புறங்கூறாமையாவது காணாதவிடத்துப் பிறரை இகழ்ந்து உரையாமல் இருத்தல். ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறுதலும் புறங்கூறுதலாம். கோள் சொல்லுதல் என்பது புறங்கூறலின் சிறிது வேறுபட்டது என்றாலும் கோள் சொல்லுதலையும் புறங்கூறலில் அடக்குவர். இட்டுக் கட்டிப் புறம் பேசுதலைக் கோள்மூட்டல், மூட்டல், புறணி, பொரணி பேசுதல், குறளை எனவுங் கூறுவதுண்டு. 'கோள் சொல்லுதலும் புறங்கூறுதலும் நோக்கத்தால் வேறுபட்டன. ஒருவருடைய புகழும் தகுதியும் மறைதற்பொருட்டு திரித்துக் கூறுதல் புறங் கூறுதல். கோள் அவருக்குத் தீமை விளைக்கும் நோக்குடன் அவர் செய்த தவறுகளையும் பிறரிடம் கூறுதல். ஆகவே கோள்-மாறுபாட்டால் விளைவது. புறங்கூறுதல் பெருமையைக் குறைக்கக் கூறுதல்' (தண்டபாணி தேசிகர்).
புறம் என்பது பின்பக்கம்; கூறப்படுபவன் புறத்துள்ளான்; கூறப்படும் இடமும் புறம்; கூறப்படும் செய்தியும் புறம் ஆகும். புறங்கூறுபவன் என்பான் முன் நின்று புகழ்ந்து பேசிப் பின் நின்று பழிகூறும் பகையுள்ளம் கொண்டவன். நேரில் கூறும் நேர்மையும் துணிவுமற்றவரே புறங்கூறுவர்.
தன்னலத்தால், தான் கவரக் கருதிய பொருளை அடைய முடியாத போதும், அவர் செய்யும் முயற்சிகள் பலிக்காதபோதும் ஆக்கமுடைய பிறரைப்பற்றிப் புறங்கூறுவர்.
ஆற்றாமை காரணமாக பிறரது நற்குணங்களை மறுக்கும் உள்ளத்தால், பழிதூற்றுவர். புறங்கூறுபவர்களைப் புன்சொல் உரைப்பான் எனக் குறள் இகழ்கிறது.
ஒருவரைப் பொய்ம்மையாக வஞ்சக இன்சொல் பேசிப் புகழ்ந்துரைத்து வாழ்வு நடத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கும்பொழுதும், தெளிவு, துணிவு, ஆகிய நற்பண்புகள் இல்லாதபோதும் புறங்கூறல் தோன்றும். ஒருவரின் கருத்தை நேரிடையாகப் பேசி மறுக்கும் திறனும் நெஞ்சுரமும் இல்லாமல், அதே நேரம் தன் கருத்தை மிகைப்படுத்த முனையும்போது புறங்கூறுவர். பிறரைத் தாழ்த்தினால் தன்நிலை உயரும் என்ற பிழையான எண்ணத்தினாலும் புறங்கூறத் தோன்றும்.
ஒருவனைக் காணாதபோது இழித்துரைத்துக் கண்டபோது பொய்த்து நகையாடி உயிர் வாழ்தல் அறத்தை அழிக்கிற தீச்செயலைவிட, தீமையைப் போற்றுகிற தீச்செயலைவிட கொடியது என்கிறார் வள்ளுவர். அறவழியில் செல்லாது இருப்பவர்களுக்கும் இனியது புறங்கூறித் திரியாமல் இருப்பது என்கிறார் அவர். இவ்வதிகாரப் பத்துள் ஐந்தில் அறம் என்ற சொல் ஆட்சி பெற்றுள்ளது. அறத்தினுள் அனைத்தும் அடங்குமாயினும் புறங்கூறாமை அறத்தினும் உயர்த்தப்படுகிறது.
புறாங்கூறாது இருத்தலாகிய அறத்தைக் கடைப்பிடிப்பதால் உண்டாகும் நன்மையையும் புறங்கூறுவதன் கொடுமைகளையும், புறம் கூறுகின்றவர்க்கு உண்டாகும் குற்றத்தையும் துன்பத்தையும் கூறி, முடிவில் புறங்கூறுதலை ஒழித்தற்கு வழியும் கூறுகின்றன இத்தொகுதியின் பாடல்கள்.
அறத்திற்குப் புறம்பான வழியில் எழுதுவதையும் புறங்கூறல் வகையில் சேர்ப்பர். மொட்டைக் கடிதங்கள் அதாவது எழுதுவோர் யார் என்று பெயர் தெரிவிக்காமல் இழிவாக எழுதப்படுபவை சிறந்த எடுத்துக்காட்டு.