத் தாம் அஞ்சுதல் எனவும் 'இதனை தீதிறத்தார் பக்கமே செல்க' எனத் தீக்கடவுளுக்குக் கண்ணகி தந்த ஆணையாலும் உணரலாம் என்றும் விளக்கப்பட்டது.
பரிதியார், 'தன்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்னும் நாலுகாரியமும் விசாரித்து' என்றார். மோட்சம் என்பது வீடு குறித்த சொல் ஆகும். காலிங்கர் 'உயிரெச்சம்' என்பது முத்தி என்றது எனக் குறிப்பிட்டே உரை வரைந்துள்ளார். அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராயவேண்டும் எனக் கொண்டால் உயிரச்சத்தையும் ஒரு பொருளாகக் கருத நேரிடுகிறது. அச்சம் உயிர்க்குணம். அது பொருளாக முடியாது எனக் கருதி உயிரெச்சம்’ என்ற ஒரு பாடங்கொண்டு பரிதியும் காளிங்கரும் வீடு எனப் பொருள் கொண்டனர் என்பர். அல்லது இவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு என எண்ணப்படும் முறை கருதியும் உயிரச்சத்தை வீடு எனக் கொண்டிருக்கலாம்.
வீடு பற்றிக் குறளில் எங்கும் சொல்லப்படவில்லை; வீடு கூறுவது வள்ளுவர் உள்ளமாயின் வெளிப்படையாகக் கூறாது உயிர் எச்சம் என வேறொரு வாய்ப்பாட்டாற் கூறார் என்பர் ஆய்வாளர்கள். எனவே 'உயிரெச்சம்' என்ற பாடம் ஏற்கப்படவில்லை.

உயிர்அச்சம் என்பதன் பொருள் தன் உயிர்க்கு அஞ்சுதல் என்பது.

அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் நான்கிலும் ஒருவனது மனநிலையை ஆராய்ந்து அறிந்து, பின் அவனைத் தெளிய வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உயர்பதவி ஏற்பவனை அறம், பொருள். இன்பம், உயிர்அச்சம் இவற்றில் ஆய்ந்து தெரிந்து தெளிதல் வேண்டும்.

பொழிப்பு

அறம், பொருள், இன்பம், உயிர்க்கு அஞ்சுதல் என்பன பற்றிய உளநிலை அறிந்து ஒருவனைத் தெளிய வேண்டும்.