ஒவ்வொரு காலகட்டத்திலும் தனிப்பட்ட ஒத்த ஒழுக்கங்கள், பழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவை கொண்ட கூட்டங்கள் தானாகவே தோன்றிவிடுகின்றன. சில வழிமுறையாகத் தொடர்கின்றன. சில மறைந்து விடுகின்றன. நல்ல சிந்தனைகளுக்கான குழுக்கள் அமைவது போல, வன்முறை, வஞ்சனை, மூடநம்பிக்கைகள் இவை போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றவாறும் குழுக்கள் அமைந்துவிடுகின்றன. குழுக்கள் சீரமைந்ததாகவோ அல்லது அமைப்பு ஒழுங்கிlல்லாத சமுதாயமாகவோ இருக்கலாம். இன்று மின்னணு ஊடகங்கள் வளர்ச்சியால் கரவுக் குழுக்கள் உண்டாகின்றன. மின்னஞ்சல், வாட்ஸப் (WhatsApp) போன்றவை கணினி, கைபேசி இவற்றின் ஊடாகக் குழுக்கள் அமைவதற்குப் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய குழுவையே இனம் என்று குறள் குறிப்பிடுகிறது. இக்குழுவுடன் பழகத் தொடங்கியபின் ஒருவர் அதன் சுற்றம் ஆகிவிடுகிறார். ஒருவருடைய ஒழுக்கமும் உயர்வுகளும் திறன்களும் அவருடைய சூழ்நிலையைப் பொறுத்தவை ஆதலால். இச்சுற்றம் ஒருவரது சிந்தனை, சொல், உணர்வு நிலைகள் மற்றும் செயல்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது,
சிறுமைப் பண்பு கொண்ட மக்கள் ஒரு குழுவாக இருந்தால் அது சிற்றினம் எனப்படும். சிற்றினம் என்று கூறுகையில் அதில் அடங்கும் மக்கள் எந்த வேறுபாடுகளிலிருந்து வந்து இணைந்தாலும், இயல்பாலும் நோக்கத்தாலும் சிற்றினம் சேர்ந்தவராகக் கருதப்படுவர்.
சிறுமைக் குணம் கொண்டவர்கள் யாவர்? கொலைசெய்வோர், கொள்ளையில் ஈடுபடுவோர், காமுகர்கள், சூதாடிகள், கட்குடியர்கள், பொய்யர்கள் முதலியோரும் வன்முறையாளர், வஞ்சனைநிறைந்தோர், மூடநம்பிக்கை வளர்ப்போர், புறம்பேசுவோர், உழைக்காமல் உண்போர், கடமையைப் புறக்கணிப்போர், வீணேபொழுதுகழிப்போர் போன்றோரும் சிற்றின மாந்தர்க்கு எடுத்துக்காட்டுக்கள்.
கொலை, கொள்ளை, குடி, சூது என்று வாழ்பவர்களின் சூழலில் வளரும் ஒருவனின் சிந்தனையும், அன்பு, உறவு, நட்பு ஒழுக்கம், தொண்டு, என வாழ்க்கை நடாத்துபவர்களின் சூழலில் இருக்கும் ஒருவனின் எண்ண ஓட்டங்களும் ஒரே நிலையில் இருக்க முடியாது. சிற்றினம் சேர்தல் அல்லல் படுத்தும் தன்மையது. எனவே அக்கூட்டுறவை நீக்குக என்று அதிகாரப்பாடல்கள் குறிப்பால் உணர்த்துகின்றன. சிற்றினம்' கடின முயற்சிகளின்றியும் கிடைக்கக் கூடிய ஒன்று ஆகையால் சிற்றினம் சேராமலிருக்க வலிய முயற்சி தேவை. இனநலம் ஆய்ந்து உறவு மேற்கொள்க என அறிவுறுத்துவது இவ்வதிகாரம்.
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! (புறநானூறு. 29 )
{பொருள்: நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று சொல்லுவோர்க்கு இனமாகா தொழிவாயாக).
என்ற சங்கப்பாடலை இவ்வதிகார விளக்க உரையில் பரிமேலழகர் மேற்கோள் காட்டி அதில் சுட்டப்பட்ட இனம் சிற்றினம் என்கிறார்.
இச்செய்யுளில் கூறப்படும் குணம் கொண்டோர் நாத்திகரைக் (agnostic) குறிப்பதாகப் பரிமேலழகர் கொள்வதால் இங்ஙனம் சொல்லப்பட்டது. ஆனால் செய்யுள் பகுத்தறிவாளரைப் (Rationalist) பற்றிப் பேசுவதாகத் தெரிகிறது. பகுத்தறிவாளர் சமய மறுப்பாளர் (atheist) ஆக இருக்கலாம்; அவர் கடவுள் மறுப்பாளராக இருக்க வேண்டியதில்லை.