இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0459மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:459)

பொழிப்பு: மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் உறுதிபடும்.

மணக்குடவர் உரை: மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து.
இது மறுமைக்குத் துணையாமென்றது.

பரிமேலழகர் உரை: மனநலத்தின் மறுமை ஆகும்-ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்று அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து-அதற்கு அச்சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து,
(மனநலத்தின் ஆகும் மறுமை என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று-வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: மனநலத்தால் வரக்கூடிய மறுமையை மட்டும் கருதினாலும் அதற்கும்கூடச் சகவாசத்தின் இனநலம் துணையாக உதவக்கூடிய ஒரு காவலாகும்..


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும் .இனநலத்தின் ஏமாப்பு உடைத்து


மனநலத்தின் ஆகும் மறுமை:
பதவுரை: மன-மனத்தது; நலத்தின்-நன்மையால்; ஆகும்-ஆம்; மறுமை-மறுமைப் பயன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும்;
பரிப்பெருமாள்: மன நன்மையானே மறுமைப் பயன் நன்றாகும்;
பரிதி: மனம் நன்றாகில் வருகிற சென்மம் நல்ல சென்மமாம்;
காலிங்கர்: தத்தம் மனத்தினது தூய்மையினாலே உளதாகும் மறுமை;
பரிமேலழகர்: ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்;
பரிமேலழகர் குறிப்புரை: மனநலத்தின் ஆகும் மறுமை என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு.

'மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மறுமை என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் மறுமப்பயன் என்றும் பரிதி வருகிற சென்மம் என்றும் காலிங்கர் மறுமை என்றும் பரிமேலழகர் மறுமை இன்பம் என்றும் பொருள் கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மனத்தால் மறுமையின்பம் கிடைக்கும்.', 'ஒருவனுக்கு மன நன்மையாலே மறுமை இன்பம் உண்டாகும்', 'மனத்தினது நன்மையால் மறுமையின்பம் உண்டாகும்', 'ஒருவர்க்கு மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மனத்தினது தூய்மையினாலே மறுமை உளதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்று அஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து:
பதவுரை: மற்று-பின்; அஃதும்-அதுவும்; இன-சுற்றத்தினது; நலத்தின்-நன்மையால்; ஏமாப்பு-பாதுகாவல்; உடைத்து-உடையது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து.
மணக்குடவர் கருத்துரை: இது மறுமைக்குத் துணையாமென்றது.
பரிப்பெருமாள்: அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமைக் காத்தலையுடைத்தாம்.
பரிப்பெருமாள் கருத்துரை: இது மறுமைக்குத் துணையாமென்றது.
பரிதி: அதுவும் இனத்துக்கு நன்றாகில், அந்தப் புண்ணியத்தினாலே பெருமை பெறும் என்றவாறு.
காலிங்கர்: இனமான மற்று அதுதானும் இனத்தினது நன்மையினாலே பெரிதும் சேமத்திட்பம் உடைத்தாம் என்றவாறு.)
பரிமேலழகர்: அதற்கு அச்சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து,
பரிமேலழகர் குறிப்புரை: மற்று-வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.

'அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே வலி பெறுதலை உடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதற்கு நற்கூட்டு நல்லது', 'அச்சிறப்பு இன நன்மையால் வலிமை பெறுதலை உடையது', 'அம் மனநலமும் இனநலத்தால் வலியுறும்', '.அவ்வின்பமும் இன நன்மையால் வலிமை பெறுதலை உடையது' என்றபடி பொருள் உரைத்தனர்.

பின் அதுதானும் இனத்தினது நன்மையினாலே பாதுகாவல் உடைத்தாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மறுமை பெறுதற்கு இனநலம் உறுதியளிக்கிறது என்னும் பாடல்.

மனத்தினது தூய்மையினாலே மறுமை உளதாகும்; பின் அதுவும் இனத்தினது நன்மையினாலே பாதுகாவல் உடைத்து என்பது பாடலின் பொருள்.
மறுமை குறித்தது என்ன?

மனநலத்தின் ஆகும் என்பதற்கு மனநன்மையால் உண்டாகும் என்பது பொருள்.
மற்று என்றது அது மட்டுமன்றி என்று பொருள்படும்.
அஃதும் என்ற சொல்லுக்கு அதுவும் என்று பொருள்.
இன்னநலத்தின் என்றது சேர்க்கையின் நன்மையினால் என்பதைக் குறிக்கும்.
ஏமாப்பு என்ற சொல் பாதுகாப்பு குறித்தது.

நல்ல சேர்க்கை மனநலத்தைக் காக்கும்; மனநலத்தினால் மறுமை கிடைக்கும். மறுமை பெறுவது நல்ல சேர்க்கையால் உறுதி செய்யப்படுகிறது.

இப்பிறப்பிலே ஒருவருடைய உள்ளம் தூய்மையாக இருந்தால் அவருக்கு மறுமை உண்டாகும், அதுமட்டுமல்லாது அவர் பழகும் இனம் நல்லதாக இருந்தால் மறுமைக்கு உறுதியும் கிடைக்கிறது அதாவது இனநன்மை மறுமைக்குக் காப்பாகிறது.
இனநன்மை தீமை செய்யாமல் காப்பதால் மனநலன் திரிய வாய்ப்பில்லை மனநலன் காக்கப்பட்டால் மறுமை உண்டு. எனவே இனநலன் மறுமைப் பயன் பெறத் துணை செய்கிறது..
குன்றக்குடி அடிகளார் இக்குறளுக்கு 'மனநலத்தினால் மறுமை இன்பம் ஆகும். மனநலம் கருதியே சமய வழிபாடுகள் நிகழ்த்தப் பெறுகின்றன' என்று இனநன்மையை சமயவழிபாடுகளுடன் இணைத்துப் பொருள் காண்கின்றார்.

மறுமை குறித்தது என்ன?

மறுமை என்றதற்கு மணக்குடவர் மறுமைப்பயன் என்றும் காலிங்கர் மறுமை என்றும் பொதுவில் கூறினர். பரிதி மறுசென்மம் என்றுரைத்தார். பரிமேலழகரும் பின் வந்தவர்களும் இச்சொல்லுக்கு 'மறுமை இன்பம்' என்று பொருள் கொண்டனர். செல்வம் என்று பொருள் கொண்டு சொல்லப்பட்ட உரையும் உள்ளது..
மறுபிறப்பில் நம்பிக்கையில்லாத இன்றைய உரையாசிரியர்களில் சிலர், மறுமை என்ற சொல்லுக்கு 'ஒருவன் இறந்த பிறகு அவன் பெயர் இங்கு நிலவுதல்' என்றும் 'மறைந்த பீன்னர் உண்டாகும் புகழ்' என்றும் 'மறுமையெனும் மக்கள்' என்றும் 'ஒரு நிலையினின்று மேல் செல்லும்) மறு நிலை என்றும் 'பின்வரும் சந்ததி' என்றும் பொருள் கூறினர்.

ஓருயிர் மீண்டும் பிறக்கும் என்பதை மறுமை என்பர். இது மறுபிறவி என்றும் அறியப்படும். ஒருபிறப்பின் நன்மை தீமைகளே பின் பிறவிக்குக் காரணம் என்ற கருத்தமைந்த சில குறட்பாக்களை வள்ளுவர் யாத்துள்ளார் என்றும் அவர்தம் பிறவுலகத்துக் குறிப்பனைத்தும் நம்மை இவ்வுலகின் கண் ஒழுக்கத்துக்கு உய்க்கும் கருத்துடையன என்றும் அறிஞர் கூறுவர்..

மனநலம் சிறந்தால் மறுபிறப்பு உண்டு; இனநலச் சிறப்பு மனநலத்துக்குத் துணை செய்வது. இங்ஙனம் மறுமை தவறாமல் அடையத் துணை செய்வது நல்லினச் சேர்க்கை என்பது இக்குறள் தரும் செய்தி.அதிகார இயைபு

சிற்றினம் சேராமை மனநலன் காத்து மறுமைக்கும் துணையாகும் என்னும் குறட்பா.

பொழிப்பு

மன நன்மையாலே மறுமை இன்பம் கிடைக்கும்; அச்சிறப்பும் இன நன்மையால் காக்கப்படும்