இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0187



பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:187)

பொழிப்பு (மு வரதராசன்: மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும் பிரித்துவிடுவர்.

மணக்குடவர் உரை: நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார்.
இது நட்டவரை யிழப்பர் என்றது.

பரிமேலழகர் உரை: பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார்.
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். "கடியுமிடந் தேற்றாள் சோர்ந்தனள் கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.)

தமிழண்ணல் உரை: சிரித்து மகிழுமாறு பேசிப் பலருடன் நட்பாடலைத் தெளியாதவர், ஒருவரை ஒருவர் மனவேற்றுமை கொண்டு பிரியுமாறு புறம்பேசி, நெருங்கிய உறவுடையவர்களையும் பிரித்துவிடுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.

பதவுரை: பக-பிளவு உண்டாக; சொல்லி-(புறங்)கூறி; கேளிர்-நண்பர், சுற்றத்தார்; பிரிப்பர்-பிரித்திடுவர், விலகப்பண்ணுவர்; நக-உள்ளம் மகிழ; சொல்லி-பேசி, உரைத்து; நட்புஆடல்-நட்பு மேற்கொள்ளல், நட்பு பாராட்டுதல்; தேற்றாதவர்-தெளியாதவர், அறியாதவர்.


பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்; [கேளிர்-சுற்றத்தார், நண்பினர்]
பரிப்பெருமாள்: நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்;
பரிதி: இரண்டு பேர் ஒரு மனமாகக் கூடியிருக்கின்ற சிநேகத்தைப் புறஞ்சொல்லிப் பிரித்துவிடுவார் ஆர் என்னில்;
காலிங்கர்: நட்டோரையுங் கூட நட்புப் பிரிக்குமாறு சொல்லிப் பகுத்து விடுவர்;
பரிமேலழகர்: தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.

நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் கேளிரையும் பிரிப்பார் என்று உம்மை சேர்த்துச் சொல்வார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கோள் சொல்லி நண்பரையும் பிரித்து விடுவர்', 'நீங்குமாறு புறங்கூறித் தம் சுற்றத்தையும் பிரித்து விடுவர்', 'கோள் சொல்லுகின்றவர்கள் வேற்றுமை உண்டாகும்படிப் பேசி மனமொத்த நண்பர்களையும் பிரிந்து போகும்படிச் செய்துவிடுவார்கள்', 'பிரியுமாறு புறம் கூறி நண்பர்களைப் பிரிப்பர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிளவு உண்டாகுமாறு புறம்கூறிச் சுற்றத்தையும் பிரித்துவிடுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நகச்சொல்லி நட்பாடல் தேற்றாதவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார். [நட்பாடல் - நண்பு கொள்ளுதல்]
மணக்குடவர் குறிப்புரை: இது நட்டவரை யிழப்பர் என்றது.
பரிப்பெருமாள்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மகிழச்சொல்லி உறவு பண்ணமாட்டாதார் நட்டாரை இழப்பர் என்றது.
பரிதி: இரண்டு பேருக்கும் மனம் பிரியப்படச் சொல்லி உறவு பண்ண அறியாதவர் என்றவாறு.
காலிங்கர்: பிறராகிய பகைவரையும் அவர் முகம் மலருமாறு பொருந்தச் சொல்லி நட்பினைச் செய்தல் அறியாதவர் என்றவாறு.
பரிமேலழகர்: கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார்.
பரிமேலழகர் குறிப்புரை: கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். "கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.[தமக்கு உறுதி என்று அறிதல் - தமக்கு நன்மையைத் தருவதென்றுணர்தல்]

மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்புஆடலை அறியாதார் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். தேற்றாதவர் என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'உயர்வுபண்ண மாட்டாதார்' எனப் பொருள் கூறுவர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மகிழ்ந்து பேசி நட்புச் செய்யத் தெரியாதவர்', 'சிரித்துப் பேசி அயலாரோடு நட்புக் கொள்ளுதலை அறியாதவர்', 'மகிழ்ச்சியுண்டாக்கும் நல்ல வார்த்தைகளைச் சொல்லி நட்புண்டாக்குவது அவர்களுக்குத் தெரியவே தெரியாது', 'சிரிக்குமாறு இனியன சொல்லி நட்பு வளர்த்தலை அறியாதார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மகிழ்ந்து பேசி நட்பு வளர்த்தலை அறியாதார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மகிழ்ந்து பேசி நட்பு வளர்த்தலை அறியாதார், பிளவு உண்டாகுமாறு புறம்கூறி கேளிர்ப் பிரிப்பர் என்பது பாடலின் பொருள்.
'கேளிர்' குறிப்பது யாரை?

புறங்கூறித் திரிவோர்க்கு நட்புலகம் ஏலாது.

மகிழும்படி பேசி நட்பு வளர்த்தலைத் தெரியாதவர்களே புறம்கூறி சுற்றத்திடையே பிளவை உருவாக்குவார்கள்.
சிரித்துப் பேசி நட்புக்கொள்வதை அறியாதவரே பிளவு உண்டாகுமாறு புறங்கூறி உறவினரையும் பிரியுமாறு செய்வர்.
பக என்பது பகு+ஆ என விரிந்து பகுக்க, பிரிக்க எனப் பொருள் தரும். பகச்சொல்லி என்றதற்கு பிளவு உண்டாகும்படி புறம்கூறி என்பது பொருள். அதிகாரம் நோக்கிப் புறம்கூறி என உரைக்கப்படுகிறது.
புறங்கூறுவோர்க்கு நகைச்சுவை உணர்வு குறைபாடு உண்டு. அவர்கள் யாவரோடும் மகிழ்ந்து பேசி நட்புக்கொள்ளும் தெளிவு இல்லாதவர்கள், புறங்கூறித் தமது நண்பர்களையும் பகையாகப் பிரிந்து போகும்படி செய்துவிடுவர். புறங்கூறும் புன்மை செஞ்சம் உடையவர், தாமும் பலரோடு பழகி நட்பாக வாழ வகை அறியாராவர். மேலும், சுற்றமாயிருக்கும் மற்றவர்களிடை பகைமூட்டிப் பிரித்து விடுவர். நல்ல நட்பைக் கெடுத்தலும் பிரித்தலும் அறமற்றோர் செய்யும் செயல்கள்.
மகிழ்ந்து பேசி நட்புடன் வாழ்பவர் புறங்கூறமாட்டார் என்பது பெறப்படுகிறது. அனைவருடன் சிரித்துப் பேசி நட்புடன் வாழக் கற்றுக்கொள்வது புறங்கூறலை விலக்குதற்கு ஒரு வழி என்பதும் சொல்லப்பட்டது.

கேளிர்ப் பிரிப்பர் என்றதற்கு 'கேளிரையும் பிரிப்பர்' என உயர்வு சிறப்பும்மை விரித்து எழுதுவர்.
கேளிர்ப் பிரிப்பர் என்ற தொடர்க்கு தம்முடைய கேளிர் தங்களை விட்டுப் பிரிந்து போகும்படிச் செய்வார்கள் என்பதைவிட கூடிப் பழகும் வேறு இருவர் நட்பையுங் கூடப் புறங்கூறிப் பிரித்துவிடுவர் என்று பொருள் கொள்வது சிறப்பு. தேவநேயப்பாவாணர் 'தம் கேளிர் என்னாது கேளிர் என்று மட்டுங் குறித்ததினால், பிறரினத்தார்க்குள்ளும் புறங்கூற்றாற் பிரிவினையுண்டாக்குவர் என்பது பெறப்படும்' என்றார்.

'கேளிர்' குறிப்பது யாரை?

'கேளிர் என்ற சொல்லுக்கு கேளிரானார், சிநேகம், நட்டோர், கேளிர், உறவுடையவர்கள், பழகும் இருவர், நண்பர், சுற்றம், நண்பர்கள், இனிய உறவினர், நண்பர், உறவினர், நெருங்கிய உறவினர் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

கேளிர் என்பது நண்பர், சுற்றத்தார் (உறவினர்) என இவ்விரு திறத்தாரையும் குறிப்பதாக இலக்கியங்களில் ஆளப்பெறுகிறது. கேண்மை யுடையவர் கேளிர். மேலும் குறளில் பல அதிகாரங்களில் ‘நீரவர் கேண்மை’ (782) ‘பண்பிலார் கேண்மை’ (811) ‘ஒப்பிலார் கேண்மை’ (812) ‘இனமல்லார் கேண்மை’ (822) என்று கேண்மை, நட்பு என்னும் பொருளில் பயின்று வந்துள்ளது. இங்கு இச்சொல்லுக்கு இவ்விரு பொருளும் ஏற்கும். எனினும் சுற்றம் என்று கொள்வது நன்கு பொருந்தும்.
'கேளிராவார்‌ பழமையாய்‌ வந்த நட்புரிமையாற்‌ கிளைஞராயினோர்‌' என்பார் சொ தண்டபாணிப் பிள்ளை.
கேளிர் என்ற சொல்லுக்கு இங்கு சுற்றத்தார் என்ற பொருள் பொருத்தம்.

'கேளிர்' என்றது சுற்றத்தார் குறித்தது

மகிழ்ந்து பேசி நட்பு வளர்த்தலை அறியாதார், பிளவு உண்டாகுமாறு புறம்கூறிச் சுற்றத்தையும் பிரித்துவிடுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மகிழ்ந்து பேசி நட்புடன் வாழ்பவர்க்குப் புறங்கூறாமைப் பண்பு அமையும்.

பொழிப்பு

மகிழ்ந்து பேசி நட்புச் செய்ய அறியாதவர் புறங்கூறி நண்பரையும் பிரித்து விடுவர்