இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0510தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா விடும்பை தரும்

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:510)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்து கொள்ளப்பட்டவன் மாட்டுத் தான் ஐயப்படுதலுமாகிய இவ்விரண்டும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை: தேரான் தெளிவும் - அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும், தெளிந்தான்கண் ஐயுறவும் - ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும், தீராஇடும்பை தரும் - அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
(வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும், அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.)

தமிழண்ணல் உரை: ஒருவனை ஆராயாது தேர்ந்தெடுப்பதும் தேர்ந்தெடுத்த பிற்பாடு அவன்மீது ஐயப்படுதலுமாகிய இவை இரண்டுமே, மேலாண்மையனுக்குத் தீராத பெருந்துன்பத்தைக் கொடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா விடும்பை தரும்.

பதவுரை: தேரான்-ஆராயாதவனாக; தெளிவும்-தேர்வும்; தெளிந்தான்கண்-தேர்வு செய்யப்பட்டவன் மாட்டு; ஐயுறவும்-ஐயப்படுதலும்; தீரா-நீங்காத; இடும்பை-துன்பம்; தரும்-கொடுக்கும்.


தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனை ஆராயாது தெளிதலும் தெளிந்து கொள்ளப்பட்டவன் மாட்டுத் தான் ஐயப்படுதலுமாகிய இவ்விரண்டும்;
பரிப்பெருமாள்: ஆராயாது தெளிதலும் தெளிந்த பின்பு ஐயுறுதலும்;
பரிதி: ஒருவனை விசாரியாமல் நம்புதலும் நற்குணத்தானை நம்பின பின்பு சந்தேகப்படுவதும் ஆகிய இரண்டு குணத்தாலும்;
காலிங்கர்: முன்னம் ஒருவனை ஒருகால் தேறானாய் மற்று அவனை விரைந்து தெளிகின்ற தெளிவும், இனி இவ்வாறு அன்றித் தான் தெரிந்து தெளிந்தான்கண் என்றும், பின்பு ஐயுறுதல் தம் குற்றம் ஆதலான் இங்ஙனம் தெளிந்தான்கண் ஐயுறவும் என்றும் இவ்விரண்டும்;
பரிமேலழகர்: அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும்;

'ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆராயாது நம்புதலும் நம்பியவனை ஐயப்படுதலும்', 'ஒருவனை ஆராயாது நம்புதலும், ஆராய்ந்து நம்பிய பின் ஐயப்படுதலும் ஆகிய இரண்டும்', 'ஆராயாமல் நம்பிவிடுவதும், ஆராய்ந்து நம்பிவிட்டவனிடத்தில் இடையிடையே சந்தேகம் கொள்ளுவதும்', 'ஒருவனை ஆராயாது நம்புதலும் ஆராய்ந்து நம்பப்பட்டவனிடத்து ஐயப்படுதலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவனை ஆராயாது தேர்வு செய்வதும், தேர்வு செய்து நம்பிய பின் ஐயப்படுதலும் என்பது இப்பகுதியின் பொருள்.

தீரா விடும்பை தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீங்காத துன்பத்தைத் தரும்
பரிப்பெருமாள்: தீர்தல் இல்லாத துன்பத்தினைத் தரும் என்றவாறு
பரிப்பெருமாள் குறிப்புரை: முன்பு ஒரு வினை செய்து அறியாதாரைத் தேறலாம். அவர்கள் வறியர் ஆதலான் என்பது உத்தவாசாரியார் மதம். அது குற்றம் என்று இது கூறப்பட்டது.
பரிதி: தனக்கு விசனம் வரும் என்றவாறு.
காலிங்கர்: தன் நெஞ்சுள் ஆறா அருந்துயரம் தரும்.
காலிங்கர் குறிப்புரை: எனவே ஒருவரை முன்னுறத் தெரியாதே (தெளியற்க; பின் ஐயுறுதல்) எஞ்ஞான்றும் செய்யற்க என்றவாறு.
பரிமேலழகர்: அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும், அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.

'நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருந்துன்பமே', 'நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்', 'ஓயாத துன்பமுண்டாக்கும்', 'நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவனை ஆராயாது விரைந்து தேர்வு செய்வதும், நம்பிய பின் ஐயப்படுதலும் நீங்காத இடும்பை தரும் என்பது பாடலின் பொருள்.
'இடும்பை தரும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

தேர்வுக்குமுன் கடுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்து; தேர்ந்தெடுத்தபின் எல்லாவற்றிற்கும் ஐயப்படாதே.

ஆராய்ந்து பார்க்காது ஒருவனிடம் நம்பிக்கை வைத்துத் தேர்ந்தெடுத்தலும், தெளிந்தவனிடம் ஐயப்படுதலும் என்றும் நீங்காத துன்பத்தைத் தரும்.
இவ்வதிகாரம் பணியாளர்களைத் தேர்ந்து எடுக்கும் முறைகளையும் அவர்கள் தேர்ந்தாராயின் அவர்களைப் பணியில் அமர்த்துதல் பற்றியதும் ஆகும். ஆராயாமல் தேர்வு செய்யவேண்டாம் என்று முந்தைய பாடல்களிலும் (குறள்கள் 508, 509) சொல்லப்பட்டது. இங்கும் அதே கருத்துப்பட முதற்பகுதி அமைந்துள்ளது. எனவே கூறியது கூறப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் பொருட்டுக் காலிங்கர் 'விரைந்து தெளிகின்ற தெளிவு இடும்பை தரும்' என்று ஓர் விளக்கம் தருகிறார்.
தேரான் என்றதற்கு ஒரு வினை செய்து அறியாதான் எனப் பரிபெருமாள் பொருள் காண்கிறார். எனவே முன்அனுபவம் இல்லாதவனை மிகவும் நம்புவதும் துன்பம் தரும் என்றவாறும் இக்குறட்கருத்தை விளக்கினர்.
நன்கு ஆய்ந்து தேர்வு செய்யப்பட்டவனிடம் ஐயம் கொள்ளவேண்டாம் என்று இப்பாடலின் பிற்பகுதி அறிவுறுத்துகிறது. பெரும் வெற்றிகண்ட நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் எவரையும் விரைந்து நீக்குவதில்லை (அவை யாரையும் ஆராயாது பணிக்கு அமர்த்துதலும் இல்லை). 'நீங்காத' துன்பம் நேரும் என்று சொல்லப்பட்டதால், இங்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவனை, ஐயம் கொண்டாலும், விரைவில் நீக்குதல் இல்லை என்ற கருத்தும் பெறப்படுகிறது.

'இடும்பை தரும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

இடும்பை தரும் என்றதற்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் என்பது பொருள்.
ஆராயாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவன் திறமைக் குறையுடையவனாயிருப்பவனாகலாம். அப்படிப்பட்டவனால் பணியைச் சிறப்புற மேற்கொள்ள இயலாது. செயற்பாடுகளில் குற்றங்கள் பல ஏற்பட்டு தீர்க்க முடியாத சிக்கல்களை அவன் உண்டாக்கிவிடுவான். அவற்றை நேர் செய்வதற்கு நெடிய காலம் தேவைப்படுவதாகலாம். இதனால் தேர்ந்தெடுத்தவன் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும்.
ஆய்ந்து தேறப்பட்டவனை நம்பினபின் இடையிடையே ஐயப்பட வேண்டாம். அவ்விதம் ஐயம் கொள்வதும் முடிவிலாத் துன்பமே யுண்டாக்கும். செயலில் அமர்த்தினபின் அவனிடம் ஒரு குற்றமுங் காணாவிடத்தும் ஐயுற்றால், அதனைத் தொழிலை ஏற்றுக் கொண்டவன் அறிந்து, இப்பணி தமக்கு நிலையானதும் காப்பானதும் அன்று என்று கருதி, பணியாற்றுவதில் தேவையான அக்கறை காட்ட மாட்டான். ஒருவரைத் தேர்ந்தபின் அவரிடம் நம்பிக்கை இல்லாவிட்டால், அப்படி ஐயம் கொள்வதை அவன் உணர்ந்தால், செய்யும் திறனிருந்தாலும், செயலில் ஈடுபாடு குறையும்; ஆர்வம் சிதைவுபட்டு அது அவனது உளஉரத்தையும் தன்னம்பிக்கையையும் குலைத்துவிடும். போட்டியாளர்கள் அவனைப் பிரித்துத் தம்பக்கம் இணைக்க முனைவர். இவற்றால் தொடங்கிய செயல் துவண்டு பாதிப்புக்குள்ளாகி தேர்ந்தெடுத்தார்க்குத் துன்பம் மிக வந்து சேரும்.

'ஒரு கல்வியிலும் தேராதான் தெரிந்தவன் போல் அலட்டிக் கொள்வதும் நன்கு கற்றுத் தெரிந்தவன் தன் தெளிவின் மேல் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும் என்பதாகும்' என்றும் இக்குறளுக்குப் பொருள் கூறலாம் என்றார் கண்ணதாசன். இவ்வுரை தெளிவும் ஐயுறவும் பிறர்பால் கொண்டன எனக் கூறாமல் தன்மையிடத்தில் அதாவது தேறப்பட்டவனிடத்தில் வைத்துக் கூறப்பட்டு அவனும் துன்புறுவான் என்பதாக உள்ளது. இது ஓரளவிற்கு ஏற்குமேயாயினும், தெரிந்து தெளிதல் என்னும் இவ்வதிகாரக் குறளெல்லாம் பிறனை ஆராய்ந்து தெளிதல் பற்றியே கூறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தன் தெளிவின் மேல் சந்தேகப்பட்டுத் துன்புறுவான் என்னும் இவ்வுரை பொருத்தமில்லை.

ஒருவனை ஆராயாது விரைந்து தேர்வு செய்வதும், தேர்வு செய்து நம்பிய பின் ஐயப்படுதலும் நம்பியவர்க்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஆராயாதவனைத் தேராதே; தெரிந்து தெளிதல் ஆனபின் ஐயுறாதே.

பொழிப்பு

ஆராயாது தேர்வுசெய்தலும், நம்பிய பின் ஐயம் கொள்ளுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.