இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0190



ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:190)

பொழிப்பு (மு வரதராசன்): அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?

மணக்குடவர் உரை: அயலார் குற்றம்போலத் தனது குற்றத்தையும் காண வல்லராயின், நிலைபெற்ற உயிர்க்கு வரும் தீமை உண்டோ என்றவாறு.
இது 'காண்பாராயின் சொல்லார்' என்று புறம் சொல்லாமைக்குக் காரணம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?
[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.]

குன்றக்குடி அடிகளார் உரை: புறம்கூறுபவர் அயலார் குற்றமறிந்து சொல்வது போலத் தம்முடைய குற்றங்களையும் (புறங்கூறல் உள்பட) கண்டு திருந்தி ஒழுகுவாராயின் உயிர்களுக்குத் தீங்கு உண்டோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் மன்னும் உயிர்க்கு தீதுண்டோ?

பதவுரை: ஏதிலார்-அயலார், மற்றவர்; குற்றம்-பிழை; போல்-போன்று; தம்-தமது; குற்றம்-பிழை; காண்கிற்பின்-காண்பார்களானால்; தீது-தீமை; உண்டோ-உளதோ; மன்னும்-நிலைபெறுகின்ற; உயிர்க்கு-உயிருக்கு.


ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அயலார் குற்றம்போலத் தனது குற்றத்தையும் காண வல்லராயின்;
பரிதி: தான் ஒருவர் குற்றத்தை யாவர்க்கும் வேண்டாதார் முன்னே சொல்வது போலத் தனக்கு வேண்டாதவரும் தன் குற்றத்தைச் சொல்லுவார் என்று அறிவானாகில்;
காலிங்கர்: பிறரது குற்றத்தைத் தான் காணுமாறு போல, தமது குற்றத்தையும் காணவல்லதன் பின்பு;
பரிமேலழகர்: ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்;

'அயலார் குற்றம்போலத் தனது குற்றத்தையும் காண வல்லராயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் தம் குற்றம் என்றதற்குப் புறங்கூறலாகிய தம் குற்றம் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர்குறை காண்பதுபோல் தங்குறை காணின்', 'அயலாரைப் புறங்கூறுபவர் அவர் குற்றத்தைக் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தைக் காண வல்லவரானால்', 'பிறர் செய்யும் குற்றங்களுக்காக அவர்களைக் குறைகூறுவது போலத் தம்முடைய குற்றங்களையும் (கோள் சொல்லுகிறவர்கள்) உணர்ந்து குறை கூறிக் கொள்வார்களானால்', 'அயலார் குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காணவல்லாரயின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறர் குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண்பாரானால் என்பது இப்பகுதியின் பொருள்.

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலைபெற்ற உயிர்க்கு வரும் தீமை உண்டோ என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது 'காண்பாராயின் சொல்லார்' என்று புறம் சொல்லாமைக்குக் காரணம் கூறிற்று.
பரிதி: அவனுக்கு ஒரு குற்றமும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: மற்று இவ்வுலகத்து உயிர் வாழும் மக்கட்கு என்றவாறு.
பரிமேலழகர்: அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ? [நிலைபேறுடைய உயிர்க்கு-என்றும் அழிவே இல்லாத உயிர்கட்கு]
பரிமேலழகர் குறிப்புரை: நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.

'நிலைபெற்ற உயிர்க்கு வரும் தீமை உண்டோ' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவரும் பரிமேலழகரும் மன்னும் உயிருக்கு என்றதற்கு நிலைபெற்ற உயிர் என்று பொருள் கொள்ள, காலிங்கர் 'உயிர்வாழும் மக்கள்' எனக் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழும் உயிர்க்குத் தீது உண்டோ?', 'இவ்வுலகத்து வாழும் மக்களுக்குத் துன்பம் உண்டோ?', 'உலகத்தில் மக்களுக்குத் தீங்கு செய்வதும் இருக்குமா?', 'நிலைபேறுடைய உயிர்கட்கு வரும் துன்பம் உண்டோ? இல்லை என்பதாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இவ்வுலகத்து வாழும் மக்களுக்குத் தீங்கு உண்டாகுமா? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறர் குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண்பாரானால், இவ்வுலகத்து வாழும் மக்களுக்குத் தீங்கு உண்டாகுமா? என்பது பாடலின் பொருள்.
'தம்குற்றம்' என்பது என்ன?

அடுத்தவர்களது குறையைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாயே உன்னிடமுள்ள குற்றம் உனக்குத் தெரிகிறதா?

மற்றவர் குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் உணர்வாரானால் புறங்கூறல் நிகழாது; உலகத்து மக்கள் தீமை ஏதும் நேராமல் அமைதியாக வாழ்வர்.
உலகில் வாழும் அனைவருமே புறங்கூறும் தீச்செயலைக் கைவிட்டால் என்ன பயன் உண்டாகும்? புறங்கூறுவோர் தங்களிடத்துள்ள குறைகளைக் கண்டு தெளிந்து விட்டால், தொடர்ந்து வரும் உயிர்களுக்கு தீது என்பதுதான் இருக்குமா? இருக்காது என்கிறது பாடல்.
மற்றவர்களின் குற்றங்களைக் கண்டு அவர்கள் காணாத இடத்து தூற்றுவது புறங்கூறுதலாம். பொதுவாக ஒருவர் தம் குற்றங்களை நோக்காதிருத்தலும் பிறர் குற்றங்களை எளிதில் உணர்தலும் இயல்பு. மற்றவர் குறைகள் மனதில் தோன்றினாலும் சிலர் அவற்றைக் கூறாது அடக்கிக்கொள்வர். குற்றங்களை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதற்குரிய துணிவும் அசைவிலா உறுதியும் இல்லாதவர்கள்தாம் புறங்கூறுகிறார்கள். மேலும் மற்றவர் செயல்களையும் குறைகளையும் பெரிதாக்கித் தூற்றவும் துணிகின்றனர். அத்தகையோர் பிறரது செயற்பாடுகளில் இருக்கக்கூடிய தவற்றை மட்டும் நோக்கி அதுபற்றி இழிவாகப் பேசி களிப்படைவர். அவற்றைத் தங்களை உயர்த்திக் கொள்வதற்கான கருவியாகக் கொள்ளவும் முற்படுவர். அது பிறர்க்கு ஏதாவது தீங்கு விளைவிக்குமே என்பது குறித்து புறங்கூறுபவர்கள் எண்ணுவதில்லை; அப்படியே அது அவர்க்குப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பதை அறிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டாலும், அதற்காக வருந்தாமல், அதனைப் புறக்கணித்து விடுவர். இதன் காரணமாகப் பூசல் விளைந்து தீங்கு நேர்கிறது. தூற்றல்களைப் பேசுவதாலும் கேட்பதாலும் துன்பம் மிகும்.

மற்றவர்களுடைய குற்றங்களைக் கண்டதுபோல் தம்மிடத்துள்ள குற்றங்களையும் ஆராய அவர்களுக்குத் தெளிவு ஏற்பட்டு தம்மை உள்நோக்கிப் பார்க்கத் தொடங்கினால், புறங்கூறுவதும் ஒரு குற்றம் என்பதை உணர்ந்து வெறுத்து அதைக் கைவிடுவார்கள்; தன்னிடம் உள்ள தவறுகளைக் காணப் பழகி அவற்றைத் திருத்திக்கொள்ளுபவர்கள், பிறரிடம் தவறுகண்டாலும் அவற்றை திருத்தவே முற்படுவர். அயலாரிடம் புறங்கூறுதலைச் செய்து மகிழார்; ஒருவன் தன் குற்றத்தை உணர்ந்தால் அவனுக்குப் புறங்கூறத் தோன்றாது; பிறன் மீது புறங்கூற விரும்புறவன் அவன் குற்றங்களை ஆராயுமாறு போலத் தன் குற்றத்தையும் ஒருவன் தேர்ந்து நம் பகைவன் முன்னே சொல்லக் கூடுமே என எண்ணுவானாயின் புறங்கூறான். அவர்கள் நடுவுநிலைகொண்டவர்களாக மாறிவிடுவர். பகை உண்டாகாது; பண்பு வளரும்; திருந்தி நன்மை அடைவார்கள். பிறஉயிர்களுக்கும் துன்பமில்லை. மக்களுள் யார் தன் குற்றம் காண்கிறாரோ அவர் தீதின்றி வாழ்வார் என்பதும் பெறப்படுகிறது. புறங்கூறுதலை ஒழிப்பதற்கான ஒரு வழியாக இதனைக் கூறுகிறார் வள்ளுவர்.
இயேசு கிறிஸ்துவின் 'நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?' என்ற அறிவுரையை இக்குறட்கருத்துடன் ஒப்பிடுவர்.

ஏதிலார் என்னும் சொல் அயலாரையும் பகைவரையுங் குறிப்பது; இங்குப் பிறர் என்னும் பொருள்பட நின்றது (தேவநேயப்பாவாணர்).
காண்கிற்பின் என்ற தொடர் காண்+கில்+பின் என விரிந்து காணக்கூடிய ஆற்றல் உடையராயின் என்ற பொருள் தரும். அயலார் குற்றம்போல் தம் குற்றத்தையும் நடுவு நிலைமையாக இருந்து ஒப்பக் காணுதல் அருமை ஆதலால் 'காண்கிற்பின்' என்று சொல்லப்பட்டது. 'கில்' -ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல்.

'தம்குற்றம்' என்பது என்ன?

'தம்குற்றம்' என்றதற்குத் தனது குற்றம், தான் ஒருவர் குற்றம், தமது குற்றம், புறங்கூறலாகிய தம் குற்றம், தம்முடைய குற்றம், தான் புறங்கூறும் குற்றம், தம் குற்றம், (புறங்கூறலாகிய அதனானும்‌ பிறவாற்றானும்‌) தமக்கு உளவாகுங்‌ குற்றங்கள், தம்மிடமுள்ள குற்றங்கள், தங்குறை, புறங்கூறலாகிய தம் குற்றம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

சில உரையாசிரியர்கள் 'தம்குற்றம்' என்பது 'புறங்கூறலாகிய தம் குற்றம்' குறித்தது என உரை வகுத்தனர். இவர்கள் இப்பாடல் தம் குற்றம் என்பது புறங்கூறும் குற்றம் ஒன்றையே குறிப்பதாகச் சொல்கின்றனர். அதிகாரத் தலைப்பு நோக்கி புறங்கூறும் குற்றத்தையே இக்குறளின் 'தம் குற்றம்' என்ற தொடர் குறிப்பதாகும் என இவர்கள் கூறுவது ஏற்புடையதே. எனினும் புறங்கூறல் அதிகாரப்பாடல்கள் மற்றவர் குற்றங்கள் பற்றி இகழ்ந்துரைப்பதைச் சொல்வது. எனவே புறங்கூறல் உள்பட ஒருவனுடைய அனைத்துக் குற்றங்களையும் இது குறிப்பதாகும் எனக் கொள்வதில் இழுக்கில்லை.

'தம்குற்றம்' என்ற தொடர் தம்முடைய குற்றம் என்ற பொருள் தரும்.

பிறர் குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண்பாரானால், இவ்வுலகத்து வாழும் மக்களுக்குத் தீங்கு உண்டாகுமா? உண்டாகாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மக்கள் தம்குற்றங்களை உணர்தலே புறங்கூறாமைக்கு வழியாம்.

பொழிப்பு

மற்றவர் குற்றத்தைக் காண்பதுபோலத் தம் குற்றத்தைக் காண்பாரானால் இவ்வுலகத்து வாழும் மக்களுக்குத் தீமை இருக்குமா?