குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு
(அதிகாரம்:தெரிந்து தெளிதல்
குறள் எண்:502)
பொழிப்பு: நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு.
இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு.
பரிமேலழகர் உரை:
குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து, குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி, வடுப்பரியும் நாண் உடையான்கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு.
(குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய வகை ஆறும், மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்: இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.)
வ சுப மாணிக்கம் உரை:
நற்குடியில் பிறந்து குற்றம் இல்லாமல் பழிக்கு நாணுபவனே நம்பத் தக்கவன்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு.
|
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி:
பதவுரை: குடி-நற்குடி; பிறந்து-தோன்றி; குற்றத்தின்-பிழைகளினின்றும்; நீங்கி-தவிர்த்து.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி;
பரிப்பெருமாள்: உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி;
பரிதி: இல்லறத்தின் செல்வக் குடியிலே பிறந்து குற்றமில்லாத;
காலிங்கர்: மற்று இவ்வுலகத்துத் தாமும் அருங்குடிப் பிறந்த அரசர் ஆகலான் தம்மொடும் அருந்துதற்கு அமைந்தோனாகி நற்குடிப்பிறந்து மறந்தும் ஒரு குற்றம் வரின்; .
பரிமேலழகர்: உயர்ந்த குடியில் பிறந்து, குற்றங்களினின்று நீங்கி;
பரிமேலழகர் குறிப்புரை: குற்றங்களாவன: மேல் அரசனுக்குச் சொல்லிய வகை ஆறும், மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம்.
'உயர்குடியில்/செல்வக்குடியில்/ நற்குடியில் பிறந்து குற்றமில்லாத' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நற்குடியில் பிறந்து குற்றங்களின் நீங்கி', 'நல்ல குடும்பத்தில் பிறந்தவனாகவும், இதுவரைக்கும் குற்றங்களில் சம்பந்தப்படாதவனாகவும்', 'உயர்ந்த குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாதவனாய்', 'ஒழுக்கமுடைய நற்குடியில் பிறந்து, குற்றங்களிலிருந்து நீங்கி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நற்குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாதவனாக என்பது இப்பகுதியின் பொருள்.
வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு:
பதவுரை: வடு-குற்றம்; பரியும்-அஞ்சுகின்ற; நாண்-இழி தொழில்களில் மனஞ் செல்லாமை; உடையான்-உடைமையாகக் கொண்டவன்; கட்டே-இடத்தே; தெளிவு-ஆராய்ந்து துணிதல்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு.
மணக்குடவர் குறிப்புரை: இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு.
பரிப்பெருமாள்: தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணே தெளிதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சுக்கிரர் மதம். இதுவும் உடம்பாடென்று கொள்ளப்படும்.
பரிதி: நாணமுடையானிடத்திலே உலகம் தெளிவு பெறும் என்றவாறு.
காலிங்கர்: அதனை விரைந்து அறுத்தற்கு அமைந்த மானம் உடையோன் யாவன்; மற்று அவன் கண்ணதே தாம் தெரிந்து தெளியும் தெளிவு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: ஈண்டுப் பரியும் என்பது அறுக்கும் என்றாயிற்று.
பரிமேலழகர்: தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சாநிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு.
பரிமேலழகர் குறிப்புரை: நாண்: இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.
'பழியை அறுக்கவல்ல நாணமுடையவன் கண்ணதே அரசனது தெளிவு' என்று மணக்குடவர்/பரிப்பெருமாளும் 'நாணமுடையானிடத்திலே உலகம் தெளிவு பெறும்' என்று பரிதியும் 'மானம் உடையோன் கண்ணதே தெரிந்து தெளியும் தெளிவு' என்று காலிங்கரும் 'குற்றம் வருமோ என்று அஞ்சி நாணுடையவன் கண் அரசனது தெளிவு' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பழியைக் கண்டு இரங்கும் நாணமுடையவனையே உலகம் நம்பும்', 'குற்றம் செய்ய அஞ்சுகிறவனாகவும் இருக்கிறவனிடத்தில் நம்பிக்கை வைக்கலாம்', 'பழிச்சொல் வரக்கூடாதே யென்று அஞ்சும் மானமுடையவனிடத்தே, நம்பிக்கை வைக்கற்பாலது', 'தமக்குக் குற்றம் வருமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கின்ற நாணுடையானிடமே தெளிவு கொள்ளப்படும். (நாணுடையோனே நல்லோன் என்று துணிதற்குரியன்)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
பழியைக் கண்டு இரங்கும் நாணமுடையவனிடத்தே நம்பிக்கை வைக்கற்பாலது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நற்குடிப் பிறப்புள்ள, குற்றப் பின்னணி இல்லாத, பழி கண்டு இரங்கும், தவறானவற்றிற்கு வெட்கப்படுபவன் மீது நம்பிக்கை கொள்ளலாம்.
குடிப்பிறந்து குற்றங்கள் இல்லாதவனாக பழியைக் கண்டு இரங்கும் நாணமுடையவனிடத்தே, நம்பிக்கை வைக்கற்பாலது என்பது பாடலின் பொருள்.
'குடிப்பிறந்து' குறிப்பது என்ன?
|
குற்றத்தின் நீங்கி என்ற தொடர்க்கு குற்றம் இல்லாமல் என்பது பொருள்.
வடுப்பரியும் என்ற தொடர் பழிக்கு இரங்கும் என்ற பொருள் தரும்.
நாணுடையான் என்ற சொல்லுக்குக் கூசுகின்றவன் என்று பொருள்.
கட்டே தெளிவு என்றது 'இடத்தில் நம்பிக்கை' எனப் பொருள்படும்.
|
நல்லகுடியில் பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய்ப், பழிச்சொல்லுக்கு அஞ்சுபவனாய், இழிதொழில்களில் செல்ல நாணமுடையவன் நம்பிக்கைக்குரியவனாகிறான்.
இங்கு தேர்வு செய்யப்படுபவன் குணநலன்கள் எவை எனக் கூறப்படுகின்றன. குடிப்பிறத்தலும், குற்றத்தின் நீங்குதலும், வடுப்பரிதலும், நாணுடைமையும் இவை நான்கும் உடையவன் தேர்வாகிறான்.
குடிப்பிறப்பு பண்பான குடியில் பிறந்ததைக் குறிக்கும்.
குற்றத்தின் நீங்கி என்பதற்கு பரிமேலழகர் அறுவகைக் குற்றங்களைச் சொல்கிறார். அவை காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பன. இவை தவிர்த்து மடி அதாவது ஊக்கமின்றிச் சோம்பி இருத்தல், மறதி, பிழைப்பு அதாவது தொழிலில் அடிக்கடி தவறு உண்டாக்குதல் என்றவற்றையும் சேர்த்துக் குற்றங்கள் என்கிறார்.
நாமக்கல் இராமலிங்கம் குற்றமே செய்யாதவன் எனப் பொருள் கூறுவார், கல்வி அறிவு பெற்று சிற்றினம் சேராமல் இருப்பவனுக்கு இக்குணம் அமையும்.
மூன்றாவதாக வடுப்பரிதல் என்று சொல்லப்பட்டது. வடு என்றது குற்றம் என்றும் பரிதல் வருந்துதல் என்றும் பொருள்படும். இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே...... (நெஞ்சொடு கிளத்தல் 1243) என்ற பாடலில் பரிதல் என்பது வருந்துதல் என்ற பொருளில் ஆளப்பட்டது. வடுப்பரிதல் என்பது குற்றத்திற்காக வருந்தும் குணம் கொண்டவன் என்ற பொருள் நல்குவது. தான் மேற்கொண்ட செயலில் தெரியாமல் தவறு நடந்துவிட்டால் அல்லது அது தவறு என்று உணர்த்தப்பட்டால் அதற்காக வருந்துவதைச் சொல்வது. நல்ல மனவளம் கொண்டவனுக்கு இக்குணம் இருக்கும்.
தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணுடையான் என்று மணக்குடவர் உரைப்பதால் இவர் 'வடுவரியும்' எனும் பாடம் கொண்டிருக்கலாம். 'மறந்தும் ஒரு குற்றம் வரின் அதனை விரைந்து அறுத்தற்கு அமைந்த மானம் உடையோன்' எனச் சொல்லி காலிங்கர் 'ஈண்டுப் பரியும் என்பது அறுக்கும் என்றாயிற்று' எனப் பதவுரையும் தருகிறார். இவர் பரியும் என்ற சொல்லுக்கே அறுக்கும் எனப் பொருள் கொண்டார்.
கடைசியாக மேற்கூறிய மூன்றையும் கொண்டு நாண் உடையவனாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. நாண் என்பதற்குச் செய்யத் தகாதவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல் என்றும் இழிதொழில்களில் மனஞ்செல்லாமை என்றும், குற்றம் செய்யும் எண்ணத்திற்குக் கூசுதல் என்றும் பொருள் கூறுவர். இதற்கும் தூய்மையான மனம் வேண்டும். நாணுடையோனே நல்லோன் என்று துணிதற்குரியன் என்பார் சி இலக்குவனார்.
|
'குடிப்பிறந்து' குறிப்பது என்ன?
குடிப்பிறந்து என்றதற்கு நற்குடியிலே பிறந்து, உயர்ந்த குடியில் பிறந்து, ஒழுக்கமுடைய நற்குடியில் பிறந்து, செல்வக் குடியிலே பிறந்து எனப் பலவாறாக உரை கூறினர். குடிப்பிறப்பு என்று வள்ளுவர் சொன்னது பண்பால் சிறந்த குடும்பத்தில் தோன்றியதை. குடி என்றால் இங்கே சாதி/இனம் என்று பொருளன்று. எல்லா இனத்திலும் நல்ல குடும்பங்கள் உள்ளன.
நல்ல குடும்பச் சூழலில் வளர்ந்தவனுக்கு இயல்பாக சிறந்த குணங்களும் நிரம்பிய அறிவும் திறமையும் வந்தமையும்.
குடிப்பிறந்து என்பது நற்குடியில் பிறந்து என்ற பொருள் தரும்.
|
நற்குடியில் பிறந்து குற்றங்கள் இல்லாதவனாக பழியைக் கண்டு இரங்கும் நாணமுடையவனிடத்தே, நம்பிக்கை வைக்கற்பாலது என்பது இக்குறட்கருத்து.
குற்றம் தொடர்பில்லாதவனாக தெரிந்து தெளிதல் வேண்டும்.
நற்குடியில் பிறந்து, குற்றம் இல்லாமல், பழி கண்டு இரங்கும், நாணமுடையவன் நம்பத் தக்கவன்.
|