இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0503



அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:503)

பொழிப்பு: அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

மணக்குடவர் உரை: கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.

பரிமேலழகர் உரை: அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் - கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.
(வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: கற்பதற்குரிய அறநூல்கள் பலவற்றையும் கற்றுக் குற்றங்கள் அற்றவர்களிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்தால் அறியாமை முதலிய குற்றம் இல்லாமல் இருப்பது அரிது. அறிவு வளர வளர அறியாமை தென்படுதல் இயற்கை. ஆயினும் தேவைக்கேற்ற அறிவும் இன்றியமையாப் பண்புகளும் இருக்கின்றனவா என்று ஆய்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்பது கருத்து. முழுதும் அறிந்தவர்களையும் குற்றமே அற்றவர்களையும் காண்பதரிது என்பதறிக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் வெளிறு இன்மை அரிதே


அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும்:
பதவுரை: அரிய-அருமையானவைகளை; கற்று-ஓதி; ஆசு-குற்றம்; அற்றார்கண்ணும்-நீங்கியவரிடத்தும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும்;
பரிப்பெருமாள்: கற்றற்கரியனவற்றைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும்;
பரிதி: நல்ல கல்வி கற்றார் குற்றமற்றார்;
காலிங்கர்: இவ்வுலகத்துப் பலரானும் கற்றற்கு அரியனவாகிய திருந்திய நூல்களை நிறையக் கற்று மற்று அதனானே இருமைக் குற்றமும் நீங்கினார் மாட்டும் பற்றி;
பரிமேலழகர்: கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்;

'கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றம் அற்றார் மாட்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்தவை கற்றுத் தெளிந்தவர் இடத்தும்', 'கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றங்களை நீக்கியவரிடத்தும்', '(படித்தவன் என்பதற்காக மட்டும் ஒருவனை நம்பிவிடக்கூடாது.) அருமையான நூல்களைக் கற்று ஐயந்திரிபுகள் இல்லாதவர்களிடத்திலும்', 'அருமையான நூல்களைக் கற்றுக் குற்றங்களில்லாதவர் எனப்படுவோரிடத்தும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மிகச் சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு இல்லாதவராகத் தோன்றுபவர் இடத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு:
பதவுரை: தெரியுங்கால்-ஆராயுமிடத்து; இன்மை-இல்லாமை; அரிதே-அருமையானதே; வெளிறு-வெண்மை (அறியாமை).

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.
பரிப்பெருமாள்: ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: கல்வியுடையார் உள்ளும் புறம்பும் தூயாரைத் தேறலாம் என்பது துரோணாசாரியார் மதம். அவ்வளவில் தேறலாகாது என்று இது கூறப்பட்டது.
பரிதி: விசாரித்தால் குற்றப்படுமாகையால் அவர்களைக் குற்றமுடையாரென்று கை விடுவானல்லன் என்றவாறு.
காலிங்கர்: ஆராயுங்காலத்துக் குற்றமும் இல்லாமைச் சான்றோர் ஆதல் அரிது; எனவே கீழ்ச்சொல்லிய ஆங்கே தெரிந்து தெளிக என்பது பொருள் ஆயிற்று.
பரிமேலழகர்: நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.
பரிமேலழகர் குறிப்புரை: வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.

'ஆராயுமிடத்து குற்றமும் இல்லாமை இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் குற்றம் என்று சொல்லாமல் வெண்மை அதாவது அறியாமை இல்லாமை அரிது என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பார்த்தால் ஓரளவு அறியாமை இருக்கும்', 'ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இல்லாதிருத்தல் அரிதாகும்', 'நம்பத்தகாமை இல்லாதிருக்கும் என்பது இல்லை', 'நுணுகி ஆராயுமிடத்து, அறியாமை முற்றிலுமில்லாதிருத்தல் அருமையே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஆராய்ந்தால் அறியாமை முற்றிலும் இல்லாதிருத்தல் என்பது இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு நீக்கியவராக இருந்தாலும், அவரிடத்தும் அறியாமை இருக்கத்தான் செய்யும்.

மிகச் சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு நீக்கியவராகத் தோன்றுபவர் இடத்தும் ஆராய்ந்தால் அறியாமை முற்றிலும் இல்லாதிருத்தல் என்பது இல்லை என்பது பாடலின் பொருள்.
'ஆசுஅற்றார்' என்பதன் பொருள் என்ன?

அரியகற்று என்ற தொடர்க்குக் கற்பதற்கு அரியனவற்றை கற்று என்பது பொருள்.
கண்ணும் என்ற சொல்லுக்கு இடத்தும் என்று பொருள்.
தெரியுங்கால் என்றது நுணுகி ஆராய்ந்தால் எனப் பொருள்படும்.
இன்மை அரிதே என்ற தொடர் இல்லாமை அரிது என்ற பொருள் தரும்.
வெளிறு என்ற சொல் வெண்மை அதாவது அறியாமை குறித்தது.

ஆராயுமிடத்து, சிறந்த கல்வி பெற்று ஐயம் திரிபு இல்லாதவராகத் தோன்றுவோரிடத்தும் அறியாமை இல்லாதிருத்தல் அருமையே. எனவே குற்றமே இல்லாத முழு அறிவு படைத்தவர் கிடைப்பதற்காகக் காத்திருக்க வேண்டாம் என்னும் குறட்பா.

வெளிறு என்ற சொல்லுக்குக் குற்றம் என்று மணக்குடவர் பொருள் கொண்டார். நாமக்கல் இராமலிங்கம் இச்சொல்லுக்கு மனப் பொருத்தமில்லாமை (நம்பத்தகாமை) எனப் பொருள் கூறினார்.
வெள்-வெளி-வெளிறு என்பன வெண்மையோடு தொடர்புடையவை. வெண்மை எனப்படுவது யாதெனின்.... (புல்லறிவாண்மை குறள் 844) .......வெளியார் முன் வான்சுதை வண்ணங் கொளல் (அவை அறிதல் குறள் 714) என்புழி வெண்மையும் வெளியும் அறியாமையைக் குறித்தல் போல், ஈண்டு ‘வெளிறும்’ அறியாமையைக் குறித்தலே இயல்பாகும்(இரா சாரங்கபாணி).

கல்வி அறிவு மிகத் தேவையாகும் பணிக்கான தேர்வு பற்றிய பாடல் போன்று தெரிகிறது.
தேர்வாகப் போகிறவரது அறிவுத் திறம் ஆராயும் போது 'எல்லாம் அறிந்தவராக யாரும் இல்லை; ஒன்றும் அறியாதவராகவும் எவரும் இவ்வுலகில் இல்லை' என்பதை மனதில் கொள்ளவேண்டும். அறிவு மிக அகன்றதும் எல்லையற்றதுமாய் இருப்பது. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு. சிறந்த கல்வி பெற்றோரிடத்தும் அறியாமை இருப்பது இயல்பு. மனிதரிடம் குறைகள் இருக்கவே செய்யும். குற்றமே இல்லாதவர் இவ்வுலகில் மிக அரியர். எனவே அவரை அக்காரணத்திற்காக மட்டும் விட்டுவிடவேண்டாம். அத்தகையர் கிடைத்தாலும் உரியவகையால் பயன்கொள்க என அறிவுறுத்தப்படுகிறது.
முழுதும் அறிந்தவர் என்று யாரும் இல்லை என்பதால், பணித் தேவைக்கேற்ற அறிவு இருக்கின்றனதா என்று ஆய்வு செய்து தேறலாம் என்பது கருத்து.

'ஆசற்றார்' என்பதன் பொருள் என்ன?

ஆசற்றார் என்பது ஆசு+அற்றார் என விரியும். ஆசு என்பதற்குப் பொதுவான பொருள் குற்றம் என்பது. அற்றார் என்பதற்கு நீக்கியவர் என்பது பொருள். உரைகாரர்கள் இச்சொல்லுக்குக் குற்றமற்றார், இருமைக் குற்றமும் (இம்மை மறுமை இரண்டற்கும் ஆம் குற்றம் அதாவது தீவினைகள்) நீங்கினார், காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்மடி, மறப்பு, பிழைப்பு என்ற குற்றங்கள் அற்றார், இயல்பாகக் குற்றங்களினின்றும் முற்றிலும் நீங்கியவர்கள், குற்றங்களை நீக்கியவர், ஐயம் திரிபுகள் இல்லாதவர்கள், ஐவகையும் (அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை வெகுளி) அறுவகையுமாகிய (காமம், குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சரியம்) என்ற குற்றங்கள் நீங்கியவர், குறையற்றவர்கள் என்று பொருள் கூறினர். இவற்றுள் ஐயம் திரிபு நீங்கியவர் என்பது பொருத்தமாக உள்ளது.

ஆசற்றார் என்பதற்கு ஐயம் திரிபு நீங்கியவர் என்பது பொருள்.

மிகச் சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு நீக்கியவராகத் தோன்றுபவர் இடத்தும் ஆராய்ந்தால் அறியாமை முற்றிலும் இல்லாதிருத்தல் என்பது இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எல்லாம் அறிந்தவர் என்று எவரும் இல்லை. இருப்பவருள் தெரிந்து தெளிதல் வேண்டும்.

பொழிப்பு

சிறந்த கல்வி பெற்று ஐயம் திரிபு நீக்கி விளங்கியவராகத் தோன்றினாலும் ஆராய்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இருக்கத்தான் செய்யும்.