இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0182அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:182)

பொழிப்பு: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்தலைவிட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

மணக்குடவர் உரை: அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல்.
இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.

பரிமேலழகர் உரை: அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்.
(உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.)

வ சுப மாணிக்கம் உரை: அறம் அழித்துச் செய்யும் தீமையினும் தீது புறத்தே இகழ்ந்து முன்னே புகழ்வது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை.


அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே:
பதவுரை: அறன்-நல்வினை; அழீஇ-சிதைத்து; அல்லவை-தீவினைகள்; செய்தலின்-செய்தலைக் காட்டிலும்; தீதே-கொடிதே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது;
பரிதி: தன்மத்தை அழித்துப் பாவத்தைச் செய்கிறதற்கு ஒக்கும்;
காலிங்கர்: ஒருவன் அறத்தினின்றும் நீங்கி, பாவங்களைச் செய்தலினும் சாலத் தீதே;
பரிமேலழகர்: அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து;

'அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் அறன்+நழீஇ எனப் பிரித்து அறத்தின் நீங்கி என உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறமாயினவற்றை அழித்து இல்லை என்று சொல்லி அறமல்லாதவற்றை ஒருவன் செய்தலினும்', 'மற்ற தர்மங்களில் தவறி தர்மமல்லாத காரியங்களைச் செய்வதைக் காட்டிலும் பெரிய பாவம்', 'அறத்தைச் சிதைத்துத் தீயன செய்தலினும் இழிவானது', 'அறநெறிகளைக் கெடுத்துத் தீயனவற்றைச் செய்தலைவிட தீமையுடையது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறத்தைச் சிதைத்துத் தீயன செய்தலைவிடத் தீமையுடையது என்பது இப்பகுதியின் பொருள்.

புறனழீஇப் பொய்த்து நகை:
பதவுரை: புறன் -காணாதவிடம்; அழீஇ-அழித்துச் சொல்லி; பொய்த்து-பொய்யாகி; நகை-சிரிப்பு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல்.
மணக்குடவர் குறிப்புரை: இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.
பரிதி: ஒருவன் குற்றத்தைப் புறங்கூறுதல் என்றவாறு.
காலிங்கர்: யாரோ எனில் முன்னம் ஒருவன் முன்பு தானுளாகியபின் புறத்துப் போந்து தான அவனை முன்னம் சொல்லும் முறையின்றி, சாலத் தப்பானவை சொல்லிப் பிறருடன் நகுகின்ற நகை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தப்பு என்றது பொய் என அறிக.
பரிமேலழகர்: ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்.
பரிமேலழகர் குறிப்புரை: உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.

'ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் புறன்+ நழீஇ எனப் பிரித்துப் புறத்துப் போந்து எனப் பொருள் கொள்வார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனைக் காணாத இடத்து இகழ்ந்துரைத்து முகத்தெதிரே பொய்யாகச் சிரித்துப் பேசுதல் தீமையுடையது', 'ஒருவனைக் காணாத விடத்தில் நழுவி அவனைப்பற்றி பொய்யான கோள்களைச் சொல்லி மகிழ்ச்சியடைவது', 'ஒருவன் பெருமையை அவனுக்குப் புறத்தே அழித்துப் பேசி அவனைக் கண்டபோது பொய்யாக அவனைப் புகழ்ந்துரைத்து நகையாடுதல்', 'காணாதவிடத்து இகழ்ந்து உரைக் கண்ட வழிப் பொய்யாக நகுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காணாதவிடத்து இகழ்ந்துரைத்துக் கண்ட வழிப் பொய்யாக நகுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவனைக் காணாத இடத்தில் இகழ்ந்துரைத்து, அவனைப் பார்த்த இடத்தில் பொய்யாகச் சிரித்துப் புகழ்தல், அறநெறிகளைப் புறந்தள்ளித் தீயனவற்றைச் செய்தலைவிடத் தீதாகும்.

அறனழீஇ அல்லவை செய்தலைவிடத் தீமையுடையது காணாதவிடத்து இகழ்ந்துரைத்துக் கண்ட வழிப் பொய்யாக நகுதல் என்பது பாடலின் பொருள்.
'அறனழீஇ' என்ற தொடர் குறிப்பது என்ன?

அல்லவை என்ற சொல் அறமல்லாதவை என்னும் பொருளது.
செய்தலின் என்ற சொல் 'செய்வதைக் காட்டிலும்' என்ற பொருள் தரும்.
தீதே என்ற சொல்லுக்கு கொடியது என்பது பொருள்.
புறனழீஇ என்றது புறத்தே இழித்துப் பேசி எனப்பொருள்படும்.
பொய்த்து என்ற சொல்லுக்கு பொய்யாக என்று பொருள்.
நகை என்ற சொல் சிரித்துப் பேசுதல் குறித்தது.

ஒருவன் இல்லாதபோது அவனைப் பற்றி இகழந்து பேசி நேரில் பொய்யாகச் சிரித்துப் புகழ்வது அறமல்லாதவற்றைச் செய்வதைக் காட்டிலும் தீது.

'இதனினும் இது இனிது' என்று முந்தைய குறள் (181) சொல்ல, இப்பாடல் 'இதனினும் இது தீது' என்ற நடையில் அமைகிறது.
அறத்தை அழித்து அறமல்லாதவற்றைச் செய்வதைக் காட்டிலும் தீதானதே புறத்தே ஒருவனது உயர்வைப் பழித்துப் பேசி முகத்தெதிரே பொய்யாக இன்முகம் காட்டிச் சிரித்துப் பேசுதல் என்கிறது பாடல். அறம் நீங்கிய செயல்களைவிடத் தீங்கானது புறம் சொல்லுதல் என்பது மீண்டும் இங்கே வற்புறுத்தப்பெறுகிறது. அதாவது அறம் நீங்கி ஒழுகுவதால் உண்டாகக் கூடிய தீங்கைக் காட்டிலும் புறம் சொல்லுவதால் கிட்டும் தீங்கானது பெரிது என்பது பொருள். புறங்கூறுதலே ஒரு தீய செயல். அதிலும் அப்படிப் புறங்கூறியவரே தாம் யாரைப்பற்றிப் புறம்பேசினாரோ அவரைக் காணும்போது, பொய்யாக சிரித்துப் பேசுதல் இன்னும் பெரிய தீமையாகிறது. புறத்தில் பழித்து கூறி நேரில் கண்டபோது பொய்யாகப் பழகும் இத்தகைய போலித்தனமான செயல் வஞ்சகமுமாகும்.
அறன் என்பது ஒன்றில்லை என்று அழித்துச் சொல்லுதலினும் ஒருவரைக் காணாதவழி இகழ்ந்துரையால் அவனது பெருமையை அழித்துச் சொல்லல் தீது எனவும், அதன்மேற் பாவங்களைச் செய்தலினும் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல் தீது எனப் பரிமேலழகர் உரை வரைந்தார். அதாவது அறனழித்தலினும் புறனழித்தல் தீது; அல்லவை செய்தலினும் பொய்த்து நகுதல் தீது என்று இக்குறட்பொருளை வாசிக்கவேண்டும் என்கிறார் பரிமேலழகர்.
ஒருவனைப் பற்றிய உண்மையல்லாத படைத்துமொழிகளால் அவனில்லாத இடத்தில் இகழ்ந்துரையால் அவன் உயர்வை அழித்துச் சொல்லி, கண்டபோது அவனோடு வஞ்சகமாகச் சிரித்து அன்பு பாராட்டுதல், அறத்தை அழித்து அறமல்லாதவற்றைச் செய்வதைக் காட்டிலும் தீதானது என்பது பாடலின் கருத்து.

இக்குறளுக்கு காலிங்கரின் உரை சற்று வேறுபடுகிறது. இவ்வுரை ஒருவரைப் பற்றிப் புறங்கூறுவது என்பது மட்டுமல்லாமல், பொய்யானவற்றைக் கூறி பிறரோடு எள்ளி நகையாடுவது எனச் சொல்கிறது. 'பொய்த்து நகை' என்றதற்கு 'பொய்யானவற்றைச் சொல்லி எள்ளி நகையாடுவது' என உரைக்கிறார் இவர். இது புறங்கூறுதலும், பொய்த்து நகுதலும் புறங்கூறப்பட்டவன் இல்லாத இடத்திலே பிறருடன் செய்வதாக உள்ளது.
நாகை சொ தண்டபாணியார் 'அறத்தை மறுத்துப் பாவத்தை ஒருவன்பாற் செய்தலினும், அவனைப் புறத்தே தூற்றி அவன் முகத்தெதிரே பொய்யாக நகை செய்தல் தீது' என்று அதாவது 'ஒருவனுக்குத் தீங்கு நேரே செய்தலினும் அவனுக்குப் புறத்தே இகழ்ந்துரைத்து அவன் எதிரே நகை செய்தல் கொடிது' என்ற பொருள்படும்படி உரைத்தார். இது அறனழித்தலும் அல்லவை செய்தலும், புறனழித்தலும் பொய்த்து நகுதலும் ஒருவனைப் பற்றியனவாகவே உள்ளது. ஆனால் குறளமைதி அறனழீஇ யல்லவை செய்தல் அவன் முன்னேயே நிகழ்வதாகக் கருத முடியாததாக இருக்கிறது.

'அறனழீஇ' என்ற தொடர் குறிப்பது என்ன?

'அறனழீஇ' என்ற தொடர்க்கு அறத்தை யழித்து, தன்மத்தை அழித்து, அறத்தினின்றும் நீங்கி, அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அறத்தையே இல்லையென அழித்துக்கூறி, அறத்தினை அழித்து, அறம் அழித்து, அறமாயினவற்றை அழித்து இல்லை என்று சொல்லி, அறத்தினின்றும் நழுவி, அறமுறையை அழித்து, அறத்தைச் சிதைத்து, அறநெறிகளைக் கெடுத்து, அறம் கடந்த செயல்கள் புரிவது, அறத்தைக் கெடுத்து, அறம் என்றே ஒன்றுமில்லையென அழித்துக்கூறி, அறத்தைக் கொன்று, நல்லது கெட்டது தெரியாமல் தவறு செய்வது, அறங்களை அழித்து என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பெரும்பான்மையான் உரையாளார்கள் அறத்தை அழித்து/ஒழித்து/கெடுத்து/சிதைத்து எனப் பொருள் கண்டனர். காலிங்கர் அறன்+நழீஇ எனப் பிரித்து அறத்தினின்று நழுவி அதாவது அறத்தினின்றும் நீங்கி எனப் பொருள் கொண்டார். நாமக்கல் இராமலிங்கமும் இவ்வாறே பிரித்தார்.

அறனழீஇ என்றதற்கு அறநெறிகளைக் கெடுத்து என்பது பொருத்தமான பொருள்.

அறத்தைச் சிதைத்துத் தீயன செய்தலைவிடத் தீமையுடையது காணாதவிடத்து இகழ்ந்துரைத்துக் கண்ட வழிப் பொய்யாக நகுதல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புறம் பேசிவிட்டு பொய் முகத்தோடு நகுதல் அறமல்லாத செயல் என்னும் புறங்கூறாமை பாடல்.

பொழிப்பு

அறத்தைச் சிதைத்துச் செய்யும் தீதைவிட ஒருவனைக் காணாத இடத்து இகழ்ந்து முகத்தெதிரே பொய்யாகச் சிரித்துப் பழகுவது.