பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்நின்று கண்ணறச் சொல்லினும், முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க.
பதவுரை: கண்நின்று-கண்ணெதிரே நின்று; கண்அற-கண்ணோட்டம் இன்றி, இரக்கமில்லாமல்; சொல்லினும்-சொன்னாலும்; சொல்லற்க-சொல்லவேண்டாம்; முன்-எதிரில்; இன்று-இல்லாமல்; பின்நோக்காசொல்-பின்விளைவினைக் கருதாத சொற்கள், பின்பு முன்னே நின்று எதிர் முகம் நோக்க முடியாத சொல்.
கண்நின்று கண்ணறச் சொல்லினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்;
பரிப்பெருமாள்:ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்;
பரிதி: ஒருவர் முகம் பார்த்துத் தோஷம் சொல்வது நன்று;
காலிங்கர்: ஒருவனிடத்து நின்று வைத்த கண்ணோட்டங்கெடச் சில சொல்லுவானாயினும்;
பரிமேலழகர்: ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்;
'ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை 'கேட்டவர்கள் கண்ணை மூடிக்கொள்ள' என்ற பொருள் தருவது.
இன்றைய ஆசிரியர்கள் 'எதிரே கடுமையாகச் சொல்லினும் சொல்லலாம்', 'ஒருவன் கண் எதிரே நின்று கண்ணோட்டம் அறப் பேசினாலும்', 'ஒருவனுக்கு முன்னால் நின்று தாட்சண்ணியமில்லாமல் பேசிவிட்டாலும் குற்றமில்லை', 'ஒருவன் கண்முன்பு நின்று கடுஞ்சொல் சொல்லுவதில் கூடத் தவறில்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒருவனின் கண் எதிரே நின்று இரக்கமில்லாமல் கடுஞ்சொற்களைக் கூறினாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.
பரிப்பெருமாள்: பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.
பரிதி: அவனைக் காணாதவிடத்தில் புறஞ் சொல்லவொண்ணாது என்றவாறு.
காலிங்கர்: சொல்லாது ஒழிக; யாதினை எனில் ஒருவன் தன் முன்பிலனாகக் கண்டு மற்றவனைப் பின்பு முகநோக்கத் தகாத சொல்லினை என்றவாறு.
பரிமேலழகர்: அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.
பரிமேலழகர் குறிப்புரை: 'பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.
'பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத/பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆளில்லாத போது கோள் சொல்லற்க', 'அவன் எதிரே நின்று பின் முகத்தில் விழிக்க முடியாத சொல்லைக் கூறாதொழிக', 'ஆனால் அவன் உனக்கு முன்னால் இல்லாதபோது பின்னாலுண்டாகும் தீங்குகளை நினைத்துப் பார்க்காமல் கோள் சொல்லக்கூடாது', 'அவன் இல்லா இடத்துப் பின் விளைவு கருதாது பழிப்புரை கூறுதல் தகாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பின்னர் அவன் முகத்தை நேருக்கு நேர் எதிர்நோக்கவியலாத சொற்களைப் புறங் கூற வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|