இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0454



மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:454)

பொழிப்பு: ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப் பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்.

பரிமேலழகர் உரை: அறிவு - அவ் விசேட உணர்வு, ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி , இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் .
(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.

இரா சாரங்கபாணி உரை: ஒருவனுக்கு அறிவு மனத்திலே உண்டாவது போலத் தோற்றுவித்து அவன் சேர்ந்த இனத்திற்கேற்பவே உண்டாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துளது ஆகும் அறிவு.


மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு :
பதவுரை: மனத்து-உள்ளத்தின்கண்; உளது-உள்ளது; போல-ஒத்திருப்ப; காட்டி-புலப்படுத்தி; ஒருவற்கு-ஒருவர்க்கு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றி;
பரிப்பெருமாள்: ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றி;
பரிதி: மனத்துள்ளது அறிவுபோலக் காட்டும்;
காலிங்கர்: ஒருவர்க்கு அறிவு உளதாவதுபோலத் தோற்றியும் பின்னும் தாம் மருவி வருவது;
பரிமேலழகர்: ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி;.

'ஒருவற்கு அறிவு மனத்துள்ளது போலத் தோற்றி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவு மனத்தை ஒட்டியது போல தோன்றும்.', 'ஒருவன் தான் செய்வதெல்லாம் தன்னுடைய சொந்த அறிவினால் செய்வதாகவே எண்ணும்படி செய்து அவனையும் ஏமாற்றிவிட்டுக் கடைசியில்.', 'ஒருவனுக்குச் செயற்கை அறிவானது மனத்தில் உண்டாய இயற்கை அறிவுபோலத் தோன்றி.', 'ஒருவருடைய அறிவு மனத்தின்கண்ணே உளதாவது போலத் தோன்றி' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஒருவர்க்கு அறிவு மனத்தின் கண்ணே உளதாவதுபோலத் தோற்றமளித்து என்பது இப்பகுதியின் பொருள்.

இனத்துளது ஆகும் அறிவு:
பதவுரை: இனத்து-இனத்தின்கண்; உளது-உள்ளது; ஆகும்-ஆம்; அறிவு-உணர்வு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்.
பரிப்பெருமாள்: தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்.
பரிப்பெருமாள் கருத்துரை :மேல் மனத்தினானே அறிவு உண்டாம் என்றார். அதன் பின் இனத்தினானே திரியும் என்றார். அது மாறுபட்டாற் போலப்பட்டது நோக்கி இது கூறப்பட்டது. இத்துணையும் சேர்ந்ததனால் வரும் குற்றம் கூறிற்று.
பரிதி: தான் சேர்ந்த இனத்தின் தொழிலே செய்யும் என்றவாறு.
காலிங்கர்: ஓர் இனத்தினளவே உளதாகும் அறிவானது என்றவாறு.
பரிமேலழகர்: அவ் விசேட உணர்வு அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் .
பரிமேலழகர் கருத்துரை: மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.

'தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உண்மையில் பழகும் இனத்தை ஒட்டியது', 'அவ்வறிவு அவனுடைய சேர்க்கையின் அறிவினால் செய்வதாகவே அமைந்துவிடும்', 'உள்ளபடி இனத்தினால் உண்டாவதே', 'அவர் சேர்ந்துள்ள இனத்தின்கண்ணே உண்டாவது ஆகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அவன் சேர்ந்த இனத்தினால் உண்டாவதே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பழகும் கூட்டத்தின் அறிவே ஒருவனை ஆதிக்கம் செய்யும் என்னும் பாடல்.

ஒருவர்க்கு அறிவு மனத்தின் கண்ணே உளதாவதுபோலக் காட்டினாலும் அது அவன் பழகும் இனத்தினால் உண்டாவதே என்பது பாடலின் பொருள்.
'காட்டி' என்று சொல்லப்பட்டது ஏன் ?

மனத்துளது போல என்றதற்கு மனத்தின் கண்ணே உள்ள்து போல என்பது பொருள்.
ஒருவற்கு என்பது ஒருவர்க்கு என்ற பொருள் தரும்.
இனத்துளது என்ற சொல்லுக்கு சார்ந்திருக்கும் கூட்டத்தினால் என்று பொருள்.

மனத்திற்கு ஏற்றவாறு அறிவு இருப்பது போல் தோன்றலாம். ஆனால் ஒருவன் பழகும் கூட்டத்தின் செல்வாக்கால்தான் அவனது அறிவு அமைகின்றது.

சூழ்நிலைகளும் ஒரு மனிதனின் சிந்தனைப் போக்குக்கு காரணமாகின்றன. அவன் பழகும் மக்கள் கூட்டம் அவனது எண்ணம். கருத்து இவற்றை பெரிதும் பாதிக்கும் ஆற்றல் கொண்டது. அவன் உணர்ந்தும் உணராமலும் அவன் சார்ந்த இனத்திலிருந்தே அவனுக்கு ஓர் புதிய அறிவு கிடைக்கிறது. சூழலால் பெறும் இந்த அறிவு, தற்சிந்தனை அறிவு, பட்டறிவு, கல்வியறிவு, கேள்வி அறிவு என்பனவற்றையும் மீறி ஆதிக்கம் செலுத்த வல்லது. இயல்பாக நல்லறிவு இல்லாதவராய் இருப்பவரும், அவர் சேர்ந்த நல்லினத்தின் காரணமாய் நற்குணங்கள் பெற்று நன்மையடைவர். அதுபோல இயல்பாக நல்லறிவு பெற்றிருப்பவரும், அவர் சேர்ந்த இனத்தின் தீய தன்மையால் அறிவிழந்து துன்புறுவர்.

மனத்தினாலே அறிவு உண்டாவது போல் தோற்றம் தருகிறது என்பது உண்மையே. ஆனால் ஒருவர் பலருடன் பழகப்பழக அந்த சூழலுள்ள்தற்குரியதாகிய அறிவு மிகுந்து அவரதறிவு பெரிதும் திரிவு பெறுகிறது. இத்திரிவு பட்ட அறிவு. மற்ற அறிவினும் மேலோங்கி இருக்கும். அதுவே அவனது நடத்தையை உருவாக்கித்தரும். அவனது அறிவு அவன் பழ்கும் கூட்டத்தினால் உண்டானதாகி விடுகிறது.

'காட்டி' என்று சொல்லப்பட்டது ஏன் ?

'அறிவு மனத்தின் பண்பாய் அங்குள்ளது போலக் காட்டும். ஆனால் அறிவு செயற்படும் போது மனத்தில் உள்ளபடியே செயற்படுவதில்லை. இனத்தின் தொழிலையே செய்யும்' என்றும்
'அறிவு மனத்துளதாதல் என்பது பொய்த் தோற்றம். இனத்தின் உளதாயதே மெய்ம்மை' என்றும்
ஏமாற்றி அல்லது 'மயக்கி' என்பது பொருள் என்றும்
உரையாசிரியர்கள் காட்டி என்ற சொல் பயன்படுத்தப்பட்ட வகையை விளக்கினர்'
இவர்கள் உரைகளைக் கூட்டிக் காணும் பொழுது, காட்டி என்பதன் பொருளாவது, ”ஒருவனுடைய அறிவானது எப்படிச் செயல்படும் என்றால், தன்னுடைய மனத்தைக் கொண்டு தானே செயல்படுவதாகக் காட்டிக் கொள்ளும். இது உண்மையை தேர்ந்து தெளிவதன் முன் உள்ள் நிலை. பின் ஆராய்ந்து பார்த்த விடத்து. அவன் சார்ந்து இருக்கும் சூழல் அடிப்படையிலேயே இயங்கும்” என்பது விளங்கும்.'
காட்டி என்பது தோற்றம் தந்து அல்லது தோற்றுவித்து என்ற பொருளில் ஆளப்பட்டது.

ஒருவர்க்கு அறிவு மனத்தின் கண்ணே உளதாவதுபோலத் தோற்றமளித்தாலும் அது அவன் சேர்ந்த இனத்தினால் உண்டாவதே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சூழலால் பெறும் அறிவின் ஆற்றலைச் சொல்லி சிற்றினம் சேராமையை வலியுறுத்தும் பாடல்.

பொழிப்பு

ஒருவர்க்கு அறிவு மனத்திலே உள்ளது போலத் தோற்றுவித்தாலும் அது அவன் பழகும் கூட்டத்திற்கேற்பவே உண்டாகும்.