இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0456



மனந்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:456)

பொழிப்பு: மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்பவை நன்மையாகும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

மணக்குடவர் உரை: மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை.
இது மேலதற்குப் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.
(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: :நல்ல மனம் படைத்தார் செயல்கள் நல்ல விளைவுகளைத் தரும். நல்ல இனம் படைத்தாருக்கோ எல்லாச் செயலுமே நல்லதாய் அமையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும்; இனந்தூயார்க்கு நன்றுஆகா வினை இல்லை.


மனந்தூயார்க்கு எச்சம்நன் றாகும் :
பதவுரை: மனம்-உள்ளம்; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; எச்சம்- பொருள், புகழ், மக்கட்பேறு); நன்றாகும்-நன்மையுடையதாகும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்;
பரிப்பெருமாள்: மனநல்லார்க்குத் தமக்குப் பின்பு நிற்கும் மக்கள் முதலான பொருள்கள் நல்லவாம்;
பரிதி: மனத்தூயரான பேர்க்குப் புதல்வர் நல்ல குணமுண்டாம்;
காலிங்கர்: உலகத்து மனம் தூயார்க்கு மக்கட்பேறு முதலிய நன்மை உளவாம்;
காலிங்கர் குறிப்புரை: எச்சம் என்றது மக்கட்பேறு முதலிய என்றது.
பரிமேலழகர்: மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும்;

'மனநல்லார்க்கு மக்கட்பேறு முதலிய நன்மை உளவாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் தவிர அனைவரும் எச்சம் என்பதற்கு மக்கட்பேறு என்று பொருள் கொள்வர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மனத்தார்க்குப் பின்வழி நன்றாகும்', 'தூய நெஞ்சம் உடையவர்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்', 'மனத்திலே துப்புரவுடையார்க்கு மக்கட் பேறு நன்றாகும்', 'மனத்தூய்மை உடையவர்க்கு மக்கட்பேறு நன்மையுடையதாக அமையும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மனம் தூயார்க்கு பின்பு நிற்கும் பொருள்கள் நன்மையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

இனந்தூயார்க்கு இல்லைநன்று ஆகா வினை.:
பதவுரை: இனம்-குழு; தூயார்க்கு-தூய்மையுடையவர்க்கு; இல்லை-இல்லை; நன்று-நன்மையுடையது; ஆகா-ஆகாத; வினை-செயல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது மேலதற்குப் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேலதற்குப் பயன் கூறிற்று.
பரிதி: அதுபோலேத்தான் நல்லோரைச் சேவைசெய்யின் நல்ல குணமுண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதனுடன் இனம் தூயார்க்கு நன்றாகாத காரியம் யாதும் இல்லை; எனவே அவர்க்கு எல்லா நன்மையும் உள என்றவாறு.
பரிமேலழகர்: இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.
பரிமேலழகர் கருத்துரை: காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.

'இனம் தூயார்க்கு நன்றாகாத வினை யாதும் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லினத்தார்க்கு எல்லாமே நன்றாகும்', 'தூய இனம் உடையவர்க்கு நன்றாகாத செயல் எதுவுமில்லை', 'இனம் தூயதாக உள்ளவர்க்குக் கை கூடாத முயற்சி இல்லை. (எச்சம் என்பது புகழையுங் குறிக்கும்.', 'இனத் தூய்மை உடையார்க்கு (தூயவர்களைச் சேர்ந்துள்ளவர்கட்கு) நன்று ஆகாத செயல் ஏதும் இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

இன நல்லார்க்கு நன்றாகாதது ஒரு வினையும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்ல கூட்டத்தைச் சேர்ந்தவர் செய்யும் எல்லாமே நல்லதாய் அமையும் என்னும் பாடல்.

மனம் தூயார்க்கு எச்சம் நன்மையாகும்; இன நல்லார்க்கு நன்றாகாதது ஒரு வினையும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'எச்சம்' குறிப்பது என்ன?

மனந்தூயார்க்கு என்பதற்குத் தூய்மையான மனம் கொண்டவர்களுக்கு என்பது பொருள்.
நன்று என்ற சொல்லுக்கு நல்லது, நன்மை என்று பொருள்.
இனந்தூயார்க்கு என்றது தூய கூட்டத்தினை உடையார்க்கு எனப் பொருள்படும்.
வினை என்ற சொல் செயல் என்பதைக் குறித்தது.

மனநலம் கொண்டோர்க்கு பின்பு நிற்கும் பொருள்கள் நல்லவை யாகும். தான் பழகும் கூட்டம் நல்லதானால் செய்யும் செயல்கள் எல்லாம் நன்மை தரும் என்கிறது இப்பாடல்.
நல்ல எண்ணம் உடையோர்க்கு அவர் விட்டுச் செல்லும் யாவும் நன்றாக அமையும் என்பது பொதுவான நம்பிக்கை. நல்லோர் சேர்க்கை என்றால் நல்ல வழிகாட்டிகள் கிடைப்பர்; அதனால் செய்யும் செய்கைகள் எல்லாம் வெற்றியாக முடியும்.
ஒரு பார்வையில், உள்ளத்தில் தூய்மையாக இருப்போர் நன்மைபெறக் காத்திருக்க வேண்டி இருக்கலாம். ஆனால் நல்ல சேர்க்கை உண்டானால் நல்லது எப்பொழுதும் நடக்கும் என்ற குறிப்பு இக்குறளில் உள்ளது போல் தோன்றுகிறது. .

'எச்சம்' குறிப்பது என்ன?

எச்சம் என்ற சொல்லுக்கு நேர் பொருள் எஞ்சி நிற்பது. 'மிச்சம்' 'விட்டிருப்பது,' என்பது.. வாழ்க்கையில் ஒருவருக்கு எஞ்சி நிற்பவை எவை? அவர் இறந்த பிறகு மிச்சமாகும். பொன்னும் பொருளும், புகழ், பிள்ளைகள் இவற்றை எஞ்சி நிற்பனவாகக் கூறமுடியும்.
உரையாசிரியர்கள் பலர் எச்சம் நன்றாகும் என்பதற்கு 'மக்கட்பேறு நன்றாகும்' என்ற பொருளையே விரும்பி ஏற்றனர். தொல்லாசிரியர்களில் மணக்குடவர் தவிர அனைவரும் இக்கருத்தே கொண்டனர். (இவர் காணம் (பொன், பொருள்) முதலான பொருள்கள் நல்லவாம்' என உரை வரைந்தார். )மணக்குடவரின் இரட்டையாகச் செயல்படும் பரிப்பெருமாள் கூட மணக்குடவர் உரையினின்றும் விலகி எச்சம் என்பதற்கு 'பின்பு நிற்கும் மக்கள் என்று' பொருள் கூறினார். .
எச்சம் என்பதற்கு மக்கட்பேறு எனப் பொருள் கண்டவர்கள், நல்ல மனமுடையோர்க்குப் பிறக்கும் பிள்ளைகள் தமக்குக் காரணமான தந்தை தாயார் போலவே தாமும் நற்குண நற்செய்கை யுடையவராயிருப்பர் என்றும், நல்ல மனமுடையோர்க்குச் சந்ததி அழியாது நிலைபெறுமென்றும் கருத்துக் கூறுவர். மக்கள் உறுப்புக் குறைவின்றி நோயின்றி வாழ்வர் என்றபடியும் உரை செய்தனர்.. தமிழண்ணல் 'மனம் தூயவர்களுக்கு மக்கள் நல்லவர்களாக அமைவது இயற்கை விதிக்குடபட்டது' என்று செல்கிறார்.
இரா இளங்குமரனார்: மனத்தூய்மை யுடையவர்க்கு அவர் வைத்துச் செல்லும் புகழ் பொருள் மக்கள் முதலியனவும் நல்லதாக அமையும் என எல்லாவற்றையும் இணைத்துச் சொல்கிறார். இரா சாரங்கபாணி எச்சம் என்ற சொல்லுக்கு மக்கள், புகழ், என்னும் பொருள்களே பொருந்துவனவாம் என்பார்.
பாவாணர்: 'அடுத்த குறள் "இனநலம் எல்லாப் புகழுந் தரும்" என்று கூறுவதால், புகழ் என்ற பொருள் இங்கு பொருந்துவதன்று' என்கிறார்.
எச்சம் என்பதற்கு மக்கள் (பிள்ளைகள்) என்று பொருள் கொள்வது தவறில்லையானாலும் நிறைவான பொருளாகாது. ஒருவருடைய புகழுக்கு உரியவராக மக்கள் இருப்பர் என்று பொதுவிதியாக ஏற்க முடியுமா?. பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் உள்ளத்தில் தூய்மையின்றி இருப்பவர்கள் என்று கூறமுடியுமா?

எச்சம் என்ற சொல்லுக்குப், பொதுவானதான 'எஞ்சி நிற்பது' என்ற பொருளே பொருத்தமாக அமையும்.

மனம் தூயார்க்கு பின்பு நிற்கும் பொருள்கள் நன்மையாகும்; இன நல்லார்க்கு நன்றாகாதது ஒரு வினையும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சிற்றினம் சேராமையால் செய்யும் செயல்கள் யாவும் வெற்றிதரும் என்னும் பாடல்.

பொழிப்பு

நல்ல மனத்தார்க்குப் பின்வழி நன்றாகும்; நற்கூட்டத்தைச் சேர்ந்தவர்க்கு எல்லாமே நன்மையாகும்.