காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்
(அதிகாரம்:தெரிந்து தெளிதல்
குறள் எண்:507)
பொழிப்பு (மு வரதராசன்): அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.
|
மணக்குடவர் உரை:
அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல் எல்லா அறியாமையும் தரும்.
அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது.
பரிமேலழகர் உரை:
காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல், பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும்
(தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
தனக்குப் பிரியமானவர்கள் என்ற காரணத்துக்காக மட்டும் அறிய வேண்டியதை அறியாதவர்களை நம்பிக் காரியத்தை அவர்களிடம் விடுவது முழு மூடத்தனமாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும்:
பதவுரை: காதன்மை-காதலுடைமை, அன்புடைமை; கந்தா(க)-பற்றுக்கோடாய், ஆதரவாக, துணையாக, காரணமாக; அறிவு-(தொழில்)அறிவு; அறியார்-அறியாதவர்; தேறுதல்-தேர்ந்தெடுத்தல், தெளிதல்; பேதைமை-மடமை, அறியாமை; எல்லாம்-அனைத்தும்; தரும்-கொடுக்கும்.
|
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல்;
பரிப்பெருமாள்: அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்லாதாரைத் தேறுதல்;
பரிதி: வெகுளியை ஆதாரமாக ஒருவரை நம்புவானாகில்;
காலிங்கர்: ஒருவரோடு ஒருவர் வைத்த காதலுடைமையே மூலமாக உலகத்து அறிவது அறியாதாரைத் தெளிதல் யாது;
பரிமேலழகர்: அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல்; [பற்றுக்கோடு - ஆதாரம்].
'அன்பு உடைமை பற்றுக்கோடாக அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி மட்டும் வேறாக 'வெகுளியை ஆதாரமாக ஒருவரை நம்புவானாகில்' என்றுரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அன்பு காரணமாக அறிவிலாதவரை நம்புதல்', 'அன்புடைமையைப் பற்றுக் கோடாகக் கொண்டு அறிய வேண்டுவனவற்றை அறியாதாரை நம்பிப் பணியில் அமர்த்தல்', 'அறியவேண்டுவனவற்றை அறியாதாரைப் பற்றுக் காரணமாக நம்புதல்', 'அன்புடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறிய வேண்டுவன அறியாதாரைத் தெளிதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அன்பு காரணமாக அறிய வேண்டுவன அறியாதாரைத் தெளிதல் என்பது இப்பகுதியின் பொருள்.
பேதைமை எல்லாம் தரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா அறியாமையும் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது.
பரிப்பெருமாள்: எல்லா அறியாமையும் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாதென்றது.
பரிதி: அதனாலே அனேகம் விதனம் வரும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுதானே ஒருவர்க்கு அனைத்து அறிவுக் கேட்டையும் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.
'எல்லா அறியாமையும் கொடுக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'அனேகம் விதனம் வரும்' என்று இப்பகுதிக்கும் மாறுபாடான உரை தந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'எல்லா மடமையும் தரும்', 'அறியாமை எல்லாம் தரும்', 'எல்லாவகையான அறியாமையையும் விளைக்கும்', 'அறியாமை எல்லாவற்றையும் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அனைத்து மடமையான விளைவுகளையும் உண்டாக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அன்பு கந்தாக அறிய வேண்டுவன அறியாதாரைத் தேறுதல் அனைத்து மடமையான விளைவுகளையும் உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
'கந்தா' என்ற சொல்லின் பொருள் என்ன?
|
உரிமைச் சுற்றத்தார் எல்லா வேளைகளிலும் நல்ல ஆதரவாக இருப்பார் என நம்ப வேண்டாம்.
விருப்பமானவர் என்பதற்காக, தொழில் அறியாத ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அது மடமையையே விளைவிக்கும்.
காதன்மை என்பது காதலுடைமை. இது அன்புடைமை என்ற உடன்பாட்டுப் பொருள் தரும் சொல். அன்பு என்றதால் காதற் தொடர்புடையாரான சுற்றத்தார், நண்பர் போன்றவர்களிடம் உண்டாகும் அன்பைக் குறிப்பதாகிறது.
இவர்கள் மீது கொண்ட காதலுடைமை காரணமாக, பணிக்குரிய செயல் அறிவு இல்லாதவரை, தேறுதல் செய்தல் ஆகாது என்கிறது பாடல்.
தொழில் தெரியாவிடினும் அவர்கள் நமக்கு ஆதரவாக - துணையாக இருப்பர் என்ற நம்பிக்கையில் தம்முடன் சேர்த்துக் கொள்ளவேண்டாம் என அறிவுரை கூறப்பட்டது.
அங்ஙனம் ஆதரவு காட்டுவது எல்லா வகையான பேதைமைகளுக்கும் வழி வகுக்கும் என்பதால் உறவினர்க்குக் காட்டும் தனிஆதரவைத் (Nepotism) தவிர்க்க, என இக்குறள் சொல்கிறது.
எவ்வகையான பேதைமை உண்டாகும்?
தம்மேல் அன்பு பாராட்டுவாரையோ அல்லது தாம் அன்பு செலுத்துவோரையோ, அணுக்கமாகக் கொள்வது மடைமை அல்ல; ஆனால் தக்காரை விடுத்துத் தகாதாரைப் பணிக்குத் தேர்வு செய்வது ஓர் அறியாமைச் செயல்; அன்புவளர்ந்த இடமாக இருப்பதால் அறியாமையைக் காணாத ஆராய்ச்சியின் குறைவு என்ற பேதைமை; தலைவன் தன் பொறுப்பும் கடமையும் உணராத அறியாமை; அறியாமையைக் காணாது தேர்ந்தெடுப்பதனால் அதனால் ஏற்படும் விளைவெல்லாம் தேர்வாளர்க்கு வருவது; அவரும் பழித்துப் பேசப்படுவது; 'ஒன்றும் அறியாத பேதை' என்ற பட்டமும் அவருக்கு வந்து சேர்வது; இதனால் தொழில் கெட்டு விடும் என்ற பின் விளைவு அறியாமை; இவ்வாறு மடமைகள் விளக்கப்பட்டன. பணிக்கேற்ற அறிவுஇல்லாத் தேறுதல் என்ற ஒரு மூடத்தனம் பல மூடத்தனங்களுக்குக் காரணமாகிவிடுகிறது.
பரிதி 'வெகுளியை ஆதாரமாக ஒருவரை நம்புவானாகில் அதனாலே அனேகம் விதனம் வரும்' என உரை வரைந்தார். இவர் காதன்மைக்கு வெகுளி' எனப் பொருள் காண்கிறார். 'காதன்மை-காதுதலின் தன்மை. காதுதல்-கொல்லுதல். அதன் தன்மையாவது வெகுளி. ஒருவர்மேற்கொண்ட கோபம்காரணமாக அவரைநீக்கி, அப்பதவியில் அறிவிலாதார் ஒருவரைத்தெளிதல் ஏதம் பலவும் தரும் என்பது பரிதியார் கருத்து' என இவ்வுரையைத் தண்டபாணி தேசிகர் விளக்குவார். மேலும் அவர் 'அவன் தன்மீது செலுத்தும் வெகுளிக்குப் பயந்தோ, தான் அவன்மீது செலுத்தும் வெகுளியாலோ நம்புவானாயின் பல விதனம் வரும்' எனவும் இவ்வுரை பற்றிக் கருத்துரைத்தார்.
வெகுளி காரணமாகத் தெளிதலாகாது என்பது பதவியில் முன்னிருப்பார் மீதுள்ள வெகுளியால் அவரை நீக்கி அப்பதவியில் அறிவிலாதார் ஒருவரைத் தெளிதல் குற்றம் பலவும் தரும் என்பது இதன் கருத்து என்றும் இதை விளக்கினர்.
இன்ப நுகர்ச்சிக்காகக் காதல் கொண்டோரை வினையில் அமர்த்துவது கூடாது என்றபடியும் வேறு சிலர் உரை வரைந்தனர்.
பொறுப்பான பணிக்கு உரியவர்களைத் தேர்வு செய்வது என்பது நன்கு ஆராய்ந்து செய்யப்பட வேண்டிய ஒன்று. அந்த பொறுப்புக்குரிய அறிவும், தகுதியும், பட்டறிவும், திறமையும், இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால், சில வேளைகளில் அன்பு, நட்பு போன்ற காரணங்கள் தேர்வுமுறையில் குறுக்கிடும். உறவினை, நட்பினை இழக்க மனமின்றி, அவர் மனதைக் காயப்படுத்த விரும்பாமல், பார்த்தும் பாராதுபோலத் தொழிலறிவு இல்லாதவரை இணைத்துக் கொள்வர்.
ஒருவன் எவ்வெவ்வகையில் அறியாதவன் என்பதையும் எவ்வெவ்வகையில் அறிவு தெளிந்தவன் என்பதையும் ஆராயவேண்டும். இல்லையானால், வெறுப்பின் காரணமாக ஒருவனிடம் அறியாமையே கண்டு, அறிவுப்பகுதியைக் காணாமல், 'அவனுக்கு ஒன்றுமே தெரியாது' என்று ஒதுக்க நேரும். வெறுப்பு இல்லாமல் அன்பு வளர்ந்த இடமாக இருந்தாலோ, அவனுடைய அறிவுப் பகுதியை மட்டும் கண்டு அறியாமையைக் காணாமல் ஆராய்ச்சியில் குறையுறவேண்டி வரும்.
தனக்கு வேண்டியவன் என்பதற்காக, அறிவிலாதானை செயலில் ஈடுபடுத்த வேண்டாம். உறவினர்கள்- என்ற காரணம் பற்றிப் பணியை நிறைவேற்றும்படி அறிவும் திறமையும் அற்றவர்களிடம் ஒப்படைப்பது அறியாச் செயலாம்; இப்படி ஒப்படைக்கப்படும் பணி பாழாகும்.
நமக்கு நன்கு தெரிந்தவர் தொழில் அறிவு பெறாதவராக இருந்தால், மறு சிந்தனையின்றி, அவரைப் பொறுப்புள்ள பணியில் அமர்த்தாமல் இருப்பதே நல்லது.
இக்குறட்கு 'அரசற்கு அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர் மதம். இஃது இவ்வளவினால் தேறலாகாது' எனப் பிறர் கொள்கையைக் காட்டி, வள்ளுவர் சிறப்பைப் புலப்படுத்துவர் மணக்குடவரும் பரிப்பெருமாளும்.
|
'கந்தா' என்ற சொல்லின் பொருள் என்ன?
'கந்தா' என்றதற்குப் பற்றாக, ஆதாரமாக, மூலமாக, பற்றுக்கோடாக, காரணமாக, அடிப்படையாகக் கொண்டு, பற்றுக் கோடாகக் கொண்டு, துணையாகக் கொண்டு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
கந்தாக என்பது குறைந்து கந்தா ஆனது. கந்து என்பதற்கு பற்றுக்கோடு என்பது பொருள். கந்தாக என்பது பற்றுக் கோடாக அதாவது துணையாக அல்லது ஆதாரமாக எனப்பொருள்படும். இச்சொல்லுக்கு காரணமாக என்றே பலர் உரை கொண்டனர். காரணமாக என்பது நேர் பொருளன்று எனவும் கருத்துப் பொருளாகக் காரணம் என்றானது எனவும் கூறுவர். இவ்வறாக 'காதன்மை கந்தா என்ற தொடர் 'அன்புடைமை காரணமாக' என்ற பொருள் தந்தது.
'கந்தா' என்ற சொல்லுக்கு இங்கு காரணமாக என்பது பொருள்.
|
அன்பு காரணமாக அறிய வேண்டுவன அறியாதாரைத் தேறுதல் அனைத்து மடமையான விளைவுகளையும் உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.
காதலுடைமை மூலமாகத் தேறுதல் என்னும் மடமை பல மடைமைகளுக்கு வழிவகுக்காதபடித் தெரிந்து தெளிதல் வேண்டும்.
அன்புடைமை காரணமாக அறிய வேண்டுவனவற்றை அறியாதாரை நம்புதல் எல்லா மடமையும் தரும்.
|