மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்
(அதிகாரம்:சிற்றினம் சேராமை
குறள் எண்:453)
பொழிப்பு (மு வரதராசன்): மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
|
மணக்குடவர் உரை:
மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம், ஆயினும் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம்.
இது பிறரால் பழிக்கப்படுமென்றது.
பரிமேலழகர் உரை:
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம் இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாம்.
(இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை மனத்தான் ஆம் என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது 'அத் திரிபும்' மனத்தான் ஆம் என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
மக்களுக்குப் பொதுவான 'உணர்ச்சி' என்பது அவரவர் மனத்தால் அமைவதாகும். ஆனால் அவர்களை, இத்தகையவர் என்று சொல்லும் சொல், அவர்தம் இனத்தாலேயே அமைவதாகும். ஒருவரை அவர் சேர்ந்திருக்கிற, பழகுகின்ற, அடிக்கடி உறவாடுகின்றவர்களை வைத்துத்தான், உலகம் மதிப்பிடும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல்.
பதவுரை: மனத்தான் -மனத்தைப் பொறுத்து, மனம் காரணமாக; ஆம்-ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; உணர்ச்சி-அறிவு, உணர்வு; இனத்தான்-சுற்றத்தால்; ஆம்-ஆகும்; இன்னான்-இப்படிப்பட்டவன், இத்தன்மையன், இந்தக் குணத்தினை உடையவன்; எனப்படும்-என்று சொல்லப்படும்; சொல்-(மதிப்பு காட்டும்) சொல், பெறும் பெயர்.
|
மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம்;
பரிப்பெருமாள்: மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம்;
பரிதி: மன அழுக்கு அற்றால் அறிவு உண்டாம்;
காலிங்கர்: தமது மனத்தின் நன்மை எவ்வளவு, மற்று அவ்வளவும் உளதாம் மக்கட்கு அறிவானது;
பரிமேலழகர்: மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்;
'மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதியும் காலிங்கரும் மன நன்மை அளவு அறிவு உண்டாம் என்கின்றனர். மற்றவர்கள் உணர்ச்சி என்பதற்கு அறிவு என்று பொருள் கூற பரிமேலழகர் 'பொது உணர்வு' எனப் பொருள் உரைக்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'மக்கட்கு மனத்தால் உணர்ச்சி உண்டாம்', 'மக்களுக்கு அறிவு மனத்தினாலே உண்டாகும்', 'அவரவர்களுடைய அறிவு அவரவர்கள் மனத்தைச் சேர்ந்ததுதான் என்றாலும்' 'மக்கட்கு உணர்ச்சி மனம் காரணமாக உண்டாகும்' என்ற பொருளில் உரை தந்தனர்.
மக்களது உணர்வுகள் அவரவர்கள் மனத்தைப் பொறுத்துத்தான் என்பது இப்பகுதியின் பொருள்.
இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆயினும் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிறரால் பழிக்கப்படுமென்றது.
பரிப்பெருமாள்: ஆயினும் தாம் சேர்ந்த இனத்தினானே இனியரல்லர் என்று பிறர் பழிக்கப்படும் சொல் உண்டாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறர் பழிக்கப்படுவர் என்றது.
பரிதி: அதுபோல இனம் நல்லதாகில் இன்னான் என்னும் புகழும் உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று இதனுடனே மனத்தின் தூய்மை எவ்வளவு மற்று அவ்வளவும் நன்மைகளை உடையர் என்று யாவராலும் எடுத்து உரைக்கப்படும் புகழ்ச்சியை என்றவாறு.
பரிமேலழகர்: 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை மனத்தான் ஆம் என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது 'அத் திரிபும்' மனத்தான் ஆம் என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.
மணக்குடவர்/பரிப்பெருமாள் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம்' என்று பொருள் கூறினர்.
இன்னான் என்பதை இனியன் என்ற சொல்லின் எதிர்மறையாகக் கொண்டு இனியன் அல்லன் என்று பொருள் கண்டு 'தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம்' என உரை கூறினர் இவர்கள். இப்பொருள் சிறக்கவில்லை. பரிதி இனத்தைப் பொறுத்து புகழ் உண்டாம் என்கிறார். காலிங்கரும் பரிதி போலவே சொல் என்பதற்குப் புகழ் என்றே கொண்டு மனத்தின் தூய்மை அளவு தன்மையுடையர் என்னும் புகழ்ச்சிச் சொல் கிடைக்கும் என்று உரை செய்கிறார். பரிமேலழகர் இனத்தைப் பொறுத்து உலகத்தார் இன்னான் என்று சொல்வர் என்று உரை வரைகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'சேர்க்கையால் உரிய மதிப்பு உண்டாம்', 'இவன் இப்படிப்பட்டவன் என்று உலகத்தினரால் கூறப்படும் சொல் அவன் கூடி வாழும் இனம் காரணமாக உண்டாகும்', 'அவருக்குப் பிறர் கொடுக்கும் மதிப்பு அவர் எந்த இனத்தாரோடு நெருங்கிப் பழகுகின்றாரோ அதை ஒட்டித்தான் உண்டாகும்', 'இப்பேர்ப்பட்டவன்' என்று சொல்லும் சொல் சேர்ந்துள்ள இனம் காரணமாக உண்டாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
தாம் சேர்ந்த கூட்டத்தைப் பொறுத்து இன்னான் என்று உலகத்தாரல் சொல்லப்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
மக்களது உணர்வுகள் அவரவர்கள் மனத்தைப் பொறுத்துத்தான்; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல் என்பது பாடலின் பொருள்.
'இனத்தானாம் இன்னான்' குறிப்பது என்ன?
|
ஒருவன் சேர்ந்துள்ள இனம் அவனது உணர்வுகளை அடையாளப்படுத்தும்.
மக்களுக்கு உணர்வு என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும்; இவன் இத்தகையன் என்று உலகோரால் மதிப்பீடு செய்யப்படுவது அவன் சேர்ந்த இனத்தாலே ஆகும்.
சென்ற குறளில் (452) இனத்துக்கேற்றவாறு ஒருவனது அறிவு திரிவுபடும் எனச்சொல்லப்பட்டது. இங்கு இனத்தைப் பொறுத்து உணர்ச்சி மாறுபடும் எனக் கூறப்படுகிறது. ஒருவனது கருத்து உருவாக்கங்களும் அவற்றின் வெளிப்பாடுகளும் அவனது மன எண்ணங்களைப் பொறுத்தது. அந்த மனஓட்டமே இங்கு உணர்ச்சி எனக் குறிக்கப் பெறுகிறது. உணர்ச்சியை வடிவாக்குவதில் அவன் சேரும் கூட்டம் பெரும்பங்கு வகிக்கிறது. இது அவன் சார்ந்தொழுகும் கூட்டத்தின் தன்மையைச் சார்ந்து அமையும். இவ்வாறாக ஒருவனது இனச் சேர்க்கை அவனது உள்ளத்து உணர்வுகளை அடையாளம் காட்டச் செய்கிறது.
ஒருவனது சிந்தனைகளுக்கும் ஒழுகலாறுகளுக்கும் அவன் சார்ந்த கூட்டம் பெருந்தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டது. அவன் பெறும் அடையாளத்திலும் அவை எதிரொலிக்கும். அதாவது, உலகத்தார் ஒருவன் இன்னான் அதாவது இப்படிப்பட்டவன்- வஞ்சனை உள்ளம் கொண்டவன்/நேர்மையானவன், மூட நம்பிக்கை உள்ளவன்/தெளிந்த சிந்தனை கொண்டவன், என்று கணிப்பது அவன் நாளும் பழகும் மக்களைப் பொறுத்துத் தான். அந்த இனமே - அந்தக் கூட்டுறவே- ஒருவன் இன்னான் -இன்ன தன்மை உடையவன் - என்று சொல்லவைக்கிறது. உணர்ச்சியை வளர்ப்பது அவனது மனம்தான் என்றாலும் உலகம் அவன் சார்ந்த மக்களை நோக்கியும் அவனை மதிப்பீடு செய்கிறது.
குறளின் பிற்பகுதி 'இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல்' என்கிறது. இக்குறளுக்கு நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பது ஆகும் அறிவு(குறள் 452) அதாவது மக்களது அறிவு அவர்கள் பழகும் கூட்டத்தின் தன்மையாக திரிவுபடும் என்ற முந்தைய பாடலின் கருத்தே காரணமாகிறது என்பதும். இனச்சேர்க்கையால் அறிவு திரிவுபடாது என்று அக்குறட்கருத்தை ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு மறுப்புரையாக இக்குறள் எழுதப்பட்டது என்பதும் பரிமேலழர் கருத்து.
அதாவது 'மனம்தான் அறிவுதிரிவுபடவும் காரணம்; இனம் அல்ல என்று சொல்வதை மறுப்பதற்கானது இக்குறள்' என்று அவர் உரை சொல்கிறது.
அவர் உரையின்படி சிறப்பறிவுக்கு சேர்க்கை முக்கியக் காரணம். ஆதலால், அறிவு திரிவுபடுவது, இனத்தின் சேர்க்கை இல்லாமல், மனம் காரணமாகவே உண்டாம் என்பது பொருந்தாதாம்; மனத்திற்கேற்ற பொது உணர்வும் (புலன் உணர்ச்சிகளும்) இனத்திற்கேற்ற சிறப்பு அறிவும் அமையும் என்கிறது இப்பாடல் என்று அவர் ஓர் விளக்கம் தருகிறார்.
|
'இனத்தானாம் இன்னான்' குறிப்பது என்ன?
'இனத்தானாம் இன்னான்' என்ற தொடரை இனத்தினால் இனியனல்லன், இனத்தினானே இனியரல்லர், இனம் நல்லதாகில் இன்னான் என்னும் புகழ், இவன் இத்தன்மையன் என்பது இனம் காரணமாக உண்டாம், இப்படிப்பட்டவன் என்பது சேர்ந்த இனத்தால் ஏற்படும், இத்தகையவர் என்பது அவர்தம் இனத்தாலேயே அமைவதாகும், சேர்க்கையால் உரிய மதிப்ப உண்டாம், இப்படிப்பட்டவன் என்பது அவன் கூடி வாழும் இனம் காரணமாக உண்டாகும், இப்படிப்பட்டவன் என்பது (அவனவன் பழகுகின்ற) இனத்தினால்தான் உண்டாகும், இத்தகையன் என்று சொல்லப்படுவதாம் பண்பு அவன் சேர்ந்த கூட்டத்தைப் பொறுத்ததாகும், இப்படிப்பட்டவன் என்பது அவன் சேரும் கூட்டத்தினால் ஏற்படும், 'இப்பேர்ப்பட்டவன்' என்பது சேர்ந்துள்ள இனம் காரணமாக உண்டாகும், 'இத்தகைய குணம் உடையவர்' என்பது அவர் சேரும் இனம் காரணமாகவே ஏற்படுகிறது, சார்ந்த இனம் மனிதரை இன்னார் எனக் குறிக்கும் அடையாளத்தின் இருப்பிடம், இந்தத் தன்மையை யுடையவன் என்று அவனது கூட்டுறவால் அறியப்படுகிறது என்றவாறு உரையாசிரியர்கள் விளக்கினர்.
இனத்தானாம் என்றது இனத்தான் ஆகும் அதாவது (பழகும்) கூட்டத்தைப் பொறுத்தததாம் என்ற பொருள் தரும். இன்னான் என்ற சொல்லுக்கு இத்தகையவன் என்பது பொருள். இனத்தானாம் இன்னான் என்ற தொடர் 'பழகும் கூட்டத்தால் இத்தகையவன்' எனப் பொருள்படும்.
உலகியலில் ஒருவரை அடையாளப்படுத்த 'இன்னார் வீட்டுப் பிள்ளை' எனச் சொல்வர். இதன் பொருள் இவன் இக்குடும்பத்தைச் சார்ந்தவன் என்பது. அதிலிருந்து அவனுக்குரிய மதிப்பு பெறப்படும். அதுபோலவே இக்குறளில் பயிலப்பட்டுள்ள இன்னான் என்ற சொல் 'இந்த அமைப்பை அல்லது இனத்தைச் சார்ந்தவன்' என அறியப்பட்டு அவனது இயல்பை உலகோர் உய்த்துணர்வர். ஆங்கிலத்தில் 'Tell me who your friends are, and I'll tell you who you are' என்ற வழக்கு உள்ளது. இதன் பொருள், 'உன் நண்பன் யார் என்று சொல். நீ இப்படிப்பட்டவனென்று நான் சொல்லுகிறேன்' என்பது. இதில் உள்ள நண்பனுக்குப் பதிலாக இனம் அதாவது ஒருவன் சார்ந்துள்ள கூட்டம் என்று வாசித்தால் 'இனத்தானாம் இன்னான்' என்னும் தொடர்க்கான பொருள் புலனாகும். அந்தக் கூட்டுறவு வழிவழியாக இருக்க வேண்டும் என்பதில்லை.
ஒருவன் ஒரு தீவிரவாத அமைப்பில் ஈடுபாடு காட்டி வருகிறான். இன்னொருவன் தொண்டூழியக் குழு ஒன்றின் மூலம் சேவைசெய்ய ஆர்வம் காட்டுகிறான். இவர்களை உலகத்தார் எப்படி இனம் காண்பர்? அவர்கள் சார்ந்த கூட்டம் காரணமாக, முதலில் சொல்லப்பட்டவர் தீவிரவாதி என்றும் மற்றவர் அருள் நெஞ்சம் கொண்டவர் என்றும் அடையாளம் காணப்படுவர். அதுபோலவே குடியாட்சி முறையில் நம்பிக்கை உள்ள அமைப்பைச் சேர்ந்தவன் நல்லமனம் கொண்டவன் என்றும் வேற்றுமைகளைத் தோற்றுவித்துப் பிரித்தாளும் கொள்கைகளைப் பரப்பும் குழுவில் நாட்டம் உள்ளவன் தீயஉள்ளம் படைத்தவன் என்றும் உலகம் கருத்துக் கொள்ளும். இங்ஙனம் மதிப்புக் கொள்ளப்படுவதையே வள்ளுவர் 'இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல்' என்ற தொடரால் குறிக்கிறார்.
|
மக்களது உணர்வுகள் அவரவர்கள் மனத்தைப் பொறுத்துத்தான்; தாம் சேர்ந்த கூட்டத்தைப் பொறுத்து இன்னான் என்று உலகத்தாரல் சொல்லப்படுவர் என்பது இக்குறட்கருத்து.
சிற்றினம் சேராமை உலகோர்முன் ஒருவனது மதிப்பீட்டை உயர்த்தும்.
மக்களுக்கு உணர்ச்சி மனத்தினாலே உண்டாகும். இவன் இன்னான் என்று உலகத்தினரால் கூறப்படும் சொல் அவன் இணைத்துக் கொண்ட கூட்டம் காரணமாக உண்டாகும்.
|