இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0504



குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:504)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்க.

பரிமேலழகர் உரை: குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து, குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து, மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக.
(மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமேயுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: ஒருவனது நற் குணங்களை முதலில் ஆராய்ந்து, பிறகு அவனிடம் காணப்படும் குற்றங்களையும் ஆராய்ந்து இறுதியாக அவ்விரண்டினுள்ளும் எது மிகுதியாக உளதென எண்ணிப்பார்த்து மிகுதியாய் உள்ளதன் அடிப்படையில் அவனை ஏற்கவோ, தள்ளவோ செய்க.
மனிதரைத் தேர்ந்தெடுப்பது பற்றியதாயினும் எந்த ஒரு பொருள் பற்றியும் குணமும் குற்றமும் நாடி, மிக்கது கொள்ளுமாறு குறளின் நடைப்போக்கு பொதுப்பட அமைந்துள்ளது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.

பதவுரை: குணம்நாடி-குணங்களைக் குறிக்கொண்டு; குற்றமும்நாடிகுற்றங்களையும் தேடி அறிந்து; அவற்றுள்-அவைகளினுள்; மிகை-மிக்கவை; நாடி-ஆராய்ந்து; மிக்க-மிகுதியாக இருப்பனவற்றை; கொளல்-கொள்க.


குணம்நாடிக் குற்றமும் நாடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து;
பரிப்பெருமாள்: ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து; .
பரிதி: ஒருவன் செய்த குற்றமும் தன்மையும் சீர்தூக்கிப் பார்த்து;
காலிங்கர்: ஒருவரைச் சீர்தூக்கிக் கொள்ளும் இடத்து அவர்மாட்டுக் குணம் எத்துணை உள என்றும், குற்றம் எத்துணை உள என்றும் தெரிந்து;
பரிமேலழகர்: குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து, ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து;

'ஒருவனுக்குள்ள குணத்தையும் ஆராய்ந்து குற்றத்தையும் ஆராய்ந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவர் குணங்களையும் குற்றங்களையும் பார்த்து', 'குணம் குற்றங்களுள் ஒன்றே உடையவர் உலகத்தில் இல்லாததால், ஒருவன் குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து', 'குணங்குற்றங்களுள் ஒருவனுடைய குணங்களையும் ஆராய்ந்து அவன் குற்றங்களையும் ஆராய்ந்து', 'குணங்களையும் ஆராய்ந்து குற்றங்களையும் ஆராய்ந்து அவைகளுள் மிகுதியாய் இருப்பனவற்றைத் தேடி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் தேடி அறிந்து என்பது இப்பகுதியின் பொருள்.

அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையாயினும் பன்மையாயினும் மிக்கதனைக் கொள்க.
பரிப்பெருமாள்: அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் தலைமையானும் பன்மையானும் மிக்கதனை அறிந்து கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கௌடிலியர் மதம். காரியம் பல ஆதலின் அது செய்வாரும் பலர் வேண்டும்; ஆதலால், அவரெல்லாரையும் நற்குணத்தாராகத் தேடுதல் அரிது என்பது இதனால் கூறப்பட்டது.
பரிதி: அதில் நற்குணம் தீயகுணம் மிகுதி யாது என்று ஆராய்ந்து அதில் குணத்தைக் கொள்க என்றவாறு.
காலிங்கர்: மற்று அதன் பின்னர் அவற்றுள் மிகுதலுடையனவற்றைத் தெரிந்து, இதின் குணம் மிக்கனவாயின் தெளிந்து கொள்க அல்லது குணம் மிகுதி இல்லையாயின் தெளியவேண்டா என்றவாறு.
பரிமேலழகர்: பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து அவனை அம்மிக்கவற்றானே அறிக.
பரிமேலழகர் குறிப்புரை: மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமேயுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.

'அவற்றுள் மிக்கதனை யறிந்து அவற்றுள்ளும் மிக்கதனைக் கொள்க' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவற்றுள் மிகுதியைக் கொண்டு தெளிக', 'அவனிடத்தில் அவற்றுள் மிகுதியாக இருப்பது குணமாயின் கொள்க; குற்றமாயின் கொள்ளற்க', 'அவ்விருபகுதியுள்ளும் மிக்கவற்றைத் தெரிந்து, அவற்றை உடையவனாக அவனைக் கருதல் வேண்டும்', 'அம் மிகுதிகளைக் கொண்டே தெளிதல் வேண்டும். (குணங்கள் மிக்கிருந்தால் வினைக்கு உரியன் என்றும், குற்றங்கள் மிக்கிருந்தால் வேண்டத்தகாதவன் என்றும் அறிதல் வேண்டும்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவற்றுள் மிகுதியை ஆராய்ந்து தெளிய வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் தேடி அறிந்து அவற்றுள் மிகை ஆராய்ந்து தெளிய வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'மிகை' என்றால் என்ன?

குற்றமேயில்லாதவர் இலர். ஆதலால் நிறை குறை இரண்டனையும் ஆராய்க.

ஒருவருடைய நிறைகளையும் ஆராய்ந்து அவரது குற்றங்களையும் அறிந்து அவற்றுள் மிக்கவற்றைத் தெரிந்து, மிகையானவற்றை உடையவராக அவரைக் கருதி அதன் அடிப்படையில் அவரைத் தேர்வு செய்வதா வேண்டாமா என்ற முடிவுக்கு வர வேண்டும்.

ஒருவரைச் செயலில் ஈடுபடுத்தும் முன்னர் அவரது நிறை குறைகளை ஆராய்ந்து காண வேண்டும். இப்பாடலில் சொல்லப்பட்ட குணம் குற்றங்கள் என்ற சொற்கள் அவர் நல்லவரா அல்லது கெட்ட குணம் கொண்டவரா என்பதை ஆராய்வது அன்று. குணம், குற்றம் என்னும் பண்புகளையுடைய செயல்திறன்களை ஆய்வது பற்றியது. தேர்வுமுறை பற்றிய பாடல் என்பதால் தெரிவாரது குற்றமற்ற செயல்திறம் குற்றமுள்ள செயல்முறை பற்றியன எனக் கொள்ளவேண்டும். குணம் குற்றம் என்பனவற்றை உடன்பாடான தகுதியுடையவர் அல்லது எதிர்மறையான தகுதி படைத்தவர் என்ற அளவையாகவும் கொள்ளலாம். ஏற்கத்தக்க குணங்கள் மட்டுமே கொண்டவரா என்று எவரையும் ஆராயக்கூடாது. உலகில் குணமே நிறைந்து குற்றம் சிறுதும் இல்லாதவர்களையும் காண முடியாது. குணமேயில்லாமல் குற்றம் மட்டும் உடையவர்களும் உலகத்தில் இல்லை. குணமும் குற்றமும் எல்லோரிடமும் விரவியே இருக்கும். ஆகையால் இரண்டையும் நன்கு அறிந்து நிறை மிகுந்திருந்தால் அவரைச் செயல் மேற்கொள்வாராக ஏற்கலாம்; குற்றம் மிகையாக இருந்தால் விலக்கலாம்.
தேறுதலில் உள்ள ஒருவருடைய குற்றங்கள் ஒன்றிற்கு மேற்பட்டனவாகவும் விளங்கித் தோன்றுவனவாகவும் இருந்து, அவரை எப்படித் தெளிவதென்று மயக்கம் நேரின், அம்மயக்கத்தைத் தெளிவிப்பது இக்குறள் என்பார் தேவநேயப் பாவாணர்.

குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை (கொன்றை வேந்தன் 18 பொருள்: குற்றமே யில்லாதவர் ஒருவருமில்லை யாகையால் சுற்றத்தார் அகப்படார்). என்ற ஔவையார் மொழியையும் இக்குறட் கருத்தோடு இணைத்து நோக்கலாம்.
'காரியம் பல ஆதலின் அது செய்வாரும் பலர் வேண்டும்; ஆதலால், அவரெல்லாரையும் நற்குணத்தாராகத் தேடுதல் அரிது என்பது இதனால் கூறப்பட்டது' என்ற பரிப்பெருமாளின் சிறப்புரையை 'அரசியல் செயல்கள் பலவாதலால், அரசியற்கு நற்செயல் செய்வாரும் தீச்செயல் செய்வாருமாகிய இருதிறத்தாரும் தேவையாகலாம். குண-குற்றங்களின் மிகை நாடி அவரவரை அவரவர்க்குத் தக்க காரியங்களில் நிறுவுக; தேருக' என்கின்றார்' என விளக்குவார் தண்டபாணி தேசிகர். மேலும் 'கொலைத்தண்டத்தை நிறைவேற்றக் கொலைக்குணம் உடையானுந்தேவை. ஆதலால் இவ்வுரை அரசியல் நோக்குடைய சிறந்த உரையாகும்' எனவும் இவர் கூறுகிறார். இவ்விளக்கம் குற்றம் மிகக்கொண்டோரையும் முற்றிலும் தள்ளிவிடமுடியாது என்ற பொருளில் உள்ளது என்பது அறியத்தக்கது.
இக்குறள் 'தெரிந்து தெளிதல்' என்ற அதிகாரப் பொருளுடன், பொதுப் பொருளும் தருவதாக உள்ளது. எனவே செயலுக்குத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டும் அல்லாமல் இக்குறட்கருத்தைப் பிற பொருள்களுக்கும் பொருந்தும்படி பயன்படுத்துகின்றனர்.

'மிகை' என்றால் என்ன?

எது அளவிலோ தன்மையிலோ மிக்கவாக அதாவது மிகுதியாக இருக்கிறதோ அது 'மிகை' எனப்படும்.
குணம் குற்றம் இவற்றுள் ஒன்றைமட்டும் உடையார் உலகத்தில் இல்லையாதலால் இவை இரண்டையும் ஆராய்ந்து எது மிகையாக உள்ளதோ அந்த மிகுதியை அளவையாகக் கொண்டு அவன் தகுதி உள்ளவன் அற்றவன் என்பதைத் துணிக என்கிறது பாடல். 'மிகைநாடி’ என்றது குணத்தில் மிகை, குற்றத்தில் மிகை ஆகிய இரண்டையும் நாடி என்ற பொருள் தருவது.
குணம், குற்றம் என்பனவற்றுள் தலைமையானாகப் பன்மையானாக மிக்கது என மணக்குடவர் 'மிகை'க்கு விளக்கம் தருவார். பன்மைபற்றித் தெளிதல் என்பது குணங்குற்றங்களுள் எண்ணிக்கையில் பன்மைபற்றித் தெளிதலைக் குறிப்பது. தலைமையான் மிக்கது என்பது தன்மையால் மேலோங்கி இருக்கும் குணத்தைக் குறிக்கும்; எண்ணிக்கை மட்டுமே கருதி ஒன்றைக் கொள்ளவோ தள்ளவோ கூடாது என்பது செய்தி.
'பல தீய குணங்கள் அதாவது குற்றங்கள் செறிந்துள்ள இடத்தில் சில நற்குணங்கள் வேறு எங்கும் காண இயலாத வண்ணம் இருக்கும். அத்தகைய ஒருவனுடைய சேவை நாட்டிற்கு மிகமிகத் தேவையாதலுங் கூடும். அங்குத் தன்மைக்கே தலைமை தருக என்றது' என்று தன்மையை - பன்மையை (எண்ணிக்கையை) அல்ல - மிகையுடையதாகக் கொள்ளவேண்டிய சூழலும் உண்டு என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குவார் தண்டபாணி தேசிகர்.

ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் தேடி அறிந்து அவற்றுள் மிகுதியை ஆராய்ந்து தெளிய வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மிகை அளவை கொண்டு குணமுள்ளாரைத் தெரிந்து தெளிதல் வேண்டும்.

பொழிப்பு

குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து அவற்றுள் மிகுதியைக் கொண்டு தெளிக.