நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்
(அதிகாரம்:சிற்றினம் சேராமை
குறள் எண்:460)
பொழிப்பு (மு வரதராசன்): நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
|
மணக்குடவர் உரை:
நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை.
இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.)
வ சுப மாணிக்கம் உரை:
நல்ல சேர்க்கையினும் சிறந்த துணையில்லை; கெட்ட சேர்க்கையினும் வேறு கேடில்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல்.
பதவுரை: நல்-நல்ல; இனத்தின்-இனத்தைவிட; ஊங்கு-மேற்பட்ட; துணை-துணை; இல்லை-இல்லை; தீ-கொடிய; இனத்தின்-இனத்தைவிட; அல்லல்-துயர்; படுப்பதூஉம்-உறுவிப்பதும் இல்-இல்லை.
|
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை;
பரிப்பெருமாள்: நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை;
பரிதி: சற்புருஷர் துணைபோலே சுகம் இல்லை; [சற்புருஷர்-நல்லோர்]
காலிங்கர்: உலகத்து ஒருவர் இணங்கும் இன வேற்றுமையான் வரும் புகழும் பழியும் இவையாகலான் நல்லினத்தின் மேலாயிருப்பதொரு துணையும் இல்லை;
பரிமேலழகர்: ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை;
'நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனுக்கு நல்லினத்தைக் காட்டிலும் மிக்க துணையும் இல்லை', 'மனிதருக்கு நல்ல சகவாசத்தைவிட நன்மை செய்யக்கூடிய துணையும்
இல்லை', 'ஒருவனுக்கு நல்ல இனத்தைப் பார்க்கிலும் சிறந்த துணையும் இல்லை', 'ஒருவர்க்கு நல் இனத்தைவிடச் சிறந்த துணையும் இல்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.
நல்லினத்தைவிட மேலானதொரு துணையும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.
பரிப்பெருமாள்: தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.
பரிதி: துற்சனா சங்காத்தம் போல துன்பம் இல்லை என்றவாறு. [துற்சனா சங்காத்தம்-தீயோர் கூட்டுறவு]
காலிங்கர்: தீயினத்தின் துன்பம் தரும் பகையும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன. [உறழ்பொருள்- ஒன்றின் ஒன்று மிகுவதை உணர்த்தும் பொருள்; அல்லற் படுப்பது- துன்பத்தை உண்டாக்குவது]
'தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தீயினத்தைக் காட்டிலும் மிக்க பகையும் இல்லை', 'கெட்ட சகவாசமாகிய சிற்றினச் சேர்க்கையைவிடத் துன்பம் உண்டாக்கக்கூடிய பகையும்
இல்லை', 'தீய இனத்தைப் பார்க்கிலும் மிகுதியாகத் துன்பப்படுத்துவதும் யாதும் இல்லை', 'கெட்ட இனத்தைவிடத் துன்பம் தரக்கூடியதும் (வேறொன்றும்) இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.
தீயினத்தைவிட துன்பப்படுத்துவதும் வேறொன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நல்லினத்தின் ஊங்கும் துணை இல்லை; தீயினத்தைவிட துன்பப்படுத்துவதும் வேறொன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'ஊங்கு' என்ற சொல்லின் பொருள் என்ன?
|
தீயோர் கூட்டுறவு மிக்க துன்பம் தருவது.
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தைவிட துன்பம் தருவது எதுவும் இல்லை.
தாம் எந்த வகையிலும் குற்றம் செய்துவிடக் கூடாது என்பதிலே கருத்தாக இருப்பவர்கள் நல்லவர்களையே எப்பொழுதும் துணையாகக் கொண்டிருப்பார்கள்; நன்னெறியில் நடக்கும் கூட்டத்துடனேயே என்றும் இணைந்து வாழ்வார்கள்; தவறு செய்யும் போது இடித்துரைப்போர்களுடனே சேர்ந்திருப்பர்.
நல்லவர்களுடன் கூட்டுறவு வைத்துக்கொள்வது சிறந்த துணையாக அமையும். குற்றம் ஏதும் புரியாதவாறு தடுக்கும்.
தீமை செய்கின்றவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வது துயரத்திலேயே முடியும்.
சமூக வாழ்க்கையில் அல்லல்படுத்தும் அதாவது துன்பத்தை உண்டாக்கும் தீயோர் உறவு கூடாது என்கிறது இப்பாடல்.
சேராத இடத்திலே சேர்ந்தால் வாராத துன்பம் வரும் என்பது பழமொழி.
நல்லினத்திற்குத் தீயினம் எதிர்மறையாய் இருத்தலால் நல்லினம் உடம்பாடும் தீயினம் எதிர்மறையும் ஆயின.
'நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை' என்ற உடன்பாடும் 'தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்' என்ற எதிர்மறையும் இங்கு சொல்லப்பட்டுள்ளன.
மனநலம் இனச்சேர்க்கை இரண்டும் ஒன்றையொன்று பாதிப்பன.
நல்லின உறவைத் துணை என்று சொன்னதால் தீயோர் கூட்டத்துடனான சேர்க்கையைத் துன்பம் தரும் பகைவருடன் கூட்டு வைத்துக்கொள்வதற்கு நேர் என உரையாளர்கள் கூறினர். நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார் எனப் பரிமேலழகர் பொருளுரைத்தார். துணை என்பதற்கேற்பப் பகை என்பது வருவித்துக் கொள்ளப்பட்டது. ‘துணை’ யென்பது கருதிப் பகை யெனவும் ‘அல்லல்’ என்பது கருதி இன்பம் எனவும் உரை கூறாமல் கிடந்தாங்கே மணக்குடவர் 'நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை' என்றார்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கை அவனுடைய கூட்டுறவுகளைப் பொருத்தே பெரிதும் அமையும். தீய சேர்க்கைகளால் கேடுநிறைந்த வாழ்க்கையும், நல்ல உறவுகளால் மேம்பாடான வாழ்க்கையும் அமையும். முந்தைய அதிகாரத்தில் பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் (பெரியாரைத் துணைக்கோடல் 450 பொருள்: பெரியாரது தொடர் கைவிடல் பலரைப் பகைப்பதினும் பத்துமடங்கு தீமை உடைத்து) எனக் குறள் கூறியது.
நல்லோர் உறவின் முக்கியத்துவத்தை அங்கு வலியுறுத்திய வள்ளுவர் இங்கு தீயோர் உறவை விலக்குவதால் ஏற்படும் நன்மையை வலியுறுத்துகிறார்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் (நட்பாராய்தல் 792 பொருள்: பல முறை ஆராய்ந்துகொள்ளப்படாதவனின் நட்பு முடிவில் தான் சாகும்வரை துன்பத்தையும் தரும்) என்னும் குறளையும் இத்துடன் எண்ணலாம்.
நல்லினம் தீயினம் என்ற முரண் இணைச் சொற்கள் உள்ளத்தில் ஆழப் பதியும் வண்ணம் ஆளப்பட்டுள்ளன.
நல்லினத்தின் தீயினத்தின் என்பனவற்றில் உள்ள 'இல்' இரண்டும் ஐந்தாம் வேற்றுமையுருபுகள். அவ்வுருபு ஒப்புப் பொருளிலும் ('போல') உறழ் பொருளிலும் வரும். ஒப்பின்றி ஒன்றினொன்றி மிகுந்து மாறுபடுவது 'உறழ்' எனப்படும். இங்கு நல்லினத்தைவிட தீயினத்தைவிட என்னும் பொருளில் இன்னுருபு வந்திருத்தலின் உறழ் (உறழ்ச்சி) பொருளாயிற்று.
‘நல்லினத்தி னூங்கும் துணையில்லை’ என்பதற்கு நல்லினத் துணை போல இன்ப மில்லை என ஒப்புப்பொருளில் பரிதி உரைத்தார்.
உறழ்பொருள் என்பது ஒன்றின் ஒன்று மிகுவதை உணர்த்தும் பொருள். 'நல்லினத்தைக் காட்டிலும் சிறந்த துணையும், தீயினத்தைக் காட்டிலும் மிக்க பகையும் இல்லை என ஒன்றினொன்று அவ்வக்குணங்களில் மிகுந்திருத்தல் உணர்த்தப்பட்டது. நல்லினத்தின் மிக்க துணையுமில்லை என்பதற் கேற்ப, அல்லற் படுப்பது, என்பதனை ஏதுப் பெயராகக் கொண்டு தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை என்பது பரிமேலழகர் உரை. இங்கு ‘இன்’ உருபுக்கு ஒப்புப் பொருள் கூறுவதினும் உறழ்ச்சிப் பொருளே சிறக்கும்.
|
'ஊங்கு' என்ற சொல்லின் பொருள் என்ன?
'ஊங்கு' என்ற சொல்லுக்கு மிக்க, மேலாயிருப்பதொரு, சிறந்ததாகிய, சிறந்த, மேலான, மிகுந்தது, போல, மேம்பாடு என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.
இச்சொல்லுக்கு மேம்பாடான அல்லது மேலான என்பது பொருள். சிறந்த, மிக்க என்றும் இடத்துக்குத் தக்கவாறு உரை கூறுவர்.
பரிமேலழகர் இதனைத் தீ இனத்தின் (ஊங்கும்) அல்லல் படுப்பதூஉம் இல் என்று தீஇனம் என்ற சொல்லுக்கும் கூட்டி உரை செய்வார். ஊங்கும் என்ற சொல் தீயினச் சேர்க்கை மிகவும் துன்பம் தருவது என்ற கருத்தை மிக அழுத்தமாகச் சொல்கிறது. இவ்வாறாக இக்குறள் நல்ல இனத்தைவிடச் சிறந்த துணையில்லை; கெட்ட இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை என்ற பொருள் தருகிறது.
அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு என்ற அறன் வலியுறுத்தல் அதிகாரத்துக் குறளின் நடையைப் போன்றது இப்பாடல்.
'ஊங்கு' என்ற சொல்லுக்கு மிக்க என்பது பொருள்.
|
நல்லினத்தைவிட மேலானதொரு துணையும் இல்லை; தீயினத்தைவிட துன்பப்படுத்துவதும் வேறொன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.
சிற்றினம் சேராமை துன்பம் நேராது காக்கத் துணை செய்யும்.
நல்லினச் சேர்க்கையினும் சிறந்த துணையில்லை; சிற்றினம் சேர்தலினும் கேடு யாதும் இல்லை.
|