இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0505



பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:505)

பொழிப்பு (மு வரதராசன்): (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.



மணக்குடவர் உரை: ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம்.
இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.

பரிமேலழகர் உரை: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,பிறிதில்லை.
(இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவருடைய பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர் செய்யும் செயல்களே உரைகல். ஒவ்வொருவரும் வேறு பிறவற்றால் சிறப்புடையார் போலத் தோன்றினாலும் உண்மையில் அவர்களுடைய பெருமையை அல்லது கீழ்மையை எடுத்துக்காட்டுவது அவர்களுடைய செயல்களே என்பது கருத்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக் கல் தத்தம் கருமமே.

பதவுரை: பெருமைக்கும்-சிறப்புக்கும், நிறைகுணத்திற்கும்; ஏனை-மற்றும்; சிறுமைக்கும்-குறைபாட்டிற்கும், குறைவிற்கும்; கருமமே-செயலே, செய்திறனே. செயற்பாங்கே; கட்டளைக்கல்-உரைகல்; தத்தம்-தங்கள் தங்களது, அவரவர்.


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா;
பரிப்பெருமாள்: ஒருவனைப் பெரியனாக்குதற்கும் சிறியனாக்குதற்கும் வேறு தேடவேண்டா;
பரிதியார்: இவர் பெரியவர் இவர் சிறியவர் என்ன வேண்டாம்;
காலிங்கர்: உலகத்துப் பெரியோரது பெருந்தன்மைக்கும் சிறியோரது சிறுதன்மைக்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒருவர் தேறி அறிய வேண்டுங்கால் வேறு ஒன்றும் வேண்டுவது இல்லை;
பரிமேலழகர்: பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும்;

'மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் எய்தும் எனச் சேர்த்துரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவர் பெரியவர் இவர் சிறியவர் என்று அறிய', 'குணத்தால் வரும் பெருமைக்கும் குற்றத்தால் வரும் சிறுமைக்கும்', 'மக்கள் பெருமையை அறிவதற்கும் மற்றப்படி அவர்கள் சிறுமையை அறிவதற்கும்', 'ஒருவருடைய பெருமைக்கு, சிறுமைக்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவரது சிறப்புக்கும் குறைபாடுகளுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

தத்தம் கருமமே கட்டளைக் கல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்
பரிப்பெருமாள்: அவரவர் செய்யவல்ல கருமந்தானே படிக்கல்லாம்; அதற்குத்தக ஒழுக என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையும் என்பது நாரதர் மதம். இது குற்றங்கூறாமையால் யாவர்க்கும் உடம்பாடு என்று கொள்ளப்படும்.
பரிதியார்: அவரவர் செய்த தொழிலே சொல்லும் என்றவாறு.
காலிங்கர்: மற்று என்னை எனின், அவர் அவர் செய்யும் செய்தி வேற்றுமை தானே அவரது தகுதிமாற்று அறியும் கருவியாகிய உரைகல்லும் நிறை தூக்கிய கட்டளைக் கல்லும் என்றவாறு.
பரிமேலழகர்: உரைகல்லாவது தாம் தாம் செய்யும் கருமமே, பிறிதில்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.

'அவரவர் செய்யவல்ல கருமந்தானே உரைகல்லாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரவர் செயலே உரைகல்லாகும்', 'உரைகல்லாவது தாம்தாம் செய்யும் செயல்களேயாம்; வேறில்லை', 'அவரவர் செய்யுஞ் செய்கையே உரைகல் ஆகும்', 'உரைக்கல்லாக அமைவது அவரவர் செய்யும் கருமமே (செய்யும் செயலைக் கொண்டே பெரியவர் என்றும் சிறியவர் என்றும் தெளிதல் வேண்டும்).' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவரவர் செய்கையே உரைகல் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
ஒருவரது சிறப்புக்கும் குறைபாட்டிற்கும் அவரவர் செய்கையே கட்டளைக் கல் என்பது பாடலின் பொருள்.
'கட்டளைக்கல்' என்பது என்ன?

செயலின் செம்மை ஒருவர்க்குச் சிறப்பு தரும்.

ஒருவரது சிறப்பை அறிவதற்கும், மற்றொருவர் அடையும் சிறுமையைத் தெரிந்துகொள்வதற்கும் அவரவர்களின் செயல்களே உரைகல்லாக இருக்கின்றன.
பணிக்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறும் அதிகாரத்திலுள்ள பாடல். செயல் நிறைவேற்றத் தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையைச் சொல்லுகிறது இது. மாந்தர்தம் செயல்திறன் மூலமே ஒருவர் வேலைக்கு ஏற்றவரா அல்லரா என்பது அறியப்படவேண்டும். இப்பாடலில் உள்ள கருமம் என்ற சொல்லுக்கு செயல் என்று மட்டுமே பொருள் கொள்ள வேண்டும். இங்கு செயல் என்பது செயற்பாடு அல்லது செயல்திறன் (Performance) குறித்தது. செயல்திறன் கூடுதலாக உள்ளவர் பெருமை சேர்ந்தவர் ஆகிறார். புதிதாகப் பணிக்கு வருகிறவர் என்றால் மணக்குடவர் உரையில் கண்டபடி "ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது" என்று தகுதிகாண் பயிற்சி (probation )க்காலம் அமைத்து செயல்திறன் அறியலாம். செயல்வகையில் தேறவில்லையென்றால் குறைபாடுடையவர் ஆகின்றார். ஒருவர் முடித்த செயல் அவர்க்கு மேன்மை ஏற்படுத்தும். நற்செயல் திறனால் மேன்மையும் திறன்குறைவால் குறைபாடும் வரும் என்பது செய்தி.
ஒருவரைத் தெரிந்து தெளிதலில் உரைகல்லாக அமைவது அவரது செயல்திறன்தான் என்கிறது இக்குறள். அறிவுத் திறனோ பேச்சு வன்மையோ எதுவானாலும் முடிவில் அது எவ்விதம் செயல்திறனாக மாறுகிறது என்பதை வைத்தே அவர்களைத் தெரிவு செய்தல் வேண்டும்; தொடர்ந்து நீடிக்க வைப்பதற்கும் அச்செயல்திறனே உதவும் உரைகல்லாக இருக்கும்.

அதிகாரத்தலைப்பான 'தெரிந்து தெளிதல்' அதாவது 'ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல்' என்பதை இயைபுபடுத்தி நோக்கும் போது, பெருமை அதிகாரத்தில் பேசப்படும் பெருமையினின்று இது வேறுபட்டது என்பது எளிதில் விளங்கும். பழைய உரையாசிரியர்கள் இதில் தெளிவாக இருந்தார்கள். எனவே அவர்கள் செயல் திறன் பெற்றவர்களைத் தெரிந்து தேர்வு செய்வது எவ்வாறு என்ற நோக்கிலேயே உரை கண்டனர். ஆனால் பிற்கால உரையாசிரியர்களின் விளக்கங்கள் திசை மாறிச் சென்றன.
சிலர் உயர்ந்தவர் பெருமை/இழிந்தவர் சிறுமை போன்றவை இக்குறளில் பேசப்படுவதாக உரை செய்தனர். இவை பொருத்தமற்றவையாகும். இன்னும் சிலர் இக்குறளில் கருமம் என்ற சொல்லை முன்னைவினை என்ற பொருளில் அதாவது முன் வினைப்பயனையும், அதனால் விளையும் இயல்புகளையும் கூறுவதாகக் கொண்டார்கள். இதுவும் முற்றிலும் தவறானது. பிறப்பு பற்றி இக்குறளில் பேசப்படவே இல்லை என்பது உறுதி. தன் செயல் திறத்தால் மட்டுமே பெருமை, சிறுமை வரும் என்பதே இக்குறள் கூற வந்தது. இக்குறளுக்கான சிறப்புரையில் நேரிய உரை சொல்லும் பரிமேலழகரும், பொழிப்புரையில் பிறப்பாலும் அந்தப் பெருமை வரும் என்பதைச் சேர்த்து, பாடலின் நோக்கத்தை மாற்றிவிட்டார்.
'கையூட்டினாலும் இனவுணர்ச்சியினாலும் கண்ணோட்டத்தாலும் கவர்வினாலும் சிலர் மேன்மையடையினும், உண்மையான உயர்விற்கு ஏதுவாயிருப்பது வினைமுயற்சியே' எனப் பாவாணர் சொல்வார்.
பணிக்கு ஏற்றவரா இல்லையா என்பது மட்டுமே இப்பாடலில் சொல்லப்படுகிறது. அது அந்தத் தொழிலைச் செய்கின்ற முறையால் வரும். தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செவ்வன செய்து முடிப்பவர் சிறப்பானவர்; முடிக்க மாட்டாதவரோ பிழைபட முடிப்பவரோ சிறியவர். மற்றவற்றை ஆராய்வதை விட்டுவிட்டு, அவர் முடித்த செயல்கள் இவை இவை என்று ஆராயவேண்டும். அந்தச் செயல்களால் அவருடைய பண்பு விளங்குவது உறுதி. ஏன் என்றால், பொன் உரைக்கும் கல் மூலம் தங்கத்தின் தகுதிமாற்று அறியப்படுவது போல், ஒருவருடைய நிறை குறைகளை அவர் செய்யும் செயல்கள்வழி மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.

'கட்டளைக்கல்' என்பது என்ன?

கட்டளைக் கல் என்பது உரைகல்லைக் குறிக்கும். உரைகல் என்பது தங்கம் வெள்ளி போன்ற அரிய உலோகங்களை உரைத்து அதாவது உரசி (தேய்த்து) மாற்று(தரம்) பார்த்து அவற்றின் தரத்தை அறிய உதவும் கல் ஆகும்.
மணக்குடவர் இதற்குப் படிக்கல் எனப் பொருள் கூறினார். காலிங்கர் 'தகுதிமாற்று அறியும் கருவியாகிய உரைகல்லும் நிறை தூக்கிய கட்டளைக் கல்லும்' (அதாவது தராசு பிடித்துப் பார்க்கப் பயன்படும் கல் போன்றதும் ஆகும்) என்றார். படிக்கல் நிறையறியும் கல்; உரைகல் மாற்று அறியும் கல். இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு. 'காலிங்கர் இருவகைக் கல்லையும் கொள்வதன் நோக்கம், தீச் செயல்களைக் கொண்டு குற்றங்களை அளந்து காணும் போது நிறைகல்லையும் நற்செயல்களைக் கொண்டு தரத்தை வரையறுக்கும் போது உரைகல்லையும் நாம் கொள்ள அமைத்தனர் எனலாம் (தண்டபாணி தேசிகர்). 'கட்டளைக்கல்- எல்லை வரையறுத்துக் காட்டுங் கல் என்றுங் கொள்ளலாம்' எனச் சொல்வார் வை மு கோபாலகிருஷ்ணமாச்சார்யார்.
இவற்றுள் உரைகல் என்று கூறப்பட்டதே பொருத்தமானதாகும். ‘சால்பிற்குக் கட்டளை யாதெனின், தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல்’ (சான்றாண்மை 986 பொருள்: சால்பாகிய பொன்னின் அளவு அறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின், தோல்வியைத் தம்மினும் தாழ்ந்தாரிடமும் கொள்ளுதல்) என்னும் குறளில் 'உரைகல்' என்ற பொருளிலேயே கட்டளை என்ற சொல் ஆளப்பட்டது.

'கட்டளைக்கல்' என்பது உரைகல்லைக் குறிக்கும்.

ஒருவரது சிறப்புக்கும் குறைபாட்டிற்கும் அவரவர் செய்கையே உரைகல் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

செயல்திறம் என்னும் கருவி கொண்டு தெரிந்துதெளிதல் வேண்டும்.

பொழிப்பு

ஒருவரது செயல் திறனையே உரைகல்லாகக் கொண்டு அவரது சிறப்புகளையும் குறைபாடுகளையும் தெளிவு பெறவேண்டும்.