இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0455மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:455)

பொழிப்பு (மு வரதராசன்): மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

மணக்குடவர் உரை: மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய இரண்டும். இனம் நன்றாதலைப் பற்றி வரும்.
இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.

பரிமேலழகர் உரை: மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும், இனம் தூய்மை தூவா வரும் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.
(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் 'தூவறத் துறந்தாரை (கலித். நெய்த ,1 )என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான்இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: மனத்தூய்மை, செயல்தூய்மை ஆகிய இரு தூய்மைகளும் இனத்தூய்மையைப் பற்றுக்கோடாகக் கொண்டு வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.

பதவுரை: மனந்தூய்மை-மனநலன், உள்ளத் தூய்மை; செய்வினை தூய்மை-செயல் நயம்; இரண்டும்-இரண்டும்; இனம்-குழு; தூய்மை-நன்றாதல்; தூ-பற்றுக்கோடு; ஆ-ஆகும்படி; வரும்-உண்டாம்.


மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய இரண்டும்;.
பரிப்பெருமாள்: மனம் நன்றாதலும் செய்யும்வினை நன்றாதலுமாகிய இரண்டும்;
பரிதி: மனம் தூய்மையும் செய்வினை தூய்மையும் ஆகித் தன் இனத்தைத் தான் பாதுகாப்பானாகில்;
காலிங்கர்: உலகத்துப் பெரியோர் தமது மனம் தூய்மை உடைத்தாலும், தம் செய்வினை தூய்மையாகலும் என இவை இரண்டும்;.
பரிமேலழகர்: அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும்;
பரிமேலழகர் கருத்துரை: மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல்.

'மனம் தூய்மை உடையதாதலும் செய்வினை தூய்மையாகலும் என இவை இரண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மனந்தூய்மையை விளக்கும் பரிமேலழகர் 'அது இயற்கையாய அறியாமையின் நீங்குதல்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனத் தூய்மை செயல் தூய்மை இரண்டும்' 'நல்ல மனமுடையவனுக்கும் சகவாசம் நல்லதாக இருந்தால்தான் அந்த மனத்தூய்மை நிலைக்கும்) ஒருவனுடைய மனம் சுத்தமாக இருப்பது செய்கை சுத்தமாயிருப்பது ஆகிய இரண்டும்.', 'ஒருவனுக்கு உள்ளத்தின் புனிதமும் முயற்சியின் நயமும் ஆகிய இரண்டும்' 'ஒருவர்க்கு மனத் தூய்மையும் செயல் தூய்மையும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

உள்ளத் தூய்மை செயலில் நயம் என இவை இரண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

இனந்தூய்மை தூவா வரும்.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இனம் நன்றாதலைப் பற்றி வரும்.
மணக்குடவர் குறிப்புரை: இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.
பரிப்பெருமாள்: இனம் நன்றாதலைப் பற்றி வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.
பரிதி: அதனாலே இந்த இரண்டு காரியமும் வரும் என்றவாறு.
காலிங்கர்: தாம் இணங்கும் இனத்தின் தூய்மை காரணமாகவே வரும் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: தூவென்பது அப்பொருட்டாதல் 'தூவறத் துறந்தாரை (கலித். நெய்த,)என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான் இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.

'இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல கூட்டுறவால் வரும்', 'அவன் நெருங்கிப் பழகும் மனிதர்களுடைய இனம் சுத்தமாக இருந்தால்தான் முடியும்', ' அவன் சேரும் இனத்தாரின் புனிதத்தைச் சார்ந்தே அமைவன ஆகும்', 'தாம் சேர்ந்துள்ள இனத்தின் காரணமாக உண்டாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

தான் சார்ந்த கூட்டத்தின் நன்றாதலைப் பற்றுக்கோடாகக் கொண்டு வரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளத் தூய்மை செயலில் நயம் என இவை இரண்டும் தான் சார்ந்த கூட்டத்தின் நன்றாதலைத் தூவா வரும் என்பது பாடலின் பொருள்.
'தூவா வரும்' என்றால் என்ன?

பழகும் கூட்டச் சூழல் ஒருவனது மனநலம், செயல்திறம் ஆகியவற்றில் தாக்கத்தை உண்டுபண்ணும்.

உள்ளம் தூய்மையாதலும், செயல் தூய்மையாதலும் ஆகிய இரண்டு தன்மைகளும், தான் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மை காரணமாகவே உண்டாகும்.
சார்ந்தொழுகும் இனத்தூய்மையின் வழி, ஒருவருக்கு மனத்தூய்மையும், செய்யும் செயலின் நயமும் வந்தமையும். 'மனத்துக்கண் மாசிலனாதல்' என்பது வள்ளுவத்தின் அடிப்படை அறக்கோட்பாடு. வாய்க்கும் இடங்களில் எல்லாம் இதனை வள்ளுவர் வலியுறுத்துவார். அதுபோல் செயல் புரிவதிலும் தூய்மை வேண்டுபவர் அவர். இங்கு மனத்தூய்மையும் செயல்தூய்மையும் ஒருவர் பழகும் மனிதர்களைப் பொறுத்து அமையும் என்கிறார். சிற்றினம் சேர்ந்தார்க்கு மனத்தில் மாசுபடியும், அவர்கள் செய்யும் செயல்களும் சிறப்பு குன்றி அமையும். எனவே சிறுமைக்குணம் உள்ளாரோடு உறவு வேண்டாம் எனச் சொல்லப்படுகிறது.

ஒருவருக்கு உள்ளத்திலுள்ள மாசற்ற தன்மை, செயலில் உண்டாகும் நயம் ஆகிய இரண்டும் அவன் பழகும் கூட்டத்தின் தூய்மையால் ஏற்படும் என்கிறது பாடல். இனந்தூய்மை எவ்விதம் மனத்தூய்மை, செயல்தூய்மை இவற்றிற்குத் துணையாக முடியும்?
இனத்தூய்மை என்பது இனநலனைக் குறிப்பது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தனிப்பட்ட ஒழுக்கங்கள், பழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவை கொண்ட கூட்டங்கள் தாமாகவே தோன்றிவிடுகின்றன. இவையே இனம் என்று அறியப்படுகிறது. சில வழிமுறையாகத் தொடர்கின்றன. சில மறைந்து விடுகின்றன. நல்ல சிந்தனைகளுக்கான குழுக்கள் அமைவது போல, வன்முறை, வஞ்சனை, மூடநம்பிக்கைகள் இவை போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றவாறும் குழுக்கள் அமைந்துவிடுகின்றன. குழுக்கள் தவிர வாழும் இடத்திலும் பழகும் இடத்திலும் நெருங்கிப் பயில்கின்றவர்களலாகிய கூட்டமும் இனம் என்று அறியப்படும். மனித மனம் சார்ந்ததன் வண்ணம் என்பர். ஒருவன் இவற்றில் எவ்வினத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறானோ அதைப் பொறுத்து அவன் மனஓட்டங்களும் அமையும். மனம் தூய்மையாவதும் மாசு படிவதும் சேரும் குழுவைப் பொறுத்து மாறுதல் அடையும். மனம் செம்மைப்படுமானால் செயலும் இயல்பாகவே நயமுற விளங்கும். எனவேதான் மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய இரண்டும் இனம் நன்றாதலைப் பற்றி வரும் அதாவது பழகும் கூட்டத்தின் தன்மை கொண்டு அமையும் எனச் சொல்லப்பட்டது.

'மனம்-தூய்மை என்பது மனத் தூய்மை என்றும் இனம்-தூய்மை என்பது இனத் தூய்மை என்றும் மாறுவது இக்கால இலக்கணநெறி. இவை வள்ளுவர் காலத்தில் மனந்தூய்மை இனந்தூய்மை என்று நிற்கின்றன' என்பார் பொற்கோ.

'தூவா வரும்' என்றால் என்ன?

'தூவா வரும்' என்ற தொடர்க்குப் பற்றிவரும், காரணமாகவே வரும், பற்றுக் கோடாக உளவாம், பொறுத்தே ஏற்படும், பொறுத்தே உண்டாகும், வரும், தருவதால் வருவன, சார்ந்தே அமைவன ஆகும், காரணமாக உண்டாகும், பற்றுக்கோடாக நிலைத்து நிற்கும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தூவா என்ற சொல்லை விளக்குவதில் உரையாசிரியர்கள் சிறிது மாறுபடுகின்றனர். மணக்குடவர் 'பற்றி' எனப் பொருள் உரைத்தார். காலிங்கர் 'காரணமாக' என்றார். கலந்து என்பது பழைய 2 உரைகாரர் கண்ட பொருள். பரிமேலழகர் இதற்குப் 'பற்றுக்கோடாக' எனப் பொருள் கூறி ... தூவறத் துறந்தாரை ...... (கலித்தொகை 118: 9 பொருள்: பற்றுக்கோடு ஒழிய நீங்கினவரை) என்ற சங்கப் பாடலிலிருந்து அதற்குச் சான்றும் காட்டுவார். தூ என்ற சொல்லுக்குப் பற்றுக்கோடு அல்லது துணை என்ற பொருள் பொருந்தும்.

தூவா வரும் என்றது பற்றுக்கோடாய் வரும் அல்லது துணையாய் வரும் எனப் பொருள்படும்.

உள்ளத் தூய்மை செயலில் நயம் என இவை இரண்டும் தான் சார்ந்த கூட்டத்தின் நன்றாதலைப் பற்றுக்கோடாகக் கொண்டு வரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சிற்றினம் சேராமையால் மனம், செயல் இவை மாசற்று ஒளிரும்.

பொழிப்பு

மனத்தூய்மை, செயல்தூய்மை ஆகிய இரண்டும் இனத்தூய்மையைப் பற்றுக்கோடாகக் கொண்டு வரும்.