மனநலம் நன்குடையர் ஆயினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மன நன்மை மிக வுடையராயினும்;
பரிப்பெருமாள்: மன நன்மை மிகவும் உடையராயினும்;
பரிதி: மனம் நல்லதாகிலும்;
காலிங்கர்: மனந்தூய்மை மிகவும் உடையராயினும்;
பரிமேலழகர்: மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'நன்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது.
'மன நன்மை மிக வுடையராயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மாறுபாடாக 'மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்' என்றுரைத்தார். இவர் நன்கு என்பதற்கு 'முன்னை நல்வினை' எனப் பொருள் கொள்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'சான்றோர்க்கு மனம் நல்லதாக இருப்பினும்', 'மன நன்மையை மிகுதியும் உடையரானாலும்', 'மனம் செம்மையைச் செவ்விதாக இயற்கையில் உடையராயினும்.', 'மனநலத்தை நன்கு உடையவர் என்றாலும்' என்ற பொருளில் உரை தந்தனர்.
மனநலன் மிகவும் உடையராயினும் என்பது இப்பகுதியின் பொருள்.
சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து.:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது
பரிப்பெருமாள்: இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இனம் நன்று அல்ல ஆயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது
பரிதி: தன்னுடைய இனம் நல்லினமாக வேணும்; அது எல்லாப் புகழும் தரும் என்றவாறு.
காலிங்கர்: சால்புடையோர்க்கு மற்று அதனுடனே இனத்தினது நன்மை உளதானால் தமக்குப் பெரிதும் இம்மை மறுமைக்கு ஏமாப்பு உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து
பரிமேலழகர் குறிப்புரை: 'அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று'.
'இனநன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'இம்மை மறுமைக்கு ஏமாப்பு உடைத்து' என்றார். பரிமேலழகர் 'இனநன்மை மனநன்மைக்கு வலியாதலை உடைத்து'' என்ற பொருளில் உரை வரைந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'இனமும் நல்லதாக இருப்பது சிறப்பு', 'சால்புடையார்க்கு மன நன்மையைக் காக்க இன நன்மை பாதுகாவலை உடையது', 'சான்றோர்கள் சேரும் கூட்டத்தாரின் சிறப்பு அவர்கட்கு நல்ல பாதுகாப்பாக அமைவது', 'குணங்களால் நிறைந்த பெரியார்க்கு இனத்தின் நன்மையே வலிமை தருவதாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
இனநன்மை சான்றோர்க்குப் பாதுகாவலை உடையது என்பது இப்பகுதியின் பொருள்.
|