இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0457மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:457)

பொழிப்பு (மு வரதராசன்): மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்.
இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.

பரிமேலழகர் உரை: மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்(தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.
('மன், உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார். மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு, அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என, அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: மக்கள் உள்ளத்தின் சிறப்பு அவர்களுக்கு மேன்மேல் உயர்ச்சியைத் தரும். அவர்கள் சேரும் இனத்தினுடைய சிறப்பு அவர்களுக்கு எல்லாப் புகழையுந் தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்; இனநலம் எல்லாப் புகழும் தரும்.

பதவுரை: மனநலம்-உள்ளத் தூய்மை, மனத்தது நன்மை; மன்னுயிர்க்கு-நிலைபெற்ற உயிர்க்கு; ஆக்கம்-பெருக்கம், செல்வம், சொத்து, உயர்வு, ஆற்றல்; இனநலம்-சேர்க்கையின் சிறப்பு, சுற்றத்தினது நன்மை; எல்லா-அனைத்து; புகழும்-புகழும்; தரும்-கொடுக்கும்.


மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல;
பரிப்பெருமாள்: மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாம் அதுபோல;
பரிதி: மனம் நன்றாகில் தீர்க்கமான ஆயுசு உண்டாம்;
காலிங்கர்: மனத்தின் தூய்மை உலகத்து மன்னி வருகின்ற உயிர்கட்கு ஆக்கமாகும்; [மன்னி வருகின்ற-நிலைபெற்று வருகின்ற]
பரிமேலழகர்: நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்;.
பரிமேலழகர் குறிப்புரை: 'மன், உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது.

'மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் இத்தொடரை உவமையாக்கிப் பொருள் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மனம் உயிர்க்கு ஆக்கம் தரும்.', 'நிலைபெற்ற மக்களுயிர்க்கு மனநன்மை செல்வத்தைக் கொடுக்கும்', 'மனம் கெடாமல் நல்லதாகவே இருப்பது ஒருவனுடைய ஆன்மாவுக்குப் பலம் தரும்', 'நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை உயர்வைத் தரும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மனத்தது நன்மை நிலைபெற்ற உயிர்க்கு உயர்ச்சியாம் என்பது இப்பகுதியின் பொருள்.

இனநலம் எல்லாப் புகழும் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.
பரிப்பெருமாள்: இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.
பரிதி: இனநலம் எல்லாப் புகழுந் தரும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இன நலம் அதுவேயும் அன்றி, எல்லாப் புகழையும் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு , அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என, அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.

இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்கூட்டு எல்லாப் புகழும் தரும்', 'இனத்தினது நன்மை அச்செல்வத்தோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்', 'ஆனால் மனம் (இனம்?) நல்லதாக இருந்தால் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாச் சிறப்புக்களும் உண்டாகும்', 'இனத்தது நன்மை எல்லாப் புகழும் தரும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

இன நன்மை எல்லாப் புகழையும் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனத்தது நன்மை நிலைபெற்ற உயிர்க்கு உயர்ச்சியாம்; இனத்தது நன்மை எல்லாப் புகழையும் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'எல்லாப் புகழும்' குறிப்பது என்ன?

நல்லவர்களுடன் பழகுவதால் புகழுக்குக் குறைவிருக்காது.

உள்ளத் தூய்மையைப் பேணிக்கொண்டால் அதுவே நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லோர்களுடனான சேர்க்கையால் புகழ் எல்லாம் வந்தடையும்.
மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்றும், அறத்தினூஉங்கு ஆக்கமுமில்லை என்றும் குறள் கூறும், அதாவது மனம் நன்றாதலே அறம்தான்; அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை என இவை சொல்கின்றன. இங்கு மனத்துள் மாசின்றி இருப்பது மாந்தர்க்கு முன்னேற்றம் ஆகும்; அதுவேயும் அன்றி நல்லோருடனான சேர்க்கையும் இருந்தால் எல்லாப் புகழும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
நற்கூட்டு புகழை ஈட்டித் தரும் என்றதால், சிறிய இனத்தாருடனான உறவைத் தவிர்க்க வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

'மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்' என்னும் வரி வள்ளுவரின் தனிமொழிநடைத் தொடராகிச் சிறப்புப் பெற்றது (இ சுந்தரமூர்த்தி). மன்னுயிர் என்ற தொடர்க்கு நிலைபெற்ற உயிர் என்று பொருள் கொள்வர். குறளில் 'மன்' என்னும் அடை உயிர் என்னும் சொல்லுடனே பெரிதும் ஆளப்படுகிறது. உயிர் நிலைபேறுடையது, அழிவற்றது என்ற கருத்து குறளில் பரக்கக் காணப்படுகிறது.

'எல்லாப் புகழும்' குறிப்பது என்ன?

'எல்லாப் புகழும்' என்றதற்கு எல்லாவற்றானும் வரும் புகழினை, நற்பெயர் புகழனைத்தும், எல்லாச் சிறப்புகளும், எல்லா வகையான புகழும், எல்லா வகையிலும் புகழ் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இனச்சிறப்பு நற்பெயர் தருதலால், அதன்வழி புகழனைத்தும் வாய்க்கும். சிறுமைக் குணம் கொண்டோர் கூட்டுறவு நீக்கி நல்லோர்களுடன் பழகினால் புகழ் தானே வந்தடையும். நல்லவர்களாகவே இருக்கும் இனத்துக்கு எல்லாப் புகழும் வந்துதானே ஆகவேண்டும். இவர் இன்னார் என்று ஒருவர் அடையாளப்படுத்தப்படும் பொழுது நல்லவர் சேர்க்கை கொண்டவன் என்ற பெயர் கிடைக்கிறது. தீய கூட்டாளிகளைத் தவிர்த்த தூய்மையான சூழலில் மனநலத்துடன் ஒருவர் செயல்பட்டால் எல்லாப் பேறும் கிடைக்கும். மனத்தூய்மை, செய்வினைதூய்மை இனநலன் துணையோடு அமைவதாலும் நல்ல இனத்தில் சேர்ந்தோர்க்குச் செயலெல்லாம் வெற்றியாய் புகழுடன் முடியும். மனநலம் எவ்விதம் ஆக்கம் ஆகிறதோ அதுபோல இனநலம் எல்லாப் புகழுக்கும் உரியதாகிறது.

மனத்தது நன்மை நிலைபெற்ற உயிர்க்கு உயர்ச்சியாம்; இனத்தது நன்மை எல்லாப் புகழையும் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

சிற்றினம் சேராமை ஒருவரது புகழ் மிகுவதற்கு ஏதுவாய் அமையும்.

பொழிப்பு

நல்ல மனம் நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லவர் கூட்டு எல்லாப் புகழையும் கொடுக்கும்.