இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0185



அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும்

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:185)

பொழிப்பு: அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

மணக்குடவர் உரை: ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும்.
இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.

பரிமேலழகர் உரை: அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும்.
(மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: இவன் நெஞ்சத்தில் நேர்மை இல்லை என்பது கோள் சொல்வதிலிருந்து கண்டு கொள்ளலாமே?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப் படும்.


அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை:
பதவுரை: அறம்-நல்வினை; சொல்லும்-சொல்லும்; நெஞ்சத்தான்-உள்ளம் உடையவன்; அன்மை-அல்லாமை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை;
பரிதி: தன்மநெறி சொல்லுகின்ற மனத்தான் நன்மை ஒருவன்;
காலிங்கர்: ஒருவர் அறநூல் சொல்லுகின்ற தூயநெஞ்சத்தார் அல்லர் என்பதனை;
பரிமேலழகர்: புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது;

'ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி நெஞ்சத்தான் நன்மை எனப் பிரித்ததால் 'தன்மநெறி சொல்லுகின்ற மனத்தான் நன்மை ஒருவன்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறம் கூறும் மனமில்லாதவன் என்பது', 'ஒருவன் நல்லது சொல்லும் எண்ணமுள்ளவன் அல்லவென்பதை', 'ஒருவன் பிறரது நன்மையை எடுத்துரைக்க மனமில்லாதவன் என்பது', 'அறத்தைக் கூறும் எண்ணம் உடையவன் அல்லன் என்பது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையன் அல்லன் என்பது என்பது இப்பகுதியின் பொருள்.

புறம்சொல்லும் புன்மையால் காணப் படும்:
பதவுரை: புறம்-காணாதவிடம்; சொல்லும்-சொல்லும்; புன்மையால்-கீழ்மையால்; காணப்படும்-அறியப்படும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.
பரிதி: குற்றத்தைப் புறம் சொல்லாமல் இருப்பானாகில் நன்று என்றவாறு.
காலிங்கர்: மற்றும் தாம் ஒருவரைப் புறம் கூறுகின்ற புல்லிமையால் இவனது பேதமையை அறிவிக்கின்றது என்றவாறு. [புல்லிமையால் - இழிதகைமையால்]
பரிமேலழகர்: அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.

'அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுணம் காரணமாக அறியப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'குற்றத்தைப் புறம் சொல்லாமல் இருப்பானாகில் நன்று' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவன் கோள் சொல்லும் இழிதகைமையால் அறியப்படும்', 'கோள் சொல்லுகின்ற அற்பத் தனமே காட்டிவிடும்', 'புறங்கூறுகின்ற அவனது இழிகுணத்தால் அறியப்படும்', 'அவன் புறத்தே பழித்துரைக்கின்ற இழி தன்மையால் அறியப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

புறங்கூறுகின்ற அவனது சிறுமையால் அறியப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புறங்கூறும் இழிகுணம் ஒன்றாலேயே ஒருவன் அற எண்ணம் கொண்டவன் அல்லன் என்பது தெரிந்துவிடும்.

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அல்லன் என்பது புறங்கூறுகின்ற அவனது சிறுமையால் அறியப்படும் என்பது பாடலின் பொருள்.
'அறம்சொல்லும் நெஞ்சத்தான்' என்ற தொடரின் பொருள் என்ன ?

அன்மை என்ற சொல்லுக்கு அல்லாமை என்பது பொருள்.
புறம்சொல்லும் என்றது புறங்கூறும் என்ற பொருள் தரும்.
புன்மையால் என்ற சொல்லுக்கு சிறுமையால் என்று பொருள்.
காணப்படும் என்ற சொல் அறியப்படும் என்ற பொருளது.

புறங்கூறும் இழி குணத்திலிருந்தே ஒருவன் நெஞ்சில் அற எண்ணம் இல்லை என்பது தெரிந்துவிடும்.

ஒருவன் அறநூல்களில் தேர்ந்தவனாக இருக்கலாம்; அறத்தைப் போற்றிப் பேசலாம்; தான் அறவோன் எனச் சொல்லித் திரியலாம். ஆனால் அவன் புறங்கூறுபவனாக இருந்தால், அது அவன் நெஞ்சத்தில் அறம் இல்லை என்பதை உணர்த்தும். பிறரைப் பற்றிப் புறஞ்சொல்லும் குற்றத்தினால் அவன் அற எண்ணம் கொண்ட மனத்தினன் அல்லன் என்பது தெரியவரும்.
அறநெஞ்சுடையார் எவரையும் திருத்தமுடியும் என்று நம்புவார்கள் ஆதலால் குற்றமுடையோரைக் கூட எளிதில் பகைக்க மாட்டார்கள். திருத்துவதற்குரிய வழி வகைகளைக் கண்டு முயற்சிப்பார்கள். அவர்களுக்குக் குற்றத்தின் மீது வெறுப்பு இருக்குமேயன்றிக் குற்றமுடையார் மாட்டு வெறுப்பிருக்காது. ஆனால் புறஞ்சொல்லுகின்றவர்கள் அழுக்காறு மற்றும் பிறர்பொருள் கவருதல் காரணமாக அல்லது தனக்குப் பயனுறும் என்கிற தன்னலங் காரணமாக பொய்த்து ஒழுகுபவர்கள். அவர்கள் பிறரது நன்மையை எடுத்துரைக்க மனமில்லாதவராவர். அத்தகையோர்க்கு மனத்தூய்மை இராது. சொற்களால் பகை வளர்க்கும் அவர்களுக்கு அறநெஞ்சம் எங்ஙனம் இருக்க முடியும்? அறவழிகளைச் சிந்திப்பதோ, அவ்வழி நடப்பதோ, அவர்களுக்கியலாது. அறநெஞ்சம் உள்ளவனாலேயே புறஞ் சொல்லாதவனாக இருக்க முடியும். புறங்கூறுபவன் அறநெஞ்சம் கொண்டவனாக இருக்க முடியாது என்கிறது இக்குறள்.
புறங்கூறும் புன்மை என்று கூறுவதால் அவர்களது இழிவைத் தெளிவாக்குகிறார்.

''புறங்கூறும் புன்மையால் அறங்கூறும் நெஞ்சத்தான் நன்மை காணப்படும்' எனக் கூட்டிப் புறம்பேசும் இழிதகைமையால் அவனுடைய மனநன்மை அறியப்படும் எனவும் உரை காணலாம். இப்பொருளில் நன்மையன்மையை நன்மை என்றது குறிப்பு மொழியாகக் கொள்ளப்படும்' என்பது தண்டபாணி தேசிகர் கருத்து.
வ உ சிதம்பரம் ‘அறஞ் சொல்வான்’ எனப் புதுப்பாடங் கொண்டு 'அறங்களைச் சொல்பவன் உள்ளத்தால் மறங்களை உள்ளுபவனா யிருத்தல் (அவன்) புறங் கூறும் இழி செயலால் அறியப்படும்' என உரை தருவார். தனது கருத்துரையில் 'அறஞ் சொல்பவன் புறஞ்சொல்லுவ னாயின், அவன் அறச் சொற்களெல்லாம் பொய்ச் சொற்கள் என்றறிக' எனவும் கூறினார்.

'அறம்சொல்லும் நெஞ்சத்தான்' என்ற தொடரின் பொருள் என்ன ?

'அறம்சொல்லும் நெஞ்சத்தான்' என்ற தொடர்க்கு அறத்தை நினைக்கிற மனம் உடையன், தன்மநெறி நினைக்கின்ற மனத்தான், அறநூல் சொல்லுகின்ற தூயநெஞ்சத்தார், அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றவன், அறம் பற்றி மனத்தில் உணர்ந்து பேசுபவன், நெஞ்சத்தில் நேர்மை உள்ளவன், அறம் கூறும் மனமில்லாதவன், நல்லறிவு சொல்லக்கூடிய எண்ணமுள்ளவன், அறமுறையைச் சொல்லும் நெஞ்சத்தவன், பிறரது நன்மையை எடுத்துரைக்கும் மனமுள்ளவன், அறத்தைக் கூறும் எண்ணம் உடையவன், நெஞ்சில் நல்லறம் குடிகொண்டவன் என உரையாசிரியர்கள் பொருள் தந்தனர்.

'அறம்சொல்லும் நெஞ்சத்தான்' என்ற தொடர்க்கு அறத்தை நினைக்கிற மனம் உடையன் என்பது பொருத்தமான பொருள்.

ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையன் அல்லன் என்பது புறங்கூறுகின்ற அவனது இழிதகைமையால் அறியப்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புறங்கூறாமை ஒருவனது நேரிய நெஞ்சத்தைக் காட்டும்.

பொழிப்பு

அற எண்ணம் கொண்டவன் அல்லன் என்பது புறம் கூறும் அவன் சிறுமையால் அறியப்படும்